தவ்ஹீத் ஜமாஅத் video's: பூஜிக்கப்பட்ட நிலத்தில் பயிரிடப்பட்டதை உண்ணலாமா?

பூஜிக்கப்பட்ட நிலத்தில் பயிரிடப்பட்டதை உண்ணலாமா?

 பூஜிக்கப்பட்ட நிலத்தில் பயிரிடப்பட்டதை உண்ணலாமா?

பூஜிக்கப்பட்ட பொருள் நமக்கு ஹராம், நாம் வாழும் நாட்டில் விதை விதைக்கும் போதும், அறுக்கும் போதும் பூஜை செய்கிறார்கள். பூஜை செய்த விவசாயத்தின் மூலம் தான் நமக்கு அரிசி கிடைக்கிறது. இதைத் தான் நாம் உண்கிறோம், இது சரியா? இதற்கு வேறு வழி இருக்கிறதா?

தாவூத்

பதில்

முஸ்லிமல்லாதவர்கள் குறிப்பாக இந்து மதத்தவர்கள் விவசாயம் செய்தாலும், கட்டடம் கட்டினாலும், கடை திறந்தாலும் பூஜை செய்யாமல் துவக்க மாட்டார்கள்.

அல்லாஹ் அல்லாதவர்களுக்கு படையல் செய்யப்பட்டதை நாம் சாப்பிடக் கூடாது என்பதால் உங்களுக்கு இந்தச் சந்தேகம் எழுந்துள்ளது.

பூஜை செய்து விட்டு அவர்கள் விவசாயம் செய்வதால் அவர்கள் உற்பத்தி செய்து விற்பனை செய்யும் அரிசி, கோதுமை, இன்னபிற விளை பொருட்களை நாம் உண்ணலாமா?

அவர்கள் பூஜை செய்துவிட்டு கட்டிய கட்டடங்களை விலைக்கு வாங்கலாமா?

அல்லது வாடகை கொடுத்து அதில் குடியிருக்கலாமா?

கடையைத் துவக்கும் நாளிலும், அன்றாடம் கடைகளைத் திறக்கும் போதும் பூஜை செய்துவிட்டுத் தான் ஆரம்பிப்பார்கள். எனவே அவர்களின் கடைகளில் பொருட்களை வாங்கலாமா?

என்றெல்லாம் கூட சந்தேகம் வரும்.


மேலோட்டமாகப் பார்க்கும் போது இந்தச் சந்தேகம் சரியானது போல் தோன்றினாலும் சிந்தித்துப் பார்க்கும் போது இந்தச் சந்தேகத்துக்கு அவசியம் இல்லை என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.

ஒரு பொருளை சிலைகளுக்குப் படைப்பதும் அந்தப் பொருளின் நன்மைக்காக சிலைகளிடம் வேண்டுவதும் வெவ்வேறானவை.

குறிப்பிட்ட ஒரு உணவை கடவுளுக்குப் படைத்து பூஜை போடுபவர்கள் அந்தப் பொருளில் தங்களுக்கு உள்ள உரிமையை விட்டு விடுவார்கள். அதைப் பிரசாதமாக வழங்கி விடுவார்கள்.

ஆனால் ஒரு வயலில் பூஜை போடுபவர்கள் அந்த வயலைக் கடவுளுக்குப் படைப்பதில்லை. பூஜை செய்த பின்னர் அந்த வயலில் தங்கள் உரிமையை விட்டு விடுவதில்லை. பூஜைக்குப் பின் அந்த வயலை பலருக்கும் பங்கு போட்டுக் கொடுப்பதில்லை. எனவே அவர்கள் வயலை கடவுளுக்குப் படைக்கவில்லை என்று இதன் மூலம் தெரிகிறது. வயலில் விளைச்சல் கிடைப்பதற்காக அவர்கள் வேண்டுதல் தான் செய்கிறார்கள்.

ஒரு ஆட்டைக் கடவுளுக்குப் படைப்பதாகச் சொல்பவர்கள் அதன் பின்னர் அந்த ஆட்டில் தங்களுக்கான உரிமையைக் கோர மாட்டார்கள். அதை வெட்டி பங்கிட்டு விடுவார்கள்.

இது போன்றவை தான் நமக்கு ஹராமாகும்.

வயலை அல்லது கட்டடத்தை அவர்கள் கடவுளுக்காக ஆக்குவதில்லை. தமக்குரியதாகவே வைத்துக் கொள்வதால் அது படையலில் சேராது.

பூஜை செய்து விட்டு உற்பத்தி செய்த விளைபொருட்களை இலவசமாகவோ, விலைகொடுத்தோ வாங்கி பயனபடுத்தலாம்.

பூஜைகள் செய்து கட்டப்பட்ட கட்டடத்தில் குடியிருக்கலாம். விலைக்கு வாங்கலாம்.

ஆனால் கடவுளுக்குப் படைக்கப்பட்ட பொருளாக இருந்தால் அதை இலவசமாகவோ, விலை கொடுத்தோ வாங்கியோ பயன்படுத்துவது கூடாது.

இந்த நுணுக்கமான வேறுபாட்டைப் புரிந்து கொண்டால் குழப்பம் வராது.

இது தொடர்பான மற்றொரு செய்தி

கந்தூரிக்காக அறுக்கப்பட்டவைகளை விலைக்கு வாங்கி உண்ணலமா?

மீலாது விழா கந்திரிக்காக அறுக்கப்பட்ட மாட்டின் ஒரு பகுதியை ஒருவர் விலைக்கு வாங்கி விற்பனை செய்கிறார்.  நாம் அவரிடம் காசு கொடுத்து வாங்கி உண்ணலாமா?

