422. சந்திரன் பிளந்தது
இவ்வசனத்தில் (54:1) சந்திரன் பிளந்து விட்டது என்று கூறப்பட்டுள்ளது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம்மை இறைவனின் தூதர் என்று கூறியபோது அதற்குரிய அத்தாட்சியை அன்றைய மக்கள் கேட்டார்கள்.
அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வானத்தில் சந்திரனை இரண்டாகப் பிளந்து காட்டினார்கள். அனைவரும் பார்த்துக் கொள்ளுங்கள் என்றும் மக்களிடம் கூறினார்கள். (பார்க்க: புகாரீ 3636, 4864, 4865)
இந்நிகழ்ச்சியைத் தான் இவ்வசனம் சுட்டிக்காட்டுகிறது. பூமியின் துணைக் கோளாக அமைந்துள்ள சந்திரனைப் பற்றி அறிந்து வைத்திருப்பவர்கள், சந்திரன் இரண்டாகப் பிளப்பதும், பிறகு ஒன்று சேர்வதும் சாத்தியமற்றது என்று கருதலாம்.
ஆனால் திருக்குர்ஆனில் இறைவன் தனது தனிப்பெரும் ஆற்றலால் நிகழ்த்திய
அற்புதங்களைக் கூறும் போது, அதற்கான சான்றுகளையும் உலகில் விட்டு வைக்கிறான்.
நூஹ் நபியின் காலத்தில் ஏற்பட்ட வெள்ளப் பிரளயத்தைச் சொல்லும் போது அவர் பயணித்த கப்பலைச் சான்றாக விட்டு வைத்திருக்கிறோம் என்று இறைவன் குறிப்பிடுகிறான். அந்தக் கப்பல் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. (பார்க்க: குறிப்பு 222)
அது போல் சந்திரன் பிளந்ததைக் கூறி விட்டு, இது ஓர் அற்புதம் என்பதையும் உறுதி செய்து விட்டு, அனைத்தும் பதிவாகியிருக்கின்றது என்று இவ்வசனத்தில் கூறுகிறான்.
சந்திரன் பிளந்த நிகழ்வு தந்திரமோ, அல்லது கண்கட்டு வித்தையோ அல்ல. அது பதிவாகியிருக்கின்றது என்று கூறுகிறான்.
நிலவில் முதலில் காலடியெடுத்து வைத்த நீல் ஆம்ஸ்ட்ராங், அங்கு இறங்கிய போது அவர் பயணித்த விண்கலம் நிலவைப் பல கோணங்களில் ஏராளமான புகைப்படங்களை எடுத்து பூமிக்கு அனுப்பியது.
அவற்றுள் ஒரு கோணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் ஓர் ஆப்பிளை இரண்டாக அறுத்து மீண்டும் இணைத்தது போன்ற கோடு இருந்தது.
இதற்கான காரணத்தை விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதற்கு அரபியன் பிளவு என்று பெயரிட்டனர். காரணம், சந்திரன் பிளந்தது என்ற நம்பிக்கை அரபியரிடம் (முஸ்லிம்களிடம்) இருந்தது தான்.
முஸ்லிம்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்தும் விதமாக இந்தப் பிளவு அமைந்துள்ளது என்பதே இதன் பொருளாகும்.
இறைவன் கூறுவது போன்று, சந்திரன் பிளந்ததற்கான சான்றும் சந்திரனிலேயே பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை இந்தக் கண்டுபிடிப்பிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
இந்தத் தகவல் அமெரிக்க அரசால் தமிழ் உட்பட உலகின் பல மொழிகளில் வெளியிடப்பட்ட அமெரிக்கன் ரிப்போர்ட்டர் என்ற மாத இதழில் புகைப்பட சான்றுகளுடன் நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் இறங்கிய போது வெளிவந்தது.
சந்திரன் பிளந்தது பற்றியும், அதற்கான சான்று சந்திரனில் பதிவாகியுள்ளது பற்றியும் திருக்குர்ஆன் அறிவித்திருப்பது இது இறைவேதம் என்பதை உறுதிப்படுத்துகின்றது.
