தவ்ஹீத் ஜமாஅத் video's: 1- இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பு பாகம் 01

1- இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பு பாகம் 01

இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பு
 இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பு

பொருளடக்கம்

குழந்தை பாக்கியத்தைக் கேட்க வேண்டும்.

​பெண்குழந்தைகளை வெறுக்கக் கூடாது.

குழந்தைகளைக் கொல்வது மாபெரும் குற்றம்.

குடும்பக்கட்டுப்பாடு செய்யலாமா?

குழந்தையின் காதில் பாங்கு சொல்ல வேண்டுமா?

தஹ்னீக்

பெயர் சூட்டுதல்

அகீகா

முடியின் எடைக்கு நிகரான வெள்ளியைக் கொடுக்க வேண்டுமா?

பால் புகட்டுதல்

கத்னா செய்தல்

பிள்ளைகளைக் கொஞ்ச வேண்டும்

குழந்தைப் பாசம் பெற்றோர்களை வழிகெடுத்து விடக் கூடாது

நீதமாக நடக்க வேண்டும்

குழந்தைகளை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்

வீரர்களாக வளர்க்க வேண்டும்

சிறியவர்களுக்கு முன்னுரிமை தர வேண்டும்

குழந்தைகளுக்காக பிரார்த்தனை செய்ய வேண்டும்

செலவு செய்வது கடமை

வீண்விரயம் செய்வது கூடாது

தன்னிறைவு பெற்றவர்களாக விட்டுச் செல்ல வேண்டும்

சிறுவர்களுக்கு சலாம் கூறுதல்

விளையாட அனுமதிக்க வேண்டும்

விளையாட்டுப் பொருட்களை வாங்கித் தர வேண்டும்

அனுமதி கேட்டு உள்ளே வர வேண்டும்

தவறு செய்யும் போது கண்டிக்க வேண்டும்

பிள்ளைகளைச் சபிக்கக்கூடாது

கல்வி கற்றுத்தர வேண்டும்

உபதேசம் செய்ய வேண்டும்

ஒழுங்கு முறைகளைக் கற்றுத்தர வேண்டும்

மார்க்க அறிஞர்களாக ஆக்க பயிற்சி அளிக்க வேண்டும்

காது மூக்கு குத்தலாமா?

தாயத்து தொங்க விடக்கூடாது

ஓதிப் பார்க்கலாம்

பிள்ளைகள் திருந்தாவிட்டால்...

முன்னுரை

பிறக்கும் போது எல்லாக் குழந்தைகளும் நல்ல குழந்தைகளாகவே பிறக்கின்றார்கள். அவர்கள் தீயவர்களாக ஆவது பெற்றோர்கள் வளர்க்கும் முறையில் தான் உள்ளது.

பெற்றோர்கள் உண்மையான முஸ்லிம்களாக இருந்தால் பிள்ளைகளும் அவர்களைப் போன்றே தூய இஸ்லாமியச் சிந்தனையில் வளர்கிறார்கள். பெயரளவில் முஸ்லிம்களாக இருந்தால் குழந்தைகளும்  பெயரளவில் முஸ்லிம்களாக வளர்கிறார்கள். பெற்றோரின் கொள்கை கோட்பாடு குணநலன்கள் குழந்தைகளிடத்தில் பிரதிபலிப்பதைக் கண்கூடாகப் பார்த்து வருகிறோம்.

இதற்கு மாற்றமாக நல்லவர்களுக்குக் கெட்ட குழந்தைகளும் கெட்டவர்களுக்கு நல்ல குழந்தைகளும் பிறப்பதுண்டு. ஆனால் இது குறைவாகும்.

ஒரு விலங்கு எப்படி முழு வளர்ச்சி பெற்ற விலங்கைப் பெற்றெடுக்கிறதோ அதைப்போல, எல்லாக் குழந்தைகளுமே இயற்கையான (மார்க்கத்)தில்தான் பிறக்கின்றன. விலங்குகள் அங்கக் குறைவுடன் பிறப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? (முழுமையான விலங்கை அங்க சேதப்படுத்துவது போல்) பெற்றோர்கள் தாம் குழந்தைகளை யூதர்களாகவோ கிறித்தவர்களாகவோ நெருப்பு வணங்கிகளாகவோ ஆக்கிவிடுகின்றனர்.    அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)   நூல் : புகாரி (1359)

எனவே நம் குழந்தை ஒழுக்கத்திலும், மார்க்கத்திலும் நன்னடத்தையிலும் நற்குணத்திலும் சிறந்து விளங்க வேண்டும் என்று நினைத்தால் முதலில் நம்மிடத்தில் இவையெல்லாம் ஏற்பட வேண்டும். நமது நடவடிக்கைள் ஒவ்வொன்றும் இஸ்லாத்திற்கு உட்பட்டு அமைய வேண்டும்.

குழந்தைகளைப் பெற்றெடுப்பது பெரிய விஷயமல்ல. ஏனென்றால் ஆடு மாடு கோழி குதிரை இன்னும் கோடிக்கணக்கான உயிரினங்களும் குட்டியிடத்தான் செய்கின்றன. பெற்றெடுத்த குழந்தைகளைச் சரியான அடிப்படையில் நல்லவர்களாகவும், வல்லவர்களாகவும் வளர்ப்பதில் தான் பெற்றோரின் திறமையுள்ளது.

பல பெற்றோர்கள் நல்லவர்களாக இருந்தாலும் குழந்தையை வளர்க்கும் முறையில் அவர்கள் தவறு செய்து விடுவதால் பிள்ளைகள் வழிகேட்டுக்குச் சென்றுவிடுகிறார்கள்.

மனிதன் சந்திக்கும் எல்லாப் பிரச்சனைகளுக்கும் அழகான தீர்வுகளை இஸ்லாம் கற்றுத்தருகிறது. இது இஸ்லாத்திற்கு மட்டும் உள்ள தனிச்சிறப்பாகும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை எவ்வாறு வளர்க்க வேண்டும் என்பதையும் இஸ்லாம் கற்றுத் தருகிறது.

திருக்குர்ஆன் மற்றும் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் போதனையின் அடிப்படையில் குழந்தைகளை வளர்க்கும் முறையை இந்நூல் விவரிக்கிறது. பெற்றோர்கள் கட்டாயம் இதைப் படித்துணர்ந்து இதனடிப்படையில் தங்கள் குழந்தைகளை வளர்க்க வேண்டும்.

எல்லாப் பெற்றோர்களும் இஸ்லாம் கூறும் குழந்தை வளர்ப்பு முறையைக் கையாண்டால் வளரும் குழந்தைகள் முழுக்க முழுக்க இறைவனுக்கு கட்டுப்பட்டு நடப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. பெற்றோர்களையும் மதித்து நடப்பார்கள்.

இப்ராஹீம் (அலை) தனது மகன் இஸ்மாயீலை முறையான அடிப்படையில் வளர்த்த காரணத்தினால் தான் பெரும் தியாகத்தை இறைவனுக்காக செய்வதற்கு இஸ்மாயீல் (அலை) அவர்கள் தயாரானார்கள்.

அவருடன் உழைக்கும் நிலையை அவர் (இஸ்மாயீல்) அடைந்த போது  என் அருமை மகனே! நான் உன்னை அறுப்பது போல் கனவில் கண்டேன். நீ என்ன கருதுகிறாய் என்பதைச் சிந்தித்துக் கூறு   என்று கேட்டார்.  என் தந்தையே! உங்களுக்குக் கட்டளையிடப்பட்டதைச் செய்யுங்கள்! அல்லாஹ் நாடினால் என்னைப் பொறுமையாளனாகக் காண்பீர்கள்   என்று பதிலளித்தார். இருவரும் கீழ்ப்படிந்து (தமது) மகனை அவர் முகம் குப்புறக் கிடத்திய போது,  இப்ராஹீமே! அக்கனவை நீர் உண்மைப்படுத்தி விட்டீர். நன்மை செய்வோருக்கு இவ்வாறே நாம் கூலி வழங்குவோம்   என்று அவரை அழைத்துக் கூறினோம்.    அல்குர்ஆன் (37 : 102)


குழந்தை பாக்கியத்தைக் கேட்க வேண்டும்

வயோதிகத்தை அடையும் போது பிள்ளைகள் கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக தனக்கு குழந்தை பிறக்க வேண்டும் என்று எல்லா தம்பதியினரும் ஆசைப்படுகிறார்கள். எனவே தான் குழந்தை பாக்கியம் கிட்டாதவர்கள் பல்வேறு மருத்துவமனைகளுக்குச் சென்று இதற்காக பல ஆயிரங்களை செலவு செய்துகொண்டிருக்கிறார்கள்.

குழந்தைகளைப் பெற்றெடுப்பதினால் இந்த உலகத்தில் இன்னும் ஏராளமான நன்மைகள் ஏற்படுகிறது. மறுமையிலும் பெற்றோர்கள் நன்றாக வாழ்வதற்கும் இன்பத்தை அனுபவிப்பதற்கும் நல்ல குழந்தைகள் காரணமாக அமைகின்றன, எனவே இந்த பாக்கியத்தை நாம் அனைவரும் கேட்க வேண்டும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

கண்ணியமும் மகத்துவமும் மிக்க அல்லாஹ் நல்ல அடியானுக்கு சொர்க்கத்தில் அந்தஸ்தை உயர்த்துவான். அப்போது அந்த அடியான் என் இறைவா இது எனக்கு எப்படிக் கிடைத்தது என்று கேட்பான். அதற்கு அல்லாஹ் உனக்காக உன் குழந்தை பாவமன்னிப்புக் கேட்டதால் (உனக்குக் இந்த அந்தஸ்து கிடைத்தது.) என்று கூறுவான்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)   நூல் : அஹ்மத் (10202)


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : மனிதன் இறந்துவிட்டால் அவனுடைய மூன்று செயல்களைத் தவிர மற்ற அனைத்தும் நின்றுவிடுகின்றன; 1. நிலையான அறக்கொடை 2. பயன்பெறப்படும் கல்வி. 3. அவனுக்காகப் பிரார்த்திக்கும் (அவனுடைய) நல்ல குழந்தை.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)  நூல் : முஸ்லிம் (3358)

ஈருலகத்திலும் பலனை அடைய வேண்டும் என்றால் பிறக்கும் குழந்தைகள் நல்ல குழந்தைகளாக வளர்க்கப்பட வேண்டும். பிள்ளையின் குணமும் நடத்தையும் கெட்டுவிட்டால் இவர்களே பெற்றோர்களுக்கு பெரும் சுமையாகவும் வேதனையாகவும் மாறிவிடுகிறார்கள்.

எனவே தான் இறைத்தூதர்கள் தங்களுக்குக் குழந்தை பாக்கியத்தை வேண்டும் போது நல்ல குழந்தைகளைத் தருமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தித்தார்கள்.

