தவ்ஹீத் ஜமாஅத் video's: 171. உயிரினங்களை அறுத்து உண்பது நியாயமா?

171. உயிரினங்களை அறுத்து உண்பது நியாயமா?

 171. உயிரினங்களை அறுத்து உண்பது நியாயமா?

இவ்வசனங்களில் (2:173, 5:3, 5:4, 6:118, 6:119, 6:121, 6:145, 11:69, 16:5, 16:14, 16:115, 22:28, 22:36, 23:21, 35:12, 36:72, 40:79, 51:27) உயிரினங்களை மனிதன் அறுத்து உண்ணலாம் என்று அனுமதிக்கப்படுகிறது. இந்த அனுமதி ஜீவகாருண்யத்திற்கு எதிரானதாக சிலரால் கருதப்படுகிறது. ஆழமாகச் சிந்திக்கும் பொழுது இது மனித குலத்துக்கு நன்மை செய்கின்ற ஒரு அனுமதி என்பதை விளங்கிக் கொள்ளலாம்.

உயிரினங்களை உணவுக்காகக் கொல்லக் கூடாது என்போர் அது உயிர்வதை என்றே காரணம் கூறுகின்றனர். உயிர்வதை தான் காரணம் என்றால் பல விஷயங்களை அவர்கள் தெளிவுபடுத்தக் கடமைப்பட்டுள்ளனர்.

1. உயிர்வதை என்று சொல்வோர் கால்நடைகளை விவசாயப் பணிகளிலும், பாரம் இழுக்கும் பணிகளிலும் பயன்படுத்துகின்றனர். இது உயிர்வதையா? இல்லையா?

2. உயிர்வதை என்று சொல்வோர் கன்றுகளுக்காக தாய்ப்பசுவிடம் சுரக்கும் பாலை ஏமாற்றி அருந்துகின்றனர். இது உயிர்வதையா? இல்லையா?

3. இன்றைய அறிவியல் உலகில் தாவரங்களுக்கும் உயிர் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது! தாவரங்களையும், காய் கனிகளையும் உண்பது உயிர்வதை இல்லையா?

4. மனிதன் அருந்துகின்ற தண்ணீரிலும் கோடிக்கணக்கான உயிர்கள் இருப்பது இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த உயிர்களுடன் தண்ணீரை அருந்துவது உயிர்வதை இல்லையா?

5. கொசு, தேள், பாம்பு போன்ற எத்தனையோ உயிர்களை மனிதன் தனது சுயநலத்திற்காகக் கொல்வது உயிர்வதை தானே?

உயிரினங்களை உட்கொள்ளக் கூடாது என்பதற்கு உயிர்வதை தான் காரணம் என்றால் மேற்கண்டவற்றிலும் உயிர்வதை இருக்கிறது என்பதைச் சிந்திக்க வேண்டும்.

அசைவம் சாப்பிடக் கூடாது என்பதற்கு உயிர்வதை தான் காரணம் என்றால் தாமாகச் செத்த பிராணிகளையும், மீன்களையும் தவிர்ப்பது ஏன்?

மீன்களைத் தவிர எந்த உணவும் கிடைக்காத துருவப் பிரதேசங்களில் வசிப்பவர்கள் இக்கொள்கையைக் கடைப்பிடித்தால் உலகில் வாழ முடியுமா?

இவ்வாறு மாமிசத்தைத் தவிர்ப்பவர்கள் கண்பார்வை கூர்மையடைவதற்காக மீன் எண்ணெய்யை உட்கொள்கின்றனர். இவர்களின் மனசாட்சி இதை ஏற்றுக் கொள்கிறது.

எனவே உயிர்வதை என்று சொல்வது போலியான காரணம் என்பது இதிலிருந்து தெரியவருகின்றது.

சைவம், அசைவம் ஆகிய இரு வகை உணவுகளையும் ஜீரணிக்கும் வகையில் மனிதனின் குடல் அமைந்திருப்பதும் சிந்திக்கத்தக்கது.

இவ்வாறு சிந்தித்தால் தனது நன்மைக்காக பிற உயிரினங்களை வதைப்பதையும், கொல்வதையும் மனிதனின் உள்மனது ஏற்றுக் கொள்கிறது என்று அறிந்து கொள்ளலாம்.

போலித்தனமாகவும், முன்னோர் கூறியதில் கொண்ட குருட்டு நம்பிக்கையின் காரணமாகவும் உயிர்வதை என்று காரணம் காட்டி அசைவ உணவுகளைத் தவிர்த்து வருகின்றனர்.

