தவ்ஹீத் ஜமாஅத் video's: தொழுது கொண்டிருக்கும் போது இகாமத் சொல்லப்பட்டால்

தொழுது கொண்டிருக்கும் போது இகாமத் சொல்லப்பட்டால்

இகாமத்

 தொழுது கொண்டிருக்கும் போது இகாமத் சொல்லப்பட்டால்?

தொழுது கொண்டிருக்கும் போது, இகாமத் சொல்லப்பட்டால், தொழுகையை விட்டு விட்டு, ஜமாஅத்தில் சேருவதா? அல்லது தொழுகையை முடித்து விட்டு ஜமாஅத்தில் சேருவதா?

அர்ஷாத்-கத்தார்

பதில் :


கடமையான தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டுவிட்டால் எந்தத் தொழுகையும் இல்லை என்று பின்வரும் செய்தி கூறுகின்றது.

صحيح مسلم1679 – وَحَدَّثَنِى يَحْيَى بْنُ حَبِيبٍ الْحَارِثِىُّ حَدَّثَنَا رَوْحٌ حَدَّثَنَا زَكَرِيَّاءُ بْنُ إِسْحَاقَ حَدَّثَنَا عَمْرُو بْنُ دِينَارٍ قَالَ سَمِعْتُ عَطَاءَ بْنَ يَسَارٍ يَقُولُ عَنْ أَبِى هُرَيْرَةَ عَنِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- أَنَّهُ قَالَ « إِذَا أُقِيمَتِ الصَّلاَةُ فَلاَ صَلاَةَ إِلاَّ الْمَكْتُوبَةُ ».


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டால் கடமையான அந்தத் தொழுகையைத் தவிர வேறு தொழுகையில்லை.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)  நூல் : முஸ்லிம்

ஒருவர் முன்சுன்னத் தொழும் போது இகாமத் சொல்லப்பட்டால் உடனே அவர் தொழுகையை விட்டுவிட வேண்டும் என்று சிலர் இந்தச் செய்தியை ஆதாரமாகக் கொண்டு கூறுகின்றனர். ஆனால் இந்தச் செய்தி இவர்கள் கூறுகின்ற கருத்தைத் தரவில்லை.

இகாமத் சொல்லப்பட்ட பிறகு கடமையில்லாத வேறு எந்தத் தொழுகையையும் துவங்கக் கூடாது என்பதே இந்தச் செய்தியின் பொருளாகும்.

இகாமத் என்பது கடமையான தொழுகைக்குரிய அழைப்பாகும். இந்த அழைப்பு விடப்பட்டால் கடமையான தொழுகையை நிறைவேற்றுவதே முறையான செயல். இந்த அழைப்புக்குப் பிறகு உபரியான வணக்கத்தில் ஈடுபட்டால் கடமையான தொழுகையை அலட்சியம் செய்யும் நிலை ஏற்படுகிறது.

நாம் பள்ளிக்கு வரும் போது இகாமத் சொல்லப்பட்டால் முன்சுன்னத், தஹிய்யதுல் மஸ்ஜித் உள்ளிட்ட எந்தத் தொழுகையிலும் ஈடுபடாமல் ஜமாஅத்தில் சேர்ந்து கொள்ள வேண்டும்.

இகாமத் சொல்லப்படும் முன்னரே நாம் ஏதேனும் ஒரு தொழுகையில் ஈடுபட்டிருந்தால் அந்தத் தொழுகையை இடையில் முறிப்பதைப் பற்றி இந்த ஹதீஸ் பேசவில்லை. நாம் ஈடுபட்டிருந்த தொழுகையை முடித்து விட்டு ஜமாஅத் தொழுகையில் சேர்ந்து கொள்ள வேண்டும்.

ஏனெனில் தொழுகையை தக்பீர் கொண்டு ஆரம்பித்து ஸலாம் கொண்டு முடிக்க வேண்டும் என்பது நபி மொழியாகும்.

سنن الترمذي3 – حَدَّثَنَا قُتَيْبَةُ، وَهَنَّادٌ، وَمَحْمُودُ بْنُ غَيْلَانَ، قَالُوا: حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، ح وحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُحَمَّدِ بْنِ عَقِيلٍ، عَنْ مُحَمَّدِ ابْنِ الْحَنَفِيَّةِ، عَنْ عَلِيٍّ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «مِفْتَاحُ الصَّلَاةِ الطُّهُورُ، وَتَحْرِيمُهَا التَّكْبِيرُ، وَتَحْلِيلُهَا التَّسْلِيمُ»

தொழுகையின் திறவுகோல் உளூவாகும். அதன் உள் நுழைதல் தக்பீர் ஆகும். வெளியேறுதல் ஸலாம் கொடுப்பதாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.   நூல் : திர்மிதி 3

ஒரு தொழுகையைத் துவக்கி விட்டால் அதை முழுமைப்படுத்தி ஸலாம் கொடுத்துத் தான் முடிக்க வேண்டும். இடையில் முடிக்கக் கூடாது.