எனக்குப் பின் உறவினர்கள் குறித்து நான் அஞ்சுகிறேன். என் மனைவியும் பிள்ளைப்பேறு அற்றவளாக இருக்கிறார். எனவே ஒரு பொறுப்பாளரை நீ எனக்கு வழங்குவாயாக! அவர் எனக்கும், யஃகூபின் குடும்பத்தாருக்கும் வாரிசாவார். என் இறைவா! அவரை (உன்னால்) பொருந்திக் கொள்ளப்பட்டவராக ஆக்குவாயாக!   என்று (ஸக்கரிய்யா) கூறினார்.   அல்குர்ஆன் (19 : 6)

இறைவா! உன்னிடமிருந்து எனக்கொரு தூய குழந்தையைத் தருவாயாக! நீ வேண்டுதலைச் செவியுறுபவன்   என்று தம் இறைவனிடம் ஸக்கரிய்யா வேண்டினார்.  அல்குர்ஆன் (3 : 38)

எங்கள் இறைவா! எங்கள் வாழ்க்கைத் துணைகளிலிருந்தும், மக்களிலிருந்தும் எங்களுக்குக் கண் குளிர்ச்சியைத் தருவாயாக! (உன்னை) அஞ்சுவோருக்கு முன்னோடியாகவும் எங்களை ஆக்குவாயாக!   என்று (நல்லடியார்கள்) கூறுகின்றனர்.  அல்குர்ஆன் (25 : 74)

நம்பிக்கை இழந்து விடக்கூடாது

தர்ஹாக்களுக்குச் சென்று அங்கு அடக்கம் செய்யப்பட்டவர்களிடம் பிரார்த்தனை செய்தால் குழந்தை கிடைக்கும் என்று பலர் கருதிக்கொண்டு தர்ஹாக்களுக்குச் சென்று வருகிறார்கள்.

குழந்தையைத் தருகின்ற சக்தி அல்லாஹ் ஒருவனிடத்தில் மட்டும் தான் உள்ளது. அவனே தான் விரும்புகின்றதை மனிதர்களுக்குத் தருகின்றான்.

வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அவன் நாடியதைப் படைக்கிறான். தான் நாடியோருக்குப் பெண்(குழந்தை)களை வழங்குகிறான். தான் நாடியோருக்கு ஆண்(குழந்தை)களை வழங்குகிறான். அல்லது ஆண்களையும், பெண்களையும் சேர்த்து அவர்களுக்கு வழங்குகிறான். தான் நாடியோரை மலடாக ஆக்குகிறான். அவன் அறிந்தவன்; ஆற்றலுடையவன்.  அல்குர்ஆன் (42 : 49)

இறைவனிடம் பல வருடங்களாக பிரார்த்தனை செய்து குழந்தை பிறக்காவிட்டாலும் அல்லாஹ்வின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை இழந்துவிடக்கூடாது. தொடர்ந்து வேண்டிக்கொண்டே இருக்க வேண்டும். அவன் நாடினால் முதிய வயதில் கூட குழந்தை பாக்கியத்தை கொடுத்துவிடுவான்.

ஸக்கரிய்யா (அலை) அவர்கள் அல்லாஹ்வின் மீது ஆழமான நம்பிக்கையை வைத்திருந்தார்கள். முதிய வயதை அடைந்த போதும் அல்லாஹ்விடத்திலே குழந்தை பாக்கியத்தை கேட்டுக்கொண்டிருந்தார்கள்.

என் இறைவா! என் எலும்பு பலவீனமடைந்து விட்டது. தலையும் நரையால் மின்னுகிறது. என் இறைவா! உன்னிடம் பிரார்த்தித்ததில் நான் துர்ப்பாக்கியசாலியாக இருந்ததில்லை. எனக்குப் பின் உறவினர்கள் குறித்து நான் அஞ்சுகிறேன். என் மனைவியும் பிள்ளைப்பேறு அற்றவளாக இருக்கிறார். எனவே ஒரு பொறுப்பாளரை நீ எனக்கு வழங்குவாயாக!  அல்குர்ஆன் (19 : 4)


பெண்குழந்தைகளை வெறுக்கக்கூடாது.

பொதுவாக பெண் குழந்தை பிறப்பதை அதிகமானவர்கள் வெறுக்கிறார்கள். சில ஊர்களில் பெண் குழந்தைகளை பிறந்த உடனே கொலை செய்துவிடுகிறார்கள். இறைவன் கொடுத்தது ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வது தான் இறைநம்பிக்கையாளரின் பண்பு. இறை நிராகரிப்பாளர்கள் தான் பெண் குழந்தைகளை இழிவாகக் கருதிவந்தார்கள்.

அவர்களில் ஒருவனுக்குப் பெண் குழந்தை பற்றி நற்செய்தி கூறப்பட்டால் அவனது முகம் கருத்து, கவலைப்பட்டவனாக ஆகிவிடுகிறான். அவனுக்குக் கூறப்பட்ட கெட்ட(தெனக் கருதிய) செய்தியினால் சமுதாயத்திலிருந்து மறைந்து கொள்கிறான். இழிவுடன் இதை வைத்துக் கொள்வதா? அல்லது மண்ணில் இதை (உயிருடன்) புதைப்பதா? (என்று எண்ணுகிறான்) கவனத்தில் கொள்க! அவர்கள் தீர்ப்பளிப்பது மிகவும் கெட்டது.   அல்குர்ஆன் (16 : 58)

பெண் குழந்தைகளைக் கொலை செய்தவர்களுக்கு எதிரான சாட்சியாக மறுமை நாளில் அக்குழந்தைகள் இறைவனிடம் முறையிடும்.

என்ன பாவத்துக்காக கொல்லப்பட்டாள் என்று உயிருடன் புதைக்கப்பட்டவள் விசாரிக்கப்படும் போது,  அல்குர்ஆன் (81 : 8)

பெண் குழந்தைகளைப் பெற்றவர்கள் பின்வரும் ஹதீஸ்களை மனதில் நிறுத்திக்கொண்டால் பெண் குழந்தையைப் பெற்றதற்காக ஒருபோதும் கவலைப்பட மாட்டார்கள்.

யார் இரு பெண்குழந்தைகளை, அவர்கள் பருவ வயதடையும்வரை பொறுப்பேற்று கருத்தாக வளர்க்கிறாரோ அவரும் நானும் மறுமை நாளில் இப்படி வருவோம்   என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், கூறிவிட்டு, தம் விரல்களை இணைத்துக் காட்டினார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி) நூல் : முஸ்லிம் (5127)

ஒரு பெண்மணி தனது இரு பெண் குழந்தைகளுடன் யாசித்த வண்ணம் வந்தார். என்னிடம் அப்போது ஒரு பேரீச்சம் பழத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை. எனவே அதை அவரிடம் கொடுத்தேன். அவர் அதை இரண்டாகப் பங்கிட்டு இரு குழந்தைகளுக்கும் கொடுத்துவிட்டார். அவர் அதிலிருந்து சாப்பிடவில்லை. பிறகு அவர் எழுந்து சென்று விட்டார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். நான் அவர்களிடம் இச்செய்தியைக் கூறியதும் அவர்கள்,   இவ்வாறு பல பெண் குழந்தைகளால் யார் சோதிக்கப்படுகின்றாரோ அவருக்கு அக்குழந்தைகள் நரகத்திலிருந்து அவரைக் காக்கும் திரையாக ஆவார்கள்   எனக் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)   நூல் : புகாரி (1418)


யார் பெண் குழந்தைகளில் ஒன்றுக்குப் பொறுப்பேற்று நன்மை புரிவாரோ அவருக்கு அந்தக் குழந்தைகள் நரகத்திலிருந்து தடுக்கும் திரையாக இருப்பார்கள்   என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)   நூல் : புகாரி (5995)


குழந்தைகளைக் கொல்வது மாபெரும் குற்றம்

பெற்றெடுத்த குழந்தையைக் கொலை செய்வது இறை நிராகரிப்பாளர்களின் பண்பாகும். அல்லாஹ்வும் இறைத்தூதர் (ஸல்) அவர்களும் இதைத் தடைசெய்துள்ளார்கள். மேலும் இது பெரும்பாவங்களில் ஒரு பாவமாகும்.

இவ்வாறே இணை கற்பிப்போரில் அதிகமானோர் தமது குழந்தைகளைக் கொல்வதை அவர்களின் தெய்வங்கள் அழகாக்கிக் காட்டி, அவர்களை அழித்து, அவர்களது மார்க்கத்தையும் அவர்களுக்குக் குழப்பிவிட்டன.  அல்குர்ஆன் (6 : 137)

அறிவில்லாமல் மடமையின் காரணமாகத் தமது குழந்தைகளைக் கொன்றவர்களும், அல்லாஹ்வின் பெயரால் இட்டுக்கட்டி, அல்லாஹ் அவர்களுக்கு வழங்கியதைத் தடுக்கப்பட்டதாக ஆக்கிக் கொண்டோரும் நஷ்டம் அடைந்தனர்; வழி கெட்டனர்; நேர் வழி பெறவில்லை.   அல்குர்ஆன் (6 : 140)


வாருங்கள்! உங்கள் இறைவன் உங்களுக்குத் தடை செய்ததைக் கூறுகிறேன்   என்று (முஹம்மதே!) கூறுவீராக! அது,  நீங்கள் அல்லாஹ்வுக்கு எதையும் இணையாக்கக் கூடாது   என்பதே. பெற்றோருக்கு  உதவுங்கள்! வறுமையின் காரணமாக உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள்! உங்களுக்கும், அவர்களுக்கும் நாமே உணவளிக்கிறோம். வெட்கக்கேடான காரியங்களில் வெளிப்படையானதையும், இரகசியமானதையும் நெருங்காதீர்கள்! அல்லாஹ் தடை செய்துள்ளதால் எவரையும் (அதற்கான) உரிமை இருந்தால் தவிர கொல்லாதீர்கள்! நீங்கள் விளங்கிக் கொள்வதற்காக இதையே அவன் உங்களுக்கு வலியுறுத்துகிறான்.    அல்குர்ஆன் (6 : 151)

வறுமைக்கு அஞ்சி உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள்! அவர்களுக்கும், உங்களுக்கும் நாமே உணவளிக்கிறோம். அவர்களைக் கொல்வது பெரிய குற்றமாகும்.   அல்குர்ஆன் (17 : 31)

நபியே! (முஹம்மதே!) நம்பிக்கை கொண்ட பெண்கள் உம்மிடம் வந்து  அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிக்க மாட்டோம்; திருட மாட்டோம்; விபச்சாரம் செய்ய மாட்டோம்; எங்கள் குழந்தைகளைக் கொல்ல மாட்டோம்; நாங்களாக இட்டுக் கட்டி எந்த அவதூறையும் கூற மாட்டோம்; நல்ல விஷயத்தில் உமக்கு மாறு செய்ய மாட்டோம்   என்று உம்மிடம் உறுதி மொழி கொடுத்தால் அவர்களிடம் உறுதி மொழி எடுப்பீராக! அவர்களுக்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடுவீராக! அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

அல்குர்ஆன் (60 : 12)


பிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : அன்னையரைப் புண்படுத்துவது, (அடுத்தவருக்குத் தரவேண்டியதைத்) தர மறுப்பது, (அடுத்தவருக்கு உரியதைத்) தருமாறு கேட்பது, பெண் சிசுக்களை உயிருடன் புதைப்பது ஆகியவற்றை அல்லாஹ் தடை செய்துள்ளான்.

