தவ்ஹீத் ஜமாஅத் video's: நோன்பும் துறவறமும் ஒன்றா?

நோன்பும் துறவறமும் ஒன்றா?

 நோன்பும் துறவறமும் ஒன்றா?

துறவறம் இயற்கைக்கு மாறானது என்று முஸ்லிம்கள் கூறுகிறீர்கள். நோன்பும் இயற்கைக்கு மாறானது தானே? என்று முஸ்லிமல்லாத நண்பர் கேட்கிறார். இதற்கு எப்படி பதில் சொல்வது?

சம்சுல் ஆரிஃப்

பதில்:

இஸ்லாம் துறவறத்தை ஆதரிக்கவில்லை. ஏனென்றால் துறவறம் என்பது மனிதர்கள் யாரும் கடைப்பிடிக்க முடியாத பொய்யான கொள்கையாகும். துறவறத்தால் மனித சமுதாயத்துக்கு பாதிப்புகள் தான் ஏற்படும். நன்மைகள் ஏற்படுவதில்லை.

ஒரு மனிதன் வாழ்க்கைத் துணையில்லாமல் ஒழுக்கமாக வாழ முடியாது. திருமணம் செய்யாமல் வாழ்பவன் ஆண்மையற்றவனாக இருப்பான். அல்லது தவறான வழியில் தன் ஆசையை தீர்த்துக் கொள்ளக்கூடியவனாக இருப்பான்.

திருமணம் முடிக்காமல் ஆசையைக் கட்டுப்படுத்திக் கொள்வதாக யார் கூறினாலும் அது பொய்யே. ஏனென்றால் இல்லறம் என்பது  தவிர்க்கவே முடியாத மனித உடலுக்கு அவசியமான ஒன்றாகும். இந்தத் தேவை ஒரு மனிதனுக்கு சரியாகக் கிடைத்தால் தான் அவனால் மன நிம்மதியாக வாழ முடியும்.

இல்லையென்றால் தானும் கெட்டு பிறரையும் கெடுக்கும் நிலைக்கு தள்ளப்படுவான். இந்தப் பேருண்மையை செய்தித் தாள்களின் வாயிலாக தொடர்ச்சியாக நாம் அறிந்து வருகின்றோம்.

துறவறம் மேற்கொள்வதாகக் கூறிக் கொள்ளும் சாமியார்களும், பாதரிமார்களும் தான் அதிகமாக பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகின்றனர். சாதாரண மனிதர்களை விட இவர்கள் இவ்விஷயத்தில் அதிகமாக வரம்பு மீறி நடக்கின்றனர்.

தங்களால் கடைப்பிடிக்க இயலாத கொள்கையைக் கையில் எடுத்த காரணத்தால் தீமையின் உச்ச நிலைக்குச் சென்று விடுகின்றனர். மேலும் உலகத்தில் எல்லோரும் துறவறம் மேற்கொள்ள முடிவெடுத்தால் அதனால் உலகில் தீமைகள் தான் ஏற்படும்.

வாழ்க்கைத் துணை தேவைப்படுபவர்கள் வழிகெடுவதற்கும், மனித வர்க்கம் பெருகாமல் குறிப்பிட்ட காலத்தில் அழிந்து போவதற்குமே இது வழிவகுக்கும்.

ஆனால் நோன்பு என்பது துறவத்தைப் போன்று கடைப்பிடிக்க இயலாத மனித சக்திக்கு அப்பாற்பட்டதல்ல.

பகல் நேரத்தில் மட்டுமே உடலுறவு கொள்ளக் கூடாது; உண்ணக் கூடாது; பருகக் கூடாது என்பது இஸ்லாம் கூறும் நோன்பின் சட்டமாகும். இது இயற்கைக்கு மாற்றமானதல்ல.

நோன்பு வைத்திருக்கும் போதும், நோன்பு வைக்காத போதும் முஸ்லிம்கள் தேவையான உணவை உட்கொள்கின்றனர்.

நோன்பு இல்லாத போது காலை உணவு பகல் உணவு, இரவு உணவு என மூன்று வேளை முஸ்லிம்கள் சாப்பிடுகிறார்கள்.

நோன்பு காலத்தில் நோன்பு துறக்கும் போதும், இரவில் படுக்கைக்குச் செல்லும் போதும் வைகறைக்கு முன்னரும் ஆக மூன்று வேளை முஸ்லிம்கள் சாப்பிடுகின்றனர்.  தேவையான உணவை நோன்பு காலத்திலும் உண்ணத்தான் செய்கின்றனர். இன்னும் சொல்லப் போனால் நோன்பு காலத்தில் தான் முஸ்லிம்கள் அதிக சுவையான உணவுகளைச் சாப்பிடுகிறார்கள். ரமலான் மாதத்தில் தான் முஸ்லிம்களுக்கு உணவுச் செலவு மற்ற மாதங்களை விட அதிகமாகிறது.

