மகத்தான அரஃபா நாள்:
1- நரகத்திற்குரியவர்கள் அதிகம் விடுதலை செய்யப்படும் நாள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ், அரஃபா (துல்ஹஜ் 9ஆவது) நாளில் அடியார்களுக்கு நரக விடுதலையளிக்கும் அளவிற்கு வேறெந்த நாளிலும் நரக விடுதலை அளிப்பதில்லை. அன்றைய தினம் அவன் (அரஃபாவிலுள்ளவர்களை) நெருங்கி, வானவர்களிடம் அவர்களைக் குறித்துப் பெருமை பாராட்டுகிறான். "இவர்கள் எதை நாடி (இங்கு குழுமி)யுள்ளார்கள்?" என்று (பெருமிதத்தோடு) கேட்கிறான். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) அவர்கள், முஸ்லிம் 2623).
இந்நாளில் அல்லாஹ்விடம் அதிகம் நரக விடுதலையைப் பிரார்த்திப்போம். எவர் அல்லாஹ்விடமிருந்து நரக விடுதலையைப் பெற்றுக் கொண்டாரோ அவருக்கு நரகம் ஹரமாக்கப்பட்டு விடுகின்றது. அவர் ஒரு போதும் நரகத்தில் நுழையவே மாட்டார்.
2- ஹஜ்ஜில் அரஃபாவில் தங்கியிருப்போரைப் பற்றி அல்லாஹ் பெருமையுடன் பேசுவான்:
"அல்லாஹ் வானவர்களிடம் (ஹஜ்ஜில்) அரஃபாவில் தங்கியிப்போரைப் பற்றி இதோ பாருங்கள் எனது அடியார்களை தலைவிரி கோலத்துடனும் புழுதி படிந்தவர்களாகவும் என்னிடம் வந்துள்ளனர்” என பெருமையுடன் கூறுவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) அவர்கள், ஸஹீஹ் இப்னு ஹுஸைமா 2839.
3- அரஃபா நாளுடைய நோன்பின் சிறப்பு:
"அரஃபா (துல்ஹஜ் ஒன்பதாவது) நாளில் நோன்பு நோற்பது பற்றிக் கேட்கப்பட்டதற்கு, "முந்தைய ஓராண்டிற்கும் பிந்தைய ஓராண்டிற்கும் அது பாவப் பரிகாரமாக அமையும்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், அறிவிப்பவர்: அபூகத்தாதா அல்அன்சாரி (ரலி) அவர்கள் முஸ்லிம் 2152).
4- இஸ்லாம் முழுமைப் படுத்தப்பட்ட நாள்:
தாரிக் பின் ஷிஹாப் (ரலி) அவர்கள் கூறியதாவது: "யூதர்களில் ஒருவர் (கலீஃபா) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களிடம், “இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! (அமீருல் முஃமினீன்!) நீங்கள் ஓதிக் கொண்டிருக்கும் உங்கள் வேதத்தில் ஒரு வசனம் உள்ளது. அது யூதர்களாகிய எங்கள்மீது அருளப்பெற்றிருக்குமானால், அந்நாளை நாங்கள் ஒரு பண்டிகை நாளாக்கிக்கொண்டிருப்போம்” என்றார். அதற்கு உமர் (ரலி) அவர்கள் “அது எந்த வசனம்?” எனக் கேட்டார்கள்.
அதற்கு அந்த யூதர், “இன்று உங்களின் மார்க்கத்தை உங்களுக்காக முழுமை யாக்கிவிட்டேன். உங்கள்மீது எனது அருட்கொடையை நிறைவாக்கிவிட்டேன். இஸ்லாத்தை உங்களுக்குரிய மார்க்கமாக நான் பொருந்திக்கொண்டுவிட்டேன்” (5:3) (என்பதே அந்த வசனமாகும்)” என்றார்.
அதற்கு உமர் (ரலி) அவர்கள் “இந்த வசனம் எந்த நாளில் எந்த இடத்தில் நபி (ஸல்) அவர்களுக்கு அருளப்பெற்றது என்பதை நாங்கள் அறிந்துள்ளோம். ஒரு வெள்ளிக்கிழமை தினத்தில் ‘அரஃபா’ பெருவெளியில் நபி (ஸல்) அவர்கள் நின்றுகொண்டிருக்கும்போதுதான் (இவ்வசனம் அருளப்பெற்றது; அந்த நாள் எங்களுக்குப் பண்டிகை நாள்தான்)” என்றார்கள். (புஹாரி 45)
5- ஹஜ்ஜில் அரஃபாவில் மரணித்த தோழருக்குக் கிடைத்த சிறப்பு:
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் "அரஃபா" பெருவெளியில் தங்கியிருந்த ஒருவர், தமது வாகனத்திலிருந்து விழுந்துவிட்டார். அது அவரது கழுத்தை முறித்துவிட்டது. இதைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சொல்லப்பட்டபோது, "அவரைத் தண்ணீராலும் இலந்தை இலையாலும் நீராட்டுங்கள். இரு ஆடைகளில் அவருக்குப் பிரேத ஆடை (கஃபன்) அணிவியுங்கள். அவருக்கு வாசனைத் தூள் போடாதீர்கள். அவரது தலையை மூடாதீர்கள். ஏனெனில், "தல்பியா" சொல்லிக்கொண்டிருப்பவராக மறுமை நாளில் அவரை அல்லாஹ் எழுப்புவான்" என்று கூறினார்கள். (முஸ்லிம் 2281).