அறிவிப்பவர் : முஃகீரா பின் ஷுஅபா (ரலி)   நூல் : புகாரி (5975)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்,  பேரழிவை ஏற்படுத்தும் ஏழு பெரும் பாவங்களைத் தவிர்த்துவிடுங்கள்   என்று கூறினார்கள். மக்கள்,  அல்லாஹ்வின் தூதரே! அவை யாவை?   என்று கேட்டார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்,  அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பது, சூனியம் செய்வது, முறையின்றி கொல்லக் கூடாதென அல்லாஹ் புனிதப்படுத்திய உயிரைக் கொல்வது, வட்டியைப் புசிப்பது, அநாதைகளின் செல்வத்தை உண்பது, போரின்போது புறமுதுகிட்டு ஓடுவது, இறைநம்பிக்கை கொண்ட  அப்பாவிகளான பத்தினிப் பெண்கள் மீது அவதூறு கூறுவது ஆகியவையே (அந்தப் பெரும் பாவங்கள்)   என்று  கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)  நூல் : புகாரி (6857)


குடும்பக்கட்டுப்பாடு செய்யலாமா?

கருவில் குழந்தை உருவாகுவதைத் தடுப்பதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் அஸ்ல் என்ற ஒரு முறை இருந்தது.

இல்லற வாழ்வின் போது ஆண் உச்சகட்ட நிலையை அடையும் போது தன் விந்தை மனைவியின் கற்ப அறைக்குள் செலுத்தாமல் வெளியே விட்டுவிடுவான். இம்முறைக்குத் தான் அஸ்ல் என்று சொல்லப்படுகிறது. இவ்வாறு செய்வதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுமதித்துள்ளார்கள் என்பதற்கு பல சான்றுகள் உள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது காலத்தில் குர்ஆன் அருளப்பட்டுக் கொண்டிருந்த நிலையில் நாங்கள்  அஸ்ல்  செய்துகொண்டிருந்தோம்.

அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)   நூல் : புகாரி (5209)


ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து (அல்லாஹ்வின் தூதரே) எனக்கு ஒரு அடிமைப் பெண் இருக்கிறாள்... அவள் எங்களுக்கு பணிவிடை செய்கிறாள். நான் அவளிடத்தில் உடலுறவு கொள்கிறேன். அவள் கற்பமாகிவிடுவாளோ என்று நான் அஞ்சுகிறேன் என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நீ விரும்பினால் அஸ்ல் செய்துகொள். அவளுக்கென்று விதிக்கப்பட்டது அவளை வந்தடையும் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)  நூல் : முஸ்லிம் (2606)


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் நாங்கள் அஸ்ல் செய்து கொண்டிருந்தோம். இச்செய்தி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை எட்டியது. ஆனால் அவர்கள் எங்களைத் தடுக்கவில்லை.

அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)  நூல் : முஸ்லிம் (2610)


மேலுள்ள செய்திகளைக் கவனிக்கும் போது அஸ்ல் செய்வது தடைசெய்யப்பட்ட ஒன்றல்ல என்பதை விளங்கிக்கொள்ளலாம். என்றாலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்வது சிறந்தது என்றோ நன்மையான காரியம் என்றோ கூறவில்லை. மாறாக இதை தவிர்த்துக்கொள்வது நல்லது என்ற அளவில் தான் கூறியுள்ளார்கள். பின்வரும் செய்திகளை கவனிக்கும் போது இந்த முடிவுக்கு வரலாம்.

நாங்கள் அஸ்ல் செய்ய விரும்பினோம். எனவே அது பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டோம். அதற்கு அவர்கள் அதை நீங்கள் செய்யாமல் இருந்தால் தவறேதுமில்லையே. மறுமை நாள் வரை உருவாக வேண்டிய எந்த உயிரும் கட்டாயம் உருவாகியே தீரும் என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர் : அபூ சயீத் அல்குத்ரீ (ரலி)  நூல் : புகாரி (2542)


தற்காலிகமாக குழந்தை உருவாவதைத் தடுத்துக் கொள்வதற்கான வழி தான் அஸ்ல் என்பது. அவ்வாறு செய்வது சிறந்தது கிடையாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கருதியிருக்கும் போது நிரந்தரமாக குழந்தை உருவாகாதவாறு குடும்பக்கட்டுப்பாடு செய்வது முற்றிலும் தவறாகும்.

தற்காலிக குடும்பக் கட்டுப்பாடான அஸ்ல் செய்வதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுமதியளித்துள்ளதால் ஆணுறை, காப்பர்டி போன்ற நவீன சாதனங்களைப் பயன்படுத்தி தற்காலிகமாக குழந்தை பிறப்பதை தவிர்த்துக்கொள்வதற்கு மட்டும் அனுமதியுள்ளது.

குழந்தை பாக்கியம் என்பது அல்லாஹ் கொடுத்த ஒரு மாபெரும் பாக்கியம். போதுமான அளவு குழந்தைகளைப் பெற்றெடுத்த பின் நிரந்தர குடும்பக்கட்டுப்பாட்டை செய்யலாம் என்று பலர் நினைக்கிறார்கள். நிரந்தரக் குடும்பக்கட்டுப்பாட்டைச் செய்த பின் பெற்றெடுத்த குழந்தைகள் விபத்தில் சிக்கி இறந்துவிட்டால் மீண்டும் இவர்கள் குழந்தை பாக்கியத்தை எப்படி பெறமுடியும்?. இதை சிந்தித்துப் பார்த்தாலே யாரும் நிரந்தர குடும்பக்கட்டுப்பாட்டை செய்ய மாட்டார்கள்.

குழந்தையின் காதில் பாங்கு சொல்ல வேண்டுமா?

குழந்தை பிறந்த உடன் குழந்தையின் வலது காதில் பாங்கும், இடது காதில் இகாமத்தும் சொல்ல வேண்டும் என்று பலர் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். இவ்வாறு செய்வது நபிவழி என்றும் நம்புகிறார்கள். இந்தக் கருத்தில் சில ஹதீஸ்கள் இருப்பதால் அவற்றை அடிப்படையாகக்கொண்டு இதைச் செய்து வருகிறார்கள். ஆனால் அந்த ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானவையாக உள்ளன.

ஃபாத்திமா (ரலி) அவர்கள் ஹஸன் (ரலி) அவர்களைப் பெற்றெடுத்த போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹஸன் (ரலி) அவர்களின் காதில் பாங்கு சொன்னார்கள்

என்று ஒரு ஹதீஸ் திர்மிதியில் 1436 வது இலக்கத்தில் இடம்பெற்றுள்ளது.

இது ஆஸிம் பின் உபைதுல்லாஹ் என்பவர் வழியாக வருகிறது. இவர் பலவீனமானவர் என்று இப்னு முயீன் என்ற அறிஞரும், எதற்கும் தகுதியில்லாதவர் என்று அஹ்மத் அவர்களும், இவரது தகவல் மறுக்கப்பட வேண்டியது என்று புகாரி அவர்களும்,  இவரை ஆதாரமாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்று இப்னு சஅத் அவர்களும் கூறியுள்ளார்கள்.

மேலும் இதே செய்தி பைஹகீ எழுதிய ஷுஅபுல் ஈமான் என்ற நூலிலும் பதிவுசெய்யப்பட்டுள்ளது. அதை காசிம் பின் முதய்யப் என்பவரும், முஹம்மத் பின் யூனுஸ் என்பவரும் அறிவிக்கிறார்கள். இவ்விருவரும் பலவீனமானவர்கள் என்று இமாம்கள் கூறியுள்ளார்கள். எனவே இதை ஆதாரமாக எடுத்துக்கொள்ள முடியாது என்பதால் குழந்தையின் காதில் பாங்கும் இகாமத் சொல்வதென்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித்தராத அனாச்சாரமாகும்.

தஹ்னீக்

குழந்தை பிறந்த உடன் பேரீச்சம்பழத்தை மென்று அதன் வாயில் தடவும் வழமை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் இருந்தது. இதற்கு தஹ்னீக் என்று அரபு மொழியில் சொல்லப்படுகிறது.

(முஹாஜிர்களிலேயே) இஸ்லாத்தில் பிறந்த முதல் குழந்தை அப்துல்லாஹ் பின் ஸுபைர் ஆவார். (அவர் பிறந்தவுடன்) அவரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கொண்டுவந்தனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஓரு பேரிச்சம் பழத்தை எடுத்து அதை மென்று அவரது வாய்க்குள் நுழைத்தார்கள். அவரது வயிற்றினுள் முதலாவதாக நுழைந்தது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது உமிழ் நீரே ஆகும்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)    நூல் : புகாரி (3910)


எனக்கு ஓர் ஆண்குழந்தை பிறந்தவுடன் அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கொண்டுவந்தேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதற்கு இப்ராஹீம் என்று பெயர் வைத்துவிட்டு பேரீச்சம்பழத்தை மென்று அதன் வாயில் தடவினார்கள். அதற்காக பிரார்த்தனை செய்துவிட்டு என்னிடம் ஒப்படைத்தார்கள். (இப்ராஹீம்) அபூமூஸாவின் மக்களில் மூத்தவராக இருந்தார்.

அறிவிப்பவர் : அபூமூஸா (ரலி)   நூல் : புகாரி (5467)


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்பதால் அவர்களுக்கான சிறப்புத் தகுதியாகத் தான் இதை கருத முடியும். அவர்களின் உமிழ் நீர் பரகத் என்று சொல்ல முடியும். மற்ற மனிதர்களுக்கு இந்தத் தகுதி இல்லை.

உமிழ் நீர் மூலம் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படும் என்று கண்டறியப்பட்டுள்ளதால் பெரியவர்கள் மென்று குழந்தைக்கு கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு உரிய சிறப்பை மற்றவர்களுக்கு கொடுக்கக் கூடாது.

பெயர் சூட்டுதல்

குழந்தை பிறந்தவுடன் நல்ல பெயர் சூட்ட வேண்டும் என்று  நாம் ஆசைப்படுகின்றோம். அந்தப் பெயருக்கு ஏற்றார் போல் அக்குழந்தை திகழ வேண்டும் என்ற எண்ணத்தில் அதற்குப் பெயர் சூட்டுகிறோம். பலர் தங்களுடைய குழந்தைகளுக்கு அழகிய பெயர்களை வைத்தாலும் சிலர் மோசமான பெயர்ளை சூட்டிவிடுகிறார்கள்.

இதனால் எந்தப் பாதிப்பும் பிற்காலத்தில் குழந்தைகளுக்கு ஏற்படாது என்று நினைக்கின்றார்கள். உதாரணமாக மைதீன் பிச்சை, சீனி,  பக்கீர், நாகூரா, ஆத்தங்கரையா, காட்டுபாவா போன்ற விகாரமான பெயர்களை வைக்கின்றார்கள். இன்னும் பொருள் தெரியாத பல பெயர்களையும் சூட்டுகிறார்கள்.