ஜம்வு தொழுகையில் இகாமத் இரண்டா? ஒன்றா?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு முறை மட்டுமே ஹஜ் செய்துள்ளார்கள். அவர்கள் முஸ்தலிஃபாவில் மஃக்ரிப் மற்றும் இஷாத் தொழுகைகளை ஒரு பாங்கும் இரண்டு இகாமத்தும் கூறித் தொழுதார்கள் என்ற கருத்தில் ஹதீஸ் உள்ளது. இதற்கு மாற்றமாக ஒரு பாங்கும் ஒரு இகாமத்தும் கூறி தொழுதார்கள் எனவும் ஹதீஸ் உள்ளது. இரண்டும் ஒன்றுக்கொன்று முரண்படுவதைப் போல் தெரிகின்றது. விளக்கம் தேவை.

அக்பர், தேங்காய்ப்பட்டிணம்.

பதில்:

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முஸ்தலிஃபாவில் மஃக்ரிப் மற்றும் இஷாத் தொழுகைகளை ஒரு பாங்கும் இரண்டு இகாமத்தும் கூறி தொழுதார்கள் என்ற கருத்தில் சில ஹதீஸ்கள் உள்ளன. இதற்கு மாற்றமாக ஒரு பாங்கும் ஒரு இகாமத்தும் கூறி தொழுதார்கள் எனவும் ஹதீஸ் உள்ளன என்பது உண்மை தான்.

இரண்டும் ஒன்றுக்கொன்று முரண்படவே செய்கின்றன என்பதும் உண்மை தான்.  நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு முறை மட்டுமே ஹஜ் செய்திருக்கும் போது இந்த இரண்டு முறைகளையும் அவர்கள் செயல்படுத்தியிருக்க வாய்ப்பில்லை. இந்த இரண்டில் ஏதாவது ஒன்றை மட்டுமே அவர்கள் செய்திருப்பார்கள்.

இது தொடர்பாக வரும் அனைத்துச் செய்திகளையும் ஆராயும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு பாங்கும் இரண்டு இகாமத்தும் கூறித் தொழுதார்கள் என்பதே சரியான செய்தியாக உள்ளது.

ஒரு இகாமத் கூறினார்கள் என்ற கருத்து இப்னு உமர் (ரலி) அவர்களின் வழியாக மட்டுமே அறிவிக்கப்படுகின்றது.

2269و حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ حَدَّثَنَا إِسْمَعِيلُ بْنُ أَبِي خَالِدٍ عَنْ أَبِي إِسْحَقَ قَالَ قَالَ سَعِيدُ بْنُ جُبَيْرٍ أَفَضْنَا مَعَ ابْنِ عُمَرَ حَتَّى أَتَيْنَا جَمْعًا فَصَلَّى بِنَا الْمَغْرِبَ وَالْعِشَاءَ بِإِقَامَةٍ وَاحِدَةٍ ثُمَّ انْصَرَفَ فَقَالَ هَكَذَا صَلَّى بِنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي هَذَا الْمَكَانِ رواه مسلم

ஸலமா பின் குஹைல் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் :

சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் (தமது ஹஜ்ஜின் போது) முஸ்தலிஃபாவில் ஒரே இகாமத்தில் மஃக்ரிபையும், இஷாவையும் (சேர்த்துத்) தொழுதார்கள். பிறகு, "இவ்வாறே இப்னு உமர் (ரலி) அவர்களும் தொழுதார்கள்'' என்றும், "அவ்வாறே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் தொழுவார்கள் என இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்'' என்றும் அறிவித்தார்கள்.

நூல் : முஸ்லிம் 2475


இந்தச் செய்தியின் அறிவிப்பாளர் தொடர் சரியாக இருந்தாலும் இந்தத் தகவல் சரியானதல்ல. ஏனென்றால் இப்னு உமர் (ரலி) அவர்கள் வழியாக இதற்கு மாற்றமாக இரண்டு இகாமத் என்ற கருத்தும் பல வழிகளில் அறிவிக்கப்பட்டுள்ளது.


