ஒரு
முஸ்லிம் ஒரு காரியத்தைச் செய்கிறானென்றால், அவன் செய்யும்
அக்காரியத்திற்கு உரை கல்லாக அவன் குர்ஆனையும் நபி(ஸல்) அவர்களின் வாழ்வில்
ஒரு முன்மாதிரியையும் வைத்து செயல்படவேண்டும். அப்போதுதான் அவன் செய்யும்
செயலுக்கு நன்மை பரிசாகக் கிடைக்கும். இல்லையேல், அது தீமையாகவே
அமைந்துவிடும்.
இவர்கள் கொண்டாடும் இந்த மீலாது விழாவுக்கு மார்க்க
அங்கீகாரம் உள்ளதா என்றால் இல்லவே இல்லை. குர்ஆன், நபி(ஸல்) அவர்களுக்கு
முன் சென்ற நபிமார்களின் வரலாற்றைச் சொல்லிக்காட்டும் போது யாருடய பிறந்த
நாளைப் பற்றியும் கூறவேயில்லை. அதைப் போன்று நபி(ஸல்) அவர்கள், முன் சென்ற
நபிமார்கள் ஆதம், நூஹ், இப்றாஹீம்(அலை) மற்றும் பல நபிமார்களின்
வரலாற்றைக் கூறும்போது அவரவர் பிறந்த நாளைப் பற்றியும் அவைகளின்
முக்கியத்துவத்தைப் பற்றியும் கூறவே இல்லை. அவர்களுக்குப் பிறந்த நாள்
கொண்டாடி நமக்கு முன்மாதிரி காட்டிடவும் இல்லை.
மீலாது விழா
நபி(ஸல்) அவர்கள்
தம் வாழ்நாளில் தன் பிறந்த நாளையோ தன் பிள்ளைகளின் பிறந்த நாளையோ தாமும்
கொண்டாடியதில்லை. பிறரைக் கொண்டாடும்படி கூறவும் இல்லை. நபி (ஸல்)
அவர்களுக்குப் பிறந்த பிள்ளைகளின் பிறந்த தினத்தின் குறிப்புக்கூட
ஹதீஸ்களில் இல்லை. அவர்களது மகன் இப்றாஹீடைய மரணக் குறிப்பு
இருக்கிறதேயொழிய பிறப்பைப் பற்றி உள்ள செய்திகள் இல்லை.
இப்ராஹீம்
(ரலி) அவர்கள் மரணமடைந்த நேரத்தில் சூரியக் கிரகணம் ஏற்படுகிறது. அதைக் கூட
மக்கள் இவர் இறந்ததினால் தான் சூரியக் கிரகணம் ஏற்பட்டுவிட்டது என்று
கூறினார்கள். தனது அருமை மகன் இறந்த துக்கத்தில் இருந்த அந்த நேரத்தில்
கூட நபி (ஸல்) அவர்கள் அதைக் கண்டிக்கின்றார்கள். அவ்வாறு கூறுவது
அறிவுக்கு ஏற்றதல்ல. மூடப்பழக்கத்தை ஏற்படுத்துகின்ற வார்த்தைகள் என்பதைச்
சுட்டிக் காட்டும் வகையில், சூரியனும் சநதிரனும் அல்லாஹ்வுடைய இரண்டு
அத்தாட்சிகளாகும். அவை யாருடைய பிறப்பிற்காகவும் இறப்பிற்காகவும் கிரகணம்
பிடிக்கவில்லை என்று கூறுகின்றார்கள். அதன் மூலம் பிறந்த நாளுக்கு எந்தவொரு
சிறப்போ முக்கியத்துவமோ இல்லை என்பதையே காட்டுகின்றார்கள்.
