தவ்ஹீத் ஜமாஅத் video's: சப்தமிட்டு ஆமீன் சொல்வது சஹாபியின் விளக்கத்தின் அடிப்படையிலா?

சப்தமிட்டு ஆமீன் சொல்வது சஹாபியின் விளக்கத்தின் அடிப்படையிலா?

சப்தமிட்டு ஆமீன் சொல்வது சஹாபியின் விளக்கத்தின் அடிப்படையிலா?

சஹாபாக்களின் விளக்கத்தை பின்பற்ற வேண்டும்..
என்பது சலஃபுகள் திரும்ப திரும்ப பதிய வைத்து வரும் வரட்டுத் தத்துவமாக உள்ளது.
அதாவது, குர் ஆனுக்கும் ஹதீஸுக்கும் சஹாபாக்கள் தரும் விளக்கத்தை பின்பற்ற வேண்டும் என்பது அதன் கருத்து.
அல்ஹம்துலில்லாஹ் என்பது குர் ஆன் வசனம்.
அல்லாஹ்வுக்கே எல்லா புகழும் என்பது இதன் அர்த்தம்.
சஹாபாக்களும் இப்படியே கூட புரிந்திருக்கலாம்.
ஆனாலும் சஹாபாக்கள் இப்படி புரிந்ததாலா நாமும் இப்படி புரிகிறோம்?? இல்லை.
சஹாபாக்கள் அப்படி புரிந்தாலும் புரியாவிட்டாலும்.. அப்படி விளக்கம் அளித்ததாக சான்று இருந்தாலும் இல்லாவிட்டாலும்.. அவர்களில் எவராது இதை சொல்லியிருந்தாலும் சொல்லியிருக்காவிட்டாலும்
அல்ஹம்துலில்லாஹ் என்பதற்கு அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் என்பது தான் பொருள் !
அது மாறப்போவதில்லை.


