தவ்ஹீத் ஜமாஅத் video's: 42. தடை செய்யப்பட்ட உணவுகள்

42. தடை செய்யப்பட்ட உணவுகள்

உணவுகள்
 42. தடை செய்யப்பட்ட உணவுகள்

நான்கு உணவுகள் தடை செய்யப்பட்டுள்ளதாக இவ்வசனங்களில் (2:173, 5:3, 5:96, 6:119, 6:145, 16:115) கூறப்பட்டுள்ளது.

தாமாகச் செத்த பிராணிகள், இரத்தம், பன்றி ஆகிய மூன்று பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளன என்பது எளிதாக நமக்கு விளங்குகிறது.

அல்லாஹ் அல்லாதோருக்காக சப்தமிடப்பட்டவை என்பதன் கருத்து சிந்தித்து விளங்கும் வகையில் உள்ளது.

அன்றைய அரபுகள் தங்கள் சிலைகளுக்காகப் பொருட்களைப் படைக்கும்போதும், அறுக்கும்போதும் அந்தச் சிலைகளின் பெயரைச் சப்தமிட்டுச் சொல்வார்கள். இதன் காரணமாகவே சப்தமிடப்பட்டவை என்று இவ்வசனத்தில் சொல்லப்பட்டுள்ளது.

அல்லாஹ் அல்லாதவருக்காக அறுக்கப்படும் பிராணிகளையும் இது எடுத்துக் கொள்ளும்.

அல்லாஹ் அல்லாதவர்களுக்காக படையல் செய்யும் உயிரற்ற பொருட்களையும் இது எடுத்துக் கொள்ளும்.

5:3 வசனத்தில் அல்லாஹ் அல்லாதவருக்காக சப்தமிடப்பட்டவை என்று மட்டும் அல்லாஹ் கூறாமல் சிலைகளுக்காக அறுக்கப்பட்டவை என்பதையும் சேர்த்துக் கூறுகிறான். அறுக்கப்பட்டவை என்பது உயிரினங்களைக் குறிக்கும் என்பதால் சப்தமிடப்பட்டவை என்பது உயிரற்ற பொருட்களை அல்லாஹ் அல்லாதவருக்குப் படையல் செய்வதையே குறிக்கும்.

எனவே அல்லாஹ் அல்லாதவருக்காகப் படையல், அபிஷேகம் செய்யப்படும் பொருட்களையும், அல்லாஹ் அல்லாதவருக்காக அறுக்கப்பட்ட பிராணிகளையும் உண்ணக் கூடாது என்பதை 5:3 வசனத்தில் இருந்து அறிந்து கொள்ளலாம்.

அல்லாஹ் அல்லாதவருக்காக உடைக்கப்படும் தேங்காய்கள், அல்லாஹ் அல்லாதவருக்குக் காட்டப்படும் ஆராதனைப் பொருட்கள், கடவுள் சிலைகள் மீது ஊற்றப்படும் அபிஷேகப் பொருட்கள், தர்காக்களில் அடக்கம் செய்யப்பட்டவர்களுக்காக நேர்ச்சை செய்து அறுக்கப்பட்டவை, அவர்களுக்காக ஃபாத்திஹா ஓதி புனிதமாகக் கருதப்படும் பொருட்கள் ஆகிய அனைத்தும் அல்லாஹ் அல்லாதோருக்காக சப்தமிடப்பட்டவை என்பதில் அடங்கும். இவை அனைத்தும் ஹராமாகும்.

இவ்வசனங்களில் கூறப்படும் நான்கு வகையான உணவுகளைத் தவிர வேறு எதுவும் தடை செய்யப்பட்டவை அல்ல என்ற கருத்தை இவ்வசனங்கள் தருகின்றன.

இவற்றைத் தவிர நாய், நரி, கழுதை போன்றவற்றை உண்ணலாமா? என்று சிலருக்குச் சந்தேகம் இதனால் ஏற்படலாம்.

இந்த நான்கைத் தவிர இன்னும் பல உணவுகளும் மார்க்கத்தில் தடை செய்யப்பட்டு உள்ளன. அப்படி இருக்கும்போது நான்கை மட்டும் ஏன் அல்லாஹ் கூற வேண்டும்? இதை நாம் விளக்கமாக அறிந்து கொள்ள வேண்டும்.

இஸ்லாமியச் சட்டங்கள் படிப்படியாகத்தான் மக்களுக்கு அருளப்பட்டன. ஒரு காலத்தில் எந்த உணவும் அல்லாஹ்வால் தடுக்கப்படாத நிலை இருந்தது. பின்னர் மேற்கண்ட நான்கு வகையான உணவுகள் மட்டும் தடுக்கப்பட்டன. இந்தக் காலகட்டத்தில் வேறு எதுவும் தடுக்கப்பட்டிருக்கவில்லை.

இதன் பின்னர் தூய்மையானவை அனைத்தும் அனுமதிக்கப்பட்டன; தூய்மையற்றவை அனைத்தும் தடை செய்யப்பட்டன. தூய்மையற்றவை யாவை? என்பதை விளக்கும் அதிகாரம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு வழங்கப்பட்டது. திருக்குர்ஆன் 7:157, 9:29 வசனங்களில் இதைக் காணலாம்.

எனவே இந்த நான்கைத் தவிர எவற்றை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்தார்களோ அவையும் தடை செய்யப்பட்டவையாகும்.

திருக்குர்ஆனில் தடை செய்யப்பட்ட இவற்றுடன் வேறு சில உயிரினங்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளனர். அந்தத் தடையும் இறைவன் புறத்திலிருந்து வந்த தடைதான். அதையும் நாம் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

அவற்றை விபரமாகப் பார்ப்போம்

கடல்வாழ் உயிரினங்கள்

கடல்வாழ் உயிரினங்களில் தடை செய்யப்பட்டவை ஒன்று கூட இல்லை. கடல்வாழ் உயிரினங்கள் அனைத்துமே ஹலால் தான்.

