அதன் பின் இறுதி ஹஜ்ஜின் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் அவர்களின் ஆருயிர்த் தோழர்களும் மக்காவுக்குச் சென்ற போது மக்காவின் எல்லையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களையும் அவர்களின் தோழர்களையும் வரவேற்க கஅபதுல்லா மக்காவின் எல்லைக்கு இடம் பெயர்ந்து வரவில்லை! ஒருவரை வரவேற்பதற்காக கஅபதுல்லா இடம் பெயர்ந்து வருமென்றால் அல்லாஹ்வின் தூதர் அல்லவா வரவேற்கப்பட மிகவும் தகுதி வாய்ந்தவர்கள்!
இதன் பின் நாற்பெரும் கலீபாக்கள் ஸஹாபாக்கள், தாபியீன்கள், பெரும் இமாம்களெல்லாம் ஹஜ்ஜுச் செய்ய வந்திருக்கின்றார்கள்! அவர்களை எல்லாம் வரவேற்க கஅபதுல்லா இடம் பெயர்ந்து வரவில்லையே! ராபிஆ பஸரியா அவர்களை வரவேற்பதற்காகச் சென்றதென்றால் இதை எப்படி ஏற்க இயலும்?
திருக்குர்ஆன் வசனங்களும் இந்தக் கதை பொய்யானது என்பதை மிகவும் தெளிவாக உணர்த்திக் கொண்டிருக்கின்றன.
புனித ஆலயமான கஅபாவையும், புனித மாதத்தையும், குர்பானிப் பிராணியையும், (அதற்கு அணிவிக்கப்படும்) மாலைகளையும் மனிதர்களுக்கு நிலையானதாக அல்லாஹ் ஆக்கி விட்டான்.திருக்குர்ஆன் 5:97கஅபாவை மனிதர்களுக்கு நிலையானதாக அல்லாஹ் ஆணி அடித்தாற்போல் இந்த வசனத்தில் சொல்லி விடுகிறான். மனிதர்களுக்காக அது ஒரு இடத்தில் நிலையாகவே இருக்கும். இடையில் இடம் பெயர்ந்து செல்லாது என்பதை மிகவும் தெளிவாகவே அல்லாஹ் சொல்லி விடுகிறான். “ராபிஆ பஸரியா அவர்களை வரவேற்க கஅபதுல்லா இடம் பெயர்ந்ததாகக் கூறுவதை ஒரு முஸ்லிம் நம்பக் கூடாது” என்பதற்கு இதை விட வேறு என்ன சான்று வேண்டும்.
(ஏக இறைவனை) மறுத்தோருக்கும், அல்லாஹ்வின் பாதையை விட்டும், மஸ்ஜிதுல் ஹராமை விட்டும் தடுத்தோருக்கும், மற்றும் அங்கே அநீதியின் மூலம் குற்றம் புய நாடுவோருக்கும் துன்புறுத்தும் வேதனையைச் சுவைக்கச் செய்வோம். மஸ்ஜிதுல் ஹராமை (அதன்) அருகில் வசிப்போருக்கும் தூரத்தில் வசிப்போருக்கும் சமமாக ஆக்கினோம்.திருக்குர்ஆன் 22:25கஅபா ஆலயம் மக்கள் அனைவருக்கும் பொதுவானது; எந்தத் தனி நபருக்கும் விசேஷ மரியாதை செய்ய நடந்து வராது என்பதை இந்த வசனம் உணர்த்துகின்றது.
கஅபாவை அனைவருக்கும் சமமாக ஆக்கியதாக அல்லாஹ் இந்த வசனத்தில் கூறுகிறான். ராபிஆ பஸரியா அவர்களை வரவேற்க கஃபதுல்லா இடம் பெயர்ந்ததாகக் கூறுவது இதற்கும் முரணானதாகும்.