நாம் குர் ஆனிலிருந்து தான் இந்த புரிதலை எடுத்தோமே அல்லாமல் சஹாபாக்கள் எப்படி இந்த அர்த்தத்தை புரிந்தார்கள் என பார்க்கவில்லை, அது நமக்கு அவசியமும் இல்லை.
சரி. இதை நாம் சொல்கிற போது, இந்த சலஃபுகள் தரப்பில் மற்றொரு பதில் வரும்.
நாங்கள் இது போன்ற பொதுவான விஷயங்களில் சஹாபாக்களின் கூற்றை தேட சொல்லவில்லை, எதில் நாமெல்லாம் கருத்து வேறுபாடு கொள்கிறோமோ அதில் சஹாபாக்கள் என்ன சொல்லியிருக்கிறார்கள் என பார்க்க வேண்டும் என்று தான் சொல்கிறோம் என்பார்கள்.
இங்கு தான் நாம் எழுப்புகிற அடுத்த கேள்வி முக்கியத்துவம் பெறுகிறது.
•• நமக்குள் கருத்து வேறுபாடுகள் இருக்கும் மசாயில் பிரச்சனைகளின் பட்டியலை தாருங்கள்.
•• அதில் குர் ஆனிலும் ஹதீஸிலும் விளக்கம் இல்லை என்பதை நிறுவுங்கள்.
•• அதன் பின்.. இதோ இந்த சர்ச்சைக்கு இந்த சஹாபி இப்படி விளக்கம் தந்திருக்கிறார் பாருங்கள்..என்று அதை காட்டுங்கள்.
அதை காட்டினால் எளிதில் நாம் அனைவருமே சஹாபாக்களுடைய விளக்கத்தின் முக்கியத்துவத்தை ஏற்றுக் கொள்வார்கள்.
இதைக் கேட்டால் உலகின் எந்த சலஃபும் தர மறுப்பது தான் இங்கிருக்கும் வேடிக்கை.
நாம் இதை கேட்பதற்கான நோக்கமே, அப்படியொரு பட்டியலை இவர்களால் தர இயலாது என்பதை நிரூபிக்க தான்.
ஒரு மசாயில் விஷயத்தில் குர் ஆனிலோ ஹதீஸிலோ  விளக்கம் இல்லாமல் இருக்காது.
அப்படி விளக்கம் இல்லையென்றால் அந்த மசாயில் என்பது இஸ்லாமிய வட்டத்திற்குள் வருகின்ற மசாயிலே இல்லை.
இது ஒரு முஸ்லிமுக்கு இருக்க வேண்டிய அடிப்படை புரிதல்..!
இந்த மார்க்கத்தை நமக்கு எத்தி வைக்க தான் குர் ஆனை அல்லாஹ் அருளினான்.
அந்த குர் ஆனை விளக்க தான் நபியை அனுப்பினான்.
அனைத்திற்கும் பிறகும் கூட அவற்றில் சொல்லப்படாத விளக்கம்...
அவற்றில் இல்லாத விளக்கம் என்கிற ஒன்று இருக்காது...!
அப்படி சொன்னால் அந்த நிமிடமே அவர் இஸ்லாத்தை விட்டு வெளியேறி விடுகிறார்.
اَ لْيَوْمَ اَكْمَلْتُ لَـكُمْ دِيْنَكُمْ
(அல்குர்ஆன் : 5:3)
இந்த மார்க்கம் இன்றோடு முழுமையாகி விட்டது ! என்பது அல்லாஹ்வின் உத்திரவாதம்.
முழுமையான மார்க்கம் என்றால் எந்த சந்தேகமும் இதில் இல்லை என்று பொருள்.
நமக்கு புரியாத விஷயங்களில் இந்த மார்க்கத்திலெயே தீர்வும் தெளிவும் உள்ளது என்று பொருள்.
அனைத்து சட்டத் திட்டங்களும் நமக்கு தெள்ளத்தெளிவாக விளக்கப்பட்டு விட்டது என்று பொருள்.
இதை தாண்டி, உலகில் எவருக்கும் புரியாத ஒரு விஷயத்தை சஹாபி வந்து தான் விளக்குவார் என்றால்.. அந்த சஹாபியை அல்லாஹ்வின் தூதராக கருதுகிறோம் என்பதை தவிர வேறு என்ன பொருள் இருக்க முடியும்?
கேட்டால்.. தொழுகையில் ஆமீன் என சத்தமிட்டு  சொல்வது சஹாபியின் விளக்கத்தின் அடிப்படையில் தானே? என்று இவர்கள் எதிர் கேள்வி எழுப்புகின்றனர்.
இமாம் “கைரில் மக்லூபி அலைஹிம் வலழ்ழாள்ளீன்‘ எனக் கூறும் போது நீங்கள் ஆமீன் கூறுங்கள்! ஏனெனில் எவர் கூறும் ஆமீன், மலக்குகள் கூறும் ஆமீனுடன் ஒத்து அமைந்து விடுகிறதோ அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன” என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரீ 782
நபித்தோழர்கள் சப்தமிட்டு ஆமீன் சொன்னதாக சில அறிவிப்புகள் உள்ளன. அதை வைத்துக் கொண்டு, மேலேயுள்ள புகாரி ஹதீஸ் சப்தமிட்டு ஆமீன் சொல்வதை தான் பேசுகிறது என்று சலஃபுகள் வேண்டுமானால் புரியலாமே தவிர நாம் அப்படி புரிய வேண்டும் என்கிற அவசியமில்லை.
நீங்கள் ஆமீன் கூறுங்கள் என்பதில் வரும் 'கூலூ' என்பது சப்தமிட்டு சொல்வதையும் குறிக்கும், மெதுவாக சொல்வதையும் குறிக்கும். இரண்டில் எப்படி சொன்னாலும் மார்க்க அடிப்படையில் சரி தான் என்பது தான் தவ்ஹீத் ஜமாஅத் நிலைபாடும் கூட.
ஆக, நபித்தோழர்களின் விளக்கமில்லாமல் இந்த ஹதீஸை புரிய முடியாது என்கிற இவர்கள் வரட்டு தத்துவம் இங்கு மண்ணை கவ்வுகிறது.
குர் ஆனையும் ஹதீஸையும் புரிய எவருடைய விளக்கமும் நமக்கு தேவையில்லை.
என் தனிப்பட்ட பலவீனத்தால் என்னால் புரிய முடியாத ஒன்றை என் சக நண்பர் புரிய வைப்பார். என் நண்பருக்கு புரியாத ஒன்றை நான் புரிய வைப்பேன்.
அனைத்தும் குர் ஆனிலிருந்தும் ஹதீஸிலிருந்தும் எடுக்கப்பட்ட புரிதல்களாகவே அமையப் பெறும்.
அல்லாமல், சஹாபியின் விளக்கம் சஹாபியின் விளக்கம் என்கிற கூப்பாடுகள் வெறும் ஏட்டு சுரக்காய்கள் தான்.
அதில் அடிப்படையும் இல்லை, அப்படி  எந்த சான்றும் இல்லை !!

https://bit.ly/48Jvcuu

Search This Blog