இது போன்ற பெயர்கள் சூட்டப்பட்டவர்கள் பள்ளிக் கல்வியைக் கற்கும் போது சக நண்பர்களால் கேலி செய்யப்படுகிறார்கள். பிறரிடத்தில் தன்னை அறிமுகம் செய்யும் நேரத்தில் தன் பெயரைக் கூற வெட்கப்படுகிறார்கள். தன் பெயரைக் கூறி யாராவது அழைத்தால் அவர்களுக்குள்ளே ஒரு கூச்சம் தோன்றுகிறது.

அப்பெயரை மாற்றுவதற்கான முழு முயற்சியில் ஈடுபடுகின்றார்கள்.

இன்னும் பலர் தங்கள் பகுதியில் அல்லது தான் அறிந்த வகையில் யாரும் வைக்காத பெயரை குழந்தைக்கு வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு பெயரின் ஓசைக்கு முக்கியத்துவம் தருகிறார்கள். ஆனால் அதன் பொருளை கவனிக்கத் தவறிவிடுகிறார்கள். இது விரும்பத்தக்கது அல்ல.

சிறந்த பெயர்களை வைப்போம்

பொதுவாக எல்லா விஷயங்களையும் அழகுறச் செய்ய வேண்டும். இந்த விதியை அவசியம் பெயர் சூட்டும் போது கவனிக்க வேண்டும். ஏனென்றால் அழகானதையே அல்லாஹ் விரும்புகிறான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நிச்சயமாக அல்லாஹ் அழகானவன். அவன் அழகையே விரும்புகிறான்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)  நூல் : முஸ்லிம் (147)


அல்லாஹ்வின் பெயருடன் அப்து (அடிமை) என்ற வார்த்தையைச் சேர்த்து பெயர் வைப்பது அல்லாஹ்விற்கு மிக விருப்பமானதாகும்.

உங்கள் பெயர்களில் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானது, அப்துல்லாஹ் (அல்லாஹ்வின் அடிமை) மற்றும் அப்துர் ரஹ்மான் (அருளாளனின் அடிமை) ஆகியவையாகும்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)  நூல் : முஸ்லிம் (4320)

மறுமை நாளில் உங்களுடைய தந்தையின் பெயருடன் உங்ளது பெயரால்  நீங்கள் அழைக்கப்படுவீர்கள். ஆகையால் உங்களது பெயர்களை அழகுபடுத்திக் கொள்ளுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ தர்தா (ரலி)  நூல் : அஹ்மத் (20704)

மேற்கண்ட ஹதீஸ்கள் அனைத்தும் நல்ல பெயர்களை வைக்க வேண்டும் என்று கூறுகின்றது.

நபிமார்களின் பெயர்களை வைக்கலாம்

எனக்கு ஆண் குழந்தையொன்று பிறந்தது. அக்குழந்தையை நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கொண்டு சென்றேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அக்குழந்தைக்கு  இப்ராஹீம்  எனப் பெயர் சூட்டிப் பேரீச்சம்பழத்தை மென்று குழந்தையின் வாயில் அதைத் தடவினார்கள்.

அறிவிப்பவர் : அபூ மூஸா (ரலி)   நூல் முஸ்லிம் : (4342)


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எனக்கு யூசுஃப் என்று பெயர் வைத்துவிட்டு எனது தலையை தடவிக்கொடுத்தார்கள்.

அறிவிப்பவர் : யூசுஃப் (ரலி)  நூல் : அஹ்மத் (15809)


பெயரில் இணைவைப்பு இருக்கக்கூடாது

அல்லாஹ்வுடைய தன்மையைக் குறிக்கும் பெயர்களைச் சூட்டுவது கூடாது. இன்று வழக்கில் ஷா ஆலம் (பிரபஞ்சத்தின் அரசன்) ஜஹாங்கீர் (உலகை வெற்றி கொண்டவன்) ஷாஜஹான் (உலகின் அரசன்) ஷாகுல் ஹமீது புகழுக்குரியவனின் அரசன் ஆகிய பெயர்கள் சூட்டப்டுகின்றன. இவற்றில் இணைவைப்பு கலந்திருப்பதால் இப்பெயர்களைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

பெயர் சூட்டும் போது அதன் பொருளில் இணைவைப்பு தென்படுகிறதா என்று கவனித்து சூட்ட வேண்டும். இதைப் பின்வரும் ஹதீஸ்களிலிருந்து விளங்கிக்கொள்ளலாம்.

மறுமை நாளில் அல்லாஹ்விடத்தில் மிக வெறுப்பிற்குரிய பெயரைக் கொண்டவன் மலிகுல் அம்லாக் (அரசர்களுக்கெல்லாம் அரசன்) என்ற பெயருடையவனாவான் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)   நூல் : புகாரி (6205)


அல்லாஹ்வின் பெயரை மனிதர்களுக்கு பெயராக வைக்கக் கூடாது என்றாலும் சில பெயர்கள் அல்லாஹ்வுக்கும், மனிதர்களுக்கும் குர்ஆன் ஹதீஸ்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் அல்லாஹ்வுக்கு பயன்படுத்தும் போது அவனது தகுதிக்கு ஏற்ற பொருளும். மனிதர்களுக்குப் பயன்படுத்தும் போது அவனது பலவீனத்துக்கு ஏற்ற பொருளும் கொடுக்க வேண்டும்.

மனிதனை ஸமீவுன் எனக் கூறும் போது அனைத்தையும் செவியுறுபவன்  என்று கூற முடியாது. ஒரு நேரத்தில் இரண்டு பேரின் குரலைக் கூட அவனால் கேட்க முடியாது.

இது போலவே பார்ப்பவன், சக்தியுள்ளவன், அன்பு செலுத்துபவன், உயர்ந்தவன் போன்ற பண்புகள் மனிதர்களுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

அனைத்தையும் பார்ப்பவன், அனைத்தின் மீதும் சக்தி உள்ளவன், நிகரற்ற அன்புடையவன், அனைத்தையும் விட உயர்ந்தவன் என அல்லாஹ்வைப் பற்றி பேசும் போது புரிந்து கொள்ள வேண்டும். மனிதர்களுக்குப் பயன்படுத்தும் போது சாதாரணமான பொருளில் புரிந்து கொள்ள வேண்டும்.

ஸமீவுன் பஸீருன் (பார்ப்பவன், கேட்பவன்) என்ற தனது பண்புகளை மனிதர்களுக்கும் அல்லாஹ் பயன்படுத்தியதை அல்குர்ஆன் 76:2 வசனத்தில் காணலாம்.

ஜப்பார் என்ற தனது பண்பை மனிதர்களுக்கும் அல்லாஹ் பயன்படுத்தியுள்ளதை 11:59, 14:15, 40:35 ஆகிய வசனங்களில் காணலாம்.

ஹஸீப் என்ற தனது பண்பை மனிதனுக்கும் அல்லாஹ் பயன்படுத்தியிருப்பதை 17:14 வசனத்தில் காணலாம்.

ஃகபீர் என்ற தனது பண்பை 25:59 வசனத்தில் மனிதர்களுக்கும் அல்லாஹ் பயன்படுத்தி இருக்கிறான்.

ரப்பு என்ற தனது பண்பை அல்லாஹ் மனிதர்களுக்கும் பயன்படுத்தியிருப்பதை 12:42, 12:50, 12:23 ஆகிய வசனங்களில் காணலாம்.

அஸீஸ் என்ற தனது பண்பை மனிதர்களுக்கும் அல்லாஹ் பயன்படுத்தியிருப்பதை 12:30, 12:51, 12:78, 12:88 ஆகிய வசனங்களில் காணலாம்.

அலீம் என்ற தனது பண்பை மனிதர்களுக்கும் அல்லாஹ் பயன்படுத்தியிருப்பதை 7:109-112, 10:79, 12:76, 15:53, 26:34, 26:37, 51:28 ஆகிய வசனங்களில் காணலாம்.

அலீ  என்ற அல்லாஹ்வின் பெயர் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மருமகன் அலீ (ரலி) அவர்களுக்கும் சூட்டப்பட்டது. அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மாற்றவில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அல்லாஹ் ரஹீம் எனக் குறிப்பிட்டுள்ளான். எனவே அல்லாஹ்வும் நபியும் ஒன்று தான். அல்லாஹ்விடம் கேட்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்கலாம் என்றெல்லாம் சில அறிவீனர்கள் கூறி வருகின்றனர். அவர்களுக்காகவே இந்த விபரங்களை நாம் குறிப்பிடுகிறோம்.

அல்லாஹ்வின் பல பண்புகள் மனிதர்களுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளன. அந்த இடங்களில் நாம் எப்படிப் புரிந்து கொள்கிறோம். அல்லாஹ்வைக் குறிக்கும் போது அவனது தகுதிக்கேற்பவும் மனிதர்களைக் குறிக்கும் போது அவர்களின் நிலைமைக் கேற்பவும் தான் புரிந்து கொள்கிறோம்.

அது போலவே தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அல்லாஹ் ரஹீம் என்று குறிப்பிட்டுள்ளதையும் புரிந்து கொள்ள வேண்டும். அது போலவே தான் மற்ற மனிதர்களை ரஹீம் எனக் கூறப்படும் போதும் புரிந்து கொள்ள வேண்டும்.

கெட்டவர்களின் பெயரைச் சூட்டக்கூடாது

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவியான உம்முசலமாவின் சகோதரனுக்கு ஒரு ஆண்குழந்தைப் பிறந்தது. அவர்கள் (உம்முசலமாவின் குடும்பத்தார்கள்) அக்குழந்தைக்கு வலீத் என்று பெயர் வைத்தார்கள். (இதை அறிந்தவுடன்) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எகிப்து நாட்டு மன்னர்களின் பெயர்களையா அதற்கு வைத்தீர்கள்? இந்தச் சமுதாயத்தில் ஒரு மனிதன் தோன்றுவான். அவனுக்கு வலீத் என்று சொல்லப்படும். ஃபிர்அவன் அவனது சமுதாயத்திற்கு தீங்கிழைத்ததை விட அவன் இந்த சமுதாயத்திற்கு அதிகம் தீங்கிழைப்பான் என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : உமர் பின் ஹத்தாப் (ரலி)   நூல் : அஹ்மத் (104)


தீயவர்களின் பெயர்களைச் சூட்டுவதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வெறுத்துள்ளார்கள் என்பதை மேலுள்ள ஹதீஸின் மூலம் விளங்கிக்கொள்ள முடிகிறது.

குறிப்பிட்ட சில பெயர்களை சூட்டக்கூடாது

சில பெயர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுக் கூறி அவற்றை சூட்டக்கூடாது என்று கூறியுள்ளார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்கள் அடிமைகளுக்கு அஃப்லஹ் (வெற்றியாளன்), ரபாஹ் (இலாபம்), யசார் (சுலபம்), மற்றும் நாஃபிஉ (பயனளிப்பவன்) ஆகிய நான்கு பெயர்களைச் சூட்ட வேண்டாமென எங்களுக்குத் தடை விதித்தார்கள்.

அறிவிப்பவர் : சமுரா பின் ஜுன்தப் (ரலி)  நூல் : முஸ்லிம் (4328)


பெயர் மாற்றம் செய்யலாம்

மோசமான அர்த்தங்களைக் கொண்ட பெயர்களைச் சூட்டக்கூடாது. பெற்றோர்கள் அறியாமையினால் சூட்டிவிட்டால் அப்பெயர்களை மாற்றிவிட்டு நல்ல அர்த்தங்களைக் கொண்ட பெயர்களை வைத்துக் கொள்ளலாம்.