வழக்கமாக மனிதர்கள் இரவில் எட்டு மணிக்கு சாப்பிட்டு விட்டு உறங்கி காலையில் எட்டு மணிக்கு சாப்பிடுகிறார்கள். அதாவது 12 மணி நேரம் எதையும் சாப்பிடாமல் இருப்பது தான் மனிதனது இயற்கை வழக்கமாக உள்ளது. நோன்பு காலத்திலும் சுமார் 12 மணி நேரம் தான் முஸ்லிம்கள் நாம் சாப்பிடாமல் உள்ளனர்.

வித்தியாசம என்னவென்றால் மற்ற நாட்களில் 12 மணி நேரம் உறக்கத்தில் செல்வதால் பசியை உணர முடிவதில்லை. நோன்பு நேரத்தில் பகலில் விழித்துக் கொண்டு பசியுடன் இருப்பதால் அதை உணர முடிகின்றது. அவ்வளவு தான் வித்தியாசம். இதில் மனக்கட்டுப்பாடு என்ற நன்மை கிடைக்கிறது. உடலுக்கு இதனால் எள்ளளவும் பாதிப்பு இல்லை.

நோன்பு நோற்பதால் அதிக நன்மை கிடைப்பதாக மருத்துவ உலகம் கண்டறிந்துள்ளது. அதுபற்றி அறிய திருக்குர்ஆன் தமிழாக்கத்தில் 475வது குறிப்பைக் காண்க!

475. நோன்பு நோற்பது நல்லது

நோன்பு நோற்பது இஸ்லாமியக் கடமைகளில் ஒன்று என்று அனைவரும் அறிந்து வைத்துள்ளோம். இவ்வசனத்தில் (2:184) நீங்கள் அறிந்தால் நோன்பு நோற்பது நல்லது என்று சொல்லப்பட்டுள்ளது.

நோன்பு நோற்பது மார்க்கக் கடமை மட்டுமல்ல. அது நல்லது என்று நீங்கள் அறிந்து கொள்ளலாம் என்று இவ்வசனத்தில் கூறப்படுவதை இன்றைய மருத்துவ உலகம் மெய்ப்படுத்துகின்றது.

பசி எடுக்கும் போது சாப்பிடுவது தான் ஆரோக்கியமானது. பட்டிணி கிடப்பது உடலைப் பலவீனப்படுத்தி விடும் என்று தான் அதிகமான மக்கள் கருதுகிறார்கள்.

பொதுவாக இது சரியானதாக இருந்தாலும் நோன்புக்கு இது பொருந்தாது என்று விஞ்ஞானிகள் தற்போது கண்டறிந்துள்ளனர். அதை விபரமாகப் பார்ப்போம்.

நாம் உணவு உட்கொண்டவுடன் தேவையான ஆற்றலை அந்த உணவில் இருந்து உடல் பெற்றுக் கொள்கிறது. அடுத்த வேளை உணவு உண்ணும் வரை ஆற்றல் தேவை உள்ளதால் உணவிலிருந்து தயாரித்துக் கொண்ட குளுகோஸை நமது உடல், கல்லீரலிலும் தசையிலும் சேமித்து வைத்துக் கொள்கிறது. அடுத்த வேளை உணவு உட்கொள்ளும் வரை கல்லீரலிலும், தசையிலும் சேமித்து வைக்கப்பட்ட குளுகோஸை ஆற்றலுக்காக உடல் பயன்படுத்திக் கொள்கிறது. ஒருவேளை உணவு உட்கொண்டால் எட்டு மணி நேரத்துக்கு அந்த ஊட்டச்சத்து போதுமானதாகும்.

சேமிக்கப்பட்ட ஊட்டச்சத்து எட்டு மணி நேரத்தில் தீர்ந்த பிறகும் உண்ணா நிலையை நாம் நீடித்தால் உடலில் உள்ள கொழுப்பு, எனெர்ஜி என்னும் ஆற்றலுக்காக எரிக்கப்படுகிறது. இது உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது.