இஸ்லாம் கூறுகின்ற முறையில் உயிரினங்களை அறுக்கும் போது அவற்றுக்கு எந்த வேதனையும் தெரியாது என்று சோதனை மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

உயிரினங்களை உணவாகக் கொள்ளும் முஸ்லிமல்லாதவர்கள் அவற்றைத் தண்ணீரில் மூழ்கடித்தோ, அல்லது கழுத்தை நெரித்தோ, தடியால் அடித்தோ, ஈட்டியால் குத்தியோ இன்னும் இது போன்ற வழிகளிலோ பிராணிகளின் உயிரைப் போக்குகின்றனர்.

ஆனால் இந்த வழிமுறைகளில் பிராணிகளைக் கொல்வதை இஸ்லாம் கண்டிக்கிறது. பிராணிகளின் குரல்வளையில் கூர்மையான கத்தி மூலம் அறுத்துத் தான் பிராணிகளைக் கொல்ல வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது.

குரல்வளை மிக விரைவாக அறுக்கப்படுவதால் மூளையுடன் உள்ள தொடர்பு அறுந்து போகின்றது. இதனால் அப்பிராணிகளால் வலியை உணர முடியாது. இரத்தத்தை வெளியேற்றுவதற்காக உடல் துடிக்கிறது; வேதனையால் அல்ல என்பதை சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஜெர்மனி நாட்டில் உள்ள ஹனோவர் பல்கலைக் கழகத்தில் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அந்த ஆய்வை நடத்தியவர்கள் பேராசிரியர் சூல்ட்ஜ் மற்றும் அவரது துணை ஆய்வாளர் டாக்டர் ஹாஸிம் ஆவார்கள்.

அவர்கள் செய்த பரிசோதனையின் விவரத்தையும் அதன் முடிவுகளின் விவரத்தையும் கீழே தருகின்றோம்.

1) முதலில் உணவுக்காக அறுக்கப்படும் விலங்குகள் தேர்வு செய்யப்பட்டன.

2) அறுவை சிகிச்சை செய்து அவ்விலங்குகளின் தலையில் மூளையைத் தொடும்படி பல பகுதிகளில் மின்னணுக் கருவிகள் பொருத்தப்பட்டன.

3) உணர்வு திரும்பியதும், முழுவதுமாகக் குணமடைய பல வாரங்களுக்கு அப்படியே விடப்பட்டன.

4) அதன் பிறகு பாதி எண்ணிக்கை விலங்குகள் இஸ்லாமிய ஹலால் முறைப்படி அறுக்கப்பட்டன.

5) மறு பாதி எண்ணிக்கை விலங்குகள் மேற்கத்தியர் கையாளும் முறைப்படி கொல்லப்பட்டன.

6) கொல்லப்பட்ட எல்லா விலங்குகளுக்கும் E.E.G மற்றும் E.C.G பதிவு செய்யப்பட்டன. அதாவது E.E.G மூளையின் நிலையையும், E.C.G இருதய நிலையையும் படம் பிடித்துக் காட்டின.

இப்போது மேற்கண்ட பரிசோதனையின் முடிவுகளையும், அதன் விளக்கங்களையும் காண்போம்.

1) இஸ்லாமிய ஹலால் முறையில் விலங்குகள் அறுக்கப்பட்டபோது, முதல் மூன்று வினாடிகளுக்கு E.E.Gயில் எந்த மாற்றமும் தென்படவில்லை. அறுக்கப்படுவதற்கு முன்னிருந்த நிலையிலேயே அது தொடர்ந்து நீடித்தது. விலங்குகள் அறுக்கப்படும் போது அவை வலியினால் துன்பப்படவில்லை என்பதை இது காட்டியது.

2) மூன்று வினாடிகளுக்குப் பின் அடுத்த மூன்று வினாடிகளுக்கு விலங்குகள் ஆழ்ந்த தூக்கம் அல்லது உணர்வற்ற நிலைக்கு ஆளாகின்றன என்பதை E.E.G. பதிவு காட்டியது. அந்நிலை உடம்பிலிருந்து அதிகப்படியான ரத்தம் பீறிட்டு வெளியாவதால் ஏற்படுகின்றது.

3) மேற்கண்ட ஆறு வினாடிகளுக்குப் பின் E.E.G பூஜ்ய நிலையைப் பதிவு செய்தது. அறுக்கப்பட்ட விலங்கு எந்த வலிக்கும், வதைக்கும் ஆளாகவில்லை என்பதை இது காட்டியது.

4) மூளையின் நிலையை பூஜ்யமாகப் பதிவு செய்த நேரத்திலும், இதயத் துடிப்பு நிற்காமல் தொடர்ந்து துடிப்பதாலும் உடலில் ஏற்படும் வலிப்பினாலும் உடலிருந்து முற்றிலுமாக ரத்தம் வெளியேற்றப்படுகிறது. அதனால் அந்த மாமிசம் உணவுக் கேற்ற சுகாதார நிலையை அடைகிறது.