முஸய்யப் (ரலி) அவர்களின் தந்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடத்தில் வந்த போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உங்களது பெயர் என்ன என்று வினவினார்கள். அதற்கு அவர் ஹஸ்ன் (முரடு) என்று சொன்னார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (இனிமேல் உமது பெயர்) சஹ்ல் (இலகு) ஆகும் என்று கூறினார்கள். அதற்கு அவர் எனது தந்தை எனக்கு இட்ட பெயரை நான் மாற்ற மாட்டேன் என்று கூறிவிட்டார். (இந்த ஹதீஸை அறிவிக்கும் முஸைய்யப் அவர்கள் கூறுகிறார்கள்.) இதன் பின்னர் எங்களிடம்  (குணநலன்களில்) முரட்டுத்தன்மை தொடர்ந்து இருந்து கொண்டே இருந்தது.

அறிவிப்பவர் : முஸைய்யப் (ரலி)   நூல் : புகாரி (6190)


ஸைனப் (ரலி) அவர்களுக்கு (முதலில்)  பர்ரா (நல்லவள்) என்ற பெயர் இருந்தது. அப்போது  அவர் தம்மைத் தாமே பரிசுத்தப் படுத்திக் கொள்கிறார்   என்று (மக்களால்) சொல்லப்பட்டது. ஆகவே, அவருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்  ஸைனப்  என்று பெயர் சூட்டினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)  நூல் : புகாரி (6192)


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆசியாவின் (மாறுசெய்பவள்) பெயரை மாற்றி (அவரிடம்) நீ ஜமீலாவாகும் (அழகானவள்) என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)   நூல் : அபூதாவூத் (4301)

ஆஸியா (عَاصِيَة) என்பதின் பொருள் மாறுசெய்பவள் என்பதாகும். இதில் முதலாவது எழுத்தாக அய்னும் இரண்டாவது எழுத்தாக ஸாதும் இடம்பெற்றுள்ளது. இந்தப் பெயரை வைப்பது கூடாது.

ஆசியா (آسٍيَة)  என்பதின் பொருள் பின்பற்றுபவள் என்பதாகும். இதில் முதலாவதாக அலிஃபும் இரண்டாவதாக சீனும் இடம்பெற்றுள்ளது. இப்பெயரை வைப்பதற்குத் தடையில்லை.

அஸ்ரம் என்று சொல்லப்பட்ட ஒருவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வருகை தந்த நபர்களில் ஒருவராக இருந்தார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரிடம் உம் பெயர் என்ன என்று வினவினார்கள். (அதற்கு) அவர் என் பெயர் அஸ்ரமாகும் (காய்ந்த செடிக் கொத்து) என்று கூறினார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மாறாக உன் பெயர் சுர்ஆவாகும் (மணிகள் கொண்ட பசுமையான செடிக்கொத்து)  என்று (பெயர்மாற்றிக்) கூறினார்கள்.

அறிவிப்பவர் : உஸாமா பின் அஹ்தரீ (ரலி)  நூல் : அபூதாவூத் (4303)

பெயர்வைக்கும் காலம்

மர்யமே அல்லாஹ் தன் வார்த்தை பற்றி உமக்கு நற்செய்தி கூறுகின்றான். மர்யமின் மகனான ஈஸா என்னும் மஸீஹ் என்பது அவரது பெயர். இவ்வுலகிலும், மறுமையிலும் தகுதிமிக்கவராகவும் (இறைவனுக்கு) நெருக்கமானவராகவும் இருப்பார் என்று வானவர்கள் கூறியதை நினைவூட்டுவீராக.  அல்குர்ஆன் (3 : 45)

ஸகரிய்யாவே ஓரு புதல்வன் பற்றி உமக்கு நாம் நற்செய்தி கூறுகிறோம். அவரது பெயர் யஹ்யா இப்பெயரிடப்பட்டவரை இவருக்கு முன் நாம் ஏற்படுத்தியதில்லை. (என இறைவன் கூறினான்.)

அல்குர்ஆன் (19 : 7)

முதல் வசனத்தில் ஈஸா (அலை) அவர்கள் பிறக்கப் போவதை மர்யம் (அலை) அவர்களிடம் மலக்குமார்கள் கூறுகிறார்கள். அப்படி கூறும் போது ஈஸா என்ற பெயரையும் சேர்த்துக் கூறுகிறார்கள். இரண்டாம் வசனத்தில் ஸகரிய்யா (அலை) அவர்களிடம் குழந்தை பிறக்கப் போவதாக அல்லாஹ் சுபச்செய்தி கூறுகின்றான். பிறக்கப் போகும் குழந்தைக்கு அல்லாஹ் யஹ்யா என்று பெயரும் சூட்டுகின்றான். குழந்தை பிறக்கும் முன்பே பெயர் சூட்டலாம் என்பதை இதன் மூலம் அறிந்துகொள்ளலாம்.

அவர் ஈன்றெடுத்த போது  என் இறைவா பெண் குழந்தையாக ஈன்றெடுத்து விட்டேன் எனக் கூறினார். அவர் எதை ஈன்றெடுத்தார் என்பதை அல்லாஹ் நன்கு அறிவான்.  ஆண் பெண்ணைப் போன்றவன் அல்ல. நான் இவளுக்கு மர்யம் என்று பெயரிட்டுள்ளேன். விரட்டப்பட்ட ஷைய்தானை விட்டும் இவளுக்கும் இவளுடைய வழிதோன்றல்களுக்கும் உன் பாதுகாப்பை வேண்டுகிறேன் எனவும் அவர் கூறினார்.   அல்குர்ஆன் (3 : 36)

குழந்தை பிறந்த பிறகும் பெயர் சூட்டலாம் என்பதை மேலுள்ள வசனத்திலிருந்து புரிந்துகொள்ளலாம்.

ஓவ்வொரு குழந்தையும் அகீகாவுடன் பிணைக்கப்பட்டுள்ளது. அது பிறந்த ஏழாம் நாளில் அதற்காக (ஆடு) அறுக்கப்படும். அதை விட்டு நோவினை (தலை முடி) அகற்றப்படும். அதற்கு பெயரும் வைக்கப்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : சமுரா (ரலி)   நூல் : அஹ்மத் (19327)

இந்த ஹதீஸில் ஏழாவது நாள் குழந்தைக்குப் பெயர் வைக்கப்படும் என்று வந்துள்ளது. இதனடிப்படையில் குழந்தை பிறந்து ஏழாவது நாளும் பெயர் சூட்டலாம்.

ஆலிம்கள் தான் பெயர் வைக்க வேண்டுமா?

ஆலீம்கள்தான் குழந்தைக்குப் பெயர் வைக்க வேண்டும் என்று பலர் கருதுகிறார்கள். பெற்றோர்களே குழந்தைக்கு பெயர்வைக்க அதிக தகுதியானவர்கள்.

மர்யம் (அலை) அவர்களுக்கு அவர்களின் தாயார் தான் பெயர் வைத்தார்கள். ஆலிம்கள் தான் பெயர்சூட்ட வேண்டும் என்றிருந்தால் மர்யம் (அலை) அவர்களின் தாயார் அன்று பெரும் ஆலிமாகவும் நபியாகவும் விளங்கிய ஸகரிய்யா (அலை) அவர்களிடம் சென்று பெயர்வைக்கச் சொல்லியிருப்பார்கள். ஆனால் அவர்கள் சுயமாகவே தன் விருப்பப்படியே பெயர்வைத்தார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் பிறந்த அனைத்துக் குழந்தைக்கும் பெருமானா ர் (ஸல்) அவர்கள் பெயரிடவில்லை. சஹாபாக்கள் தாங்களாகவே பெயர் சூட்டினார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதைத் தடுக்கவில்லை.

அகீகா

குழந்தை பிறந்த ஏழாம் நாளில் ஆண்குழந்தையாக இருந்தால் அதற்காக இரண்டு ஆடுகளையும், பெண்குழந்தையாக இருந்தால் அதற்காக ஓரு ஆட்டையும் அறுத்து ஏழை எளியவர்களுக்கும் உறவினர்களுக்கும் உணவளிப்பதற்கு அகீகா என்று சொல்லப்படுகின்றது.

இவ்வாறு செய்வதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித் தந்துள்ளார்கள். ஆனால் கடமையாக்கவில்லை.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பையன் (பிறந்த) உடன் அகீகா (கொடுக்கப்படல்) உண்டு. ஆகவே அவனுக்காக (ஆடு அறுத்து) குர்பானி கொடுங்கள். அவன் (தலை முடி களைந்து) பாரத்தை இறக்கிவிடுங்கள் என்று அவர்கள் சொல்ல நான் கேட்டிருக்கின்றேன்.

அறிவிப்பவர் : சல்மான் பின் ஆமிர் (ரலி)   நூல் : புகாரி (5472)


எத்தனை ஆடுகள் அறுக்க வேண்டும்?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் அகீகாவைப் பற்றி கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் மாறுசெய்வதை நான் விரும்ப மாட்டேன். யாருக்கேனும் குழந்தை பிறந்து அதற்காக அவர் (ஆட்டை) அறுத்து வணக்கம் புரிய விரும்பினால் அவர் ஒரே மாதிரியான இரண்டு ஆடுகளை ஆண் குழந்தைக்காகவும் ஒரு ஆட்டை பெண் குழந்தைக்காகவும் கொடுக்கட்டும் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)   நூல் : அஹ்மத் (6530)

விரும்புபவர் அகீகா கொடுக்கட்டும் என்று மேலுள்ள ஹதீஸில் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் அகீகா கொடுப்பது கடமையில்லை. கொடுப்பது சிறந்தது என்பது அறிந்து கொள்ளலாம்.

ஆண்குழந்தைக்காக ஓரு ஆட்டை அறுத்துப் பலியிடுவதற்கும் ஆதாரம் உள்ளது. இதை பின்வரும் ஹதீஸ் கூறுகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹஸனுக்கும், ஹுஸைனுக்கும் ஒரு ஆட்டை அகீகாவாக தந்தார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)  நூல் : அபூதாவூத் (2458)


பெற்றோருக்கு பதிலாக மற்றவர்கள் கொடுக்கலாமா?

பெற்றோருக்குப் பதிலாக குழந்தையின் உறவினர்கள் அகீகாவை நிறைவேற்றுவதற்கு அனுமதி உள்ளது. பெற்றோர்கள் தான் கொடுக்க வேண்டும் என்ற நிபந்தனை எதுவும் இல்லை.

குழந்தைக்காக ஆடு அறுக்கப்படும் என்று தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். பெற்றோர்கள் தான் அகீகா கொடுக்க வேண்டுமென்றால் குழந்தையின் பெற்றோர்கள் அறுக்க வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருப்பார்கள்.

ஓவ்வொரு குழந்தையும் அதற்கான அகீகாவுடன் பிணையாக்கப்பட்டுள்ளது. அது (பிறந்த) ஏழாவது நாளில் (ஆட்டை) அதற்காக அறுக்கப்படும். அதன் முடி களையப்பட்டு அதற்கு பெயர் சூட்டப்படும்.

