8. சொர்க்கத்தில் பெண்களுக்குத் துணைகள் உண்டா?
"சொர்க்கத்தில் தூய்மையான துணைகள் உள்ளனர்'' என்றும், பெண் துணைகள் உள்ளனர் என்றும் இவ்வசனங்களில் (2:25, 3:15, 4:57, 36:56, 37:48, 38:52, 44:54, 52:20, 55:56, 55:70, 56:22, 56:35, 78:33) கூறப்படுகின்றது.
நல்லறம் செய்த பெண்களுக்கு ஆண் துணைகள் இல்லையா? என்ற கேள்வி இதில் எழும்.
இதற்குரிய விடையை அறிவதற்கு அரபு மொழியின் சொல்லிலக்கண விதியை அறிந்து கொள்ள வேண்டும்.
தமிழ்மொழி உள்ளிட்ட பல மொழிகளில் படர்க்கை ஒருமையில் மட்டுமே ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனிச் சொல்லமைப்புகள் உள்ளன. உதாரணமாக அவன் என்பது ஆணையும், அவள் என்பது பெண்ணையும் குறிக்கும்.
படர்க்கைப் பன்மையில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனி சொல்லமைப்பு தமிழில் கிடையாது. ஆண்களுக்கும், பெண்களுக்கும் பொதுவாக 'அவர்கள்' எனக் கூறுகிறோம்.
அரபுமொழியில் படர்க்கை ஒருமையில் மட்டுமின்றி படர்க்கைப் பன்மையிலும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனி சொல்லமைப்பு உள்ளது.
அதுபோல் முன்னிலையில் பேசும்போது தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் 'நீ' 'நீங்கள்' என்று கூறுகிறோம். தமிழ்மொழியில் இது ஆண்களுக்கும், பெண்களுக்கும் பொதுவானது.
ஆனால் அரபுமொழியில் முன்னிலையாகப் பேசுவதற்கு இரு பாலருக்கும் தனித்தனி சொல்லமைப்புகள் உள்ளன.
தொழுங்கள் என்று தமிழ்மொழியில் கூறினால் ஆண்கள், பெண்கள் ஆகிய இரு பாலரையும் குறிக்கும் சொல்லமைப்பு என்று புரிந்து கொள்வோம்.
ஆனால் அரபுமொழியில் இப்படி இரு பாலரையும் குறிக்க பொதுவான சொல்லமைப்பு இல்லை.
'ஸல்லூ' (தொழுங்கள்) என்று அரபுமொழியில் கூறினால் ஆண்களை நோக்கித் தொழச் சொல்லும்போது மட்டுமே இவ்வாறு கூறமுடியும்.
பெண்களை நோக்கி 'தொழுங்கள்' என்று கூறுவதாக இருந்தால் 'ஸல்லீன' எனக் கூற வேண்டும்.
அரபுமொழியில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் பொதுவாகக் கட்டளை இடுவதாக இருந்தால் "ஆண்களே தொழுங்கள்! பெண்களே தொழுங்கள்'' என்று ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனியாகக் கூற வேண்டும்.
9. திருக்குர்ஆன் வழிகெடுக்காது
இவ்வசனத்தில் (2:26) "இதன் மூலம் வழிகெடுப்பான்'' என்று கூறப்பட்டுள்ளது. "இவ்வேதத்தின் மூலம்'' என்று சிலர் இதற்குப் பொருள் கொண்டுள்ளனர். இது தவறாகும்.
ஏனெனில் இவ்வசனத்தில் ஒரு உதாரணத்தைக் கூறிவிட்டு அதன் பிறகு "இதன் மூலம் வழிகெடுப்பான்'' என்று அல்லாஹ் கூறுகிறான். எனவே "இதன் மூலம்'' என்ற சொற்றொடருக்கு "இவ்வுதாரணத்தின் மூலம்'' என்று பொருள் கொள்வதே சரியாகும்.
"இதன் மூலம்'' என்ற சொற்றொடருக்கு "வேதத்தின் மூலம்'' என்று பொருள் கொள்ள முடியாது. ஏனெனில் இவ்வசனத்தில் வேதத்தைக் குறிக்கும் எந்தச் சொல்லும் இடம் பெறவில்லை
10. இறைவன் தூயவன் என்பதன் பொருள்
இவ்வசனங்களில் (2:32, 2:116, 3:191, 4:171, 5:116, 6:100, 7:143, 9:31, 10:10, 10:18, 10:68, 12:108, 16:1, 16:57, 17:1, 17:43, 17:93, 17:108, 19:35, 21:22, 21:26, 21:87, 23:91, 24:16, 25:18, 27:8, 28:68, 30:40, 34:41, 36:36, 36:83, 37:159, 37:180, 39:4, 39:67, 43:13, 43:82, 52:43, 59:23, 68:29) அல்லாஹ்வைப் பற்றி கூறும் போது தூய்மையானவன் எனப் பொருள்படும் ஸுப்ஹான் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
நாம் தமிழில் பயன்படுத்தும் தூய்மை எனும் சொல், அழுக்கு, அசுத்தம் போன்றவற்றிலிருந்து விலகியிருப்பதைக் குறிக்கும். ஆனால் ஸுப்ஹான் என்பது அதை விட ஆழமான அர்த்தம் கொண்ட சொல்லாகும்.
"கடவுள் தன்மைக்குப் பங்கம் விளைவிக்கும் எல்லாத் தன்மைகளை விட்டும் தூய்மையானவன்'' என்பதே ஸுப்ஹான் என்பதன் பொருளாகும்.
"மரணம், முதுமை, நோய், தூக்கம், இயலாமை, அசதி, களைப்பு, மறதி, கவலை, பலவீனம், தோல்வி, இயற்கை உபாதை, மனைவி, மக்கள், தாய், தந்தை, பசி, தாகம் போன்ற அனைத்திலிருந்தும் நீங்கியிருத்தல்'' என்பது இதன் பொருளாகும். இந்தச் சொல்லை அல்லாஹ்வைத் தவிர யாருக்கும் பயன்படுத்தக் கூடாது.
அழுக்கு, அசுத்தம் போன்றவற்றிலிருந்து விலகியிருப்பதைக் குறிக்க அரபியில் வேறு சொற்கள் உள்ளன.
P.Jainul Abideen