தவ்ஹீத் ஜமாஅத் video's: கல்லை பறவை போட்டதால் யானை அழிந்தது என்பதை எப்படி நம்ப முடியும்

கல்லை பறவை போட்டதால் யானை அழிந்தது என்பதை எப்படி நம்ப முடியும்

 

கஅபாவும் பிற பள்ளிகளும் ஒன்றா?


கல்லை பறவை போட்டதால் யானை அழிந்தது என்பதை எப்படி நம்ப முடியும்


என்று சிலர் கேட்கலாம். ஆனால் இதில் இருக்கிற மிகப்பெரும் அறிவியல் உண்மையை ஆராய்ந்தால் இந்த வசனங்களெல்லாம் இறைவேதம் என்பதற்கான சான்றாக நிச்சயம் இருக்கும்.

بِحِجَارَةٍ مِنْ سِجِّيلٍ -
சூடேற்றப்பட்ட கற்களைப் பறவைகள் வீசியதாக அல்லாஹ் கூறுகிறான். வெப்பம் ஊட்டப்பட்ட கற்கள் என்கிறான். சிஜ்ஜீல் என்றால் கடும் வெப்பம் என்று பொருள். கடும் வெப்பம் என்றால் அணு ஆயுதத்தைதான் குறிக்கும். அது வெடித்தால் ஏற்படும் வெப்பம் மிகக் கடுமையாக இருக்கும். அதனால்தான் அணுகுண்டின் தாக்குதலுக்கு ஆளானவர்கள் அழிந்து நாசமாகிவிடுகிறார்கள். கருகி சாம்பலாகி விடுகிறார்கள்.


ஒரு சிறிய கல்லில் கடும் வெப்பத்தை ஏற்றலாம் என்றும் கடும் வெப்பத்தை ஏற்றினாலும் அதைத் தூக்கிக் கொண்டு போகலாம், தூக்கிக் கொண்டு போகிறவருக்கு ஒன்றும் ஏற்படாது. அதை ஒன்றின் மீது போட்டால்தான் வெடிக்கும் அதனால் பாதிப்பு வரும் என்பது இதிலிருந்து தெரிகிறது. அணு ஆயுதத்தைத் தூக்கிக் கொண்டு அப்படியே இறக்கி தரையில் வைத்தால் வெடிக்காது. மேலிருந்து கீழே போட்டால்தான் வெடிக்கும் என்ற அறிவியல் தத்துவம் இதில் இருக்கிறது.

அதாவது இந்தக் கல்லைப் பறவைகளிலில்லாமல் கழுதையிடமோ நாயிடமோ அனுப்பியிருந்தால் அருகிலிருந்து போடும். அதனால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது. அப்படியெனில் அணு ஆயுதங்களை எறிவதற்கு வேகம் வேண்டும். உயரம் போகப் போக புவிஈர்ப்பு சக்தி கூடும். போர்ஸாக இழுக்கிற ஒரு இயற்பியல் தத்துவம் அதில் உண்டாக வேண்டும். அதாவது ஒரு வெடி மருந்தைக் கொண்டு எதிரிப் படைகளை அழிப்பதற்கு என்னென்ன நிபந்தனைகள் வேண்டுமோ அவற்றையெல்லாம் இறைவன் இந்த அத்தியாயத்தில் கூறுகிறான்.

இப்போது இந்த அர்த்தங்களை வைத்துக் கொண்டு இந்த அத்தியாயத்திற்கு பொருள் கொண்டால் மிகச் சரியாக பொருந்தும்.

أَلَمْ تَرَى - சிந்திக்கவில்லையா?
இங்கு பார்க்கவில்லையா? என்று பொருள் வைத்தால் விரிந்த பொருள் வராது. பார்க்கவில்லையா? என்று அர்த்தம் செய்தாலும் அதன் கருத்து சிந்திக்கவில்லையா? என்றுதான் இருக்கும். இருக்க வேண்டும்.

كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَابِ الْفِيلِ - உமது இரட்சகன் யானைப் படையினரை எப்படி நடத்தினான் என்பதை (நபியே) நீர் சிந்திக்கவில்லையா?

أَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِي تَضْلِيلٍ - அவன் அவர்களின் சூழ்ச்சியை வீணாணாக ஆக்கவில்லையா?

وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ - அபாபீல் பறவைகளை அவர்களுக்கு எதிராக அனுப்பி வைத்தான்.

تَرْمِيهِمْ بِحِجَارَةٍ مِنْ سِجِّيلٍ - கடும் சூடேற்றப்பட்ட வெப்பமூட்டப்பட்ட கற்களை அவைகள் அவர்களின் மீது விசியெறிந்தன.