அந்த ஆலயத்தை மக்களின் ஒன்று கூடுமிடமாகவும், பாதுகாப்பு மையமாகவும் நாம் அமைத்ததை நினைவூட்டுவீராக! மகாமே இப்ராஹீமில் தொழுமிடத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்! “தவாஃப் செய்வோருக்காகவும், இஃதிகாஃப் இருப்போருக்காகவும், ருகூவு, ஸஜ்தா செய்வோருக்காகவும் இருவரும் எனது ஆலயத்தைத் தூய்மைப்படுத்துங்கள்!” என்று இப்ராஹீமிடமும், இஸ்மாயீலிடமும் உறுதி மொழி வாங்கினோம்.திருக்குர்ஆன் 2: 125தவாபு செய்பவர்கள் அங்கே தொழ வருபவர்கள், தியானிப்பவர்கள் ஆகியோருக்காகவே கஅபதுல்லா நிர்மாணிக்கப்பட்டது என்று அதன் நோக்கத்தையும் அல்லாஹ் இந்த வசனத்தில் கூறுகிறான்.
ஆனால் இந்தக் கதையின்படி திக்ரு செய்வதற்காகவும், தவாபு செய்வதற்காகவும், தொழுவதற்காகவும் அங்கே சென்ற ஹஸன் பஸரீ அவர்களுக்காகவும், அவர்களைப் போன்ற பல்லாயிரம் மக்களுக்காகவும் கஅபதுல்லா அங்கே இருக்கவில்லை.
எந்த நோக்கத்திற்காக கஅபாவை அல்லாஹ் நிர்மாணிக்கச் செய்தானோ அந்த நோக்கத்தை நிறைவேற்ற கஅபா’ அங்கே இல்லை என்று இந்தக் கதை உணர்த்துகின்றதே! இது எப்படி உண்மையாக இருக்க முடியும்?
அகிலத்தின் நேர்வழிக்குரியதாகவும், பாக்கியம் பொருந்தியதாகவும் மனிதர்களுக்காக அமைக்கப்பட்ட முதல் ஆலயம் பக்கா(எனும் மக்கா)வில் உள்ளதாகும்.(திருக்குர்ஆன் 3:96)மனிதர்கள் இறைவனை வணங்குவதற்கென ஒரு இடத்தில் கஅபதுல்லா வைக்கப்பட்டிருப்பதை இந்த வசனம் உணர்த்துகின்றது.
மக்கள் அனைவருக்கும் நேர்வழியாகவும், மக்கள் அனைவருக்கும் பரக்கத்து நிறைந்ததாகவும் இருக்கின்ற கஅபதுல்லாவைத் தான் மக்கள் தேடிச் செல்ல வேண்டும் என்பதையும் இந்த வசனம் நமக்கு விளக்குகின்றது.
இந்தக் கதையின்படி, பரக்கத்தைப் பெருவதற்காக அதைத் தேடிச் சென்றுள்ள மக்களுக்காக கஅபா காட்சி தரவில்லை என்றால் குர்ஆனின் உத்திரவாதம் இங்கே பொய்யாக்கப்படுகின்றது.
அதில் தெளிவான சான்றுகளும் மகாமே இப்ராஹீமும் உள்ளன. அதில் நுழைந்தவர் அபயம் பெற்றவராவார். அந்த ஆலயத்தில் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது, சென்று வர சக்தி பெற்ற மனிதர்களுக்குக் கடமை. யாரேனும் (ஏக இறைவனை) மறுத்தால் அல்லாஹ் அகிலத்தாரை விட்டும் தேவையற்றவன்.திருக்குர்ஆன் 3: 97பயணம் செய்யச் சக்தி பெற்றிருக்கின்ற மக்கள் அவ்வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்பதை அல்லாஹ் கடமையாக ஆக்கிவிட்டு, அந்தக் கடமையை நிறைவேற்ற அவ்வீட்டைத் தேடி வருகின்ற மக்களுக்காக அந்த இடத்தில் கஆபாவை அல்லாஹ் வைக்காமலிருப்பானா? என்பதையும் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். அவ்வீடு எவரையும் தேடி வராது என்பதையும் இந்தத் திருவசனம் உணர்த்துவதை நாம் காணலாம்.