நபி(ஸல்)
அவர்களின் காலத்தில் (அவர்களது மகன்) இப்றாஹீம்(ரலி) மரணித்த அன்று சூரிய
கிரகணம் ஏற்பட்டது. இப்றாஹீமின் மரணத்திற்காகவே சூரிய கிரகணம் ஏற்பட்டதாக
மக்கள் பேசிக் கொண்டணர். அப்போது நபி(ஸல்) அவர்கள் சூரியனுக்கும்
சந்திரனுக்கும் எவரது பிறப்பிற்காகவும் இறப்பிற்காகவும் கிரகணம்
பிடிப்பதில்லை. எனவே, நீங்கள் (கிரகணத்தை) கண்டால் தொழுது அல்லாஹ்விடம்
பிரார்த்தியுங்கள் என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர்: முகீரா பின் ஷுஉபா (ரலி), நூல்: புகாரீ(1043)
இவ்வளவு
ஏன்? நபி(ஸல்) அவர்களை எல்லா அம்சங்களிலும் நூற்றுக்கு நூறு பின்பற்றி
வந்த நபித்தோழர்கள் நபி(ஸல்) அவர்களுடைய பிறந்த நாளுக்கு முக்கியத்துவம்
கொடுக்கவுமில்லை. விழா கொண்டாடவும் இல்லை. மாறாக, ஆண்டுக் கணக்கை ஏற்படுத்த
எதை வைத்துத் துவங்கலாம் என்ற ஆலோசனை நடத்தும்போது நபி(ஸல்) அவர்களின்
பிறந்த நாளை அடிப்படையாக வைத்துத் துவக்குவதை விட்டுவிட்டு, இஸ்லாத்திற்கு
மிகவும் திருப்புமுனையாகத் திகழந்த ஹிஜ்ரத் நிகழ்ச்சியை முன்வைத்தே
துவக்கியுள்ளதை இஸ்லாமிய வரலாற்றில் காணமுடிகிறது.
உலகத்திலுள்ள
எத்தனையோ பேருக்கு பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. முகவரி இல்லாதவர்களுக்கே
பிறந்த நாள் கொண்டாடப்படும் போது, அகில உலக மக்களுக்கோர் அருட்கொடையாக
வந்த இறுதித் தூதர் நபி(ஸல்) அவர்களுக்குப் பிறந்த நாள் கொண்டாடினால் என்ன?
என்ற வாதத்தை முன் வைக்கின்றார்கள். இந்த வாதம் கேட்பதற்கு நன்றாகவே
இருக்கிறது.
ஆனால், அல்லாஹ்வின் தூதரிடத்தில் தான் அழகிய முன்மாதிரி
உள்ளது. ஒரு மனிதன் அல்லாஹ்வை நேசிப்பது உண்மையாக இருந்தால் அவன் நபி
(ஸல்) அவர்களைப் பின்பற்ற வேண்டும் என்று குர்ஆன் மூலமாக அல்லாஹ்
கூறுகிறான். அதுவே இறைநேசத்தின் சத்தும் சாரமும் அடையாளமும்
குறிக்கோளுமாகும் என்ற கருத்தில் அமைந்த குர்ஆன் வரியின் வகைக்கு மாற்றமாக
அல்லவா இந்த நூதன அனுஷ்டானம் அமைகிறது.
நபி (ஸல்) அவர்களின் சொல்,
செயல், அங்கீகாரம் இல்லாமல் நல்லதுதானே, சிறப்புத்தானே என்று நாமே நம்
இஷ்டத்திற்கு உருவாக்கும் எல்லாச் செயலும் பித்அத்தான நூதன வழிகேடு
என்றல்லவா மார்க்கம் கூறுகிறது. அதுவே நரகத்திற்கு கொண்டு சென்று
சேர்க்கும் செயலென்று நபி(ஸல்) அவர்களுடைய சொல்லும் கூறுகிறது.
நபி
(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: நம் கட்டளையில்லாத காரியத்தை யார்
செய்கிறாரோ, அது (அல்லாஹ்வால்) மறுக்கப்படும். அறிவிப்பவர்: ஆயிஷா
(ரலி), நூல்: முஸ்லிம் (3243)
எல்லோரும் செய்கிறார்கள், பிற
சமுதாயத்தவர்களும் செய்கிறார்கள். நாமும் செய்தால் என்ன என்று நாம் மீலாது
விழா போன்ற காரியங்களைச் செய்தால் அது மாற்றுமதத்தவர்களின் வழிமுறையைப்
பின்பற்றிவர்களாக ஆகிவிடுவோமல்லவா? இதற்கு நபி(ஸல்) அவர்களுடைய காலத்தில்
நடந்த சம்பவம் நமக்கு சரியான பாடத்தைப் புகட்டி, மாற்றுக் கலாச்சாரத்தை
நம்மவர்கள் காப்பியடிப்பதை வன்மையாகக் கண்டிக்கிறது.