இந்தக் கொழுப்பு முழுவதுமாகத் தீர்ந்து விட்ட பிறகும், முழு நாள் அளவுக்கு உண்ணாநிலை தொடர்ந்தால் உடலில் உள்ள புரதம் (protein) ஆற்றலுக்காகப் பயன்படுத்தப்படுகிறது. இது மிகவும் ஆபத்தானது. புரதம் பயன்படுத்தப்படுவதால், உடல் மெலிந்து மனிதன் தளர்வாகிறான். முஸ்லிம்களின் நோன்பு இவ்வாறு அமையவில்லை.

இரண்டாவதாகக் கூறப்பட்ட நிலையில் தான் நோன்பு அமைந்துள்ளது. அதாவது எட்டு மணிக்கு அதிகமாகவும், ஒரு முழு நாளுக்குக் குறைவாகவும் முஸ்லிம்களின் நோன்பு அமைந்துள்ளது.

குளுகோஸ் தீர்ந்து எனெர்ஜிக்காக கொழுப்பு பயன்படுவதால், உடல் எடை குறைகிறது. இதனால் இரத்தத்தில் கெட்ட கொழுப்பின் அளவும் குறைகின்றன. தசைகள் பாதுகாக்கப் படுகின்றன. இந்த எடைக் குறைப்பு, இரத்த அழுத்தம் மற்றும் இரத்த சர்க்கரை நோய்களைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது. உடலில் உள்ள கொழுப்பு எரிக்கப்படும் போது அதனுடன் சேர்ந்து நச்சுப் பொருள்களும் எரிக்கப்படுவதால், நச்சு நீக்கும் முறையும் நடக்கிறது என்று அமெரிக்காவின் ஆக்ஸ்போர்டு விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

நோன்பு ஆரம்பித்த சில நாட்களில் இரத்தத்தில் அதிக அளவு endorphin என்னும் வேதிப்பொருள் அதிகரிப்பதால், மனிதன் மிகவும் உற்சாகமாகவும், நல்ல மனநிலையிலும் இருக்க உதவுகிறது. இதனால் மூளையின் செயல்திறனும் அதிகரிக்கிறது.

அமெரிக்காவில் விஞ்ஞானிகளால் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் "முஸ்லிம்கள் கடைப்பிடிக்கும் நோன்பால் கிடைக்கும் மன கவனம், (brain-derived neurotrophic factor) மூளையில் இருந்து வரும் நரம்பு சார்ந்த ஒரு வேதிப்பொருளை அதிகரிக்கிறது. இதன் விளைவாக மூளை அதிக மூளை நரம்பு செல்களை உருவாக்கி அதன் மூலம் மூளையின் செயல் திறன் அதிகரிக்கிறது என்று கண்டறிந்துள்ளனர்.

(A study carried out by scientists in the USA found that the mental focus achieved during Ramadan increases the level of brain-derived neurotrophic factor, which causes the body to produce more brain cells, thus improving brain function.)

இதுபோலவே, முஸ்லிம்களின் நோன்பின் போது, உடலில் உள்ள அட்ரினல் சுரப்பியால் (adrenal gland) சுரக்கப்படும் கார்டிசோல் (cortisol) என்னும் ஹார்மோன் குறைவதால் மனஅழுத்தம் வெகுவாகக் குறைகிறது.

(Likewise, a distinct reduction in the amount of the hormone cortisol, produced by the adrenal gland means that stress levels are greatly reduced both during and after Ramadan )

ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த இருதயவியல் மருத்துவ வல்லுனர்கள் "நோன்பு பிடிப்பவர்கள் ஒரு நேர்மறையான விளைவை (positive effect) தங்கள் கொழுப்பு அளவில் கிடைப்பதை அனுபவிக்கிறார்கள். அதாவது, இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் அளவு குறைகிறது.

(A team of cardiologists in the UAE found that people observing Ramadan enjoy a positive effect on their lipid profile, which means there is a reduction of cholesterol in the blood)

கெட்ட கொழுப்பு குறைவது மட்டுமின்றி, ஆன்மிகச் சிந்தனையால், நல்ல கொலஸ்ட்ரால் அதிகரிக்கிறது. இதனால், இதயத்தின் இரத்த ஓட்டம் சீராகிறது. இதய நோய், மாரடைப்பு, பக்கவாதம் வரும் வாய்ப்பு வெகுவாகக் குறைகிறது. ரமளானுக்கு பின்னும், ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை தொடர்ந்தால், குறைந்த கொலஸ்ட்ரால் அளவை எளிதாகப் பராமரிக்கலாம் எனவும் கண்டறிந்துள்ளனர்.