1673حَدَّثَنَا آدَمُ حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ عَنْ الزُّهْرِيِّ عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ عَنْ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ جَمَعَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَ الْمَغْرِبِ وَالْعِشَاءِ بِجَمْعٍ كُلُّ وَاحِدَةٍ مِنْهُمَا بِإِقَامَةٍ وَلَمْ يُسَبِّحْ بَيْنَهُمَا وَلَا عَلَى إِثْرِ كُلِّ وَاحِدَةٍ مِنْهُمَا رواه البخاري

இப்னு உமர் (ரலி) கூறுகிறார்கள் :

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முஸ்தலிஃபாவில், மஃக்ரிபையும் இஷாவையும் ஒவ்வொன்றுக்கும் (தனித்தனி) இகாமத்துடன் சேர்த்துத் தொழுதார்கள். இரண்டிற்குமிடையிலோ ஒவ்வொன்றுக்கும் பின்போ கடமையல்லாத தொழுகை எதையும் தொழவில்லை.

நூல் : புகாரி 1673


654أَخْبَرَنَا إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ عَنْ وَكِيعٍ قَالَ حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ عَنْ الزُّهْرِيِّ عَنْ سَالِمٍ عَنْ أَبِيهِ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ جَمَعَ بَيْنَهُمَا بِالْمُزْدَلِفَةِ صَلَّى كُلَّ وَاحِدَةٍ مِنْهُمَا بِإِقَامَةٍ وَلَمْ يَتَطَوَّعْ قَبْلَ وَاحِدَةٍ مِنْهُمَا وَلَا بَعْدُ رواه النسائي

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முஸ்தலிஃபாவில் மஃக்ரிபையும், இஷாவையும் சேர்த்துத் தொழுதார்கள். இவ்விரண்டில் ஒவ்வொன்றுக்கும் (தனியே) ஒரு இகாமத் கூறி தொழுதார்கள். இந்தத் தொழுகைகளுக்கு முன்பாகவோ, பின்பாகவோ அவர்கள் எதையும் உபரியாகத் தொழவில்லை.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)   நூல் : நஸாயீ 654


477أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعْلَى قَالَ حَدَّثَنَا خَالِدٌ قَالَ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ سَلَمَةَ بْنِ كُهَيْلٍ قَالَ رَأَيْتُ سَعِيدَ بْنَ جُبَيْرٍ بِجَمْعٍ أَقَامَ فَصَلَّى الْمَغْرِبَ ثَلَاثَ رَكَعَاتٍ ثُمَّ أَقَامَ فَصَلَّى يَعْنِي الْعِشَاءَ رَكْعَتَيْنِ ثُمَّ ذَكَرَ أَنَّ ابْنَ عُمَرَ صَنَعَ بِهِمْ مِثْلَ ذَلِكَ فِي ذَلِكَ الْمَكَانِ وَذَكَرَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَنَعَ مِثْلَ ذَلِكَ فِي ذَلِكَ الْمَكَانِ رواه النسائي

ஸலமா பின் குஹைல் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் :

ஸயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் (தமது ஹஜ்ஜின் போது) முஸ்தலிஃபாவில் இகாமத் சொல்லி மூன்று ரக்அத் மஃக்ரிப் தொழுதார்கள். பிறகு இகாமத் சொல்லி இரண்டு ரக்அத் இஷாத் தொழுதார்கள். பிறகு, அவர்கள் "இந்த இடத்தில் இப்னு உமர் (ரலி) அவர்கள் எங்களுக்கு இவ்வாறே தொழ வைத்தார்கள்'' என்றும், "அவ்வாறே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் இவ்விடத்தில் தொழுதார்கள் எனவும் இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்'' என்றும் அறிவித்தார்கள்.  நூல் : நஸாயீ 477

மஃக்ரிபுக்கும், இஷாவுக்கும் தனித்தனியே இகாமத் சொல்ல வேண்டும் என்று இந்தச் செய்திகள் தெரிவிக்கின்றன. இதுவும் இப்னு உமர் (ரலி) அவர்களின் வழியாகவே அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே அறிவிப்பாளர் ஒரு தகவலை முரண்பட்டு அறிவித்தால் இரண்டும் சரியானதாக இருக்க முடியாது. இரண்டில் ஒன்று தான் உண்மையாக இருக்க வேண்டும். வேறு ஹதீஸ்களின் துணையுடன் ஆராயும் போது ஒரு பாங்கு, இரண்டு இகாமத் என்பது தான் சரியான அறிவிப்பு என்ற முடிவுக்கு நாம் வர முடியும். ஏனென்றால் இப்னு உமர் (ரலி) அவர்கள் அல்லாமல் வேறு நபித்தோழர்களும் இவ்வாறு அறிவித்துள்ளனர்.

139حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ عَنْ مَالِكٍ عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ عَنْ كُرَيْبٍ مَوْلَى ابْنِ عَبَّاسٍ عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ أَنَّهُ سَمِعَهُ يَقُولُ دَفَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ عَرَفَةَ حَتَّى إِذَا كَانَ بِالشِّعْبِ نَزَلَ فَبَالَ ثُمَّ تَوَضَّأَ وَلَمْ يُسْبِغْ الْوُضُوءَ فَقُلْتُ الصَّلَاةَ يَا رَسُولَ اللَّهِ فَقَالَ الصَّلَاةُ أَمَامَكَ فَرَكِبَ فَلَمَّا جَاءَ الْمُزْدَلِفَةَ نَزَلَ فَتَوَضَّأَ فَأَسْبَغَ الْوُضُوءَ ثُمَّ أُقِيمَتْ الصَّلَاةُ فَصَلَّى الْمَغْرِبَ ثُمَّ أَنَاخَ كُلُّ إِنْسَانٍ بَعِيرَهُ فِي مَنْزِلِهِ ثُمَّ أُقِيمَتْ الْعِشَاءُ فَصَلَّى وَلَمْ يُصَلِّ بَيْنَهُمَا رواه البخاري

உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

(ஹஜ்ஜின் போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்  முஸ்தலிஃபா என்ற இடம் வந்ததும், உளூச் செய்தார்கள். அப்போது உளூவை முழுமையாக்கினார்கள். பின்னர் தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டதும்,  மஃக்ரிப் தொழுகை நடத்தினார்கள். பிறகு ஒவ்வொரு மனிதரும் தத்தமது ஒட்டகத்தை தம் தங்குமிடங்களில் படுக்க வைத்தனர். தொடர்ந்து இஷாத் தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்ட போது அதையும் தொழுவித்தார்கள். (மஃக்ரிப், இஷா ஆகிய) இரு தொழுகைகளுக்கிடையிலும் வேறெந்தத் தொழுகையையும் அவர்கள் தொழவில்லை.   நூல் : புகாரி 139


ஜாபிர் (ரலி) அவர்களும் இது போன்று அறிவித்துள்ளார்கள்.

650أَخْبَرَنِي إِبْرَاهِيمُ بْنُ هَارُونَ قَالَ حَدَّثَنَا حَاتِمُ بْنُ إِسْمَعِيلَ قَالَ حَدَّثَنَا جَعْفَرُ بْنُ مُحَمَّدٍ عَنْ أَبِيهِ أَنَّ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ قَالَ دَفَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى انْتَهَى إِلَى الْمُزْدَلِفَةِ فَصَلَّى بِهَا الْمَغْرِبَ وَالْعِشَاءَ بِأَذَانٍ وَإِقَامَتَيْنِ وَلَمْ يُصَلِّ بَيْنَهُمَا شَيْئًا رواه النسائي

2137 وَدَفَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَدْ شَنَقَ لِلْقَصْوَاءِ الزِّمَامَ حَتَّى إِنَّ رَأْسَهَا لَيُصِيبُ مَوْرِكَ رَحْلِهِ وَيَقُولُ بِيَدِهِ الْيُمْنَى أَيُّهَا النَّاسُ السَّكِينَةَ السَّكِينَةَ كُلَّمَا أَتَى حَبْلًا مِنْ الْحِبَالِ أَرْخَى لَهَا قَلِيلًا حَتَّى تَصْعَدَ حَتَّى أَتَى الْمُزْدَلِفَةَ فَصَلَّى بِهَا الْمَغْرِبَ وَالْعِشَاءَ بِأَذَانٍ وَاحِدٍ وَإِقَامَتَيْنِ وَلَمْ يُسَبِّحْ بَيْنَهُمَا شَيْئًا رواه مسلم

ஜாபிர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புறப்பட்டு முஸ்தலிஃபாவை அடைந்தார்கள். அங்கே ஒரு பாங்கு இரண்டு இகாமத்துடன் மஃக்ரிப் இஷாத் தொழுகைகளை தொழுதார்கள். இவ்விரண்டுக்கும் இடையில் வேறு எதையும் தொழவில்லை.

நூல் : நஸாயீ 650

இரண்டு இகாமத் சொன்னார்கள் என்ற தகவல் ஜாபிர் (ரலி) அவர்கள் வழியாக முஸ்லிமிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முஸ்தலிஃபாவில் ஒரு பாங்கும், ஒவ்வொரு தொழுகைக்கும் தனித்தனியே இகாமத்தும் சொல்லி இரண்டு இகாமத்துடன் மஃக்ரிப், இஷாத் தொழுகைகளைத் தொழுதார்கள் என்ற கருத்தில் வரும் செய்திகளே சரியானவை.