மேற்கத்தியர் கையாளும் முறைப்படி கொல்லப்பட்ட பிராணிகள் வேதனைக்கு உள்ளாகின்றன என்பதும் இந்தச் சோதனையில் தெரிய வந்தன.

1) இந்த முறையில் கொல்லப்படும் விலங்குகள் உடனே நிலைகுலைந்து உணர்வற்ற நிலைக்குப் போகின்றன.

2) அப்போது விலங்குகள் மிகக் கடுமையான வலியால் அவதியுறுவதை E.E.G பதிவு காட்டியது.

3) அதே நேரத்தில் விலங்குகளின் இதயம், ஹலால் முறையில் அறுக்கப்பட்ட விலங்குகளோடு ஒப்பிடும் போது முன்னதாகவே நின்று விடுகிறது. அதனால் உடலில் மிகுதியான ரத்தம் தேங்கிவிடுகிறது. ரத்தம் உறைந்த அந்த மாமிசம் உட்கொள்ளத்தக்க சுகாதார நிலையை அடையவில்லை.

மேற்கண்ட ஆய்வுகள் இஸ்லாமிய ஹலால் முறையே சிறந்தது என்பதை எடுத்துக் காட்டுவதோடு அம்முறையே மனிதாபிமான முறை என்பதையும் நிரூபித்துள்ளது.

எனவே பிராணிகளை இஸ்லாம் கூறும் முறையில் அறுத்தால் அதில் உயிரினங்களுக்கு வதை இல்லை என்பது நிரூபணமாகின்றது.

அப்படியானால் அல்லாஹ்வின் பெயர் கூறி அறுப்பதைச் சாப்பிட வேண்டும்; அவ்வாறு கூறாவிட்டால் சாப்பிடக் கூடாது என்று சொல்வதற்குக் காரணம் என்ன? என்ற சந்தேகம் ஏற்படலாம்.

பொதுவாக எந்த உயிரினத்தையும் எந்த ஒரு மனிதனாலும் உருவாக்க முடியாது. உலகமே ஒன்று திரண்டாலும் ஒரு எறும்பைக் கூட படைக்க முடியாது. அவ்வாறு இருக்கும் போது அல்லாஹ் படைத்த உயிரைக் கொல்வதற்கு மனிதனுக்கு உரிமையில்லை.

ஆனால் எந்த அல்லாஹ் இந்த உயிரினங்களைப் படைத்தானோ அவனே அதை அறுத்து உண்ண நமக்கு அனுமதி அளித்து விட்டால் அப்போது நமக்கு எந்த உறுத்தலும் ஏற்படத் தேவை இல்லை. ஆனால் இந்த அனுமதியைப் பயன்படுத்துவதாக இருந்தால் ஒவ்வொரு உயிரினத்தை அறுக்கும் போதும் அனுமதி பெற்றாக வேண்டும்.

அந்த அனுமதி தான் பிஸ்மில்லாஹ் என்று கூறுவதாகும். இதன் பொருள் அல்லாஹ்வின் பெயரால் அறுக்கிறேன் என்பதாகும்.

இதன் கருத்து என்னவென்றால் இறைவா நீ படைத்த ஒரு உயிரைக் கொன்று ஒழிக்க வேண்டும் என்பதற்காக நான் இதை அறுக்கவில்லை. நான் அந்த அளவுக்குக் கொடூரமானவனல்லன். இந்த உயிரைப் படைத்த நீயே இதை எனக்கு அனுமதித்ததால் தான் இதை அறுக்கிறேன். இல்லாவிட்டால் நான் உயிரைக் கொல்பவன் அல்லன் என்பது இதன் கருத்தாகும்.

இந்த உறுதிமொழி தான் அறுப்பதற்கான அனுமதியாகும். அல்லாஹ்வின் பெயரால் தான் இதை அறுக்கிறேன் எனக் கூறாவிட்டால் உயிரினங்களின் உண்மை எஜமானனிடம் அனுமதி பெறாத காரணத்தால் அதை அறுப்பதும், உண்பதும் குற்றமாகி விடும்.

ஒருவனுக்குச் சொந்தமான ஆட்டை நாம் திருடிச் சாப்பிட்டால் அது குற்றம் என்பதை நாம் அறிவோம். அந்த மனிதன் அந்த இறைச்சிக்குத் தான் உரிமையாளன். உயிருக்கு உரிமையாளனாகிய அல்லாஹ்விடமும் அனுமதி பெற வேண்டியது இதனால் அவசியமாகிறது.

பொதுவாக கத்தியை எடுத்து இரத்தத்தைப் பார்த்துப் பழகியவன் யாரையும் மிரட்டி உருட்டி காரியம் சாதிப்பவனாக ரவுடியாக தலைஎடுத்து விடுகிறான். அன்றாடம் ஆடுகளை அறுக்கும் ஒரு முஸ்லிம் இப்படி கத்தியைக் காட்டி மிரட்டும் ரவுடியாக அலைவதில்லை.