6- அரஃபாவிலிருந்து திரும்புங்கள் என்ற கட்டளை:
“மேலும், மக்கள் கூட்டம் அரஃபாவி லிருந்தே திரும்பிச் செல்வார்கள். ஆனால், (குறைஷியரான) ஹும்ஸ்களோ (எல்லாம் முடிந்த பின்பு) முஸ்தலிஃபாவிலிருந்து தான் திரும்புவார்கள்.
“பின்பு மக்கள் திரும்புகிற இடத்தி லிருந்து நீங்களும் திரும்புங்கள்” (2:199) எனும் இறைவசனம் ‘ஹும்ஸ்’கள் தொடர் பாகவே அருளப்பெற்றது என ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்.
அவர்கள் ‘ஜம்உ’ (முஸ்தலிஃபா) எனும் இடத்திலிருந்து திரும்பிச் செல்பவர்களா யிருந்தனர். எனவே, அரஃபாவிலிருந்து திரும்பிச் செல்லுமாறு அவர்கள் திருப்பி விடப்பட்டனர். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) அவர்கள், புஹாரி 1665 (ஹதீஸின் ஒரு பகுதி).
7- அரஃபாவில் தங்குவதுதான் ஹஜ்:
"அரஃபாவில் தங்குவதுதான் ஹஜ். முஸ்தலிபாவுடைய இரவில் ஃபஜ்ருக்கு முன் ஒருவர் அரஃபாவில் வந்து இரவில் தங்கி விட்டால் அவரது ஹஜ் முழுமைப் பெற்று விடும்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், அறிவிப்பவர்: அப்துர் ரஹ்மான் இப்னு யஃமர் அத்தய்லி (ரலி) அவர்கள், நஸாயி 3016).
8- அரஃபா பெருவெளி அனைத்தும் ஹாஜிகள் தங்குவதற்குரிய இடமாகும்:
"அரஃபா அனைத்தும் தங்குவதற்குரிய இடமாகும்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், முஸ்லிம் 1218).
9- நபி (ஸல்) அவர்கள் நபித்துவத்துக்கு முன் செய்த ஹஜ்ஜிலும் அரஃபாவில் தங்கினார்கள்:
ஜுபைர் பின் முத்இம் (ரலி) அவர்கள் கூறியதாவது: (நான் இஸ்லாத்தை ஏற்பதற்குமுன் ஒரு முறை) அரஃபா (துல்ஹஜ் ஒன்பதாம்) நாளன்று எனது ஒட்டகத்தைத் தொலைத்து விட்டேன். அதைத் தேடிக்கொண்டு வந்த போது, நபி (ஸல்) அவர்கள் அரஃபா பெரு வெளியில் தங்கியிருப்பதைக் கண்டேன். அப்போது நான், “அல்லாஹ்வின் மீதாணையாக! இவர் (நபி (ஸல்) அவர்கள்), கடினமான சமயப் பற்றுடைய (குறைஷிக் குலத்த)வர் ஆயிற்றே! இவருக்கு இங்கு என்ன வேலை?” என என்னுள் கூறிக் கொண்டேன். (புஹாரி 1664)
அரஃபா மக்காவுக்கும், தாயிஃபுக்கும் இடையிலுள்ள ஒரு மலையாகும். மக்காவிலிருந்து 22 கி.மி. தொலைவிலும், மினாவிலிருந்து 10 கி.மி. தொலைவிலும், முஸ்தலிஃபாவிலிருந்து 6 கி.மி. தொலைவிலும் அமைந்திருக்கின்றது.
10- அரஃபா நாளன்று ஹாஜிகள் என்ன கூற வேண்டும்?