நண்டு, சுறா, திமிங்கலம் ஆகியவற்றை உண்ணக் கூடாது என்று சில மார்க்க அறிஞர்கள் கூறுவதை ஏற்கத் தேவையில்லை. ஏனெனில் இவ்வாறு கூறுவதற்கு திருக்குர்ஆனிலும், ஹதீஸிலும் எந்தச் சான்றும் இல்லை. அவர்களாகவே கற்பனை செய்து தான் கூறியுள்ளார்கள்.

கடலில் வேட்டையாடுவதும், அதன் உணவும் உங்களுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளன என்று 5:96 வசனம் கூறுகிறது.

பசுமையான மாமிசத்தை நீங்கள் புசிப்பதற்காக அவன் தான் கடலை உங்களுக்கு வசப்படுத்தித் தந்தான் என்று 16:14 வசனம் கூறுகிறது.

கடல் நீரில் செத்தவைகளும் கூட ஹலால் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

(நூற்கள்: திர்மிதீ 64, அபூதாவூத் 76, இப்னுமாஜா 380, நஸாயீ 59, 330, 4275 அஹ்மத் 6935, 8380, 8557, 8737, 14481, 22017 முஅத்தா)

கடல்வாழ் உயிரினங்களில் ஏதேனும் உண்ணத் தடை செய்யப்பட்டிருந்தால் அதை அல்லாஹ்வும், அவனது தூதரும் தான் கூற வேண்டும். வேறு எவருக்கும் தடை செய்யும் அதிகாரம் கிடையாது. அல்லாஹ்வும், அவனது தூதரும் கடல்வாழ் உயிரினங்களில் எந்த ஒன்றையும் உண்ணத் தகாதது என அறிவிக்கவில்லை.

ஆனால் மனிதனுக்குக் கேடு விளைவிக்கும் அனைத்தும் மார்க்கத்தில் தடுக்கப்பட்டுள்ளன. கடல்வாழ் உயிரினங்களில் மனிதனுக்குக் கேடு விளைவிப்பவை இருந்தால் அவை மார்க்கத்தில் தடுக்கப்பட்டவை என்பதில் சந்தேகம் இல்லை.

பறவையினம்

பறவையினத்தின் பெயர்களைப் பட்டியல் போட்டு இவை ஹலால், இவை ஹராம் என்று திருக்குர்ஆனிலும், ஹதீஸிலும் கூறப்படவில்லை. ஆயினும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பறவையினத்தில் எவை ஹராம் என்பதற்குப் பொதுவான அடிப்படையைக் கூறியுள்ளனர்.

'மிக்லப்' உடைய ஒவ்வொரு பறவையையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உண்பதற்குத் தடை செய்தார்கள்.  நூல் : முஸ்லிம் 3914

'மிக்லப்' என்ற சொல்லுக்கு நகம் என்று சிலர் பொருள் கொள்கின்றனர். எந்தப் பறவையாக இருந்தாலும் அதற்கு நகம் இருக்கும். அப்படியானால் ஒரு பறவையைக் கூட நாம் சாப்பிடக் கூடாது என்று கூறும் நிலை ஏற்படும்.

பாய்ந்து பிடித்து வேட்டையாடுவதற்குரிய நகங்கள் என்பது தான் இதன் சரியான பொருளாகும். வேட்டையாடுவதற்குப் பயன்படும் நகங்கள் எந்தப் பறவைகளுக்கு உள்ளனவோ அவை உண்ணத் தடை செய்யப்பட்டவையாகும்.

கழுகு, பருந்து, வல்லூறு போன்ற பறவைகள் ஏனைய உயிரினங்களைத் தமது நகங்களால் வேட்டையாடுகின்றன. இவை போன்ற பறவையினங்களை நாம் தவிர்த்துக் கொள்ள வேண்டும். கோழி போன்ற பறவையினங்களுக்கு கூரிய நகங்கள் இருந்தாலும் அவை செத்தவற்றை உண்ணும்போது தான் துணைக்கு நகங்களைப் பயன்படுத்துகின்றன. உயிரினத்தை (புழு பூச்சிகளை) வேட்டையாட தமது வாயையே பயன்படுத்துகின்றன.

எனவே ஏனைய உயிரினங்களை வேட்டையாட நகங்களைப் பயன்படுத்தும் பறவைகள் தவிர மற்ற அனைத்துப் பறவைகளும் உண்ண அனுமதிக்கப்பட்டவையாகும்.

விலங்கினங்கள்

விலங்கினங்களைப் பொறுத்தவரை பன்றி ஹராம் எனக் திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளது.

வீட்டுக் கழுதை ஹராம் என்று புகாரீ 4217, 4215, 4199, 3155, 4218, 4227, 5115, 5522, 5527, 5528 ஆகிய ஹதீஸ்கள் கூறுகின்றன.

இவை தவிர மற்ற விலங்கினங்களைப் பற்றி எவ்வாறு முடிவு செய்வது என்பதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பொதுவான அடிப்படையைத் தந்துள்ளனர்.

விலங்கினங்களில் எவற்றுக்குக் கோரைப் பற்கள் உள்ளனவோ அவற்றை உண்ணக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். (நூல்: புகாரீ 5781, 5530)

மேல் பகுதியில் அமைந்துள்ள பற்களில் வலப்பக்கம் ஒரு பல்லும், இடப்பக்கம் ஒரு பல்லும் மற்ற பற்களை விட அதிக நீளமாக இருக்கும்.

இந்தக் கோரைப் பல் எவற்றுக்கு உள்ளதோ அவற்றை நாம் உண்ணக் கூடாது.

இந்த அடிப்படையை விளங்கிக் கொண்டால் எவற்றை உண்ணலாம் என்பது எளிதில் விளங்கி விடும். கழுதையைப் பொறுத்த வரை அதன் பற்கள் வரிசையாக இருந்தாலும் அதைக் குறிப்பிட்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹராமாக்கி விட்டதால் கழுதைக்கு இந்த அளவுகோலைப் பொருத்தக் கூடாது.