இதற்குக் காரணம் பிஸ்மில்லாஹ் தான்.

அல்லாஹ்வின் அனுமதி இருப்பதால் தான் நான் ஆட்டை அறுக்கிறேன் என்று தினமும் சொல்லியும், நினைத்தும் வருவதால் மனிதனை அறுக்க அல்லாஹ் அனுமதிக்கவில்லை என்ற கருத்து அவன் உள்ளத்தில் ஆழமாகப் பதிந்து விடுகிறது.

இதனால் இன்னொரு நன்மையும் ஏற்படுகிறது. மனிதர்கள் விரும்பி உண்ணும் பிராணிகளும் மனிதர்கள் உண்ண விரும்பாத பிராணிகளும் உள்ளன. சிலர் விரும்பி, சிலர் விரும்பாத பிராணிகளும் உள்ளன.

ஒருவர் விரும்பாத பிராணியை அவருக்கு நாம் வழங்கினால் அது மிகப்பெரிய மோசடியாகும். காகத்தை அறுத்து அதைக் கோழி எனச் சொல்லி விற்பதையும், நாயை அறுத்து ஆட்டு இறைச்சி என விற்பதையும் நாம் பார்க்கிறோம்.

பணம் சம்பாதிப்பதற்காக மனிதர்கள் மாமிசத்தின் பெயரால் ஏமாற்றப்படுகின்றனர்.

அல்லாஹ்வின் அனுமதி பெற்று அவன் பெயரால் அறுக்கிறேன் என்று கூறி அறுக்கும் முஸ்லிம் ஆட்டை அறுத்து மாட்டிறைச்சி என்று சொல்ல மாட்டான். உண்ணக் கூடாது என்று தடுக்கப்பட்ட நாய், பன்றி காகம் ஆகியவற்றை அவன் அறுக்க மாட்டான்.

பிஸ்மில்லாஹ் கூறி அறுப்பதால் இந்த நன்மையும் கிடைக்கிறது.

இது போன்ற காரணங்களால் தான் பிஸ்மில்லாஹ் சொல்லி அறுக்க வேண்டும் என்று இஸ்லாம் வழிகாட்டுகிறது. இது நாம் சிந்திக்கும் போது தெரிய வரும் காரணங்களாகும். இது அல்லாத இன்னும் பல காரணங்களும் இருக்கலாம்.

மீனை அறுக்காமல் சாப்பிடுவது ஏன்? செத்த மீன்களைச் சாப்பிடுவது ஏன் என்ற சந்தேகம் உள்ளவர்கள் 505வது குறிப்பைப் பார்க்கவும்.

505. மீன்களை அறுக்காமல் உண்பது ஏன்?

இவ்வசனங்களில் (5:96, 16:14) மீன்களை உணவாக உட்கொள்ளலாம் என்று கூறப்படுகிறது. மற்ற உயிரினங்களை அறுத்து உண்ண வேண்டும். ஆனால் மீன்களை அறுக்கத் தேவையில்லை: தானாகச் செத்த மீன்களையும் உண்ணலாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கியுள்ளனர்.

மீன் அல்லாத உயிரினங்களை அறுக்க வேண்டும்; மீனை அறுக்காமல் உண்ணலாம் என்ற வேறுபாட்டுக்குக் காரணம் என்ன? என்று சந்தேகம் சிலருக்கு உள்ளது.

நீர் வாழ் உயிரினங்களுக்கும், மற்ற உயிரினங்களுக்கும் வித்தியாசம் இருக்கிறது.

நீர்வாழ் உயிரினங்களுக்கு ஓடுகின்ற இரத்தம் கிடையாது. அதை உயிருடன் பிடித்து அறுத்தாலும் அதில் இரத்தம் சிறிதளவு கசியுமே தவிர இரத்தம் ஓடாது. வடிவது கூட இல்லை.

இஸ்லாமிய நம்பிக்கையின்படி ஓட்டப்படும் இரத்தம் தடை செய்யப்பட்டுள்ளது. எனவே தான் ஆடு, மாடு போன்ற உயிரினங்களை அறுக்கும் போது வெளியாகும் இரத்தத்தை உண்ணக் கூடாது.

ஆடு, மாடு போன்றவை உயிருடன் இருக்கும் போது அறுத்தால் மட்டுமே அதிலிருந்து இரத்தம் வெளிப்படும். செத்த பிறகு அறுத்தால் இரத்தம் வெளிப்படாது. எனவே அந்த இறைச்சியைச் சாப்பிடும் போது இரத்தத்தையும் சேர்த்து சாப்பிடும் நிலை ஏற்படுகிறது.

