ஈடேற்றம் தரும் லைலத்துல் கத்ர்
பராஅத் இரவு, மிஃராஜ் இரவு என்று இல்லாத, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சொல்லாத இரவுகளை உயிர்ப்பிப்பதிலும் ஊக்குவிப்பதிலும் உற்சாகம் காட்டி உணர்வூட்டும் உலமாக்கள், நபி (ஸல்) அவர்கள் வலியுறுத்திய, வற்புறுத்திய ரமளான் மாதத்தின் பிந்திய பத்து இரவுகளை, அதில் அடங்கியுள்ள லைலத்துல் கத்ரை அடைவதற்கு ஆர்வம் ஊட்டுவதில்லை; ஆசை காட்டுவதில்லை.
ரமளான் 27ஆம் இரவு மட்டும் அமர்க்களமான, ஆர்ப்பாட்டமான அமல்களைச் செய்து விட்டு, அதுவும் நபி (ஸல்) அவர்கள் கற்றும் காட்டியும் தராத வகையில் அமல்களைச் செய்து விட்டு ரமளானின் பிந்திய 10 இரவுகளை இருட்டாக்கி விடுகின்றனர்; இல்லாமல் ஆக்கி விடுகின்றனர்.
இதற்குக் காரணம் 27ல் லைலத்துல் கத்ர் இருப்பதாக அவர்கள் குருட்டுத்தனமாக நம்புவது தான். அதனால் இதைத் தான் லைலத்துல் கத்ர் என்று துணிந்து பிரச்சாரமும் செய்கின்றனர். உப்புச் சப்பில்லாத, உருப்படாத ஆதாரங்களையும் எடுத்து வைக்கின்றனர்.
லைலத்துல் கத்ர் என்ற வார்த்தையில் மொத்தம் 9 அரபி எழுத்துக்கள். இந்த வார்த்தை குர்ஆனில் மூன்று தடவை இடம்பெறுகின்றது. ஆக, ஒன்பதை மூன்றால் பெருக்கினால் 27 வருகின்றது. அதனால் லைலத்துல் கத்ர் 27ல் தான் உள்ளது என்ற கூறுகெட்ட வாதத்தைக் கூறுகின்றனர்.
இது ஓர் அபத்தமான வாதம் என்பதில் சந்தேகமில்லை. அல்லாஹ் என்ற அரபி வார்த்தையில் நான்கு எழுத்துக்கள் இருக்கின்றன என்பதற்காக நான்கு கடவுள்கள் என்று சொல்வது எந்த அளவுக்கு அபத்தமோ அந்த அளவுக்கு இது அபத்தமாகும். இந்த அபத்தங்கள் ஒருபோதும் ஆதாரமாகாது.
அடுத்து முஸ்லிமில் இடம்பெறும் ஒரு செய்தியை ஆதாரமாகக் காட்டுகின்றனர்.
நான் உபை பின் கஅப் (ரலி) அவர்களிடம், "தங்கள் சகோதரர் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் "வருடம் முழுவதும் (இரவில்) நின்று வழிபடுபவர் லைலத்துல் கத்ர் இரவை அடைந்துகொள்வார்' என்று கூறுகிறாரே?'' என்று கேட்டேன். அதற்கு உபை (ரலி) அவர்கள், "இப்னு மஸ்ஊதுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக! மக்கள் (மற்ற நாட்களில் வழிபாடுகளில் ஈடுபடாமல்) அசட்டு நம்பிக்கையோடு இருந்துவிடக் கூடாது என அவர்கள் கருதினார்கள் (போலும்)! லைலத்துல் கத்ர் இரவு ரமளான் மாதத்தின் கடைசிப் பத்தில் இருபத்தேழாவது இரவுதான் என்பதை இப்னு மஸ்ஊத் அறிந்தே உள்ளார்கள்'' என்று பதிலளித்தார்கள். பிறகு "அல்லாஹ் நாடினால்' என்று கூறாமல் "அது (ரமளானின்) இருபத்தேழாவது இரவே ஆகும்' என்று சத்தியமிட்டுச் சொன்னார்கள். நான், "அபுல் முன்திரே! எதை வைத்து அவ்வாறு கூறுகிறீர்கள்?'' என்று கேட்டேன். அதற்கு உபை (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் "அன்றைய நாளில் (காலையில்) சூரியன் சுடரின்றி உதிக்கும்' என்று கூறினார்கள். அந்த அடையாளத்தின் மூலமே (அறிந்துகொண்டேன்)'' என்றார்கள். அறிவிப்பவர்: ஸிர்ரு பின் ஹுபைஷ் நூல்: முஸ்லிம் 1272, 1999
"அடையாளத்தை வைத்து நான் அறிந்து கொள்வேன்'' என்று கூறுவதன் மூலம் நபித்தோழர் தனது சொந்தக் கருத்தைத் தான் இங்கு கூறுகின்றார் என்பதை சாதாரணமாக விளங்கிக் கொள்ளலாம்.