இந்தக் கதை திருக்குர்ஆனின் வசனங்களுடன் நேரடியாகவே மோதுகின்றது. அல்லாஹ்வின் நோக்கத்தையும், அவனது உத்தரவாதத்தையும் பொய்ப்படுத்துகின்றது.
அல்லாஹ்வின் கூற்றுக்கு முரணாக இருக்கும் இந்தக் கதை எப்படி உண்மையாக இருக்க முடியும்?
எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக பின்வரும் இறைவசனம் மிகவும் தெளிவாகவே இந்தக் கதையைப் பொய்யாக்கி விடுகின்றது.
மனிதர்களை உயர்த்துவதற்காக அவர்களின் மரணத்திற்குப் பின் பல கதைகளைக் கட்டி விடுவது வாடிக்கையாகவே நடந்து வருவதாகும். ஆனால் ராபிஆ பஸரிய்யா (ரஹ்) அவர்களைப் பொருத்த வரை அவர்கள் வாழ்ந்திருந்த காலத்திலேயே இது போன்று கதைகள் கட்டி விடப்பட்டன. இதைச் செவியுற்ற ராபிஆ பஸரிய்யா (ரஹ்) அவர்கள் இதைத் திட்டவட்டமாக மறுத்து விட்டனர்.
ஷைத்தான் மக்களுடன் விளையாடுவதன் விளைவே இது என்று கூறி விட்டார்கள். இந்தக் கதையின் நாயகியாகிய அவர்களே மறுத்துள்ளது இந்த கதை பொய் என்பதற்கு போதுமான சான்றாகத் திகழ்கின்றது.
திருக்குர்ஆனுடன் மோதும் இது போன்ற கதைகளை நம்புவதும், பேசுவதும் குர்ஆனையே மறுப்பதாகும். இது போன்ற பொய்களை நம்புவதை விட்டும் அல்லாஹ் நம்மைக் காத்தருள்வானாக! ஆமீன்!
33. அந்த ஆலயம் என்பது எது?
திருக்குர்ஆனின் 2:125, 2:127, 2:158, 3:97, 5:2, 5:97, 8:35, 22:26, 22:29, 22:33, 106:3 ஆகிய வசனங்களில் அந்த ஆலயம் என்ற சொற்றொடர் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த ஆலயம் என்பது கஅபாவையும், அதன் வளாகத்தையும் குறிக்கும்.
(கூடுதல் விபரங்களுக்கு கலைச் சொற்கள் என்ற தலைப்பில் கஅபா என்ற உட்தலைப்பிலும், பொருள் அட்டவணை பகுதியில், வரலாறு என்ற தலைப்பில் நபிமார்கள் (இப்ராஹீம்) என்ற உட்தலைப்பிலும் காண்க!)
34. பாதுகாக்கப்பட்ட புனிதத் தலம்
உலகில் இறைவனை வணங்குவதற்காக முதன் முதலில் எழுப்பப்பட்ட ஆலயம் கஅபா. இந்த ஆலயம் மக்களின் அபய பூமியாகத் திகழும் என இவ்வசனங்கள் (2:125, 3:97, 5:97, 14:35, 28:57, 105:1-5, 106:4) கூறுகின்றன.
மக்கா, அபயபூமி என அறிவிக்கப்பட்டு 14 நூற்றாண்டுகளைக் கடந்த பின்பும், எத்தனையோ ஆட்சி மாற்றங்கள் நடந்த பின்பும் அது இன்றளவும் அபய பூமியாகவே இருந்து வருகிறது.