அறிவிப்பவர் : சமுரா பின் ஜுன்துப் (ரலி)  நூல் : அபூதாவூத் (2455)

மேலும் அலி (ரலி) ஃபாத்திமா (ரலி) ஆகிய இருவருக்கும் பிறந்த ஹஸன் மற்றும் ஹுஸைன் (ரலி) அவர்களுக்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அகீகா கொடுத்துள்ளார்கள். குழந்தையின் உறவினர்கள் யார் வேண்டுமானலும் அகீகா கொடுக்கலாம் என்பதை இதன் மூலம் அறியலாம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஸன் மற்றும் ஹுஸைன் (ஆகிய இருவருக்காக) அகீகா கொடுத்தார்கள்.

அறிவிப்பவர் : புரைதா (ரலி)   நூல் : நஸயீ (4142)


அகீகா கொடுப்பவர் இறைச்சியை உண்ணலாமா?

அகீகா கொடுப்பவர்கள் அறுக்கப்பட்ட பிராணியின் இறைச்சியை உண்பதற்கு எந்தத் தடையும் இல்லை. ஹஜ்ஜுப் பெருநாளன்று அறுக்கப்படும் குர்பானிப் பிராணியின் இறைச்சியை குர்பானி கொடுப்பவர் உண்பதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடைவிதிக்கவில்லை. குர்பானியும், அகீகாவும் இறைவனுக்குச் செலுத்தப்படுகின்ற வணக்கமாக இருப்பதால் இவை இரண்டுக்கும் ஒரே வகையான சட்டம்தான்.

ஹஜ்ஜின் போது அறுக்கப்படுகின்ற பிராணியை அறுப்பவர்கள் தானும் உண்டு ஏழை எளியவர்களுக்கும் உண்ணக் கொடுக்க வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிடுகின்றான் இவ்வாறே அகீகா விஷயத்திலும் நடந்துகொள்ள வேண்டும்.

அதை நீங்களும் உண்ணுங்கள்! கஷ்டப்படும் ஏழைகளுக்கும் கொடுங்கள்!  அல்குர்ஆன் (22 : 28)


ஏழாவது நாளுக்குப் பிறகு அகீகா கொடுக்கலாமா?

அகீகா என்பது குழந்தை பிறந்த ஏழாவது நாள் கொடுக்கப்பட வேண்டும் என்று ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் கூறுகின்றன. ஆனால் சில பலவீனமான ஹதீஸ்களில் பதினான்காம் நாளும் இருபத்து ஒன்றாம் நாளும் கொடுக்கலாம் என்று வந்துள்ளது.

அகீகா(வாக கொடுக்கப்படும் பிராணி) ஏழாவது நாளும் பதினான்காம் நாளும் இருபத்து ஓன்றாம் நாளும் அறுக்கப்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : புரைதா (ரலி)   நூல் : பைஹகீ (பாகம் 9 பக்கம் 303)


இந்த ஹதீஸ் அல்முஃஜமுல் அவ்ஸத் மற்றும் அல்முஃஜமுஸ்ஸஹீர் போன்ற நூல்களிலும் இடம் பெற்றுள்ளது. இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் இஸ்மாயீல் பின் முஸ்லிம் என்ற பலகீனமானவர் இடம்பெறுகிறார்.

பெற்றோர்கள் தனக்கு அகீகா கொடுக்காததால் பெரியவராக ஆன பின்பு தனக்குத் தானே அகீகா கொடுக்கலாமா? என்று சிலருக்குச் சந்தேகம் ஏற்படுகிறது. இவ்வாறு செய்வதற்கு நபிமொழிகளில் ஆதாரம் எதுவும் இல்லை.

அகீகா என்ற வணக்கம் குழந்தை பிறந்து ஏழாவது நாள் செய்யப்பட வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளதால் அன்று தான் இவ்வணக்கத்தைச் செய்ய வேண்டும். இந்த நாளைக் கடந்த பிறகு கொடுத்தால் அது சாதாரண தர்மமாக ஆகும். அகீகா கொடுப்பதற்குரிய நன்மை கிடைக்காது.

அகீகா கடமையில்லாத காரணத்தினால் கடமையானவைகளை பின்பு நிறைவேற்றுவதைப் போன்று இதை நிறைவேற்ற வேண்டியதில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இஸ்லாத்திற்கு வந்த பின் தனக்காகவோ அல்லது அவர்களது தோழர்களுக்காகவோ அகீகா கொடுக்கவில்லை. நபித்தோழர்களும் அவ்வாறு செய்யவில்லை. எனவே இந்தப் புதிய வழிமுறையை நாம் ஏற்படுத்க்கூடாது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நபியாக அனுப்பப்பட்ட பிறகு தனக்காக அகீகா கொடுத்தார்கள் என்று சில ஹதீஸ்கள் வருகின்றது. இவையனைத்தும் பலவீனமான செய்திகளாகும்.


பிராணியின் எலும்பை உடைக்கலாமா?

அகீகா கொடுக்கப்படும் பிராணியின் எலும்பை உடைக்கக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக ஒரு ஹதீஸ் உள்ளது. ஆனால் இது பலவீனமான செய்தியாகும். எனவே பிராணியின் எலும்பை உடைப்பதற்கு தடையேதும் இல்லை.

ஹஸன் ஹுஸைன் ஆகிய இருவருக்காக ஃபாத்திமா (ரலி) அவர்கள் அகீகா கொடுத்த போது நீங்களும் (இதிலிருந்து) உண்ணுங்கள். (பிறருக்கும்) உண்ணக்கொடுங்கள். இதன் எழும்பை உடைத்துவிடாதீர்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இந்தச் செய்தி இமாம் அபூதாவூத் அவர்கள் எழுதிய அல்மராசீல் என்ற நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் செய்தியை முஹம்மத் பின் அலீ என்பவர் அறிவிக்கிறார். இவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைச் சந்திக்கவில்லை. இவருக்கும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும் மத்தியில் சில அறிவிப்பாளர்கள் விடுபட்டுள்ளார்கள். எனவே இதை ஆதாரமாகக் கொள்ள முடியாது.

பெயர் வைத்தலும் முடியைக் களைதலும்

அகீகா கொடுக்கும் போதே குழந்தைக்குப் பெயர் வைத்து அதன் முடியைக் களைவது நபிவழியாகும்.

ஒவ்வொரு குழந்தையும் அதற்கான அகீகாவுடன் பிணையாக்கப்பட்டுள்ளது. அது (பிறந்த) ஏழாவது நாளில் (ஆடு) அதற்காக அறுக்கப்படும். அதன் முடி களையப்பட்டு அதற்கு பெயர் சூட்டப்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : சமுரா பின் ஜ ன்துப் (ரலி)  நூல் : அபூதாவூத் (2455)

தலைமுடி முழுவதையும் களைய வேண்டும்

குழந்தையின் முடியைக் களையும் போது பாதியை மழித்து பாதியை விட்டுவிடக்கூடாது. அறைகுறையாக மழிப்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள்.

தலையின் ஒரு பகுதி சிரைக்கப்பட்டு மறுபகுதி சிரைக்கப்படாமலிருந்த ஒரு சிறுவனை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பார்த்தார்கள். அப்போது இவ்வாறு செய்வதை அவர்கள் தடைசெய்தார்கள். (சிரைத்தால்) முழுமையாக சிரைத்துவிடுங்கள். (முடியை வைக்க நினைத்தால்) முழுமையாக விட்டுவிடுங்கள் என்று கூறினார்கள்

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)   நஸயீ (4962)


முடியின் எடைக்கு நிகராக வெள்ளியைத் தர்மம் செய்ய வேண்டுமா?

பிறந்த குழந்தையின் முடியை எடுத்து அதன் எடைக்கு நிகரான வெள்ளியைத் தர்மம் செய்வது நபிவழி என்று சிலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு சில ஹதீஸ்களையும் ஆதாரமாகக் காட்டுகிறார்கள். ஆனால் அவை அனைத்தும் பலவீனமான செய்திகளாக உள்ளன.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹஸன் (ரலி) அவர்களுக்கு ஓரு ஆட்டை அகீகாவாக கொடுத்தார்கள். (தனது மகள் ஃபாத்திமா (ரலி) அவர்களை நோக்கி) ஃபாத்திமாவே அவருடைய (ஹஸன்) தலையை மழித்து அவரது முடியின் எடைக்கு நிகராக வெள்ளியைத் தர்மம் செய்வீராக என்று கூறினார்கள். எனவே நான் அதை நிறுத்துப் பார்த்தேன். அதனுடைய எடை ஒரு திர்ஹம் அல்லது சில திர்ஹம்களின் எடையாக இருந்தது.

அறிவிப்பவர் : அலீ (ரலி)   நூல் : திர்மிதி (1439)


இந்த ஹதீஸைப் பதிவுசெய்த திர்மிதி அவர்களே இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடர் அறுந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். ஏனெனில் இதனுடைய அறிவிப்பாளர்களில் ஒருவரான முஹம்மத் பின் அலீ என்பவர் அலீ (ரலி) அவர்களைச் சந்திக்கவில்லை. இந்த வகையில் இதை ஏற்றுக்கொள்ள முடியாது.

இதே கருத்தில் 25930 வது ஹதீஸாக அஹ்மதில் ஒரு அறிவிப்பு உள்ளது. இதில் இடம்பெறுகின்ற அப்துல்லாஹ் பின் முஹம்மத் பலகீனமானவர் ஆவார்.

மேலும் இக்கருத்தில் ஹாகிம் தொகுத்த முஸ்தத்ரக் என்ற நூலில் ஒரு ஹதீஸ் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இது நம்பத்தகுந்த நபிமொழி இல்லை என்று தஹபி அவர்கள் கூறியுள்ளார்கள்.

அதுமட்டுமின்றி இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களின் ஒருவரான அலீ பின் ஹுஸைன் அவர்கள் அலீ (ரலி) அவர்களிடமிருந்து இந்த ஹதீஸை அறிவிக்கிறார்.. ஆனால் அலி பின் ஹுஸைன் பிறந்த இரண்டு வருடத்தில் அலீ (ரலி) அவர்கள் மரணித்துவிட்டார்கள். எனவே இது தொடர்பு அறுந்து காணப்படுகிறது.

இது தொடர்பாக வரும் அனைத்துச் செய்திகளும் ஆதாரமற்றவையாக இருப்பதால் இதைச் செயல்படுத்த வேண்டியதில்லை.


பால்புகட்டுதல்

பிறக்கும் குழந்தைகளுக்காக அல்லாஹ் ஏற்படுத்திய அற்புதம் தாய்ப்பாலாகும். முறையாக தாய்ப்பால் புகட்டப்பட்ட குழந்தைகள் பிற்காலத்தில் அதிக நோய் எதிப்புச் சக்தியைப் பெற்றவர்களாகவும் திடகார்த்தம் உள்ளவர்களாகவும் திகழ்கிறார்கள். தாய்ப்பால் கொடுக்கப்படாத குழந்தைகள் நோஞ்சான்களாகவும் நோய்களின் பிறப்பிடமாகவும் மாறுகிறார்கள்.