எந்த உயிரினத்தை உண்பதாக இருந்தாலும் அதன் கழுத்து நரம்புகள் அறுக்கப்பட்டு இரத்தம் வெளியேற்றப்பட வேண்டும். அப்படி இல்லாவிட்டால் அவற்றை உண்ணக் கூடாது.

நாம் அறுக்காமல் தாமாகச் செத்தவை இதனால் தான் ஹராமாக்கப்பட்டுள்ளன.

புழுக்கள், பூச்சிகள், வண்டுகள், ஈசல்கள், ஈக்கள், எறும்புகள் போன்ற உயிரினங்களில் மார்க்கம் கூறும் முறைப்படி அறுத்தல் ஏற்படுவதில்லை. கழுத்து நரம்பை அறுத்து இரத்தத்தை வெளியேற்றுதல் இவற்றில் இல்லை.

இப்படி அறுப்பதன் மூலம் இரத்தம் ஓட்டப்படாவிட்டால் அவை செத்தவை என்பதில் அடங்கும்.

எனவே செத்தவை ஹராம் என்பதில் புழு பூச்சி வகைகளும் அடங்கும்.

செத்தவைகளில் மீன்கள் வெட்டுக்கிளிகள் ஆகிய இரண்டும் ஹலால் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.

மீன்களைப் பொருத்தவரை அவற்றில் அறுத்தல் இல்லை என்பதால் அவை செத்தவைகளில் அடங்கும் என்றாலும் அவை ஹலால் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

அது போல் வெட்டுக்கிளிகளில் அறுத்தல் ஏற்படாது. எனவே அவை செத்தவைகளில் அடங்கும். ஆனாலும் இவை செத்தவையாக ஆனாலும் இவை ஹலால் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவாக்கியுள்ளனர்.

இவை தவிர செத்த எந்த உயிரினம் எதுவும் ஹலால் இல்லை.

இந்த அடிப்படையில் புழு, பூச்சி, வண்டு, பாம்பு, தேள் கரப்பான், கரையான், ஈ எறும்பு போன்ற எல்லா உயிரினங்களும் ஹராம் ஆகும்.

எந்த உயிரினமும் முறையாக அறுக்காவிட்டால் ஹலால் ஆகாது.

பூச்சியினத்தைச் சேர்ந்த வெட்டுக் கிளியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் அவர்களின் முன்னிலையில் நபித்தோழர்கள் சாப்பிட்டுள்ளனர். இதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன.

நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் சேர்ந்து வெட்டுக் கிளியைச் சாப்பிட்டுக் கொண்டு ஆறு ஏழு யுத்தங்கள் செய்துள்ளோம். (நூல் : புகாரீ 5495)

மேலும் உயிரினங்களாக இருந்தாலும், உயிரற்றவையாக இருந்தாலும் அவற்றில் மனிதனுக்கு கேடு ஏற்படுமானால் அவையும் ஹராமாகும்.

உங்களை நீங்களே அழித்துக் கொள்ளாதீர்கள்.   திருக்குர்ஆன் 2:195

உங்களை நீங்களே சாகடித்துக் கொள்ளாதீர்கள்.  திருக்குர்ஆன் 4:29

என்று அல்லாஹ் கூறுவதால் கேடு விளைவிக்கும் அனைத்தும் ஹராம் என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு தாவரத்தைச் சாப்பிடுவது கேடு விளைவிக்கும் என்றால் அதை உண்பது ஹராம் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. இது உயிரினங்களுக்கு மட்டுமின்றி தாவரத்துக்கும், தானியத்துக்கும், ஏனைய உணவு வகைகளுக்கும் பொதுவானதாகும்.

உயிரினங்களில் தடை செய்யப்பட்டவை இவை மட்டுமே. இவை தவிர மற்ற எல்லா உயிரினங்களும் மனிதர்கள் உண்ண அனுமதிக்கப்பட்டவையாகும்.

இவ்வாறு அனுமதிக்கப்பட்டவைகளில் சில நமக்கு அருவருப்பாக இருக்கலாம். அப்படி இருந்தால் அதைத் தவிர்த்துக் கொள்ளலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உடும்புக் கறியை விரும்ப மாட்டார்கள். ஆனாலும் அவர்கள் முன்னே மற்றவர்கள் அதைச் சாப்பிடுவதைத் தடுக்கவில்லை. (நூல் : புகாரீ 2575, 5391, 5400, 5402, 5536, 5537, 7267)

நிர்பந்தத்திற்கு ஆளானவர்கள் தடை செய்யப்பட்ட உணவுகளை உண்ணலாம் என்றும் இவ்வசனங்கள் கூறுகின்றன. எது நிர்பந்தம் என்று அறிய 431வது குறிப்பை வாசிக்கவும்.

41. இறந்த பின்னர் உயிருடன் இருக்கிறார்களா?

"அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்களை இறந்தவர்கள் எனக் கூறாதீர்கள்! இறந்தவர்கள் என எண்ணாதீர்கள்!'' என்று இவ்வசனங்கள் (2:154, 3:169) கூறுகின்றன.

இதை முஸ்லிம்களில் சிலர் தவறாகப் புரிந்து வைத்துள்ளனர்.

மகான்களும், நல்லடியார்களும் இறந்த பின்பும் உயிரோடு உள்ளனர்; எனவே அவர்களை வழிபடலாம்; அவர்களை அழைக்கலாம்; பிரார்த்திக்கலாம் என்பதற்கு இவ்வசனங்கள் சான்றாக அமைந்துள்ளதாக அவர்கள் விளங்கிக் கொண்டுள்ளனர். இது பல காரணங்களால் தவறான விளக்கமாகும்.

ஒருவர் நல்லடியாரா? கெட்ட அடியாரா? என்பதை எந்த மனிதராலும் கண்டுபிடிக்க முடியாது.

இது பற்றி 215 வது குறிப்பில் தெளிவுபடுத்தியுள்ளோம்.

