மீன் வயிற்றில் மனிதன் உயிருடன் இருக்க முடியுமா?
இவ்வசனங்கள் (37:142, 21:87, 68:48) யூனுஸ் நபி அவர்கள் சில நாட்கள் மீன் வயிற்றில் சிறை வைக்கப்பட்டதாகக் கூறுகின்றன.
மீன் வயிற்றுக்குள் மனிதன் எப்படி உயிருடன் இருக்க முடியும்? ஆக்ஸிஜன் இல்லாமல் மனிதன் செத்து விடுவானே என்று சிலர் கேள்வி எழுப்புகிறார்கள்.
இறைவன் நாடினால் இது போன்ற அற்புதங்களை நிகழ்த்த முடியும் என்றாலும் மீன் வயிற்றில் யூனுஸ் நபியவர்கள் உயிருடன் இருந்ததற்கு அறிவியல் சாத்தியம் உள்ளது என்பதைக் கூடுதல் தகவலாகத் தருகிறோம்.
மனிதனை விழுங்கும் அளவில் கடலில் ஒரு மீன் உள்ளது என்றால் அது திமிங்கலம் என்ற மீன்தான்.
கடலில் உள்ள பல்வேறு திமிங்கலங்களில் நீலத் திமிங்கலம் என்ற ஒரு வகை உண்டு. இத்திமிங்கலத்தின் நாக்கில் 50 பேர் உட்காரக்கூடிய அளவு இடமிருக்கும். இத்தகைய திமிங்கலத்திடம் மூர்க்கமான குணங்கள் கிடையாது. இவை மிகவும் சாதுவானவை ஆகும்.
நாக்கில் மட்டும் ஐம்பது பேர் அமர முடியும் என்றால் அதன் வயிற்றுப் பகுதி எவ்வளவு பிரம்மாண்டமாக இருக்கும் என்று நாம் ஊகம் செய்து கொள்ளலாம்.
திமிங்கலம் மற்ற மீன்களில் இருந்து மாறுபட்ட படைப்பாகும். இது மீன் இனமாக இருந்தாலும் இது விலங்கினங்களைப் போல் தனது குட்டிகளுக்குப் பாலூட்டக் கூடிய உயிரினமாகும்.
மேலும் மீன்கள் தமது செவுள்களால் சுவாசிக்கின்றன. ஆனால் திமிங்கலங்கள் மனிதனைப் போன்ற நுரையீரல்களைக் கொண்டுள்ளதால் தமது நுரையீரல்களால் சுவாசிக்கக் கூடியவை. நீரின் மேல்மட்டத்துக்கு வந்து தேவையான காற்றை உள் இழுத்துக் கொள்ளும். நீருக்கு அடியில் மூச்சுவிடாமல் இரண்டு மணி நேரம் கூட மூச்சடக்கிக் கொள்ளும். மனிதர்கள் சுவாசிக்கும் போது காற்றில் இருந்து 15 சதம் ஆக்ஸிஜனை உள் இழுக்கிறோம், ஆனால் திமிங்கலங்கள் காற்றில் இருந்து 90 சதம் ஆக்ஸிஜனை உள் இழுத்துக் கொள்வதால் 7000 அடி ஆழம் சென்றாலும் இவற்றால் நீண்ட நேரம் மூச்சடக்க முடிகிறது.
திமிங்கலத்தின் இந்த தனித் தன்மையைக் கவனத்தில் கொண்டால் அவை சுவாசித்து உள்ளே சேமித்துக் கொள்ளும் ஆக்ஸிஜன் அதன் வயிற்றுக்குள் இருந்த யூனுஸ் நபி சுவாசிக்க போதுமானதாகும். ஆக்ஸிஜன் முடியும் நேரத்தில் அவை நீருக்கு மேல் தலையை நீட்டி காற்றை உள் இழுத்துக் கொள்ளும் அவசியம் உள்ளதால் யூனுஸ் நபிக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட வழியில்லை.
ஒரு கண்ணாடி அறையில் வெளிக்காற்று புகாமல் அடைத்து ஒருவரை உள்ளே வைத்தால் அந்த அறைக்குள் இருக்கும் காற்றே சில மணி நேரங்கள் அந்த மனிதன் சுவாசிக்கப் போதுமானதாகும். திமிங்கலம் உள்ளிழுக்கும் காற்றில் அதிக ஆக்ஸிஜன் இருப்பதால் யூனுஸ் நபி மீன் வயிற்றில் உயிருடன் இருந்தது அறிவியலுக்கு உடன்பாடானது தான். இதில் அறிவியல் பூர்வமாக கேள்வி கேட்க வழியில்லை. இன்னும் சொல்வதாக இருந்தால் கடலில் இது போன்ற தனித்தன்மை வாய்ந்த மீன்களும் உள்ளன என்ற அறிவியல் முன்னறிவிப்பாக இதை எடுத்துக் கொள்ளலாம்.
452. எண்ணிச் சொல்லாதது ஏன்?
யூனுஸ் நபியின் சமுதாய மக்களின் எண்ணிக்கையைக் கூறும் போது திட்டவட்டமாக ஒரு எண்ணிக்கையைக் கூறாமல் ஒரு லட்சம் அல்லது அதை விட அதிகமான மக்களுக்கு அவரை அனுப்பினோம் என்று அல்லாஹ் இவ்வசனத்தில் (37:147) கூறுகிறான்.
மனிதன் இப்படி உத்தேசமாகச் சொல்லலாம். எத்தனை பேர் என்பதில் அல்லாஹ்வுக்குச் சந்தேகம் வரலாமா என்று திருக்குர்ஆனில் குறை காண்பவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
ஆனால் இந்தக் கேள்வி அர்த்தமற்றதாகும். ஒரு தூதரை அனுப்புதல் என்பது ஒரு நொடியில் முடிந்து போகும் விஷயம் அல்ல. அவரது பணி பல ஆண்டுகள் நீடிக்கும். அந்தக் காலகட்டத்தில் மக்கள் தொகை அதிகமாகிக் கொண்டே இருக்கும்.
யூனுஸ் நபி அனுப்பப்பட்ட நேரத்தில் ஒரு லட்சம் பேர் இருந்தால் அவர் அம்மக்களுக்குப் பிரச்சாரம் செய்த காலத்தில் நாள்தோறும் மக்கள் தொகை அதிகமாகி இருக்கும். அவ்வாறு அதிகமாகும் மக்களுக்கும் அவர் தான் தூதராவார்.
ஏழு கோடி மக்களுக்கு அதிபராக ஒருவர் தேர்வு செய்யப்பட்டால் அவர் பதவியின் இறுதிக் காலத்தில் ஏழரைக் கோடி மக்களுக்கு அதிபராகி இருப்பார்.
இப்படிச் சிந்திக்கும் போது இந்தச் சொற்றொடர் எவ்வளவு அற்புதமான சொற்றொடர் என்று அறிந்து கொள்ளலாம்.
ஒரு லட்சம் பேருக்கு நபியாக அனுப்பினோம் என்று திருக்குர்ஆன் கூறி இருந்தால் யூனுஸ் நபி காலத்தில் வாழ்ந்த யாரும் பிள்ளை பெறவில்லையா எனக் கேட்டு அல்லாஹ்வின் கூற்றைப் பொய்யாக்கி இருப்பார்கள். எனவே தான் அல்லாஹ் வித்தியாசமான சொற்றொடரைப் பயன்படுத்தியுள்ளான். இதைச் சொன்னவன் அல்லாஹ் தான் என்பதை இவ்வசனம் உறுதி செய்கிறது.
--P.JAINUL ABIDEEN