முஹம்மத் பின் அபீபக்ர் அஸ்ஸகஃபீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் "அரஃபா" நாளன்று காலையில் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம், "இன்றைய தினத்தில் தல்பியா கூறுவதைப் பற்றித் தாங்கள் என்ன சொல்கிறீர்கள்?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "நான் நபி (ஸல்) அவர்களுடனும் நபித்தோழர்களுடனும் இவ்வாறு சென்றிருக்கிறேன். அப்போது எங்களில் சிலர் "தக்பீர்" கூறிக்கொண்டிருப்பர். வேறுசிலர் "தல்பியா" கூறிக்கொண்டிருப்பர். எங்களில் யாரும் மற்றவரை குறை கூறமாட்டார்கள்" என்று விடையளித்தார்கள். (முஸ்லிம் 2462).
11- அரஃபாவில் தங்கும் ஹாஜிகளுக்கு நோன்பில்லை:
உம்முல் ஃபள்ல் பின்த் அல்ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: "அரஃபா (துல்ஹஜ் ஒன்பதாம்) நாளில் நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருப்பது தொடர்பாக மக்கள் என்னிடம் சர்ச்சை செய்துகொண்டிருந்தனர். சிலர், ‘நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றுள்ளார்கள்’ என்றும் வேறுசிலர், ‘இல்லை’ என்றும் கூறிக்கொண்டிருந்தனர். எனவே, நான் நபி (ஸல்) அவர்களுக்கு ஒரு பாத்திரத்தில் பால் கொடுத்தனுப்பி னேன்; அவர்கள் தமது ஒட்டகத்தின் மீதமர்ந்துகொண்டே அதை அருந்தினார்கள்". (புஹாரி 1661).
12- அரஃபாவில் நபி (ஸல்) அவர்கள் ஆற்றிய வரலாற்று சிறப்பு மிகு உரை:
சூரியன் உச்சி சாய்ந்ததும் “கஸ்வா” எனும் தமது ஒட்டகத்தில் (சேணம் பூட்டுமாறு) உத்தரவிட்டார்கள். சேணம் பூட்டப் பெற்றதும் (“உரனா”) பள்ளத்தாக்கின் மத்திய பகுதிக்கு வந்து மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள்.
உங்களது புனிதமிக்க இந்நகரத்தில், உங்களது புனிதமிக்க இம்மாதத்தில் இன்றைய தினம் எந்தளவுக்கு புனிதமானதோ, அந்தளவிற்கு உங்கள் உயிர்களும், உங்கள் உடமைகளும் உங்களுக்குப் புனிதமானவை ஆகும்.
அறியாமைக் காலத்தின் அனைத்து விவகாரங்களும் என் பாதங்களுக்கு கீழே புதைக்கப்பட்டு விட்டன.
அறியாமைக் காலத்தில் நிகழ்ந்து விட்ட உயிர்க் கொலைகளுக்கான பழிவாங்குதல்கள் அனைத்தும் (என் பாதங்களுக்குக் கீழே) புதைக்கப்பட்டவை ஆகும். (அவற்றை நான் தள்ளுபடி செய்கிறேன்.) முதற்கட்டமாக, நம்மிடையே நடைபெற்ற கொலைகளில் ரபீஆ பின் அல்ஹாரிஸின் மகனது கொலைக்கான பலிவாங்கலை நான் தள்ளுபடி செய்கின்றேன். அவன் பனு சஅத் குலத்தாரிடையே பால்குடிப் பாலகனாக இருந்து வந்தான். அவனை ஹுதைல் குலத்தார் கொன்று விட்டனர்.
அறியாமைக் காலத்தில் இருந்த வட்டியும் என் பாதங்களுக்கு கீழே புதைக்கப்படுகின்றது. (அவற்றையும் நான் தள்ளுபடி செய்கின்றேன்.) நம்மவர் கொடுத்திருந்த வட்டிகளில் முதற்கட்டமாக (என் பெரிய தந்தை) அப்பாஸ் பின் அப்துல் முத்தலிபிற்கு வரவேண்டிய வட்டியை நான் தள்ளுபடி செய்கிறேன். அதில் (அசலைத் தவிர) கூடுதலான தொகை அனைத்தும் தள்ளுபடி செய்யப்படுகின்றது.
பெண்கள் விஷயத்தில் அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள்! அல்லாஹ்வின் அடைக்கலத்தால் அவர்களை நீங்கள் (கைப்)பிடித்துள்ளீர்கள்! அல்லாஹ்வின் கட்டளையில் அவர்களது கற்பை நீங்கள் அனுமதிக்கப் பெற்றதாக ஆக்கியுள்ளீர்கள்! அவர்களிடம் உங்களுக்குள்ள உரிமை என்னவென்றால் நீங்கள் வெறுக்கும் எவரையும் உங்கள் விரிப்பில் (அதாவது உங்கள் வீட்டில்) அவர்கள் அனுமதிக்காமல் இருப்பதாகும். அவ்வாறு அவர்கள் அனுமதித்தால் காயம் எற்படாத வகையில் அவர்களை நீங்கள் அடிக்கலாம். உங்களிடம் அவர்களுக்குள்ள உரிமை யாதெனில், முறையான உணவும், உடையும் அவர்களுக்கு நீங்கள் அளிப்பதாகும்.