அல்லாஹ்வும், அவனது தூதரும் அடையாளம் காட்டிய நல்லடியார்களை நாமும் நல்லடியார் என்று அறிந்து கொள்ள முடியும். ஆனால் அவர்களைக் கொண்டாடவும், வழிபடவும் இந்த வசனம் ஆதாரமாக ஆகாது.

இவ்வசனங்கள் நல்லடியார்களையும் மகான்களையும் கொண்டாடவோ, அவர்களுக்கு வழிபாடு நடத்துவதை அனுமதிக்கவோ அருளப்படவில்லை. அல்லாஹ்வின் பாதையில் உயிர்த் தியாகம் செய்ய ஒருவர் தயங்கக் கூடாது என்பதை வலியுறுத்துவதற்காகவே அருளப்பட்டன.

இவ்வசனங்கள் அருளப்பட்ட பின் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களோ, நபித்தோழர்களோ, அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்களை அழைக்கவோ, பிரார்த்திக்கவோ இல்லை என்பதை முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும்.

இவ்வசனங்களைக் கவனமாக ஆய்வு செய்தால் இவர்களின் விளக்கம் தவறு என்பதை இன்னும் தெளிவாக அறியலாம்.

2:154 வசனத்தில் "அவர்கள் உயிருடன் உள்ளனர்'' என்பதுடன் "எனினும் நீங்கள் உணர மாட்டீர்கள்'' என்று சேர்த்துக் கூறப்பட்டுள்ளது.

அவர்கள் உயிருடன் இருப்பது நாம் உணர்ந்துள்ள கருத்தில் அல்ல. நம்மால் உணர்ந்து கொள்ள முடியாத வேறு வகையில் உயிருடன் உள்ளனர் என்ற கருத்தை இது தருகிறது.

3:169 வசனமும், அதைத் தொடர்ந்து வரும் நான்கு வசனங்களும் இதை இன்னும் தெளிவாகக் கூறுகின்றன.

3:169 வசனம் "தம் இறைவனிடம் உயிருடன் உள்ளனர்'' எனக் கூறுகிறது. நம்மைப் பொறுத்த வரை அவர்கள் மரணித்து விட்டாலும் இறைவனைப் பொறுத்த வரை அவர்கள் உயிருடன் உள்ளனர் எனக் கூறப்படுகிறது.

இவ்வசனத்திற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அளித்த விளக்கமும் முக்கியமானது.

அல்லாஹ்வின் பாதையில் உயிர்த் தியாகம் செய்தவர்கள் உயிருடன் இருக்கிறார்கள் என்றால் எப்படி? என்று நாங்கள் கேட்ட போது "அவர்களின் உயிர்கள் பச்சை நிறத்துப் பறவைகளின் கூடுகளுக்குள் இருக்கும். அவை சொர்க்கத்தில் விரும்பியவாறு சுற்றித் திரியும்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கம் அளித்தனர்

அறிவிப்பவர் : இப்னு மஸ்வூத் (ரலி)  நூல் : முஸ்லிம் 3834

நியாயத் தீர்ப்புக்குப் பிறகு தான் நல்லோர் சொர்க்கம் செல்வார்கள். எனவே தான் மனித வடிவில் இல்லாமல் பச்சை நிறப் பறவைகளாக சொர்க்கத்தில் சுற்றி வருவார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வளவு தெளிவாக இதை விளக்கிய பிறகும் அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்கள் உயிருடன் உள்ளனர் என்பதற்கு சிலர் நேரடிப்பொருள் செய்து வழிகேட்டைத் தேர்ந்தெடுத்துக் கொள்கின்றனர்.

அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்கள் உயிருடன் உள்ளனர் என்பதற்கு அல்லாஹ்வின் தூதர் கொடுத்த அர்த்தம் தவிர வேறு அர்த்தம் இல்லை.

அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்கள் சாகாமல் நம்மைப் போல் உயிருடன் உள்ளனர் என்று யாரேனும் இதற்குப் பொருள் செய்தால் அவர்கள் கீழ்க்காணும் கேள்விகளுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?

அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவரின் சொத்துக்களை அவரது வாரிசுகள் எடுத்துக் கொள்ளலாமா?

அவரது மனைவி மறுமணம் செய்து கொள்ளலாமா?

என்று இவர்களிடம் கேட்டால் செய்யலாம் என்று தான் பதிலளிக்கிறார்கள்.

நம்மைப் பொறுத்த வரை அவர்கள் இறந்து விட்டார்கள் என்று இவர்களும் ஒப்புக் கொள்வதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

நம்மைப் போலவே உயிருடன் உள்ளனர் என்று ஒரு வாதத்துக்காக வைத்துக் கொள்வோம். ஒருவர் உயிருடன் இருப்பதால் அவரிடம் பிரார்த்திக்கலாமா? அவருக்குக் கடவுள் தன்மை வந்து விடுமா? நாம் கூட உயிருடன் தான் இருக்கிறோம். நம்மில் ஒருவர் மற்றவரிடம் பிரார்த்தனை செய்யலாமா?

ஈஸா நபியவர்கள் இன்று வரை உயிருடன் தான் உள்ளனர். இதை 4:157-159, 5:75, 43:61 ஆகிய வசனங்கள் கூறுகின்றன

ஈஸா நபியவர்கள் இவ்வுலகில் ஏராளமான அற்புதங்களை நிகழ்த்தினார்கள். அவர்களை அழைத்துப் பிரார்த்திக்கும் கிறித்தவர்களின் நடவடிக்கை தவறானது என்று நம்புகின்ற முஸ்லிம்கள், ஈஸா நபிக்குச் சமமாக இல்லாதவர்களிடமும், மரணித்தவர்களிடமும் பிரார்த்திப்பது எந்த வகையில் சரியானதாகும்?

அனைத்தையும் படைத்துப் பரிபாலிக்கும் அனைத்து ஆற்றலும் உள்ளவனிடம் தான் பிரார்த்திக்க வேண்டும். ஒருவர் உயிருடன் இருப்பதால் மட்டும் அவரிடம் பிரார்த்திக்க முடியாது.