உபை பின் கஅப் (ரலி) அவர்கள் இப்படிச் சொன்னால், அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் 21ஆம் இரவில் தான் லைலத்துல் கத்ர் என்று சொல்கின்றார்.
நபி (ஸல்) அவர்கள் ரமளானில் நடுப்பத்து நாட்களில் இஃதிகாஃப் இருப்பார்கள். ஓர் ஆண்டு அவர்கள் இஃதிகாஃப் இருந்து இருபத்தொன்றாவது இரவை அடைந்ததும் -அந்த இரவின் காலையின் தான் இஃதிகாபிலிருந்து வெளியேறுவார்கள் - "யார் என்னுடன் இஃதிகாஃப் இருந்தார்களோ அவர்கள் கடைசிப் பத்து நாட்களிலும் இஃதிகாஃப் இருக்கட்டும்! இந்த (லைலத்துல் கத்ர்) இரவு எனக்கு (கனவில்) காட்டப்பட்டது; பின்னர் அது என மறக்கடிக்கப்பட்டு விட்டது! (அந்தக் கனவில்) காலை நேரத்தில் ஈரமான மண்ணில் நான் சஜ்தா செய்யக் கண்டேன். எனவே, அதைக் கடைசிப் பத்து நாட்களில் தேடுங்கள். (அந்த நாட்களின்) ஒவ்வோர் ஒற்றைப்படை இரவிலும் அதைத் தேடுங்கள்!'' எனக் கூறினார்கள். அன்றிரவு மழை பொழிந்தது. அன்றைய பள்ளிவாசல் (பேரீச்ச ஓலையால்) கூரை வேயப்பட்டதாக இருந்தது. எனவே பள்ளிவாசல் ஒழுகியது. இருபத்தொன்றாம் நாள் சுப்ஹுத் தொழுகையில் நபி (ஸல்) அவர்களின் நெற்றியில் ஈரமான களிமண் படிந்திருந்ததை எனது இரு கண்களும் பார்த்தன. அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி) நூல்: புகாரி 2027
இந்த நபித்தோழரும் 21ஆம் இரவில் லைலத்துல் கத்ர் என்று அதன் அடையாளத்தை வைத்துத் தான் கூறுகின்றார்.
27ல் தான் லைலத்துல் கத்ர் என்று கூறும் ஆலிம்கள் இந்தச் செய்தியையும் மக்களிடம் கூற வேண்டுமல்லவா? ஆனால் இதைக் கண்டு கொள்வதில்லை.
உண்மையில் லைலத்துல் கத்ர் என்பது 27ல் மட்டுமல்ல. பிந்திய 10 இரவுகளில் உள்ள ஒற்றைப்படை இரவுகளில் ஏதேனும் ஒரு இரவில் தான் இருக்கின்றது. நபி (ஸல்) அவர்களின் பல்வேறு ஹதீஸ்கள் இதைத் தெளிவுபடுத்துகின்றன.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "லைலத்துல் கத்ர்' (கண்ணியமிக்க இரவு) பற்றி ("அது ரமளான் மாதத்தில் எந்த இரவு' என்று) அறிவிப்பதற்காக (தமது வீட்டிலிருந்து) வெளியே வந்தார்கள். அப்போது இரு முஸ்லிம்கள் தமக்கிடையே சச்சரவு செய்து கொண்டிருந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "லைலத்துல் கத்ர் இரவு பற்றி உங்களுக்கு அறிவிப்பதற்காக நான் புறப்பட்டுவந்தேன். அப்போது இன்னாரும் இன்னாரும் சச்சரவு செய்துகொண்டிருந்தனர். எனவே, அது (பற்றிய விளக்கம் என் நினைவிலிருந்து) நீக்கப்பட்டுவிட்டது. அதுவும் உங்களுக்கு ஒரு நன்மையாக இருக்கலாம். (ரமளான் மாதத்தின் இருபத்து) ஏழு, (இருபத்து) ஒன்பது, (இருபத்து) ஐந்து ஆகிய (ஒற்றை எண்ணிக்கையிலான) இரவுகளில் அதனைத் தேடுங்கள்'' என்றார்கள்.அறிவிப்பவர்: உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) நூல்: புகாரி 49