உங்களிடையே நான் (மிக முக்கியமான) ஒன்ற விட்டுச் செல்கிறேன். அதை நீங்கள் பலமாகப் பற்றிக்கொள்ளுங்கள்! நீங்கள் ஒருபோதும் வழிதவற மாட்டீர்கள். அது அல்லாஹ்வின் வேதமாகும்!” என்று கூறி விட்டு, “(மறுமை நாளில்) உங்களிடம் என்னைப் பற்றி விசாரிக்கப்படும் போது நீங்கள் என்ன சொல்வீர்கள்?” என்று கேட்டார்கள்.
அதற்கு மக்கள், “நீங்கள் (இறைச் செய்திகள் அனைத்தையும் எங்களிடம்) தெரிவித்து விட்டீர்கள்! (உங்களது நபித்துவப் பொறுப்பை) நீங்கள் நிறைவேற்றி விட்டீர்கள்! (சமுதாயத்தார் மீது) அக்கறையுடன் நடந்து கொண்டீர்கள் என நாங்கள் சாட்சியமளிப்போம்!” என்று கூறினர். உடனே அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் தமது சுட்டுவிரலை வானை நோக்கி உயர்த்திச் சைகை செய்து விட்டுப் பிறகு அதை மக்களை நோக்கித் தாழ்த்தி, “இறைவா! இதற்கு நீயே சாட்சி!” என்று மூன்று முறை கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள், முஸ்லிம் 2334) நீண்ட ஹதீஸின் ஒரு பகுதி.
13- உரைக்குப் பிறகு லுஹரையும், அஸரையும் சேர்த்தும், சுருக்கியும் தொழுதார்கள்:
"பிறகு தொழுகை அறிவிப்பும், இகாமத்தும் சொல்லச் செய்து, ளுஹர் தொழுகை தொழுவித்தார்கள். பிறகு இகாமத் மட்டும் சொல்லச் செய்து அஸர் தொழுகையும் தொழுவித்தார்கள். அவ்விரண்டுக்குமிடையே (கூடுதலாக) வேறதுவும் அவர்கள் தொழவில்லை."(அறிவிப்பவர்: ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள், முஸ்லிம் 2334) நீண்ட ஹதீஸின் ஒரு பகுதி.
14- அரஃபாவில் முழுமையாக சூரியன் மறையும் வரை:
"பிறகு அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் தமது ஒட்டகத்தில் ஏறி, அரஃபாவிற்கு வந்து, அங்கிருந்த (“ஜபலுர் ரஹ்மத்” மலை அடிவாரத்தில்) பாறைகள் மீது தமது “கஸ்வா” எனும் ஒட்டகத்தை நிறுத்தினார்கள். கால்நடையாக வந்த மக்கள் திரளை தம் முன் நிறுத்தி, கிப்லாவை முன்னோக்கிச் சூரியன் மறையத் தொடங்கும் வரை அப்படியே வாகனத்தில் அமர்ந்திருந்தார்கள்" (அறிவிப்பவர்: ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள், முஸ்லிம் 2334) நீண்ட ஹதீஸின் ஒரு பகுதி.
15- அரஃபா நாளில் செய்யப்படும் நற் செயல்கள் அல்லாஹ்விடம் ஜிஹாதை விட சிறப்புக்குரியது. ஏனெனில் அந்நாள் துல் ஹஜ் முதல் 10 நாட்களுக்குள் அமைந்துள்ளது:
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், “வேறு நாட்களில் செய்யும் நற்செயல், இந்த (துல்ஹஜ் முதல்) பத்து நாட்களில் செய்யும் நற்செயலைவிடச் சிறந்ததல்ல” என்று கூறினார்கள். அப்போது மக்கள், “அறப்போரை விடவுமா?” என்று வினவினர். நபி (ஸல்) அவர்கள், “அறப்போரை விடவும்தான்; ஆயினும், தமது உயிரையும் பொருளை யும் அர்ப்பணிப்பதற்காகப் புறப்பட்டுச் சென்று எதையும் திரும்பக் கொண்டு வராத மனிதரைத் தவிர” என்று சொன்னார்கள். (புஹாரி 969)
share this.. https://bit.ly/4bVgdPq