அல்லாஹ்வின் பாதையில் ஒருவர் கொல்லப்பட்டாரா? அல்லது பெருமைக்காகப் போருக்குச் சென்று கொல்லப்பட்டாரா? என்பது அல்லாஹ்வுக்கு மட்டுமே தெரிந்த விஷயம். ஒருவர் அல்லாஹ்வின் பாதையில் தான் கொல்லப்பட்டார் என்று நாம் முடிவு செய்ய முடியாது என்பதை 215 வது குறிப்பில் விளக்கியுள்ளோம்.

"அல்லாஹ்வைத் தவிர யாரிடமும் பிரார்த்தனை செய்யக் கூடாது'' என்று கூறும் நூற்றுக்கணக்கான வசனங்கள் உள்ளன. அந்த வசனங்கள் இதோ:

2:186, 3:38, 7:29, 7:55, 7:56, 7:180, 7:194, 7:197, 10:12, 10:106, 13:14, 14:39, 14:40, 16:20, 17:56, 17:110, 19:4, 21:90, 22:12, 22:13, 22:62, 22:73, 23:117, 27:62, 31:30, 35:13, 35:14, 35:40, 39:38, 40:12, 40:20, 40:60, 40:66, 46:4, 46:5

இந்த வசனங்களுக்கு எதிராகவும் இவர்களின் நம்பிக்கை அமைந்துள்ளது.

தர்கா வழிபாட்டை நியாயப்படுத்துவோரின் இதர வாதங்கள் எப்படி தவறானவை என்பதை அறிந்து கொள்ள 17, 49, 79, 83, 100, 104, 121, 122, 140, 141, 193, 213, 215, 245, 269, 298, 327, 397, 427, 471 ஆகிய குறிப்புகளைக் காண்க!

43. இஸ்லாமியக் குற்றவியல் சட்டங்கள்

இவ்வசனங்களில் (2:178-179; 5:33; 5:38; 5:45; 17:33; 24:2; 24:4) இஸ்லாமியக் குற்றவியல் சட்டங்கள் சொல்லப்பட்டுள்ளன. குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்கும் வகையில் இச்சட்டங்கள் அமைந்துள்ளன.

முஸ்லிமல்லாதவர்கள் இஸ்லாத்திற்கு எதிராக எடுத்து வைக்கும் விமர்சனங்களில் இதுவும் ஒன்றாக அமைந்துள்ளது. "இஸ்லாமியக் குற்றவியல் சட்டங்கள் மிகவும் கொடூரமானவை; மனிதாபிமானமற்றவை'' என்று அவர்கள் விமர்சிக்கின்றன.

ஆனால் இஸ்லாமியக் குற்றவியல் சட்டங்களே மனித குலத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் சட்டங்கள் என்பதை நடுநிலையோடு சிந்திக்கின்ற யாரும் புரிந்து கொள்வார்கள்.

குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும் என்று விதி ஏற்படுத்தப்பட்டிருப்பதன் நோக்கம் என்ன என்பதைப் புரிந்து கொண்டால் தான் இந்த விஷயத்தில் நாம் சரியான முடிவுக்கு வர முடியும்.

கொலையாளிகளைக் கொல்வதால் கொல்லப்பட்டவனின் உயிர் திரும்பக் கிடைக்கப் போவதில்லை; கற்பழித்த வனுக்கு மரண தண்டனை வழங்குவதால் போன கற்பு திரும்ப வராது. பொருளாதாரம் சம்பந்தப்பட்ட திருட்டு போன்ற சில குற்றங்களில் வேண்டு மானால் பறிபோனவை சில சமயங்களில் கிடைக்கலாமே தவிர பெரும்பாலான குற்றங்களில் குற்றவாளி தண்டிக்கப்படுவதால் பாதிக்கப்பட்டவனுக்குப் பயனேதும் கிடையாது.

இழந்ததை மீட்பது தண்டனைகளின் நோக்கம் அல்ல என்பதை இதிலிருந்து விளங்கலாம். அப்படியானால் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டிய காரணம் என்ன?

1. குற்றம் செய்தவனுக்கு வழங்கப் படும் தண்டனை, மீண்டும் மீண்டும் குற்றம் செய்வதிலிருந்து அவனைத் தடுக்க வேண்டும்.

2. ஒரு குற்றவாளிக்கு வழங்கப்படும் தண்டனையைக் கண்டு மற்றவர்கள் குற்றம் செய்ய அஞ்ச வேண்டும்.

3. குற்றவாளியால் பாதிப்புக்கு உள்ளானவன் தனக்கு நீதி கிடைத்து விட்டதாக நம்ப வேண்டும். மன நிறைவு அடைய வேண்டும்.

குற்றவாளிகள் தண்டிக்கப்பட இந்த மூன்று காரணங்கள் தவிர வேறு காரணங்கள் இருக்க முடியாது.

குற்றம் செய்தவர்கள் மீண்டும் குற்றம் செய்யாமலும், குற்றம் செய்ய நினைப்பவர்கள் அதன்பால் நெருங்காமலும் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் உலகமெங்கும் சிறைச்சாலைகள், காவல் நிலையங்கள் மற்றும் நீதிமன்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. குற்றவாளிகளுக்கு எந்த விதமான தண்டனையும் வழங்கக் கூடாது என்று உலகில் எந்த அரசாங்கமும் கூறுவதில்லை.

ஆனால் உலக நாடுகள் பலவற்றில் இயற்றப்பட்டுள்ள குற்றவியல் சட்டங்களால் குற்றங்களைக் குறைக்க இயலவில்லை.

அது மட்டுமின்றி குற்றவாளிகளுக்கு சிறைச்சாலைகளில் செய்து தரப்படுகின்ற வசதிகள் குற்றங்களை அதிகப்படுத்தவே வழிவகுக்கின்றன.

குற்றங்களைத் தடுத்து நிறுத்த வேண்டிய சட்டங்களே குற்றம் செய்யத் தூண்டினால் என்னவாகும்?