National Institute on Ageing என்ற நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் வாரத்தில் ஒரு நாள் அல்லது இரு நாட்கள் உணவு உட்கொள்வதைத் தவிர்ப்பதன் மூலம் அதிக நாட்கள் உயிரோடு வாழலாம் என்றும், மூளையில் ஏற்படும் வயோதிக நோய்களான அல்ஜீமர் எனும் மறதிநோய், பார்கின்சன் நோய், மற்றும் மூளை தேய்மான நோய்களில் இருந்து பாதுகாப்பு பெறலாம் என்றும் கண்டறிந்துள்ளனர்.

கலோரிகளைக் குறைத்துக் கொள்வதின் மூலம், மூளையில் உள்ள Chemical messengers  எனும் இரசாயனத் தூதுகள் தூண்டப்படுகிறது என்றும் குறிப்பிடுகிறார்கள்.

The Daily Telegraph என்ற பத்திரிகை இவ்வாறு கூறுகிறது.

"உணவைக் குறைத்து கலோரிகளைக் கடுமையான வரையறைக்குள் வைப்பது வாழ்நாளை அதிகரிக்கும் என்பது எலி போன்ற ஆய்வகப் பிராணிகளில் நடத்திய சோதனை மூலம் பல ஆண்டுகளுக்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்டது. இருந்தாலும், இந்த விளைவு மனிதனிலும் இருக்க வாய்ப்பு உள்ளது என்பதை வெறும் ஊகம் மூலம் மட்டுமே இதுவரை நம்பி இருந்தனர். இந்தக் கோட்பாடு மனிதர்கள் விஷயத்தில் செய்முறை மூலமும், ஆய்வின் மூலமும் உறுதி செய்யப்படாமல் இருந்தது. ஆனால் இப்போது ஆராய்ச்சியாளர்கள் செய்முறை மூலம் உறுதிப்படுத்தி விட்டனர்.

neurosciences ஆய்வக நிறுவனத் தின் தலைவர் பேராசிரியர் மார்க் மாட்சொன் இவ்வாறு கூறுகிறார்:

"கலோரிகளைக் குறைப்பதன் மூலம் உங்கள் மூளைக்கு உங்களால் உதவ முடியும். மூளைகளின் பல நோய்களையும் தடுக்க முடியும். ஆனால் தொடர்ந்து பட்டினி கிடந்தால், இந்த நன்மைகள் உங்கள் மூளைக்குக் கிடைக்காது. இடைவெளி விட்ட விரதம், அதாவது, எல்லா உணவையும் அறவே தவிர்ப்பது, பிறகு தனக்கு வேண்டியதை, தேவை நிறைவேறும் வரை உண்பது என்ற கோட்பாடு மூலமே இந்த நன்மை கிடைக்கும்" என்று கூறுகிறார்.

இந்த ஆய்வு முஸ்லிம்கள் நோற்கும் நோன்புக்கு மட்டுமே பொருந்தும்.

மற்ற மதத்தவர்களின் நோன்பில் இந்த அம்சம் இல்லை. மற்றவர்களின் விரதம் நீண்ட நேரத்தைக் கொண்டதாக இருப்பதில்லை. திட உணவுகள் தான் தவிர்க்கப்படுகின்றன. திரவ உணவுகள் உண்ணப்படுகின்றன. இதன் மூலம் வழக்கமான கலோரிகள் கிடைத்து விடும்.

சில விரதங்களின் போது சமைக்கப்பட்டதைத் தவிர்த்தால் போதும். பழங்கள் போன்றவற்றைச் சாப்பிடலாம் என்று உள்ளது. இதனாலும் மேற்கண்ட ஆய்வின் பலனை அடைய முடியாது. சில விரதங்களில் அசைவம் மட்டும் சாப்பிடாமல் இருந்தால் போதும் என்று உள்ளது. இதனாலும் மேற்கண்ட ஆய்வின் நன்மையை அடைய முடியாது.

முஸ்லிம்களின் நோன்பில் அசைவமோ, சைவமோ, திடமோ, திரவமோ எதுவானாலும் சாப்பிடக் கூடாது. தண்ணீர் கூட அருந்தக் கூடாது. மேலும் நீண்ட நேரம் கொண்டதாக இது அமைந்துள்ளதால் மேற்கண்ட ஆய்வின் பலனை முழுமையாகப் பெற முடிகிறது.

நோன்பை மார்க்கக் கடமையாக்கி இருப்பதும், அது நல்லது என்று சொல்லி இருப்பதும், அதை நீங்கள் அறிந்து கொள்ளலாம் என்று கூறி இருப்பதும் திருக்குர்ஆன் இறைவேதம் என்பதற்கான சான்றாக அமைந் துள்ளது.

--P.JAINUL ABIDEEN

https://rb.gy/sh5trk

Search This Blog