14 நூற்றாண்டுகளாக எந்தத் தாக்குதலாலும் தோற்கடிக்கப்பட முடியாத ஆலயமாகவும், அப்படி தாக்க வருவோரை முறியடிக்கக் கூடியதாகவும் அது இருந்து வருகிறது. திருக்குர்ஆன் கூறியவாறு அது அபய பூமியாகவே நீடித்து வருகிறது.
ஹஜ்ஜின் போது பலர் மக்காவில் மரணிக்கிறார்கள். மக்கா அபய பூமியாக இல்லை என்பதற்கு இது ஆதாரமாக உள்ளதே? என்று சிலர் விதண்டாவாதம் செய்யக் கூடும்.
அபயபூமி என்பதன் பொருளைச் சரியான முறையில் அறிந்து கொள்ளாததால் இவ்வாறு வாதிடுகின்றனர்.
மக்காவில் ஒருவரும் சாகமாட்டார்கள் என்ற கருத்தில் இது சொல்லப்படவில்லை என்று அறிவுடைய மக்கள் புரிந்து கொள்வார்கள். இவ்வசனம் அருளப்படுவதற்கு முன்னரும், இவ்வசனம் அருளப்பட்ட பின்னரும் மக்காவில் பலரும் மரணித்துள்ளனர். பலரும் மரணித்துக் கொண்டு இருப்பதை அனைவரும் கண்கூடாகப் பார்த்துக் கொண்டு இருக்கும் போது தான் மக்கா அபய பூமி என்ற வசனம் அருளப்பட்டது.
நபிகள் நாயகத்தின் நெருக்கமான பல தோழர்கள் மக்காவில் மரணித்துள்ளனர். எனவே மக்காவில் யாரும் மரணிக்க மாட்டார்கள் என்ற கருத்தில் இது சொல்லப்படவில்லை.
ஒருவரது மரணம் எங்கே, எப்போது, எப்படி நிகழும் என்று இறைவனால் முடிவு செய்யப்பட்டுள்ளதோ அப்படி நிகழ்ந்தே தீரும். மக்காவில் மரணிப்பார்கள் என்று யார் விஷயத்தில் இறைவன் முடிவு செய்துள்ளானோ அவர் மக்காவில் தான் மரணிப்பார். இது தான் இஸ்லாத்தின் நம்பிக்கை.
மக்காவுக்குச் செல்லும் ஒருவர் நாம் திரும்பி வருவோமோ, இல்லையோ என்று கருதி உறவினர்களிடமும், நண்பர்களிடமும் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு பயணிக்கும் வழக்கம் முஸ்லிம்களிடம் உள்ளது. மக்காவில் மரணம், விபத்து ஆகியன ஏற்படாது என்று முஸ்லிம்கள் நம்புவதில்லை என்பது இதிலிருந்து தெரிகிறது. முஸ்லிம்கள் நம்பாத ஒன்றைக் குறித்து அவர்களிடம் கேள்வி கேட்க முடியாது.
சில சந்தர்ப்பங்களில் கஅபா ஆலயத்துக்குள் விஷமிகள் புகுந்து ஆயுதத் தாக்குதல் நடத்தியுள்ளனர். இது அபய பூமி என்பதற்கு எதிராக உள்ளதே என்றும் சிலர் கேட்கின்றனர்.
அபய பூமியாக இருப்பதால் சிலர் தமக்குள் சண்டை போட மாட்டார்கள் என்று பொருளல்ல. ஆயுதம் தரித்து சிலர் புரட்சி செய்ய மாட்டார்கள் என்பதும் இதன் பொருளல்ல.
இஸ்லாத்தை அழிக்க நினைக்கும் எதிரிகளால் அபய பூமியை அழிக்கவோ, கைப்பற்றவோ இயலாது என்பது தான் இதன் கருத்தாகும்.