இரத்தத்தில் மனிதன் உட்கொள்ளக் கூடாத அணுக்களோ, கிருமிகளோ இருக்கலாம். பிராணிகள் செத்தவுடன் இரத்தம் உறைய ஆரம்பித்து விடுகிறது. இரத்தத்தில் வாழ முடியாத கிருமிகள் மற்ற பகுதிகளுக்கும் பரவி விடுகிறது. இரத்தத்தைச் சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகள் அனைத்தும் அந்த இறைச்சியைச் சாப்பிடும் போதும் ஏற்படும் என்பதை யாரும் மறுக்க முடியாது.

மீன்களுக்கு ஓடக் கூடிய இரத்தம் இல்லாததால் அறுத்தாலும் அதிலிருந்து இரத்தம் பீரிட்டு ஓடாது. தானாகச் செத்தாலும் சதை வரை ஊடுருவும் இரத்தம் மீன்களில் இல்லை. எனவே தான் மீனை அறுக்குமாறு இஸ்லாம் கூறவில்லை.

--P.JAINUL ABIDEEN

https://rb.gy/wkmlfl

-------

அசைவ உணவு மனிதனை மூர்க்கமானவனாக மாற்றுகிறதா?

 மாற்று மதத்தவர்களால் இஸ்லாமியர்களிடம் கேட்கப்படும் பொதுவான கேள்விகளுக்கு டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களின் பதில்கள்:

கேள்வி எண் – 8.

மனிதன் என்ன உண்கிறானோ – அதனுடைய தாக்கம் அவனது நடவடிக்கைகளில் தென்படும் என்பது அறிவியல் கூற்று. அப்படி இருக்கும்போது – இஸ்லாம் புலால் உணவு உண்ண அனுமதியளிப்பது எப்படி? ஏனெனில் – புலால் உணவு உண்ணுவது மனிதனை வன்முறையாளனாகவும் – மூர்க்கமானவனாகவும் மாற்றுமே! எப்படி?

பதில்:

1. இஸ்லாமிய மார்க்கம் – தாவர உண்ணிகளான ஆடு மாடு ஒட்டகம் போன்ற கால்நைடகளை மாத்திரம் மனிதர்கள் உணவாக உட்கொள்ள அனுமதியளித்துள்ளது.

மனிதன் என்ன உண்கிறானோ – அதனுடைய தாக்கம் அவனது நடவடிக்கைகளில் தென்படும் என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன். எனவேதான் இஸ்லாமிய மார்க்கம் – மாமிச உண்ணிகளான சிங்கம் – புலி – சிறுத்தை போன்ற விலங்கினங்களை மனிதர்கள் உணவாக உட்கொள்வதை தடை செய்துள்ளது. ஏனெனில் மேற்படி விலங்கினங்கள் மூர்க்க குணம் கொண்டவை. மேற்படி விலங்கினங்களின் இறைச்சியை உண்பவர்கள் மூர்க்கக் குணம் கொண்டவர்களாக மாறலாம். அதனால்தான் இஸ்லாம் தாவர உண்ணிகளான ஆடு – மாடு – ஒட்டகம் போன்ற பிரானிகளின் இறைச்சியை மனிதர்கள் உணவாக உட்கொள்ள அனுமதித்துள்ளது. மேற்படி பிராணிகள் – அமைதியானதும் – பணிவானதும் ஆகும். இஸ்லாமியர்களான நாங்கள் – அமைதியான பிராணிகளான – ஆடு – மாடு – ஒட்டகம் போன்றவைகளை உணவாக உட்கொள்கிறோம். எனவேதான் நாங்கள் அமைதியை விரும்புகிறவர்களாக – இருக்கின்றோம்.

2. அருள் மறை குர்ஆனும் – நபிகளாரின் பொன்மொழியும் – கெட்ட உணவு வகைகளை உண்பதை தடை செய்துள்ளது.

‘(நபியாகிய) அவர் நன்மையான காரியங்களைச் செய்யுமாறு ஏவுவார். பாவமான காரியங்களிலிருந்து விலக்குவார். தூய்மையான ஆகாரங்களையே அவர்களுக்கு ஆகுமாக்குவார். கெட்டவற்றை அவர்களுக்குத் தடுத்துவிடுவார்..’ (அல்-குர்ஆன் அத்தியாயம் 07 – ஸுரத்துல் அஃராப் – 157வது வசனம்)

‘மேலும் (நம்) தூதர் உங்களுக்கு எதைக் கொடுக்கின்றாரோ அதை எடுத்துக்கொள்ளுங்கள். இன்னும் எதைவிட்டும் உங்களை விலக்குகின்றாரோ அதை விட்டும் விலகிக் கொள்ளுங்கள்.’ (அல்-குர்ஆன் அத்தியாயம் 59 – ஸுரத்துல் ஹஷ்ர் – 7வது வசனம்)

சில பிராணிகளின் இறைச்சியை மனிதர்கள் உணவாக உட்கொள்ள அனுமதியளித்திருக்கும் அல்லாஹ் – சில பிராணிகளின் இறைச்சியை மனிதர்கள் உணவாக உட்கொள்ள அல்லாஹ் தடை செய்திருக்கிறான் என்பதை ஒரு இஸ்லாமியன் தெரிந்து கொள்ள – நபிகளாரின் பொன்மொழி ஒன்றே போதுமானதாகும்.