லைலத்துல் கத்ர் பற்றி எங்களுக்கு அறிவிப்பதற்காக நபி (ஸல்) அவர்கள் புறப்பட்டார்கள். அப்போது இரண்டு முஸ்லிம்கள் சச்சரவு செய்துகொண்டிருந்தனர். நபி (ஸல்) அவர்கள், "லைலத்துல் கத்ரை உங்களுக்கு அறிவிப்பதற்காக நான் புறப்பட்டேன்; அப்போது இன்னாரும் இன்னாரும் சச்சரவு செய்து கொண்டிருந்தனர்: எனவே, அது (பற்றிய விளக்கம்) நீக்கப்பட்டுவிட்டது! அது உங்களுக்கு நன்மையாக இருக்கலாம்!. எனவே, அதை இருபத்தொன்பதாம் இரவிலும், இருபத்தேழாம் இரவிலும், இருபத்தைந்தாம் இரவிலும் தேடுங்கள்!'' எனக் கூறினார்கள். அறிவிப்பவர்: உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) நூல்: புகாரி 2023
நபித் தோழர்கள் சிலர் கண்ட கனவில், (ரமளானின்) கடைசி ஏழு (இரவு)களில் ஒன்றில் "லைலத்துல் கத்ர்' எனும் கண்ணியமிக்க இரவு இருப்பதாகக் காட்டப்பட்டது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "கடைசி ஏழு(இரவு)களில் ஒன்று என்பதில் உங்கள் கனவுகள் ஒத்திருப்பதைக் காண்கிறேன். ஆகவே, அதனைத் தேடுபவர் (ரமளானின்) கடைசி ஏழு(இரவு)களில் தேடிக்கொள்ளட்டும்!'' என்று கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: புகாரி 2015
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீங்கள் (ரமளானின்) இறுதிப் பத்து இரவுகளில், அல்லது இறுதி ஒன்பது இரவுகளில் "லைலத்துல் கத்ர்' இரவைத் தேடிக்கொள்ளுங்கள்'' என்று கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: முஸ்லிம் 1988
இந்த ஹதீஸ்களெல்லாம் ரமளானின் கடைசிப் பத்து இரவுகளின் ஒற்றைப்படை இரவுகளில் லைலத்துல் கத்ர் இருப்பதை ஆணித்தரமாக, அழுத்தம் திருத்தமாகத் தெரிவிக்கின்றன.
ஆனால் இந்த ஆலிம்கள் தானும் கெட்டு, மக்களையும் வழிகெடுத்து, 27ஆம் இரவில் மட்டும் நிற்க வைத்து அன்றைய இரவுகளில் குர்ஆன் முழுவதையும் ஓதி முடித்து, இது மட்டும் தான் லைலத்துல் கத்ர்; ஏனைய இரவுகளில் இல்லை என்றாக்கி விடுகின்றனர்.
கியாமத் நாளில் முழுமையாகத் தமது சுமைகளையும், அறிவின்றி யாரை இவர்கள் வழி கெடுத்தார்களோ அவர்களின் சுமைகளையும் சுமப்பதற்காக (இவ்வாறு கூறுகின்றனர்) கவனத்தில் கொள்க! அவர்கள் சுமப்பது மிகவும் கெட்டது. அல்குர்ஆன் 16:25
இதன் மூலம் ஏமாந்த மக்கள் அனைவரின் பாவ மூட்டைகளையும் இவர்கள் சுமக்கத் துணிந்து விட்டனர். அல்லாஹ் காப்பானாக!
எனவே, ஆயிரம் மாதங்களை விடச் சிறந்த லைலத்துல் கத்ரை 27ஆம் இரவில் மட்டும் தேடாமல் பிந்திய பத்து இரவுகளிலும் தேடுவோம்; லைலத்துல் கத்ரை அடைவோம்.
இதன் மூலம் நமக்கு இரண்டு நன்மைகள் கிடைக்கின்றனர்.
1. லைலத்துல் கத்ர் அன்று மட்டும் அல்லாமல் மீதி 9 அல்லது 8 நாட்கள் செய்த வணக்கத்தின் நன்மைகள்.
2. லைலத்துல் கதர் இரவின் நன்மைகளும் நிச்சயமாகக் கிடைத்து விடுகின்றது.
பொதுவாக வியாபாரிகளுக்கு இந்த இரவுகளில் தான் கொள்ளை வியாபாரம் நடக்கும். வியாபாரமும் செய்து கொள்ள வேண்டியது தான். ஆனால் லைலத்துல் கத்ரை இழந்து விடக் கூடாது.