முஸ்லிம் சமுதாயத்தில் உள்ளவர்கள் அறியாமை காரணமாக இந்த அபய பூமியில் சண்டையிடுவார்களா; இரத்தம் சிந்துவார்களா? கஅபா ஆலயத்தைச் சேதப்படுத்துவார்களா என்றால் அதை இஸ்லாம் மறுக்கவில்லை. அது பற்றியும் இஸ்லாம் முன்னறிவிப்பு செய்கிறது.
இந்த ஆலயத்தை அதற்குச் சொந்தம் கொண்டாடும் மக்களால் தவிர மற்றவர்களால் அழிக்க முடியாது. அப்படி அழிக்கப்படும் போது அரபுகளுக்கு ஏற்படும் அழிவு பற்றி கேட்காதே! பின்னர் அபீசீனியர்கள் முற்றிலுமாக கஅபாவை அழிப்பார்கள். அதன் பின்னர் அதைச் சீர் செய்ய முடியாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். – நூல் அஹ்மத்
அபிசீனியாவைச் சேர்ந்த, மெலிந்த கால்களைக் கொண்ட மனிதர்கள் கஅபாவை இடித்துப் பாழ்படுத்துவார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர். நூல் : புகாரி 1591
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அறிவித்தவாறு ஹஜ்ஜாஜ் பின் யூசுப், அப்துல்லாஹ் பின் ஸுபைர் ஆகியோருக்கு நடந்த சண்டையில் இந்த மண்ணில் இரத்தம் சிந்தப்பட்டது. கஅபா சேதமாக்கப்பட்டது. இரண்டு முறை இடித்துக் கட்டப்பட்டது.
அதுபோல் ஷியாக்களில் ஒரு பிரிவினரான கராமித் என்போர் ஹிஜ்ரி 317 ஆம் ஆண்டு ஹஜ் மாதம் திடீரென மக்காவில் நுழைந்து ஹாஜிகள் பலரைக் கொன்றார்கள். ஹஜருல் அஸ்வதைப் பெயர்த்து எடுத்து ஷியாக்களின் நாடாக இருந்த பஹ்ரைனுக்குக் கொண்டு சென்றார்கள். 22 ஆண்டுகள் கஅபாவில் ஹஜருல் அஸ்வத் இருக்கவில்லை. ஹிஜ்ரி 337 ஆம் ஆண்டு தான் அதாவது 22 ஆண்டுகளுக்குப் பின்னர் தான் ஹஜருல் அஸ்வதை ஒப்படைத்தார்கள்.
இவை தமது அபய பூமியை முஸ்லிம்கள் தாமாக அழித்துக் கொண்ட நிகழ்வாகும். சமீப காலங்களிலும் இது போல் இந்த அபய பூமியில் புரட்சி நடந்ததுண்டு.
அல்லாஹ் இந்த ஆலயத்தை அபய பூமியாக ஆக்கியுள்ளான் என்பதற்கு இது மாற்றமாக ஆகாது. முஸ்லிம்கள் தாமாக அழித்துக் கொள்ளாத வரை இந்த பூமி அபயபூமியாக இருக்கும். அதன் புனிதத்தை அவர்களாக அழித்துக் கொள்வதை இது குறிக்காது.
அல்லாஹ்வின் இவ்வசனங்களுக்கு அல்லாஹ்வின் தூதர் சொன்ன இந்த விளக்கத்தையும் இணைத்தே விளங்க வேண்டும்.
இஸ்லாத்தின் எதிரிகள் இஸ்லாத்தை ஒழிக்க முயல்வோர் முறியடிக்கப்படுவார்கள் என்பது தான் இதன் கருத்தாகும்.
அப்படி முயற்சிப்பவர்கள் முறியடிக்கப்படுவார்கள் என்பது தான் இதன் பொருள்.
அவர்களின் கைகள் ஓங்கி மக்காவின் புனிதத்தை மறுப்பவர்களின் கைகளுக்கு மக்கா நகரம் செல்லாது என்பதும் இதன் பொருளாகும்.