3. மாமிசம் உண்ணும் பிராணிகளை மனிதர்கள் உணவாக உட்கொள்ளத் தடை பற்றி நபி (ஸல்) அவர்கள் அறிவித்த செய்தி:

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அறிவித்ததாக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கும் மேற்படி செய்தி ஸஹீஹுல் புஹாரி – ஸஹீஹுல் முஸ்லிம் (ஹதீஸ் எண் 4752) ஸுனன் இப்னு மாஜா (ஹதீஸ் எண் – 3232 முதல் 3234 வரை) போன்ற ஹதீஸ் (செய்தி) நூல்களில் இடம்பெற்றுள்ளன.

அ. மாமிசம் உண்ணக்கூடிய கூரிய பற்களையும் நகங்களையும் உடைய காட்டு விலங்குகளான – சிங்கம் புலி நாய் ஓநாய் போன்றவைகள்.

ஆ. கொறித்துத் திண்ணக்கூடிய பற்களை உடைய எலி பெருச்சாலி அணில் போன்றவைகள்

இ. ஊர்ந்து திரியக் கூடிய பாம்பு முதலை போன்ற பிராணிகள்

ஈ. கூரிய அலகுகளையும் – கால் நகங்களையும் உடைய கழுகு பருந்து காகம் ஆந்தை போன்ற பறவைகள் ஆகியவை மனிதர்கள் உணவாக உட்கொள்ள தடை செய்யப்பட்ட பிராணிகள் மற்றும் பறவைகள் ஆகும்.

 மூல நூல்: டாக்டர். ஜாகிர் நாயக் அவர்களுடன்  அனைத்து மதத்தவர்களும்


கால்நடைகளை சித்திரவதை செய்து அறுப்பது ஏன்?

மாற்று மதத்தவர்களால் இஸ்லாமியர்களிடம் கேட்கப்படும் பொதுவான கேள்விகளுக்கு டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களின் பதில்கள்:

கேள்வி எண் – 7.

இஸ்லாமியர்கள் கால்நடைகளை – இரக்கமற்ற முறையில் சித்திரவதை செய்து கால்நடைகளுக்கு வேதனை தரும் முறையில் அறுக்கிறார்களே! இது சரியா?

பதில்:

‘ஸபிஹா’ என்றழைக்கப்படும் – இஸ்லாமியர்கள் கால்நடைகளை அறுக்கும் விதம் குறித்து மக்களில் பொரும்பாலோரிடமிருந்து விமரிசனங்கள் வருகின்றன. இந்த கேள்விக்கு பதிலளிக்கும் முன் – மேற்படி பொருள் குறித்து – ஒரு சீக்கியருக்கும் – ஒரு இஸ்லாமியருக்கும் நடந்த உரையாடலை உங்களுக்கு சொல்லி விடுறேன்.

சீக்கியர் ஒருவர் இஸ்லாமியரைப் பார்த்து கேட்டார்:  நாங்கள் ஆடு மாடுகளை அறுக்கும் போது – அதன் பின்புற மண்டையில் ஒரே போடு போட்டு – கொன்று விடுகிறோம். அதுபோல செய்யாமல் – நீங்கள் ஏன் அவைகளின் கழுத்தை அறுத்து – சித்ரவதை செய்து கொல்கிறீர்கள்?

மேற்படி கேள்வி கேட்கப்பட்ட இஸ்லாமியர் சொன்னார்: கால்நடைகளை பின்புறம் இருந்து தாக்கிக் கொல்வதற்கு உங்களைப் போல நாங்கள் ஒன்றும் கோழைகளல்ல. நாங்கள் தைரியசாலிகள். அதனால்தான் முன்பக்கமாக அதன் கழுத்தை அறுத்து கொல்கிறோம் என்று.

மேற்படி சம்பவம் வேடிக்கையாக இருந்தாலும் – ‘ஷாபிஹா’ என்றழைக்கப்படும் – இஸ்லாமியர்கள் கால்நடைகளை அறுக்கும் விதம்தான் மனிதத்தன்மை உள்ளது மற்றும் அறிவியல் ரீதியாக சிறந்த முறை என்பதை கீழக்காணும் விபரங்கள் நமக்கு தெரிவிக்கும்.