ராகம் போட்டு பாங்கு சொல்லலாமா?

அஷ்ரஃப் அலி

பதில்:

தற்போது அனைத்துப் பள்ளிகளிலும் பாங்கு நீட்டிச் சொல்லப்பட்டு வருகின்றது. இவ்வாறு பாங்கு சொல்லி முடிப்பதற்குப் பல நிமிடங்கள் தேவைப்படுகின்றன.

பாங்கை நீட்டிச் சொல்ல வேண்டும் என்று மார்க்கம் சொல்லவில்லை. பாங்கு என்பது தொழுகைக்கான அறிவிப்பாகும்.

பொதுவாக எந்த ஒரு அறிவிப்பானாலும் அதை நீட்டாமல் சாதாரணமாகச் செய்வதே சரியான முறை. இவ்வாறே பாங்கு என்ற அறிவிப்பையும் சாதாரணமாகச் செய்ய வேண்டும்.

வாசிக்கும் போது எங்கு நீட்ட வேண்டும்? எங்கு நீட்டக் கூடாது? என்று விதிமுறைகள் அரபுமொழியில் உள்ளன. அரபுமொழியில் அமைந்த பாங்கு இந்த விதிமுறைகளுக்கு உட்பட்டு சொல்லப்பட்டால் அதில் தவறில்லை. ஆனால் நடைமுறையில் பாங்கு இந்த விதிமுறைகளுக்கு உட்பட்டு சொல்லப்படுவதில்லை. பாங்கு சொல்பவர் தான் விரும்பிய இடங்களில் தன் விருப்பப்படி நீட்டிக் கொள்கிறார்.

உதாரணமாக அல்லாஹு என்று கூற வேண்டிய வார்த்தையை அல்லா……………………… என்று சில மணித்துளிகள் நீட்டி பிறகு  ஹு என்று கூறுகிறார். இது அரபு மொழியில் இல்லாத வழக்கு முறை. ஒரு வார்த்தையை அம்மொழி வழக்கிற்கு மாற்றமான முறையில் உச்சரித்தால் அது கேலியாகவும், கிண்டலாகவும் அமையும்.

ஹய்ய என்பதை ஹய்ய்ய்ய்ய்ய என்று நீட்டுவதும், அஷ்ஹது என்பதை அஷ்ஹதூஊஊஊ என்று நீட்டுவதும், இன்னும் பலவாறாக அரபு மொழிவழக்கில் இல்லாத வகையில் நீட்டுவதும் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

மேலும் பாங்கு சொல்வது ஒரு வணக்கமாகும். அதைச் சொல்பவருக்கும், அதைக் கேட்டு பதிலுரைப்பவர்களுக்கும் மார்க்க அடிப்படையில் சிறப்புகள் இருக்கின்றன. வணக்கமாக இருக்கின்ற இந்தக் காரியத்தைச் சரியாகவும், சிறப்பாகவும் செய்ய வேண்டுமே தவிர கேலிக்குரியதாக ஆக்கிவிடக் கூடாது.

முஅத்தின் பாங்கு சொன்னால் அதைக் கேட்பவர்கள் அதற்குப் பதிலளிக்க வேண்டும் என்று மார்க்கம் கூறுகின்றது. தேவையின்றி பாங்கு நீட்டப்படும் போது பதிலளிப்பவர் அதற்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. இதனால் பாங்கு சொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் போதே இடையில் பேச வேண்டிய நிலையும் ஏற்படுகின்றது. நீட்டாமல் சாதாரண அறிவிப்பைப் போன்று பாங்கு கூறப்பட்டால் இது போன்ற சிக்கல் ஏற்படாது.

பாங்கில் ராகம் போடுவது கட்டாயமனதல்ல. ராகத்துடன் சொன்னாலும், ராகம் இல்லாமல் சொன்னாலும் அதில் தவறேதுமில்லை. ஆனால் அளவுக்கு அதிகமாக நீட்டப்படுவது அறவே தவிர்க்கப்பட வேண்டும்.

தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகத்தில் இருக்கும் பள்ளிவாசல்களிலும் கூட பாங்கை நீட்டி முழக்கி கொலை செய்யப்படுகிறது. அந்தந்த பகுதியில் உள்ள பிரச்சாரகர்களும், நிர்வாகிகளும் இதில் கூடுதல் கவனம் செலுத்திட வேண்டும்.


--P.JAINUL ABIDEEN 


Search This Blog