இதைப் புரிந்து கொள்ளாமல் தாய்ப்பால் கொடுத்தால் தன் அழகு கெட்டுவிடும் என்று நினைத்து சில பெண்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் தருவதில்லை. அழகு என்பது இன்றைக்கு இல்லாவிட்டாலும் என்றைக்காவது அழியத்தான் போகிறது. குழந்தையின் நலனில் அக்கரையுள்ள தாய்மார்களாக இருந்தால் கண்டிப்பாக தாய்ப்பால் தராமல் இருக்கமாட்டார்கள்.

குழந்தையின் ஆரோக்கியத்திற்கு தாய்ப்பால் அவசியம் என்பதால் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு இரண்டு வருடம் முழுமையாக பால்புகட்ட வேண்டும் என்று அல்லாஹ் வலியுறுத்திக் கூறுகிறான்.

பாலூட்ட வேண்டும் என்று விரும்புகிற (கண)வனுக்காக (விவாக ரத்துச் செய்யப்பட்ட) தாய்மார்கள் தமது குழந்தைகளுக்கு முழுமையாக இரண்டு ஆண்டுகள் பாலூட்ட வேண்டும்.  அல்குர்ஆன் (2 : 233)

மனிதனுக்கு அவனது பெற்றோரைக் குறித்தும் வலியுறுத்தியுள்ளோம். அவனை அவனது தாய் பலவீனத்துக்கு மேல் பலவீனப்பட்டவளாகச் சுமந்தாள். அவன் பாலருந்தும் பருவம் இரண்டு ஆண்டுகள்.  அல்குர்ஆன் (31 : 14)

கத்னா செய்தல்

ஆண்களின் பாலுறுப்பில் இருக்கும் தேவையற்ற தோல்பகுதியை அகற்றுவதற்குப் பெயர் தான் கத்னா என்பது. இவ்வாறு செய்வதால் பாலுறுப்பினுள் விந்தோ, சிறுநீரோ தங்கும் நிலை ஏற்படாது. இதன் மூலம் பாலுறுப்பு சுத்தமாக வைத்துக் கொள்ளப்படுவதால் ஏராளமான நோய்கள் அண்டுவதில்லை.

இல்லற வாழ்வின் போது கணவன் தன் மனைவியைத் திருப்தியடையச் செய்வதற்கு கத்னா காரணமாக உள்ளது. அறிவுப்பூர்வமான இந்த வழிமுறையக் கடைபிடிக்குமாறு இஸ்லாம் ஆண்களுக்குக் கூறுகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : விருத்தசேதனம் செய்வது, மர்ம உறுப்பின் முடியைக் களைந்திட சவரக் கத்தியை உபயோகிப்பது, அக்குள் முடிகளை அகற்றுவது, நகங்களை வெட்டிக் கொள்வது, மீசையைக் கத்தரித்துக் கொள்வது ஆகிய இந்த ஐந்து விஷயங்களும் இயற்கை மரபுகளில் அடங்கும்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)  நூல் : புகாரி (5889)


பெண்களுக்கு கத்னா செய்யலாமா?

சிலர் அறிவின்மையினால் பெண்களுக்கும் கத்னாவைச் செய்துவிடுகிறார்கள். அதாவது பெண்களின் இல்லற இன்பத்தைக் குறைப்பதற்காக அவர்களின் பாலுறுப்பில் இன்பத்தை உணரும் பகுதியின் முனையை வெட்டிவிடுவார்கள்.

இறைவன் அளித்த பாக்கியமான இல்லற இன்பத்தை முழுமையாக பெண்கள் அடையமுடியாத துர்பாக்கியமான நிலை இதனால் ஏற்படுகிறது. இவ்வாறு செய்யுமாறு இஸ்லாம் கூறவில்லை.

பெண்களுக்கும் கத்னா செய்ய வேண்டும் என்றக் கருத்தில் சில ஹதீஸ்கள் வருகின்றன். அவற்றை அறிவிப்பவர்கள் பலவீனமானவர்களாக இருப்பதால் அவற்றை ஏற்றுக்கொள்ள முடியாது.

கத்னா செய்தல் ஆண்களுக்கு சுன்னத்தாகும். பெண்களுக்கு சிறந்ததாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : சத்தாத் பின் அவ்ஸ் (ரலி)   நூல் : அஹ்மத் (19794)

இந்த ஹதீஸில் வரும் ஹஜ்ஜாஜ் பின் அர்தாத் என்பவர் பலவீனமானவர். இவர் அதிகமாக தவறிழைப்பவர் என்று இப்னு ஹஜர் அவர்களும் இவர் வலிமையானவர் இல்லை என்று யஹ்யா பின் முயீன் அவர்களும் கூறியுள்ளார்கள்.

பைஹகீ அவர்கள் தொகுத்த அஸ்ஸ னனுல் குப்ரா என்ற நூலில் இதே ஹதீஸ் இப்னு சவ்பான் என்பவர் வழியாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்னு சவ்பான் பலவீனமானவர். மேலும் இச்செய்தயில் அல்வலீத் பின் வலீத் என்வரும் இடம்பெறுகிறார். இவரும் பலவீனமானவர். இந்த ஹதீஸை பைஹகீ அவர்கள் பதிவு செய்துவிட்டு இது பலவீனம் என்பதை அவர்களே தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

ஏழாவது நாள் அன்று கத்னா செய்வது நபிவழியா?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹஸன், ஹுஸைன் ஆகிய இருவருக்கும் ஏழாவது நாள் அன்று கத்னா செய்தார்கள் என்று ஒரு ஹதீஸை பைஹகீ அவர்கள் அஸ்ஸுனனுல் குப்ரா என்ற தனது நூலில் பதிவு செய்துள்ளார்கள்.

இச்செய்தியில் முஹம்மத் பின் அல்முதவக்கில் என்பவர் இடம்பெறுகிறார். இவர் அதிகமாகத் தவறிழைப்பவர் என்று பல அறிஞர்கள் குறை கூறியுள்ளார்கள். இச்செய்தியை வலீத் பின் முஸ்லிம் என்ற அறிவிப்பாளரிடமிருந்து இவரைத் தவிர வேறு யாரும் அறிவிக்கவில்லை. எனவே இது பலவீனமான செய்தியாகும்.

எப்போது கத்னா செய்ய வேண்டும்?

ஏழாம் நாளில் தான் செய்ய வேண்டும் என்று கட்டாயம் இல்லை. பருவமடைந்தவுடன் (சுமார் பதினைந்து வயதில்) கத்னா செய்யலாம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் பருவ வயது அடைந்தவுடன் கத்னா செய்யும் வழக்கமிருந்தது. அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆட்சேபிக்காமல் அங்கீகாரம் வழங்கியுள்ளனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலமான போது நான் கத்னா செய்யப்பட்டவனாக இருந்தேன். ஆண்கள் பருவ வயது அடையும் வரை மக்கள் கத்னா செய்ய மாட்டார்கள்  என்று இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கும் ஹதீஸ் புகாரியில் இடம் பெற்றுள்ளது.

6299 சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (உயிர்) கைப்பற்றப்பட்ட போது தாங்கள் எவ்வாறிருந்தீர்கள்? என்று வினவப்பட்டது. அதற்கு அவர்கள், நான் அப்போது விருத்தசேதனம் செய்தவனாயிருந்தேன் என்று பதிலளித்தார்கள்.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவர் கூறுகின்றார்:

பருவ வயதை நெருங்கிய பிறகே (அன்றைய) மக்கள் விருத்தசேதனம் செய்வது வழக்கம். எனவே இத்தனை நாட்களுக்குள் கத்னா செய்ய வேண்டும் என்ற கெடு எதுவும் கிடையாது என அறியலாம்.


கத்னா செய்தால் விழா எடுக்க வேண்டுமா?

கத்னா செய்வதற்காக பெரும் பொருட்செலவில் விருந்துகளை ஏற்பாடு செய்து கத்னா செய்யப்பட்டவர்களை பூமாலைகளால் அலங்கரித்து தெருக்களில் அழைத்து வரும் வழக்கம் தமிழகத்தில் இருக்கிறது. இதற்கு இஸ்லாத்தில் அனுமதியில்லை.

ஒரு நபிவழியைச் செய்வதற்கு இவ்வளவு ஆடம்பரங்களைச் செய்து பகிரங்கப்படுத்துவது குற்றமாகும். நகத்தை வெட்டுவதும் அக்குள் முடிகளைக் களைவதும் கத்னாவைப் போன்று ஒரு சாதாரண சுன்னத்தாகும். ஆனால் யாரும் நகத்தை வெட்டுவதற்கு விழாக் கொண்டாடுவதில்லை. முடிகளைக் களையும் போது அதை ஊருக்கெல்லாம் பகிரங்கப்படுத்துவதும் இல்லை.

பெண் பருவ வயதை அடைந்து விட்டால் அதையும் ஊர் முழுவதும் பரப்புகிறார்கள். சடங்கு மஞ்சள் தண்ணீர் ஊற்றுதல் என்று பலவிதமான மாற்றார்களின் வழிமுறைகளையும் கடைப்பிடிக்கிறார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித்தராத விஷயங்களில் இதுவும் ஒன்றாகும். இதைச் செய்பவர்கள் நரகத்திற்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்படும். எனவே இதை விட்டும் நாம் அனைவரும் விலக வேண்டும்.

பிள்ளைகளைக் கொஞ்ச வேண்டும்

பெற்றொரின் பாசம் கிடைக்காத குழந்தைகள் சந்தோஷமில்லாமல் அமைதியற்ற நிலைக்கு ஆளாகுகிறார்கள். எனவே குழந்தைகளின் மீது பெற்றோர்கள் கட்டாயம் பாசத்தைப் பொழிய வேண்டும். குழந்தைகளைத் தூக்கிக் கொஞ்சுதல், கட்டியணைத்தல் முத்தமிடுதல் போன்றவைகள் மூலம் பாசத்தை வெளிப்படுத்தலாம்.

ஒரு கிராமவாசி  நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து, நீங்கள் சிறு குழந்தைகளை முத்தமிடுகின்றீர்களா? நாங்களெல்லாம் அவர்களை முத்தமிடுவதில்லை   என்றார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்,  அல்லாஹ் உமது இதயத்திலிருந்து அன்பைக் கழற்றி விட்ட பின்னர்  உமக்காக நான் என்ன செய்ய முடியும்?   என்று கேட்டார்கள்.

அறிவிப்பவர் ; ஆயிஷா (ரலி)   நூல் : புகாரி (5998)


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் பேரரான) ஹஸன் பின் அலீயை முத்தமிட்டார்கள். அப்போது அவர்கள் அருகில் அமர்ந்துகொண்டிருந்த அக்ரஉ பின் ஹாபிஸ் அத்தமீமீ (ரலி) அவர்கள்,  எனக்குப் பத்துக் குழந்தைகள் இருக்கின்றார்கள். அவர்களில் ஒருவரைக் கூட நான் முத்தமிட்டதில்லை   என்றார். அவரை ஏறெடுத்துப் பார்த்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அன்பு காட்டாதவர் அன்பு காட்டப்பட மாட்டார்   என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)  நூல் : புகாரி (5997)


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (சிறுவனாக இருந்த) என்னைப் பிடித்துத் தமது ஒரு தொடையின் மீதும் (தம் சொந்தப் பேரரான) ஹஸன் பின் அலீ (ரலி) அவர்களைப் பிடித்து தமது இன்னொரு தொடையின் மீதும் அமர்த்திக் கொண்டு பிறகு எங்கள் இருவரையும் கட்டியணைத்தவாறு,  இறைவா! இவர்கள் இருவர் மீதும் நான் அன்பு செலுத்துகிறேன். நீயும் இவர்கள் மீது அன்பு செலுத்துவாயாக!   என்றார்கள்.