فَجَعَلَهُمْ كَعَصْفٍ مَأْكُولٍ - அவன் அவர்களை மென்று உமிழப்பட்ட வைக்கோல் போன்று (மனிதக் கூழாக) ஆக்கிவிட்டான்.

பலூன் பெரிதாக இருக்கும். அதை உடைப்பதற்கு சிறிய குண்டூசி போதும். தவ்ஹீத் என்பது குண்டூசிதான். ஷிர்க் என்பது பலூன் போன்று பெரிதாக இருக்கும். ஷிர்க்கில், பித்அத்தில், வழிகேட்டில் எந்தப் பலூனைக் கொண்டு வந்தாலும், அவைகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் ஆனால் சத்தியத்திற்கு முன்னால் தோற்கும். வெருண்டோடும். அல்லாஹ் இதைத் திருமறையில் இன்னும் தெளிவாகக் கூறுகிறான்.

قُلْ لَا يَسْتَوِي الْخَبِيثُ وَالطَّيّبُ وَلَوْ أَعْجَبَكَ كَثْرَةُ الْخَبِيثِ فَاتَّقُوا اللَّهَ يَاأُولِي الْأَلْبَابِ لَعَلَّكُـمْ تُفْلِحُوْنَ سورة المائدة 100
"கெட்டதும், நல்லதும் சமமாகாது'' என்று கூறுவீராக! கெட்டது அதிகமாக இருப்பது உம்மைக் கவர்ந்த போதிலும் சரியே. அறிவுடையோரே! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! வெற்றி பெறுவீர்கள்!
(அல்குர்ஆன் 5:100)

وَلَا تَسْتَوِي الْحَسَنَةُ وَلَا السَّيّئَةُ  سورة الفصلت
நன்மையும், தீமையும் சமமாகாது.
(அல்குர்ஆன் 41:34)


فَمَا لَهُمْ عَنْ التَّذْكِرَةِ مُعْرِضِينَ كَأَ نَّـهُمْ حُمُرٌ مُسْتَنْفِرَةٌ فَرَّتْ مِنْ قَسْوَرَةٍ
இந்த அறிவுரையைப் புறக்கணிக்க அவர்களுக்கு என்ன நேர்ந்தது?அவர்கள் சிங்கத்தைக் கண்டு மிரண்டு வெருண்டோடும் கழுதைகளைப் போல் உள்ளனர்.
(அல்குர்ஆன் 74:49,50,51)


அல்லாஹ் சொல்வதைப் போன்று கெட்டது அதிகமாக இருக்கும். அதனால் கெட்டதும் நல்லதும் சமமாகாது. கெட்டது நிற்காது. ஏகத்துவத்தின் வீரியத்திற்கு முன்னால், அதனுடைய சக்திக்கு முன்னால், அபாபீலுக்கு முன்னால் யானைகளெல்லாம் ஒன்றுமில்லாமல் போய்விடும். இதைத்தான் இந்த வரலாறு சொல்கிறது.

இதைத்தான் நபிகளார் கண்ட முதல் பத்ருக் களத்தில் பார்த்தோம். 300 க்கு முன்னால் 1000 நிற்க முடியவில்லை. அதுவும் அபாபீல் பறவை சம்பவம் போன்றதுதான். உருப்படியான ஆயுதங்கள் எதுவும் கிடையாது. எல்லாம் உடைந்த ஆயுதங்களும் கம்புகளும் மட்டும்தான். ஆனால் வீரியம் முழு வீச்சில் இருந்தது. இது என் மறுமை வெற்றிக்கான ஏகத்துவக் கொள்கை. இதில் நான் வளைந்துவிட மாட்டேன்; இதில் சமரசம் செய்ய மாட்டேன்; இதற்காக உயிரையும் கொடுப்பேன் என்ற உத்வேகம் காரணமாக அல்லாஹ் மகத்தான் வெற்றியை அளித்தான். இதைத்தான் இந்த வரலாற்றில் அல்லாஹ் நமக்குப் பாடம் சொல்லித் தருகிறான்.

எனவே எந்த ஒரு கட்டத்திலும் அதிகமான எண்ணிக்கையை வைத்து சரி என்று முடிவெடுத்தால் யானைப் படைக்கு நேர்ந்த கதிதான் நமக்கும் என்பதை புரிந்து நடக்க வேண்டும். இதையும் சிந்திக்கத்தான் வேண்டும்.
வெறுமனே அறிவியலை மட்டும் சிந்திக்க இந்த அத்தியாயம் அருளப்படவில்லை. யானைப் படையுடன் ஒப்பிடும் போது பறவை எத்தனை மடங்கு சிறியது. ஆனாலும் பறவையிடமிருந்த வீரியம் யானையை வீழ்த்துகிறது. அதுபோன்றுதான் எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம். அதனால் என்ன? சத்தியத்திற்கு முன்னால் தவ்ஹீதுக்கு முன்னால் வழிகேடும் அசத்தியமும் சுக்குநூறாக நொருங்கும்.