கடல் ஓரத்தில் இருந்த ஊரைப் பற்றி அவர்களிடம் கேட்பீராக! அவர்கள் சனிக்கிழமையில் வரம்பு மீறியதை நினைவூட்டுவீராக! சனிக்கிழமையன்று மீன்கள் நீரின் மேல் மட்டத்தில் அவர்கள் முன்னே வந்தன. சனிக்கிழமை அல்லாத நாட்களில் அவர்களிடம் வருவதில்லை. அவர்கள் குற்றம் புரிந்து வந்ததால் இவ்வாறு அவர்களைச் சோதித்தோம். அல்குர்ஆன் 7:163
இஸ்ரவேலர்களின் புனித நாளான சனிக்கிழமை அன்று சோதித்தது போன்று இறைவன் நம்மைச் சோதிப்பான்.
நம்பிக்கை கொண்டோரே! "தனிமையில் (தன்னை) அஞ்சுபவர் யார்?'' என்பதை அல்லாஹ் அடையாளம் காட்ட (நீங்கள் இஹ்ராமுடன் இருக்கும் போது) உங்கள் கைகளுக்கும் உங்கள் ஈட்டிகளுக்கும் எட்டும் வகையில் சில வேட்டைப் பிராணிகளைக் காட்டி உங்களை அல்லாஹ் சோதித்துப் பார்ப்பான். இதன் பின்னர் வரம்பு மீறுபவருக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு. அல்குர்ஆன் 5:94
ஹஜ் வணக்கத்தின் போது வேட்டையாடத் தடை செய்யப்பட்ட நேரத்தில் வேட்டைப் பிராணிகள் நமக்கு முன்னால் வந்து வந்து போகுமாறு சோதிக்கின்றான்.
இதுபோன்றே லைலத்துல் கத்ரைத் தேடும் பிந்திய பத்து இரவுகளிலும் வியாபாரம் செழிப்பாக நடக்கும். இந்தச் சோதனைகளுக்கு நாம் பலியாகி விடாமல் லைலத்துல் கத்ரை அடைவோம். அதற்கான முன்னேற்பாடுகளைச் செய்வோம்.
ஆயிரம் மாதங்களை விடவும் சிறந்த இரவை அடைவதற்காக நபி (ஸல்) அவர்கள் இந்தப் பத்து நாட்களிலும் இஃதிகாஃப் எனும் வணக்கத்தைக் கடைப்பிடித்ததிலிருந்து இது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்று தெரிந்து கொள்ளலாம்.
வரும் ஆண்டு இருப்போமா என்று சொல்ல முடியாது. எனவே இந்த ஆண்டில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழிமுறையில் லைலத்துல் கத்ரை அடைவோம், இன்ஷா அல்லாஹ்.
---ஏகத்துவம் ஆகஸ்ட் 2012
யாருடைய ஒற்றைப்படை நாளில் லைலதுல் கத்ர்
எத்தனை லைலத்துல் கத்ர்?
லைலத்துல் கத்ர் என்ற பாக்கியமிக்க இரவு ஒற்றைப்படை இரவுகளில் தான் அமையும் என்பது நபிமொழி. ஆளுக்கு ஒரு தலைப்பிறை இருந்தால் பாதிப் பேருக்கு லைலத்துல் கத்ர் கிடைக்காதே? எனவே உலகம் முழுவதும் ஒரே நாளில் தான் நோன்பைத் துவக்க வேண்டும். இன்றிரவு இங்கே பிறை பார்க்கிறோம். இந்த நேரத்தில் அமெரிக்காவில் பகலாக இருக்கும். பகல் எப்படி லைலத்துல் கத்ராக, அதாவது கத்ருடைய இரவாக ஆகும்?
அடுத்து வரும் இரவில் தான் பிறை என்று கூறினால் இங்கே லைலத்துல் கத்ர் ஏற்பட்டு 24 மணி நேரம் கழித்துத் தானே அமெரிக்காவில் ஏற்படுகிறது.?
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் மதீனாவில் ஒரு நாளும் மற்ற ஊர்களில் ஒரு நாள் முன்னதாகவும் பிறை காணப்பட்டுள்ளது. வாகனக் கூட்டம் பற்றிய ஹதீஸ் இதற்குப் போதிய ஆதாரமாகும்.
முதலில் பிறை பார்த்தவர்கள் கணக்குப் படி ஒற்றைப்படை நாட்களில் லைலத்துல் கத்ர் வந்து விடுகிறது. இவர்களுக்கு ஒற்றைப்படையாக அமையும் நாட்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இரட்டைப்படை நாட்களாக அமையுமே? அப்படியானால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு லைலத்துல் கத்ர் பாக்கியம் கிட்டாதா?