ஃபாரூக்

பதில்

இறைவன் அல்லாத மற்றவர்களுக்காக அறுக்கப்பட்ட பிராணியின் இறைச்சியை உண்ணுவது இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டுள்ளது.

தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப்பட்டவை ஆகியவற்றையே அவன் உங்களுக்குத் தடை செய்திருக்கிறான். யார் வரம்பு மீறாதவராகவும், வலியச் செல்லாதவராகவும் நிர்பந்திக்கப்படுகிறாரோ அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

திருக்குர்ஆன் 16:115


அறுக்கப்பட்டவை என்று மொழிபெயர்க்கப்பட்ட இடத்தில் அரபு மூலத்தில் உஹில்ல என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. சப்தமிடப்பட்டவை என்பது இதன் பொருள். சிலைகளுக்கு முன்னால் மந்திரங்கள் சொல்லி பூஜிக்கப்பட்டவை மற்றும் மந்திரங்கள் சொல்லி அறுக்கப்பட்டவைகளையும் இந்தச் சொல் எடுத்துக் கொள்ளும்.

மேற்கண்ட முறையில் அறுக்கப்பட்டவைகளை அன்பளிப்பாக பெறுவதும் கூடாது. காசு கொடுத்து விலைக்கு வாங்குவதும் கூடாது.

மார்க்கம் ஒரு பொருளை எந்த விதிவிலக்கும் கொடுக்காமல் பொதுவாகத் தடைசெய்தால் அதை விற்பதும், வாங்குவதும் தடை செய்யப்பட்டதாகும். இதைப் பின்வரும் செய்திகள் தெளிவுபடுத்துகின்றன.

2224حَدَّثَنَا عَبْدَانُ أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ أَخْبَرَنَا يُونُسُ عَنْ ابْنِ شِهَابٍ سَمِعْتُ سَعِيدَ بْنَ الْمُسَيَّبِ عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ قَاتَلَ اللَّهُ يَهُودَ حُرِّمَتْ عَلَيْهِمْ الشُّحُومُ فَبَاعُوهَا وَأَكَلُوا أَثْمَانَهَا رواه البخاري

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

யூதர்களை அல்லாஹ் தனது கருணையிலிலிருந்து அப்புறப்படுத்துவானாக! அவர்களுக்குக் கொழுப்பு ஹராமாக்கப்பட்ட போது அதை விற்று அதன் கிரயத்தை அவர்கள் சாப்பிட்டார்கள்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல் : புகாரி 2224


3026حَدَّثَنَا مُسَدَّدٌ أَنَّ بِشْرَ بْنَ الْمُفَضَّلِ وَخَالِدَ بْنَ عَبْدِ اللَّهِ حَدَّثَاهُمْ الْمَعْنَى عَنْ خَالِدٍ الْحَذَّاءِ عَنْ بَرَكَةَ قَالَ مُسَدَّدٌ فِي حَدِيثِ خَالِدِ بْنِ عَبْدِ اللَّهِ عَنْ بَرَكَةَ أَبِي الْوَلِيدِ ثُمَّ اتَّفَقَا عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ جَالِسًا عِنْدَ الرُّكْنِ قَالَ فَرَفَعَ بَصَرَهُ إِلَى السَّمَاءِ فَضَحِكَ فَقَالَ لَعَنَ اللَّهُ الْيَهُودَ ثَلَاثًا إِنَّ اللَّهَ حَرَّمَ عَلَيْهِمْ الشُّحُومَ فَبَاعُوهَا وَأَكَلُوا أَثْمَانَهَا وَإِنَّ اللَّهَ إِذَا حَرَّمَ عَلَى قَوْمٍ أَكْلَ شَيْءٍ حَرَّمَ عَلَيْهِمْ ثَمَنَهُ رواه أبو داود

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஜருல் அஸ்வதுக்கு அருகில் அமர்ந்திருப்பதை நான் கண்டேன். அவர்கள் தமது பார்வையை வானத்தை நோக்கி உயர்த்தி சிரித்தார்கள். அப்போது அவர்கள் அல்லாஹ் யூதர்களைச் சபிப்பானாக என்று மூன்று முறை கூறினார்கள். மேலும் அல்லாஹ் அவர்களுக்குக் கொழுப்பைத் தடை செய்தான். ஆனால் அவர்கள் அதை விற்று அதன் கிரயத்தைச் சாப்பிட்டார்கள். அல்லாஹ் ஒரு கூட்டத்தாருக்கு ஒரு பொருளை உண்ணக் கூடாது என்று தடை செய்தால் அதை விற்ற காசையும் (சேர்த்தே) தடை செய்கிறான் என்று கூறினார்கள்.

நூல் : அபூதாவுத் 3026


மார்க்கம் தடை செய்த பொருளை விற்பது கூடாதென்றால் காசு கொடுத்து அந்தப் பொருளை வாங்குவதும் கூடாது.

மேலுள்ள வசனத்தில் தானாகச் செத்த பிராணி, இரத்தம், பன்றி இறைச்சி ஆகியவற்றைத் தொடர்ந்து அல்லாஹ் அல்லாதவர்களுக்காக அறுக்கப்பட்ட பிராணி பற்றி குறிப்பிடப்படுகின்றது. இரத்தம், பன்றி, தானாகச் செத்த பிராணியின் இறைச்சி ஆகியவற்றை ஒருவர் அன்பளிப்பாகக் கொடுத்தாலும் விலைக்குக் கொடுத்தாலும் அதை உண்ண மாட்டோம். உண்ணக் கூடாது.

அல்லாஹ் அல்லாதவர்களுக்காக அறுக்கப்பட்ட பிராணிக்கும் இதே சட்டம் தான்.
P.JAINUL ABIDEEN

share this..  https://bit.ly/49kcvxZ

Search This Blog