அறிவிப்பவர் : உஸாமா பின் ஸைத் (ரலி)  நூல் : புகாரி (6003)


குழந்தை பாசம் பெற்றோர்களை வழிகெடுத்து விடக்கூடாது

சில பெற்றோர்கள் குழந்தைகளின் தவறான விருப்பதிற்குக் கட்டுப்பட்டு மார்க்கம் தடுத்த காரியங்களை செய்துவிடுகிறார்கள். குழந்தைகள் பெற்றோர்களுக்குச் சோதனையாகவும் அல்லாஹ்வின்  நினைப்பை விட்டும் திருப்பக்கூடியவர்களாகவும் இருக்கிறார்கள் என்று அல்லாஹ் கூறுகிறான்.

உங்களின் மக்கட்செல்வமும், பொருட்செல்வமும் சோதனை என்பதையும், அல்லாஹ்விடம் மகத்தான கூலி உண்டு என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்!  அல்குர்ஆன் (8 : 28)

நம்பிக்கை கொண்டோரே! உங்கள் மனைவியரிலும், உங்கள் மக்களிலும் உங்களுக்கு எதிரிகள் உள்ளனர். அவர்களிடம் கவனமாக இருந்து கொள்ளுங்கள்! நீங்கள் பொருட்படுத்தாது அலட்சியம் செய்து மன்னித்தால் அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன். அல்குர்ஆன் (64 : 14)

நம்பிக்கை கொண்டோரே! உங்களின் பொருட் செல்வமும், மக்கட் செல்வமும்  அல்லாஹ்வின் நினைவை விட்டு உங்களைத் திசை திருப்பி விட வேண்டாம். இதைச் செய்வோரே நஷ்டமடைந்தவர்கள்.

அல்குர்ஆன் (63 : 9)


குழந்தைகளுக்கு மத்தியில் நீதமாக நடக்க வேண்டும்

குழந்தைகளுக்கிடையில் நீதமாக நடப்பது பெற்றோரின் மீது கடமை. பல குழந்தைகள் இருக்கும் போது ஒருவருரை மட்டும் நன்கு கவனிப்பதும், கேட்பதையெல்லாம் ஒருவருக்கு மட்டும் வாங்கித் தருவதும் ஒருவரிடத்தில் மட்டும் பாசத்தை வெளிப்படுத்துவதும் குற்றமாகும். இதனால் பிஞ்சு மனம் கடுமையான நோவினைக்குள்ளாகும்.

நீ தான் எனக்குப் பிடித்தவன். நீ தான் அறிவாளி. அவன் முட்டாள் என்பதைப் போன்ற ஏற்றத் தாழ்வுகளை காட்டும் வார்த்தைகளைக் குழந்தைகளிடத்தில் விதைப்பது அநியாயம். இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடைசெய்துள்ளார்கள்.

நுஃமான் பின் பஷீர் (ரலி) அவர்கள் மிம்பரின் மீது நின்று கொண்டு, என் தந்தை அன்பளிப்பு ஒன்றை எனக்குக் கொடுத்தார்.  என் தாயார் அம்ரா பின்த்து ரவாஹா (ரலி) அவர்கள் என் தந்தையிடம்,  நீங்கள் இதற்கு அல்லாஹ்வின் தூதரை சாட்சியாக ஆக்காதவரை நான் இதை ஒப்புக் கொள்ள மாட்டேன்   என்று கூறினார்கள். என் தந்தை அல்லாஹ்வின் தூதரிடம் சென்று,  அல்லாஹ்வின் தூதரே!  நான் அம்ரா பின்த்து ரவாஹாவின் வாயிலாக, எனக்குப் பிறந்த என் மகனுக்கு அன்பளிப்பு ஒன்றைக் கொடுத்தேன்; அவள் (என் மனைவி) தங்களை சாட்சியாக ஆக்கும் படி எனக்குக் கட்டளையிட்டாள்   என்று கூறினார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், உங்கள் மற்ற பிள்ளைகளுக்கும் இதே போன்று கொடுத்துள்ளீர்களா?   என்று கேட்டார்கள். அதற்கு என் தந்தை, இல்லை   என்று பதிலளித்தார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அவ்வாறெனில் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். உங்கள் பிள்ளைகளிடையே நீதி செலுத்துங்கள்   என்று கூறினார்கள். இதைக் கேட்ட என் தந்தை உடனே திரும்பி வந்து, தனது அன்பளிப்பை ரத்து செய்தார்.

அறிவிப்பவர் : ஆமிர் பின் ஷர்ஹபீல்  (ரஹ்)  நூல் ; புகாரி (2587)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்,  என்னை அக்கிரமத்துக்கு சாட்சியாக்காதீர்கள்   என்று கூறினார்கள் என்று புகாரி (2650) வது செய்தியில் உள்ளது.

குழந்தைகளை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும்

குழந்தைகள் விஷயத்தில் அக்கரை காட்டாமல் அழுக்கான ஆடையில் அசிங்கமான தோற்றத்தில் தெருக்களில் திரிய விடும் தாய்மார்கள் சிலர் இருக்கிறார்கள். பின்வரும் ஹதீஸ்களைக் கவனத்தில் வைத்து தங்கள் குழந்தைகளைப் பார்ப்பதற்கு அழகானவர்களாகவும், தூய்மையானவர்களாகவும் வைத்துக்கொள்ள வேண்டும்.

ஒரு மனிதர்,  தமது ஆடை அழகாக இருக்க வேண்டும்; தமது காலணி அழகாக இருக்க வேண்டும் என ஒருவர் விரும்புகிறார். (இதுவும் தற்பெருமையில் சேருமா?)   என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்,  அல்லாஹ் அழகானவன்; அழகையே அவன் விரும்புகின்றான். தற்பெருமை என்பது (ஆணவத்தோடு) உண்மையை மறுப்பதும், மக்களைக் கேவலமாக மதிப்பதும்தான்   என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)   நூல் : முஸ்லிம் (147)


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னை மோசமான ஆடையில் கண்டார்கள். உன்னிடத்தில் செல்வம் இருக்கிறதா? என்று (என்னிடம்) கேட்டார்கள். அதற்கு நான் எல்லாச் செல்வங்களும் உள்ளது. அல்லாஹ் எனக்கு ஒட்டகத்தையும், ஆட்டையும் தந்துள்ளான் என்று கூறினேன். (நல்ல ஆடைகளை நீ அணிவதின் மூலம் உனக்கு இறைவன் அளித்த பாக்கியம்) உம்மிடத்தில் பார்க்கப்படட்டும் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : மாலிக் பின் நள்லா (ரலி)   நூல் : திர்மிதி (1929)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்தார்கள். அப்போது தலைவிரி கோலமாய் இருந்த ஒரு மனிதரைக் கண்டார்கள். அவரது முடி (சீவப்படாமல்) பிரிந்திருந்தது. தனது முடியை படிய வைக்கும் பொருளை இவர் பெற்றுக் கொள்ளவில்லையா? (என்று கண்டித்துக்) கூறினார்கள். அழுக்குப் படிந்த ஆடையில் இன்னொரு மனிதரைக் கண்டார்கள். தன் ஆடையைக் துவைத்துக் கொள்வதற்கு இவருக்குத் தண்ணீர் கிடைக்கவில்லையா? என்று (கடிந்து) கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)   நூல் : அபூதாவுத் (3540)


வீரர்களாக வளர்க்க வேண்டும்

பேய் வருகிறது. பூச்சாண்டி வருகிறான் என்றெல்லாம் கூறி சிறுவயதிலேயே குழந்தைகளுக்குப் பயத்தை ஏற்படுத்தி விடுகிறார்கள். இதனால் இவர்கள் பெரியவர்களாக ஆன பின்பும் பேய் பற்றிய பயம் அவர்களை விட்டும் அகலுவதில்லை. வீர தீர சாகசங்களைச் செய்ய விடாமல் பயம் அவர்களைத் தடுத்துவிடுகிறது.

வீரத்துடன் வளர்க்கப்பட்ட குழந்தைகள் யாருக்கும் அஞ்சாமல் நியாயத்திற்காகப் போராடுவார்கள். என்றைக்காவது ஒருநாள் தனது குடும்பத்துக்கு ஆபத்து ஏற்படும் போது துவண்டுவிடாமல் பெற்றோருக்குப் பக்கபலமாக இருந்து உதவியும் செய்வார்கள். நபித்தோழர்கள் தங்கள் குழந்தைகளை இவ்வாறு தான் வளர்த்தார்கள்.

நான் பதினான்கு வயதுடையவனாக இருக்கும்போது,  உஹுதுப் போர் நடந்த காலகட்டத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னைத் தமக்கு முன்பாக வரவழைத்தார்கள்; ஆனால், (போரில் கலந்து கொள்ள) எனக்கு அனுமதியளிக்கவில்லை. அகழ்ப் போரின் போதும் என்னைத் தமக்கு முன்பாக வரவழைத்தார்கள். அப்போது நான் பதினைந்து வயதுடையவனாயிருந்தேன். அப்போது, போரில் கலந்துகொள்ள எனக்கு அனுமதியளித்தார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)  நூல் : புகாரி (2664)


சிறியவர்களுக்கு முன்னுரிமை தர வேண்டும்

சிறுவர்கள் பசியைப் பொறுக்க மாட்டார்கள். முதலில் தனக்குக் கிடைக்க வேண்டும் என்ற ஆவல் அவர்களிடத்தில் அதிகமாகவே இருக்கும். எனவே உணவு பரிமாறும் போது முதலில் சிறியவர்களுக்கே கொடுக்க வேண்டும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் முதலாவதாகப் பழுக்கும் கனி கொண்டுவரப்பட்டால்,  இறைவா! எங்கள் நகரத்தில் எங்களுக்கு வளத்தை ஏற்படுத்துவாயாக! எங்கள் கனிகளிலும் எங்கள் (அளவைகளான)  முத் து மற்றும்  ஸாஉ  ஆகியவற்றிலும் (தற்போதுள்ள) வளத்துடன் மற்றொரு மடங்கு வளத்தை வழங்குவாயாக   என்று பிரார்த்தித்து விட்டு, அங்கு வந்திருக்கும் குழந்தைகளில் மிகச் சிறிய குழந்தைக்கு அந்தக் கனியைக் கொடுப்பார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)   நூல் : முஸ்லிம் (2660)


நூல் : இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பு 

--P.JAINUL ABIDEEN

பாகம்  இரண்டிட்கு செல்ல 
https://makarimtec.blogspot.com/2022/08/2-islaththil-kulanthai-valarppu.html



Search This Blog