அல்லாஹ் ஒரு பாக்கியத்தை வழங்கினால் அனைவரும் அடைந்து கொள்ள ஏற்ற வகையில் தான் அருளுவான். முஸ்லிம்கள் பரந்து விரிந்த அந்தக் காலத்தில் ஒரு பகுதியில் காணப்பட்ட பிறை மறு பகுதிக்குத் தெரியாது. இருவேறு நாட்களில் தான் நோன்பு ஆரம்பமாகியிருக்கும். அப்படியானால் யாருடைய கணக்கு ஒற்றைப்படை? ஒரு சாரார் அதை அடைந்து மறு சாரார் அடைய மாட்டார்கள் என்பது தான் பொருளா?
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் அவர்களும் மக்களும் எப்படி லைலதுல் கத்ரை அடைந்தார்களோ அவ்வாறே நாமும் அடைய முடியும். குர்ஆன் இறங்கிய அந்த இரவு தான் லைலதுல் கத்ர். அந்த இரவே நிச்சயமாக திரும்பாது. அந்த இரவே திரும்பினால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இப்போது வாழ்ந்து கொண்டிருக்க வேண்டும். எனவே சென்று போன அந்த இரவே திரும்பி வரும் என்று கருதக் கூடாது. அந்த இரவை மதிக்கும் வகையில் நாம் வணக்க வழிபாடுகளில் ஈடுபடும் போது அல்லாஹ் 1000 மாதங்களுக்கு நிகரான நன்மையைத் தருகிறான் என்பது தான் இதன் கருத்தாகும்.
அந்த நாள் திரும்பாது. அந்த இரவை மதிக்கும் வகையில் நாம் வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவதே இதன் நோக்கம் என்று ஆகும் போது நாம் எதை ஒற்றைப்படை என்று கருதுகிறோமோ அந்த இரவில் அந்த நன்மைகளை இறைவன் வாரி வழங்கி விடுவான். இப்படிக் கருதும் போது இறைவனது அருளில் எந்தப் பாரபட்சமும் இல்லை.
யார் அம்மாதத்தை அடைகிறாரோ என்ற வசனம் மாதத்தை அடைவதில் முன்பின்னாக இருக்கும் என்று ஒத்துக் கொள்கிறது. ஒவ்வொரு பகுதிக்கும் தனித்தனி முதல் பிறை என்றால் தனித்தனி ஒற்றைப்படையும் வரத் தான் செய்யும். இதை உணர்ந்தால் குழப்பம் இருக்காது.
எந்தக் கணக்கின் அடிப்படையிலும் உலகம் முழுவதும் ஒரே நாளில் தலைப்பிறை என்பது சாத்தியமில்லை என்பதை பலமுறை விளக்கியுள்ளோம்.
இவர்கள் முழுக்க முழுக்க ஆராய்ந்து எந்தச் சிக்கலும் வராது என்று நினைத்துக் கூறிய ஒரு தீர்வு தான் சுபுஹக்கு முன் தகவல் வந்தால் ஏற்க வேண்டும் என்ற கண்டுபிடிப்பு. இந்தக் கண்டுபிடிப்பு அடிப்படையிலும் கன்னியாகுமரியில் பிறை 1 ஆக இருக்கும் அதே நாளில் கோட்டாறில் பிறை 2 ஆக இருக்கும்.
இந்த இரு ஊர்களில் ஒரே நேரத்தில் ஒரே நாளில் வெவ்வேறு பிறையாக உள்ளது. இப்படியே ரமளானின் பிந்திய பத்தை இந்த இரு ஊர்களும் அடையும் போது கன்னியாகுமரியில் பிறை 20 ஆகவும். கோட்டாறில் பிறை 21 ஆகவும் இருக்கும். ஒற்றைப்படை இரவில் தான் லைலத்துல் கத்ரு என்று ஹதீஸ்களில் உள்ளது. யாருடைய ஒற்றைப்படை இரவில்? கன்னியாகுமரியின் ஒற்றைப்படை இரவிலா? அல்லது கோட்டாறின் ஒற்றைப்படை இரவிலா?
பிறை பார்த்து நோன்பு வைத்தாலும் எல்லோருக்கும் லைலதுல் கத்ர் இரவு ஒரே இரவில் வருவதில்லையே
https://www.youtube.com/watch?v=LkVf2cAVBbg
லைலத்துல் கத்ரு - இஃதிகாஃப்
https://makarimtec.blogspot.com/2023/03/blog-post.html
பிறை பார்த்தல் வரட்டு வாதங்கள்
https://makarimtec.blogspot.com/2023/03/varattu-vathankal.html
https://rb.gy/ejsndx