நாங்கள்
புதிதாக இஸ்லாத்திற்கு வந்தவர்களாக இருக்க நபி(ஸல்) அவர்களுடன் ஹுனைன்
யுத்தத்திற்குச் சென்றோம். அங்கு இணைவைப்பவர்களுக்கென்று ஒரு இலந்தை மரம்
இருந்தது. அங்கு அவர்கள் (பரகத்தை) நாடி தங்களின் போர்க்கருவிகளை
தொங்கவிட்டு அங்கு தங்கி(இஃதிகாஃப்) இருப்பார்கள். தாத்து, அன்வாத் என்று
அதற்கு சொல்லப்படும். நாங்கள் அந்த மரத்தின் பக்கம் சென்றபோது நபி(ஸல்)
அவர்களிடத்தில் அல்லாஹ்வின்தூதரே! அவர்களுக்கு தாத்து, அன்வாத்து என்று
இருப்பதைப் போன்று எங்களுக்கும் ஏற்படுத்துங்கள் என்று கூறினோம்.
அதற்கு
நபி(ஸல்) அவர்கள் சுப்ஹானல்லாஹ்... அல்லாஹு அக்பர்.. இவையெல்லாம்
(அறியாமைக் காலத்தவரின்) முன்னோர்களின் செயல் ஆகும் என்று சொல்லி, என்
உயிர் யார் கைவசம் இருக்கிறதோ அவன் மீது ஆணையாக நீங்கள் நபி மூஸா(அலை)
அவர்களிடத்தில் பனூ இஸ்ரவேலர்கள் கேட்டதைப் போல் கேட்கிறீர்கள். (அதாவது)
பனூ இஸ்ராயீல்கள் நபி மூஸா(அலை) அவர்களிடத்தில், மூஸாவே அவர்களுக்குப் பல
கடவுள்கள் இருப்பதைப் போல் எங்களுக்கும் கடவுளை ஏற்படுத்துங்கள் என்று
கேட்க, அதற்கு மூஸா(அலை) அவர்கள், நீங்கள் ஒன்றுமறியாத விபரமற்றவர்கள்
என்று பதிலளித்தார்கள். இதைப் போலவே, நீங்களும் கூறியுள்ளீர்கள்.
நிச்சயமாக, நீங்கள் உங்களுக்கு முன்னவர்களின் வழிமுறையை படிப்படியாக
பின்பற்றுவீர்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூ
வாக்கிதுல்லைசி (ரலீ), நூல்: திர்மிதி
மேலும்,
நபி(ஸல்) அவர்களிடத்தில் திங்கள்கிழமை நோன்பு (ஏன் பிடிக்கவேண்டும்
என்பது) பற்றி கேட்கப்பட்டது. அப்போது அதற்கு நபி(ஸல்) அவர்கள்
பதிலளித்துக் கூறுகையில் இப்படிச் சொல்கிறார்கள்.... “அதில்தான் நான்
பிறந்தேன். அதில் நான் நபியாக அனுப்பப்பட்டேன். அதிலே எனக்கு குர்ஆன்
அருளப்பட்டது” என்கிறார்கள்.
அறிவிப்பாளர்: அபூ கதாதா (ரலீ), நூல்: முஸ்லிம்
இந்த
ஹதீஸ் நபி பிறந்த தினத்தை கொண்டாடக்கூடாது என்று கூறுவதோடு மட்டுமில்லாது
நோன்பு பிடிப்பது நபிவழி என்றும் அதுவே, நபியை நேசிப்பதற்கு உகந்த வழி
என்றும் சொல்கிறது. ஆனால், நம்மவர்கள் நோன்பைப் பிடிக்காமல் இருந்தாலாவது
பரவாயில்லை. சிறப்பாக, மிக விஷேசமாக நபி(ஸல்) அவர்களுடைய பிரியத்தை
முன்வைத்து விருந்து சமைத்து அரபிப் பாட்டுப் பாடி பெரிய கூத்தும்
கொண்டாட்டமும் நடத்துகின்றார்கள். நீங்கள் நோன்பையா பிடிக்கச்
சொன்னீர்கள்? நாங்கள் அதற்கு மாற்றமாகத்தான் நடப்போம் என்று சொல்வது போல்
நடந்துகொண்டு எங்களுக்கு தீன் முக்கியமல்ல. தீனி தான் முக்கியம் என்றே
பரவலாக முஸ்லிம்கள் நடந்து வருவதைக் காணமுடிகிறது.