1. இஸ்லாமிய முறையில் கால்நடைகளை அறுக்கும் விதம்.

அரபிமொழியில் ‘ஸக்காத்’ என்றால் ‘தூய்மை’ என்ற பொருள். மேற்படி சொல்லிலிருந்து ‘ஸக்கய்தும்’ (தூய்மைப்படுத்துதல்) என்ற வினைச்சொல் பெறப்பட்டது. இஸ்லாமிய முறையில் காலந்டைகளை அறுப்பதற்கு கீழக்காணும் நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டிருக்க வேண்டும்.

A. கால்நடைகளை அறுக்க பயன்படும் கத்தி அல்லது வாள் மிகக் கூர்மையானதாக இருக்க வேண்டும்.

கால்நடைகள் மிகக் கூர்மையான கத்தி அல்லது வாளால் அறுக்கப்பட வேண்டும். அறுக்கும் போது கால்நடைகள் வலியை உணராதவாறு அல்லது மிகக் குறைவாகவே வலியை உணருமாறு – மிக வேகமாக அறுக்கப்பட வேண்டும்.

B. ‘ஸபிஹா’ என்றால் அரபிமொழியில் அறுத்தல் என்று பொருள்படும்.

மேற்படி இஸ்லாமிய முறையில் கால்நடைகளை அறுக்கும்போது கழுத்தில் உள்ள மூச்சுக் குழாயும் இரத்தக்குழாயும் ஒரே சமயத்தில் அறுக்கப்பட்டு – கால்நடைகளை உயிரிழக்கச் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும்போது கால்நடைகளின் நரம்பு மண்டலம் துண்டிக்கப்படாமல் இருக்க வேண்டும்.

C. அறுக்கப்பட்ட கால்நடைகளின் உடலில் உள்ள இரத்தம் முழுவதும் வழியும்படிச் செய்ய வேண்டும்.

இரத்தம் முழுவதும் வழிந்தோடச் செய்வதன் நோக்கம் – அறுக்கப்பட்ட கால்நடைகளின் இரத்தம் – இரத்தக் குழாய்களில் தங்கி கிருமிகள் உருவாகாமல் இருக்க வேண்டியாகும். கால்நடைகளை அறுக்கும் போது தண்டுவடம் துண்டிக்கப்படாமல் இருக்க வேண்டும். தண்டுவடும் துண்டிக்கப்படுவதால் – இதயத்திற்கு செல்லக்கூடிய இரத்த நாளங்கள் பாதிக்கப்பட்டு – இதயம் நின்று போகக் கூடிய நிலை உண்டாகலாம். இதனால் இதயத்தில் உள் இரத்தம் இரத்த நாளங்களில் தங்கிவிடக் கூடும்.

D. கிருமிகளும் – நோய்க்கிருமிகளும் உருவாக காரணமாக அமைவது இரத்தமே!

கிருமிகளும் – நோய்க்கிருமிகளும் உருவாக காரணமாக அமைவது உடலில் உள்ள இரத்தமே. இஸ்லாமிய முறையில் கால்நடைகளை அறுக்கும்போது – கால்நைடகளின் உடலில் உள்ள இரத்தம் முழுவதும் வழிந்தோடச் செய்யப்படுவதால் நோய்க்கிருமிகள் உருவாவதில்லை.

E. .இஸ்லாமிய முறையில் அறுக்கப்படும் கால்நடைகளின் இறைச்சி நீ;ண்ட நேரம் கெட்டுப் போகாமல் இருக்கும்.

இஸ்லாமிய முறையில் அறுக்கப்படும் இறைச்சியில் இரத்தம் கலந்து விடாமல் இருப்பதால் – வேறுவிதமாக கொல்லப்படும் கால்நடைகளின் இறைச்சியைவிட இஸ்லாமிய முறையில் அறுக்கப்படும் இறைச்சி நீ;ண்ட நேரம் கெடாமல் இருக்கும்.

F. இஸ்லாமிய முறையில் கால்நடைகளை அறுக்கும்போது – கால்நடைகள் வலியை உணர்வதில்லை.

இஸ்லாமிய முறையில் கால்நடைகள் அறுக்கப்படும்பொழுது – கால்நடைகளின் கழுத்து நரம்புகள் மிக வேகமாக அறுக்கப்பட்டு வலியை மூளைக்குக் கடத்திச் செல்லக்கூடிய நரம்பு மண்டலம் துண்டிக்கப்பட்டு விடுவதால் அறுக்கப்படும் கால்நடைகள் வலியை உணர்வதில்லை. இரத்தம் உடலிலிருந்து வெளியேறுவதால் – உடலில் உள்ள சதைப்பாகங்கள் – இரத்தம் இன்றி சுருங்கி விடுவதால் ஏற்படும் மாற்றத்தால் தான் அறுக்கப்பட்ட மிருகங்கள் – துள்ளுவதாகவும் – துடிப்பதாகவும் நமக்குத் தெரிகின்றதேத் தவிர வலியால் அல்ல

ஆங்கில மூலம்: டாக்டர் ஜாகிர் நாயக்

தமிழாக்கம்: அபூ இஸாரா

--------

மாட்டுக்கறி சாப்பிடுபவர்கள் ஏன் நாய்க்கறி சாப்பிடக்கூடாது 

மாற்றுமத நல்ல உள்ளங்களின் சிந்தனைக்கு சில எடுத்துக்காட்டுகள்.