அகிலத்தையே கட்டி ஆண்ட பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் இந்தப் பூமிக்கு அருகில் உள்ள பகுதிகளை எல்லாம் தன் கைவசத்தில் கொண்டு வந்த காலத்தில் கூட மக்காவை அவர்களால் நெருங்க முடியவில்லை.
சிலுவைப் போர் என்ற பெயரில் இஸ்லாம் மதத்துக்கு எதிராக நடத்தப்பட்ட போர்களிலும் கூட மக்காவைக் கையகப்படுத்துவது தான் கிறித்தவர்களின் மெய்யான வெற்றி என்ற நிலையிலும் மக்காவை நெருங்க முடியவில்லை.
எனவே மக்கா அபயபூமியாகவே அன்றும் இன்றும் நீடித்து வருகிறது என்பதில் ஐயம் இல்லை.
திருக்குர்ஆன் இறைவேதமே என்பதற்கான சான்றுகளில் ஒன்றாக இவ்வசனங்கள் அமைந்துள்ளன.
35. மகாமு இப்ராஹீம் என்பது என்ன?
2:125, 3:97 ஆகிய வசனங்களில் மகாமு இப்ராஹீம் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. 2:125 வசனத்தில் "மகாமு இப்ராஹீமின் ஒரு பகுதியில் தொழுமிடத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்'' என்று கூறப்படுகின்றது.
மகாமு இப்ராஹீம் என்றால் என்ன என்பதில் அதிகமான மக்கள் அறியாமையில் உள்ளனர். கஅபாவின் கிழக்குத் திசையில் சுமார் 10 மீட்டர் தொலைவில் ஒரு கல் நாட்டப்பட்டுள்ளதைக் காணலாம். அந்தக் கல் மகாமு இப்ராஹீம் என்று மக்களால் குறிப்பிடப்படுகின்றது.
"இப்ராஹீம் நபியவர்கள் ஒரு கல் மீது ஏறி நின்று கஅபாவைக் கட்டினார்கள்; எந்தக் கல்லின் மீது ஏறி நின்று கஅபாவைக் கட்டினார்களோ அந்தக் கல் இது தான். இதுவே மகாமு இப்ராஹீம்'' என்று அதிகமான அறிஞர்கள் கூறுகின்றனர். இது தவறாகும்.
மகாமு இப்ராஹீம் எதைக் குறிக்கிறது என்பதை மக்களின் நம்பிக்கையை அடிப்படையாக வைத்து முடிவு செய்வதை விட, திருக்குர்ஆனையும், நபிவழியையும் அடிப்படையாக வைத்து முடிவு செய்வதே சரியானதாகும்.
மகாமு இப்ராஹீமில் தொழுமாறு கட்டளையிடும் வசனத்தைச் சிந்தித்தால் மகாமு இப்ராஹீம் என்பது அந்தக் கல் அல்ல என்பதை அறியலாம்.
மகாமு இப்ராஹீம் பற்றி இறைவன் பேசும்போது, "மின் மகாமி இப்ராஹீம் - மகாமு இப்ராஹீமின் ஒரு பகுதியில் தொழுமிடத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்'' என்று கட்டளையிடுகின்றான். தொழுவதற்கு வசதியான ஒரு இடமே மகாமு இப்ராஹீம் என்பது இதிலிருந்து தெளிவாகும்.
மகாமு இப்ராஹீம் என்பது ஒரு குறிப்பிட்ட கல் அல்ல; பெரிய பரப்பளவைக் கொண்ட ஓர் இடம் என்பது இதிலிருந்து உறுதியாகின்றது. அந்த விரிவான இடத்தில் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் தொழுது கொள்ளலாம் என்ற கருத்தைத் தரும் வகையில் தான் இந்த வசனம் அமைந்துள்ளது.