இன்னும்
சொன்னப்போனால், ரபியுல் அவ்வல் பிறை பன்னிரண்டில் (அதில் தான் நபி(ஸல்)
அவர்கள் பிறந்தார்கள் என்று எண்ணிக்கொண்டு) மற்ற ஊர்களில் விழா எடுத்துக்
கொண்டாட்டம் நடத்தினாலும் மேலப்பாளையம் போன்ற முஸ்லிம்கள், மார்க்க
அறிஞர்கள் (?) அதிகம் வாழுகின்ற பகுதியில் அந்த மாதம் பிறை பன்னிரண்டில்
திங்கள்கிழமை வராவிட்டால், அதற்குப் பின்வரும் திங்கட்கிழமையன்று தான் ஊர்
முழுவதும் ஊர் கந்தூரி கொண்டாடி சாப்பாடு ஆக்கி மௌலூது ஓதி உண்டு
மகிழ்வார்கள். இதுவே, அவ்வூரில் தொன்றுதொட்டு நடந்துவரும் பழக்கமாக இன்றும்
இருந்து வருகிறது. இவையெல்லாம், நபி(ஸல்) அவர்களை நேசிக்கிறோம் என்று
உண்டு மகிழ்வதைக் காட்டுகின்றதா அல்லது அவர்கள் மீதுள்ள பொய்யான நேசத்தைக்
காட்டுகின்றதா.. அல்லாஹ்வுக்கே வெளிச்சம்....
எனவே, உண்மையான நேசம்
என்பது, நபி(ஸல்) அவர்களின் மீது அன்பு கொண்டுள்ளோம் என்பதற்கு அடையாளம்
அவர்களின் வழியைப் பின்பற்றி நடப்பதும் அவர்கள் காட்டிய மார்க்கத்தைத்
தானும் எடுத்து நடந்து மற்றவர்களுக்கும் எடுத்துப் போதிப்பதேயாகும்
என்பதைக் கீழ்க்காணும் இறைவசனங்களும் நபிமொழிகளும் காட்டுகின்றன.
”நீங்கள்
அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை
விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற
அன்புடையோன்'' என்று கூறுவீராக! ”அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும்
கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை
விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன் 3:31,32)
இத்தூதர்
உங்களுக்கு எதைக் கொடுத்தாரோ அதை வாங்கிக் கொள்ளுங்கள்! எதை விட்டும்
உங்களைத் தடுத்தாரோ (அதிலிருந்து) விலகிக் கொள்ளுங்கள்! அல்லாஹ்வை
அஞ்சுங்கள்! அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன். (அல்குர்ஆன் 59:7)
உங்களில்
ஒருவருக்கு அவரது தந்தை, அவரது குழந்தைகள், ஏனைய மக்கள் அனைவரையும் விட
நான் மக்கள் அனைவரையும் விட மிகவும் பிரியத்திற்குரியவராக ஆகும் வரை அவர்
உண்மையான ஈமான் கொண்டவராக ஆகமாட்டார்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: புகாரி 15
எனவே,
நபி(ஸல்) அவர்களை ஒரு சில நாட்கள் மட்டும் எண்ணிப் பார்க்காமல் அவர்களுடைய
வாழ்க்கையையும் அவர்களுடைய நற்பண்புகளையும் நம்முடைய வாழ்க்கை நெறியாகப்
பின்பற்றி உலகம் முழுமைக்கும் பரப்புவோமாக, இம்மையிலும் மறுமையிலும் இறைவன்
நம்மை நேசித்து அவன் மன்னிப்பைப் பெறுவோமாக!
Thz: MOHD ALI
-
நபிகள் நாயகத்துக்கு சூனியம் வைக்கப்பட்டதாகக் கூறும் ஹதீஸ் சொல்வது என்ன? . நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைக்கப்பட்டதாகக் கூறும...
-
1951 இலக்கம் 13 முஸ்லிம் திருமன மற்றும் விவாகரத்து சட்டத்தின் திருத்தங்களுக்காக குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் முன்வைக்கப்படும் பரிந்துரைகள் 19...
-
பெண்கள் சிறுவயதில் ஓடிப்போக காரணம் என்ன? உண்மையச் சொன்ன உயர்நீதிமன்றம்! நாட்டில் நடக்கக்கூடிய கற்பழிப்புகள், பாலியல் சில்மிஷங்கள், ஆபாசச் ...