சந்திரனில் பிளவு ஏதும் இல்லை என்று தற்போது நாசா விஞ்ஞானிகள் கூறுவதாகச் சிலர் இதை மறுக்கின்றனர். இப்போது நிலவில் பிளவு தென்படவில்லை என்பதால் அப்பல்லோ விண்கலம் மூலம் ஆம்ஸ்ட்ராங் இறங்கிய போது எடுத்த புகைப்படங்களும், அதில் காணப்பட்ட பிளவும், அரபியன் பிளவு என்று அதற்கு பெயரிட்டதும், அமெரிக்க அரசால் வெளியிடப்பட்ட அமெரிக்கன் ரிப்போர்ட் பத்திரிகையில் இந்த விபரம் வெளியிடப்பட்டதும் பொய்யாகாது. அமெரிக்கன் ரிப்போர்ட்டர் பத்திரிகையில் அப்படி ஏதும் வெளியிடப்படவில்லை என்று நாசா மறுக்கவில்லை.
149. திருப்பித் தரும் வானம்
இவ்வசனத்தில் (86:11) வானத்திற்கு திருப்பித் தரும் வானம் என்ற ஒரு அற்புதமான அடைமொழியை அல்லாஹ் பயன்படுத்துகிறான்.
வானம் எதைத் திருப்பித் தரும் என்றால் ஏராளமான விஷயங்களை நமக்கு திருப்பித் தந்து கொண்டே இருக்கிறது.
கடலிலிருந்தும், நீர் நிலைகளிலிருந்தும் உறிஞ்சுகின்ற தண்ணீரை மேலே எடுத்துச் சென்று மழையாக நமக்கு வானம் திருப்பித் தருகிறது. இங்கிருந்து அனுப்புகின்ற ஒலி அலைகளை வானம் நமக்கே திருப்பி அனுப்புகிறது.
வானம் திருப்பித் தருகின்ற தன்மை பெற்றிருக்கின்ற காரணத்தினால் தான் இன்றைக்கு நாம் ரேடியோ போன்ற வசதிகளை அனுபவிக்க முடிகிறது.
மேல் நோக்கி அனுப்பப்படும் செய்திகள் ஒரு இடத்தில் தடுக்கப்பட்டு திரும்பவும் கீழ் நோக்கி நமக்கே அனுப்பப்படுகின்றன.
இன்றைக்கு செயற்கைக் கோள் மூலம் ஒளிபரப்பப்படும் காட்சிகள் நமக்கு இங்கே வந்து சேருகின்றன.
மேலும் பூமிக்குத் தேவையான வெப்பத்தை பூமி சூரியனிலிருந்து எடுத்துக் கொள்கிறது. வருகின்ற வெப்பத்தையெல்லாம் பூமி தன்னகத்தே எடுத்துக் கொண்டால் பூமியில் தாங்க முடியாத வெப்பம் ஏற்பட்டுவிடும். எனவே பூமி தனக்குத் தேவையான வெப்பத்தை எடுத்துக் கொண்டு மீதியை வானத்துக்கு அனுப்பி விடுகிறது. இவ்வாறு வானுக்கு அனுப்பப்பட்ட வெப்பத்தை வானம் சிதறடித்து விடாமல் தன்னகத்தே பாதுகாத்து வைத்துக் கொள்கிறது. பூமியின் தேவையை விட வெப்பம் குறையும் போது, பூமியிடமிருந்து பெற்று சேமித்து வைத்திருந்த வெப்பத்தை வானம், பூமிக்கே திருப்பித் தருகிறது. இதனால் பூமியில் மனிதன் வாழத்தக்க அளவு வெப்பம் நிரந்தரமாக பராமரிக்கப்படுகிறது. வெப்பத்தைத் திருப்பித் தருவதாலும் திருப்பித் தரும் வானம் என்பது பொருத்தமாக அமைந்து விடுகிறது.
மேலே இருந்து திருப்பித் தருகின்ற அம்சத்தோடு வானத்தை இறைவன் படைத்திருக்கிறான். இன்னும் நாம் சிந்திக்கும்போது ஏராளமான விஷயங்களை வானம் நமக்குத் திருப்பித் தருவதை அறியலாம்.
திருப்பித் தரும் வானம் என்று யாராவது வானத்திற்கு அடைமொழி சொல்வார்களா? அதுவும் 14 நூற்றாண்டுகளுக்கு முன்னால் சொல்வார்களா?
இந்த மாபெரும் அறிவியல் உண்மையை எழுதப் படிக்கத் தெரியாத முஹம்மது சொல்கிறார் என்றால், நிச்சயமாக இது அவருடைய வார்த்தையாக இருக்க முடியாது; படைத்த இறைவனின் வார்த்தையாகத் தான் இருக்க முடியும்.
-- P.JAINUL ABIDEEN
இதுபற்றிய youtube விடியோ
https://youtu.be/HRserDF724s