திருட்டு, கற்பழிப்பு, கொலை, கொள்ளை, இன்ன பிற குற்றங்களில் ஈடுபடும் சமூக விரோதிகளுக்கு வழங்கப்படும் தண்டனை என்ன? சில மாதங்களோ, சில வருடங்களோ சிறைத் தண்டனை வழங்கப்படுகின்றது. பெரும்பாலான நாடுகளில் தண்டனையின் அளவு இது தான்.

சிறைத் தண்டனை என்பது என்ன? வெளியே வர முடியாது என்ற ஒரு அம்சத்தை நீக்கி விட்டுப் பார்த்தால் எத்தனையோ பரம ஏழைகளின் வாழ்வை விட சிறைவாழ்வு மேலான தாக உள்ளது.

நியாயமாகவும், நேர்மையாகவும் நடக்கும் ஏழைகளுக்கு அன்றாடம் கால்வயிற்றுக் கஞ்சிக்கே வழியில்லை. அநியாயமாகவும், அயோக்கியத்தனமாகவும் நடந்து கொண்ட குற்றவாளிகளுக்கு மூன்று வேளை உணவுக்கு உத்தரவாதம் தரப்படுகின்றது. உயர்தரமான மருத்துவ வசதிகள் அவர்களுக்குச் செய்து தரப்படுகின்றன. அவர்களின் பொழுதைப் போக்குவதற்காக(?) சினிமா போன்ற வசதிகளும் சிறைச்சாலைகளுக்குள்ளேயே செய்து தரப்படுகின்றன.

குற்றவாளிகளால் பாதிக்கப்பட்டவர்கள் குற்றவாளிகளை எதுவும் செய்து விடாத அளவுக்குப் பாதுகாப்பு வசதிகள் செய்யப்படுகின்றன. எந்த மக்களிடமிருந்து ஒருவன் திருடுகிறானோ, எந்த மக்களைக் கொலை செய்கிறானோ, எந்தப் பெண்களைக் கற்பழிக்கிறானோ அந்த மக்களின் வரிப் பணத்திலிருந்து தான் இந்த அயோக்கியர்களுக்கு இவ்வளவு வசதிகளும் செய்து தரப்படுகின்றன.

இந்தப் பெயரளவிலான தண்டனையால் ஒரு பயனும் ஏற்படாது; ஏற்படவில்லை.

53 முறை சிறை சென்றவர் மீண்டும் கைது!

15 முறை சைக்கிள் திருடியவன் மீண்டும் கைது!

இவ்வாறு அன்றாடம் செய்தித் தாள்களில் செய்திகள் வருகின்றன. 53 தடவை வழங்கப்பட்ட தண்டனைகள் அவனுக்கு எந்த அச்சத்தையும் ஏற்படுத்தவில்லை. அதை ஒரு தண்டனையாகவே அவன் கருதவில்லை என்பது இதிலிருந்து தெரிகின்றது.

சிறைச்சாலைகளில் கிடைக்கும் வசதிகள் பற்றி மற்றவர்களும் தெரிந்து கொண்டதால் "நேர்மையாக வாழ்ந்து கஞ்சிக்கு ஏன் கஷ்டப்பட வேண்டும்? ஏதேனும் குற்றம் புரிந்தால் சிறைச் சாலைகளில் மூன்று வேளை உணவு கிடைக்குமே'' என்றெண்ணி அவர்களும் குற்றங்களில் ஈடுபடத் தொடங்குகின்றனர்.

மேலும் சிறைச்சாலைகளில் கூட்டாகத் திட்டமிடவும் வாய்ப்புக் கிடைப்பதால் மேலும் பெரிய அளவில் குற்றம் செய்வதற்கு புதுப்புது யுக்திகளைக் குற்றவாளிகள் வகுக்கின்றனர்.

சிறைச்சாலைகள் குற்றவாளிகளின் பல்கலைக் கழகங்களாகத் திகழ்வதை அனைவரும் அறிவர்.

ஆண்டு தோறும் குற்றவாளிகள் பெருகி வருகின்றார்கள்; குற்றங்கள் பெருகுகின்றன; குற்றவாளிகளை அதிகப்படுத்துவதற்காக மக்களின் வரிப் பணம் பாழாக்கப்படுகின்றது.

மனிதாபிமானச்(?) சட்டங்கள் ஏற்படுத்திய விளைவுகள் இவை.

பாதிக்கப்பட்டவன் இந்தத் தண்டனைகளால் மனநிறைவு அடைவானா? என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும்.

திருடியவனை என்ன செய்யலாம் என்று திருட்டுக் கொடுத்தவனிடம் கேட்டால் "ஆறு மாதம் சோறு போடலாம்'' எனக் கூற மாட்டான். கொலையாளியை என்ன செய்ய வேண்டும் என கொல்லப்பட்டவனின் மகனிடம் கேட்டால் "பதினான்கு வருடம் அரசாங்கச் செலவில் அவனைப் பராமரிக்க வேண்டும்'' என்று கூறுவானா? தலையைச் சீவ வேண்டும் என்பானா?

கற்பழிக்கப்பட்டவள், அதனால் தனது எதிர்காலமே இருண்டு விட்ட நிலையில் கற்பழித்தவனுக்கு எத்தகைய தண்டனை கொடுத்தால் மனம் நிறைவடைவாள்? இப்படி பாதிக்கப்பட்டவர்களின் உணர்வுகளைச் சீர்தூக்கிப் பார்த்து தண்டனைகள் வழங்கப்பட வேண்டும்.

பாதிக்கப்பட்டவனின் நிலையிலிருந்து பார்க்காமல் பாதிக்கப்படாத இடத்தில் அமர்ந்து கொண்டு சட்டங்கள் இயற்றப்படுவதால் தான் பாதிக்கப்பட்டவனின் உணர்வுகள் கவனத்தில் கொள்ளப்படுவதில்லை. இஸ்லாமோ இதைக் கவனத்தில் கொள்கிறது.

