நாஸ் அத்தியாயத்தின் விரிவுரை- தொடர்-1
இந்த இரண்டு சூராக்களும் மக்காவில் அருளப்பட்டன என்று பெரும்பாலான குர்ஆன் மொழிபெயர்ப்புக்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் ஒரு அத்தியாயம் மக்காவில் அருளப்பட்டதா அல்லது மதீனாவில் அருளப்பட்டதா என்பதை சிந்தித்து கண்டுபிடிக்க முடியாது. மக்காவில் அருளப்பட்டது என்று சொன்னாலும் மதீனாவில் அருளப்பட்டது என்று சொன்னாலும் தகுந்த சரியான நபிமொழியைக் கொண்டு தான் நிரூபிக்க வேண்டும். அல்லது நபியவர்கள் காலத்தில் வாழ்ந்த நபித்தோழர்கள் அதைப் பற்றிக் கூறியிருக்க வேண்டும். அதுவும் ஆதாரப்பூர்வமான செய்தியாக இருக்க வேண்டும். ஆனால் இன்று எல்லா மொழிபெயர்ப்புக்களிலுமே ஒவ்வொரு அத்தியாயத்தின் துவக்கத்திலும் மக்கீ என்றும் மதனீ என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
இவற்றில் பெரும்பாலான அத்தியாயங்களுக்கு மக்கியாக இருப்பதற்கோ மதனியாக இருப்பதற்கோ எந்த ஆதாரப்பூர்வமான செய்தியும் காணக் கிடைக்கவில்லை. குர்ஆனில் 95 சதவீத அத்தியாயங்களை மக்கீ என்றோ மதனீ என்றோ ஆதாரத்துடன் சொல்லவே முடியாது. மக்காவில் அருளப்பட்டு இருந்தாலும் அது குர்ஆனில் உள்ளது தான். மதினாவில் அருளப்பட்டு இருந்தாலும் அது குர்ஆனில் உள்ளது தான் என்று பொதுவாக நம்பினால் போதுமானது.
மேற்சொன்ன அடிப்படையில் பார்த்தால், சூரத்துந் நாஸும் சூரத்துல் ஃபலக்கும் மக்காவில் அருளப்பட்டது என்பதற்கோ மதீனாவில் அருளப்பட்டது என்பதற்கோ எந்தச் சான்றுமில்லை. தமிழகத்தில் சில உலமாக்களால் குர்ஆன் மொழி பெயர்க்கப்பட்டது. அதில் அப்துல் ஹமீத் பாகவி அவர்களின் மொழிபெயர்ப்பில் இந்த இரண்டு அத்தியாயங்களும் மக்காவில் அருளப்பட்ட மக்கீ வகையைச் சார்ந்தது என்று குறிப்பிடுகிறார்.