குறிப்பிட்ட கல்லை மகாமு இப்ராஹீம் என்று சொல்பவர்கள் அக்கல்லின் மீது ஏறி நின்று தொழுவதில்லை. அதன் மீது ஏறித் தொழவும் முடியாது. எனவே மகாமு இப்ராஹீம் என்பது அக்கல்லைக் குறிக்காது.
இதனால் தான், "மகாமு இப்ராஹீமின் ஒரு பகுதியில் தொழுமிடத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்'' என்ற கட்டளை வந்தவுடன், (கஅபாவின் சுவற்றுடன் சேர்ந்திருந்த) மகாமு இப்ராஹீம் என்று சொல்லப்படும் கல்லுக்குப் பின்னால் நின்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுதார்கள். (பார்க்க: புகாரீ 396, 1192, 1600, 1624, 1627, 1646, 1692, 1794)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இந்தச் செயல் விளக்கம் மகாமு இப்ராஹீம் என்பதன் பொருளைத் தெளிவாக்குகின்றது. கஅபாவின் நான்கு திசைகளில், மகாமு இப்ராஹீம் என்றழைக்கப்படும் கல் உள்ள கிழக்குப் பகுதிதான் மகாமு இப்ராஹீம் ஆகும்.
பொதுவாக கஅபாவின் நான்கு திசைகளிலிருந்தும் கஅபாவை நோக்கித் தொழலாம் என்பதை நாம் அறிவோம். ஏதேனும் ஒரு சில தொழுகைகளையாவது மகாமு இப்ராஹீம் என்ற கிழக்குத் திசையிலிருந்து கஅபாவை நோக்கித் தொழ வேண்டும் என்பது தான் இவ்வசனத்தின் கருத்தாகும்.
மேலும், மகாமு இப்ராஹீமின் ஒரு பகுதியில் தொழுமிடத்தை ஏற்படுத்திக் கொள்ளுமாறு மக்கள் அனைவருக்கும் இறைவன் கட்டளையிட்டுள்ளான். அனைவரும் மகாமு இப்ராஹீமில் தொழுவது சாத்தியமாக இருந்தால் தான் இறைவன் இவ்வாறு கட்டளையிட முடியும். குறிப்பிட்ட அந்தக் கல் இருக்கும் சிறிய இடம் தான் மகாமு இப்ராஹீம் என்றால் அங்கே குழுமும் லட்சோப லட்சம் மக்களில் சில ஆயிரம் பேருக்குக் கூட அந்த வாய்ப்புக் கிடைக்காது.
கஅபாவின் நான்கு திசைகளில் கிழக்குத் திசை மட்டுமே மகாமு இப்ராஹீம் என்ற நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் செயல் விளக்கத்தை அடிப்படையாகக் கொண்டு விளங்கினால், அனைத்து ஹாஜிகளும் அந்த இடத்தில் தொழும் வாய்ப்பைப் பெற முடியும்.
அப்படியானால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் கஅபாவுடன் ஒட்டிக் கொண்டிருந்து பின்னர் இடம் மாற்றி வைக்கப்பட்ட கல், மகாமு இப்ராஹீம் என்று கூறப்படுவது ஏன் என்ற சந்தேகம் எழலாம்.
பொதுவாக ஒரு இடத்தை அடையாளம் காட்டுவதற்காக வைக்கப்படும் பொருளே அந்த இடத்தின் பெயரைப் பெற்று விடுவது வழக்கத்தில் இருக்கிறது. மகாமு இப்ராஹீம் என்ற இடத்திற்கு அடையாளமாக அக்கல் இருந்ததால் அதுவே மகாமு இப்ராஹீம் என்று சொல்லப்பட்டது.
"மகாமு இப்ராஹீமின் ஒரு பகுதியில் தொழுமிடத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்'' என்ற கட்டளை வந்தவுடன் அக்கல்லின் மீது ஏறி நின்று தொழாமல் அது இருந்த திசையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுதிருப்பதே இதற்குப் போதிய சான்றாகும்.