ஒருவன் பத்துப் பேரை கொலை செய்து தூக்குத் தண்டனை பெறுகிறான். அவனது தண்டனையைக் கருணை மனுவின் அடிப்படையில் ரத்துச் செய்யும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இது உலகின் பல நாடுகளிலும் பரவலாகக் காணப்படுகிறது.

கொல்லப்பட்டவர்களுக்கு குடியரசுத் தலைவர் மாமனோ, மச்சானோ அல்ல என்றாலும் அந்த அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு அளிக்கப்பட்டிருப்பதிலிருந்து பாதிக்கப்பட்டவனின் நிலையைச் சட்டம் கடுகளவும் கவனத்தில் கொள்ளவில்லை என்பதை அறிந்து கொள்ளலாம்.

இஸ்லாமியச் சட்டம் என்ன கூறுகிறது? ஒருவன் மற்றொருவனின் கண்ணைக் குருடாக்கி விட்டால், இஸ்லாத்தில் இதற்கான தண்டனை குற்றவாளியின் கண்ணையும் குருடாக்கிட வேண்டும். கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்பது இஸ்லாத்தின் குற்றவியல் சட்டம்.

கண்ணை இழந்தவன் குற்றவாளியை மன்னித்து விட்டால் குற்றவாளி தண்டிக்கப்பட மாட்டான். அல்லது குற்றவாளியிடம் இழப்பீட்டைக் கோரிப் பெற்றுக் கொண்டாலும் குற்றவாளி தண்டிக்கப்பட மாட்டான்.

அது போலவே கொல்லப்பட்டவரின் வாரிசுகளில் யாரேனும் ஒருவர் குற்றவாளியின் உயிரை எடுக்க வேண்டாம் என்று கூறினால் கூட குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்படாது. இது இஸ்லாமியச் சட்டம்.

அதாவது உலக நாடுகள் குடியரசுத் தலைவருக்கு வழங்கிய அதிகாரத்தை, பாதிக்கப்பட்டவனுக்கு இஸ்லாம் அளிக்கிறது.

சட்டங்கள் இப்படித் தான் இருக்க வேண்டும் என்பதை நியாயமான சிந்தனையுடைய யாரும் மறுக்க முடியாது. பாதிக்கப்பட்டவன் மன நிறைவு பெறும் வகையில் தண்டனை அளிக்கப்படாவிட்டால் பாதிக்கப்பட்டவனே குற்றவாளியாகும் நிலைமையும் உருவாகும்.

கொலைக் குற்றத்துக்காகக் கைது செய்யப்பட்டவன் ஜாமீனில் விடப்படும் போதும், சிறைச் சாலையிலிருந்து நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்படும் போதும் கொல்லப்பட்டவனின் உறவினர்கள் அவனைக் கொன்று விடுவதைப் பார்க்கிறோம்.

இந்த நிலைமைக்கு என்ன காரணம்? "கொலையாளியை இந்தச் சட்டங்கள் தண்டிக்காது. தண்டித்தாலும் அது போதுமானதாக இருக்காது'' என்ற எண்ணத்தின் காரணமாகவே கொலை செய்யப்பட்டவனின் உறவினர்களும் கொலையாளிகளாகி விடுகின்றனர். குற்றங்கள் அதிகரிப்பதற்கு இதுவும் முக்கியக் காரணமாக உள்ளது எனலாம்.

இனி இஸ்லாமியச் சட்டம் எவ்வளவு அர்த்தமுள்ளது; அறிவுப்பூர்வமானது என்பதைக் காண்போம்.

திருட்டுக் குற்றத்தில் ஈடுபடும் ஆண்கள், பெண்கள் ஆகியோரின் வலது கை மணிக்கட்டு வரை வெட்டப்பட வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது.

இப்படிக் கையை வெட்டினால் அவன் தொடர்ந்து திருட மாட்டான்; திருடவும் முடியாது.

மீண்டும் திருடுவதற்கு மனதாலும் எண்ண மாட்டான் என்பது ஒரு நன்மை.

முதன் முதலாகத் திருட எண்ணுபவனும் அதற்குக் கிடைக்கும் தண்டனையை அறியும் போது திருடத் துணிவு பெற மாட்டான். இது மற்றொரு நன்மை.

கை வெட்டப்பட்டவனைப் பார்க்கும் போது அவன் திருடன் என்பதை மற்றவர்கள் அறிந்து கொள்ள இயலும். எனவே அவனிடம் தங்கள் பொருட்களைப் பறிகொடுக்காமல் எச்சரிக்கையாக இருந்து கொள்ளலாம்.

"இவர்கள் இங்கே இருக்கிறார்களா?'' என்று திருடர்களின் புகைப்படங்களைப் பொது இடங்களில் ஒட்டி வைப்பதால் அந்த முகங்களை யாரும் நினைவில் பதிய வைக்க இயலாது. ஆனால் கையை வெட்டினால் அதுவே திருடன் என்பதற்குச் சிறந்த அடையாளமாகி விடுகிறது. இது மூன்றாவது நன்மை.

தண்டனைகள் வழங்கப்படுவதன் நோக்கம் பரிபூரணமாக இப்போது நிறைவேறுகிறது. அது மட்டுமின்றி குற்றவாளியை வருடக் கணக்கில் சிறையில் போட்டு அவனைப் பராமரித்துப் பாதுகாக்கும் வகையில் ஏற்படும் பொருளாதாரச் செலவுகள் அரசுக்கு மிச்சமாகின்றன. மக்களின் வரிப்பணம் பாழாகாமல் இந்தச் சட்டம் தடுக்கின்றது. சிறைக் கூடங்களை ஒழித்து விட்டு இஸ்லாம் பரிந்துரைக்கின்ற தண்டனைகளை அமுல்படுத்தினால் பற்றாக்குறை பட்ஜெட் போடும் அவசியம் இராது.