வல்லாரை,முடக்கத்தான், முருங்கை சாப்பிடும் நாம் ஏன் கல்லிச்செடி, புல் போன்றவற்றினை சமைப்பதில்லையோ அதனைப்போல,

கோழி,கொக்கு சமைக்கும் நம்மில் ஏன் கழுகு, காகம், சாப்பிட நாட்டம் இல்லையோ அதைப்போல,
உடும்பை அனுமதிக்கும் இஸ்லாம் ஏன் பல்லி, எலியை அனுமதிக்கவில்லையோ அதனையும் போல.

பலூடா,மெரிண்டா குடிக்க அனுமதிக்கும் குர்ஆன் ஏன் பியர் அருந்த அனுமதிக்கவில்லையோ அதைப்போல.

அப்பிலும் ஸ்டோபரியும் சுவைக்கும் மனிதன்  எத்தனையோ மரங்கள் பிரசவிக்கும் நச்சுத்தன்மை கொண்ட அல்லது பயனற்ற காய்களை பழங்களை உட்கொள்ள எத்தனிப்பதில்லையோ அதனையும் போல.

உழைத்து உன்னும் ஒரு முஸ்லிம் எப்படி வட்டி,களவில் உண்ணமுடியாதோ அதைப்போலவும்.
கோழி அசைவம்,கோழியிட்ட முட்டை சைவமா எனும் வாதப்பிரதிவாதமும் இங்கில்லை.
மாடு தடை, லெதர் பேஸ்,பெல்ட்,ஸ்லீபர் அனுமதி எனும் குழப்பமும் இங்கில்லை.

மாடு பாதுகாக்கப்படவேண்டும் மாட்டுப்பாலால் பவுடரால் காலையில் நம் உடம்பில் புரதம் சேரவேண்டும் எனும் வாதம் நியாயமாகவும் தெரியவில்லை.

"உயிர்வதை" என ஏங்கும் அனுதாபக்கண்கள்  மீன்களின் உயிர்களை கண்டுகொள்வதில்லையே எனும் நெத்தலி மீன்களின் மனுக்கள் எங்குமே ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை.
மாட்டையோ ஆட்டையோ முஸ்லிம் அல்லாத ஏனைய சித்தாந்த மக்களை உண்ண  கொடூர  முஸ்லிம் மன்னர்கள் உட்பட எந்த முஸ்லிமும் வற்புறுத்திய வரலாறும் வந்ததில்லை.
ஆட்டையோ மீனையோ உண்டால்தான் ஒரு முஸ்லிமுக்கு அடையாளம் என்றாவது எங்காவது மார்க்கத்தீர்ப்புகள் பதியப்படவுமில்லை.

மாடாக இருந்தாலும் அல்லாஹ் அல்லாதவர்களுக்காக அறுக்கப்பட்டிருப்பின், ஆடாக இருப்பினும் தாமாக இறந்தவை ஆகவே அனுமதி இல்லவே இல்லை.
இறைவன் பெயர் கூறிக்கூட இளவயது குட்டிகள்  பாலூட்டும் தாய்வகை அறுக்கப்படுவதில் உடன்பாடில்லை.

ஏனைய மிருகங்களின் பார்வைக்கு முன் அறுக்கும் முறை, அதற்கு நெருப்பால் சூடுபோட்டு அதன்தோலில் அடையாளமிடும் முறைமை  போன்றவற்றில்  நிபந்தனைகளும் கட்டுப்பாடுகளும்  ஒன்று இரண்டில்லை.

பல மில்லியன் மாடுகள் மாதத்திற்கு அறுக்கப்பட்ட போதிலும் இறைவனின் படைப்பில் நாய்  பன்றிகளைப்போல் ஆட்டினமோ,மாட்டினமோ குறைந்தபாடும் இல்லை.
நாய்க்கு தண்ணீர் கொடுத்த விபச்சாரிப்பெண் சுவர்க்கம் நுழைந்தாள் என்பதனையாவது நபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கற்றுத்தராமலாவது விட்டுவிடவில்லை.

 
ஹாஸிர் நஜீப் ஸலபி
     09.04.2023
share this... https://bit.ly/4c1tUwb

Search This Blog