இதை ஓர் உதாரணத்தின் மூலம் புரிந்து கொள்ளலாம்.
மக்கா என்று எழுதி ஒரு பெயர்ப் பலகை நடப்பட்டால் அந்தப் பலகை தான் மக்கா என்று யாரும் புரிந்து கொள்ள மாட்டோம். அங்கிருந்து மக்கா நகரம் துவங்குகிறது என்றே புரிந்து கொள்வோம்.
அது போல் தான் "கஅபாவின் மற்ற மூன்று திசைகள் மகாமு இப்ராஹீம் அல்ல. அந்தக் கல் இருக்கும் கிழக்குத் திசைதான் மகாமு இப்ராஹீம்'' என்று புரிந்து கொள்ள வேண்டும்.
இந்தக் கருத்தில் தான் அந்தக் கல் மகாமு இப்ராஹீம் என்று சொல்லப்பட்டது. அந்தக் கல்லே மகாமு இப்ராஹீமாக இருந்தால் அதை யாரும் இடம் மாற்றி வைக்க முடியாது. மகாமு இப்ராஹீம் என்ற பகுதியை அடையாளம் காட்டுவதாக இருந்தால் மட்டுமே அக்கல்லை இடம் மாற்றி வைத்திருக்க முடியும்.
இந்த அடிப்படையில்தான் உமர் (ரலி) அவர்கள், கஅபாவுடன் ஒட்டியிருந்த கல்லை இப்போதுள்ள இடத்தில் மாற்றி வைத்தார்கள். நூல் : இப்னு ரஜபின் ஃபத்ஹுல் பாரி
இதன் பின்னரும், "மகாமு இப்ராஹீம் என்பது ஒரு இடத்தின் அடையாளம் அல்ல; ஒரு குறிப்பிட்ட கல் தான்'' என்று வாதிடுபவர்கள், "மகாமு இப்ராஹீமின் ஒரு பகுதியில் தொழுமிடத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்'' என்ற இறைக் கட்டளையைச் செயல்படுத்தும் விதமாக அந்தக் கல்லின் மீது ஏறி நின்று தொழுது காட்ட முடியுமா? என்பதைச் சிந்திக்க வேண்டும்.
மேலும், ஒருவர் நிற்கும் அளவுக்குள்ள இடத்தில் ஒரே ஒரு மனிதர் கூடத் தொழ முடியாது எனும்போது, மக்கள் அனைவரும் அங்கு எப்படித் தொழ முடியும் என்பதையும் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளனர்.
இன்னொரு விஷயத்தையும் இங்கு குறிப்பிட வேண்டும்.
தற்போது, "இப்ராஹீம் நபியின் பாதத்தின் அடிச்சுவடு'' என்ற பெயரில் அக்கல்லின் மீது ஒரு அச்சு உள்ளது. அது பிற்காலத்தில் ஏற்படுத்தப்பட்டதாகும்.
"அந்தக் கல் மீது இப்ராஹீம் நபியின் பாதம் பதிந்துள்ளது என்று கூறுவது கட்டுக்கதையாகும். இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் அது இருந்து பின்னர் அழிந்திருக்கலாம்'' என்று இப்னு ரஜப் தமது ஃபத்ஹுல் பாரியில் குறிப்பிடுகிறார்.
இப்னு ரஜப் அவர்களின் காலத்தில் (ஹிஜிரி 736-795) எந்தப் பாத அடையாளமும் அந்தக் கல்லில் இருக்கவில்லை என்பது இதிலிருந்து தெளிவாகின்றது.
எனவே தற்போது, அந்தக் கல்லில் காணப்படும் பாத அச்சு இப்னு ரஜப் காலத்திற்குப் பிறகு ஆட்சியாளர்களால் செயற்கையாக உருவாக்கப்பட்டது என்பது தெரிய வருகிறது.
---P.JAINUL ABIDEEN
share this.. https://bit.ly/3TeBwoN