"பாவம்! கையை வெட்டுகின்றீர்களே!'' என்று குற்றவாளிகளுக்காக பரிதாபப்படுவது தான் மனிதாபிமானம் என்று சிலர் எண்ணுகின்றனர்.

மரணப் படுக்கையில் கிடக்கும் தன் மனைவியின் உயிர் காக்கும் மருந்தை வாங்கச் செல்லும் ஒருவனிடமிருந்து திருடன் பணத்தைப் பறித்துக் கொள்கிறான். இதனால் பணத்தை மட்டுமின்றி தன் மனைவியின் உயிரையும் பறிகொடுத்து நிற்கிறானே! அவனுக்காக யார் பரிதாபப்படுவது?

நேர்மையையும், ஒழுக்கத்தையும் விரும்புபவன் பாதிக்கப்பட்டு நடுத் தெருவில் நிற்பதைப் பார்த்து பரிதாபப்படாமல், அவனை நடுத் தெருவில் நிறுத்திய அயோக்கியனுக்காகப் பரிதாபப்படுகிறார்கள்.

இப்படியே கையை வெட்டிக் கொண்டே போனால் கையில்லாதவர்களின் எண்ணிக்கை பெருகி விடுமே என்றும் சிலர் கேள்வி எழுப்புகின்றனர்.

நிச்சயமாக கையில்லாதவர்களின் எண்ணிக்கை பெருகாது. ஒரே ஒரு திருடனின் கையை வெட்டி விட்டால் மற்ற எவனுக்குமே திருடும் துணிவு ஏற்படாது; வெட்டப்படும் கைகளின் எண்ணிக்கை நிச்சயம் பெருகாது.

அப்படியே கை வெட்டப்பட்டவர்களின் எண்ணிக்கை பெருகினாலும் அதில் எந்த அநீதியும் இல்லை.

உதாரணத்துக்காகத் தான் திருட்டுக் குற்றத்தின் தண்டனை பற்றி இங்கே குறிப்பிட்டுள்ளோம். இஸ்லாம் கூறும் தண்டனை முறைகள் யாவுமே இவ்வாறு தான் அமைந்துள்ளன.

கொலை செய்தவனை அரசாங்கம் உடனே கொன்று விடுமானால் கொலை செய்ய எவருமே துணிய மாட்டார்கள். பல்லை உடைத்தால் தனது பல்லும் அரசாங்கத்தினால் உடைக்கப்படும் என்பதை அறிந்தால் எவருமே அடுத்தவனின் பல்லை உடைக்க மாட்டார்கள்.

உலகில் எத்தனையோ அரசுகள் வந்து போய் விட்டன. மக்களின் உயிருக்கும், உடமைக்கும், கற்புக்கும் பாதுகாப்பு அளிக்கும் பொறுப்பில் அத்தனை அரசுகளுமே தோல்வியைத் தான் தழுவி இருக்கின்றன. எப்போது என்ன நேருமோ என்று அஞ்சியே மக்கள் வாழும் நிலை ஏற்பட்டு விட்டது.

இந்த நிலை மாற வேண்டுமானால் குற்றவாளிகள் விஷயத்தில் கருணை என்ற பேச்சுக்கே இடமளிக்கக் கூடாது. குறுகிய நோக்கில் இஸ்லாமியத் தண்டனைகளைப் புறக்கணிக்காமல் அதனால் ஏற்படும் நல்ல விளைவுகளைக் கருத்தில் கொண்டு அதை அமுல்படுத்த முன்வர வேண்டும்.

குற்றவாளிகளுக்கு ஒத்தடம் கொடுக்கும் தண்டனைகளை மாற்றி அவர்களுக்கெதிராகச் சாட்டையை உயர்த்தி, கடும் தண்டனைகளை நடைமுறைப்படுத்தினால் உலகம் அமைதிப் பூங்காவாகத் திகழும்.

திருடனைப் பிடித்தவுடன் அவன் கையை வெட்டி விட்டால் பிறகு அவன் நிரபராதி என்பது தெரிய வந்தால் போன கை திரும்பி வந்து விடுமா? என்று சிலர் கேட்கின்றனர்.

இரண்டு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற பின் எத்தனையோ பேர் நிரபராதிகள் என நிரூபிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இழந்த மூன்றாண்டுகளைத் திருப்பிக் கொடுக்க இயலுமா என்று கேட்டால் அதற்கு என்ன பதில்? என்பதைச் சிந்தித்தால் இப்படிக் கேட்க மாட்டார்கள்.

மேலும் எடுத்தேன்; கவிழ்த்தேன் என்று தண்டனை வழங்குமாறு இஸ்லாம் கூறவில்லை. குற்றங்கள் நிரூபிக்கப்பட்ட பின்பே தண்டனை வழங்குமாறு கூறுகின்றது.

மரண தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்படும் விபச்சாரத்தை நான்கு நேரடியான சாட்சிகள் மூலம் நிரூபிக்க வேண்டும். நான்குக்கும் குறைவானவர்கள் இக்குற்றத்தைச் சுமத்தினால் அவ்வாறு குற்றம் சுமத்தியவர்களுக்கு எண்பது கசையடிகள் வழங்குமாறு 24:4, 24:13 ஆகிய வசனங்கள் கூறுகின்றன.

இஸ்லாமிய ஆட்சி முறையில் தகுந்த சாட்சியங்களின்றி சில குற்றவாளிகள் தப்பித்துக் கொள்ள முடியுமே தவிர நிரபராதிகள் தண்டிக்கப்படவே முடியாது என்பது தான் உண்மை.

உலகில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதில் அனைத்து குற்றவியல் சட்டங்களும் தோற்றுவிட்ட நிலையில் திருக்குர்ஆன் கூறும் குற்றவியல் சட்டங்கள் மட்டுமே இதில் வெற்றி கண்டுள்ளது.

திருக்குர்ஆன் இறைவேதமே என்பதற்கான சான்றுகளில் ஒன்றாக இவ்வசனங்கள் அமைந்துள்ளன.

--P.JAINUL ABIDEEN
https://bit.ly/3UP3kQ3

Search This Blog