கொள்கையில் உறுதியானவர்களாக இருந்தால் அடி உதைகளைக் கண்டு அஞ்சமாட்டார்கள்; ஓடமாட்டார்கள்; நிற்பார்கள்; ஜெயிலுக்குப் போவதற்குக் கூட நிற்பார்கள்; தியாகத்திற்கு நிற்பார்கள்; சாவதற்கும் வந்து நிற்பார்கள்.
கொள்கையில் நம்பிக்கையற்ற கூட்டத்தினர் சொகுசாக இருக்கும் போது வந்து நிற்பார்கள்; சிக்கல் வருகிறபோது நெல்லிக்காய் மூட்டை போன்று துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று சிதறிவிடுவார்கள். இந்தப் பாடத்தையும்தான் அல்லாஹ் இந்த அத்தியாயத்தில் சொல்லித் தருகிறான்.

கஅபாவும் பிற பள்ளிகளும் ஒன்றா?

இதில் இன்னொரு பாடமும் இருக்கிறது. யாராவது பள்ளிவாசலை இடிக்க வந்துவிட்டார்களெனில், கஃபாவைக் காப்பாற்றிய அபாபீல் பறவைக் கூட்டம் வரும் என்று வானத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டு நிற்கக்கூடாது. எந்த அபாபீலும் வராது. உலகில் எந்த ஆலயத்தை யார் இடிக்க வந்தாலும் அதை அவர்களாகவேதான் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.
ஏனெனில் கஃபாவைக் காப்பாற்றிய இறைவன் குரைஷிகளுக்காகக் கொடுத்த கண்ணியம், அவர்களைத் தவிர வேறெவருக்கும் இல்லை என்பதைக் குறிப்பதற்குத்தான் لِإِيلَافِ قُرَيْشٍ (லிஈலாஃபி குரைஷின்) குரைஷிகளை மகிழ்விப்பதற்காக என்று அடுத்த அத்தியாயத்தில் மீதியைச் சொல்லி முடிக்கிறான் இறைவன்.

உலகத்திலுள்ள பள்ளிவாசல்களுக்கெல்லாம் இப்படி அபாபீல் வராது. நான் அனுப்ப மாட்டேன் என்றும் உங்களது பள்ளியை நீங்கள்தான் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் இறைவன் லீஈலாஃபி குரைஷ் அத்தியாயத்தின் மூலம் பிரகடனப்படுத்துகிறான்.

கஃபாவைக் காப்பற்றியதற்குக் காரணம், அல்லாஹ்வே அதை அபய பூமி என்கிறான். பாதுகாக்கப்பட்ட பள்ளி என்கிறான். அந்த வாக்குறுதியைக் காப்பற்றத்தான் இப்படியெல்லாம் அபாபீல்களை அனுப்பினான்.

وَقَالُوا إِنْ نَتَّبِعْ الْهُدَى مَعَكَ نُتَخَطَّفْ مِنْ أَرْضِنَا أَوَلَمْ نُمَكّنْ لَهُمْ حَرَمًا آمِنًا يُجْبَى إِلَيْهِ ثَمَرَاتُ كُلّ شَيْءٍ رِزْقًا مِنْ لَدُنَّا وَلَكِنَّ أَكْثَرَهُمْ لَا يَعْلَمُوْنَ
"நாங்கள் உம்முடன் சேர்ந்து நேர்வழியைப் பின்பற்றினால் எங்களின் பூமியிலிருந்து வாரிச் செல்லப்பட்டு விடுவோம்'' என்று அவர்கள் கூறுகின்றனர். அபயம் அளிக்கும் புனிதத் தலத்தை அவர்களுக்காக வசிப்பிடமாக நாம் ஆக்கவில்லையா? ஒவ்வொரு கனி வர்க்கமும் நம்மிடமிருந்து உணவாக அதை நோக்கிக் கொண்டு வரப்படுகிறது. எனினும் அவர்களில் அதிகமானோர் அறியமாட்டார்கள்.
(அல்குர்ஆன் 28:57)



أَوَلَمْ يَرَوْا أَنَّا جَعَلْنَا حَرَمًا آمِنًا وَيُتَخَطَّفُ النَّاسُ مِنْ حَوْلِهِمْ أَفَبِالْبَاطِلِ يُؤْمِنُونَ وَبِنِعْمَةِ الله يَكْفُرُونَ
இவர்களைச் சுற்றியுள்ள மனிதர்கள் வாரிச் செல்லப்படும் நிலையில் (இவர்களுக்கு) அபயமளிக்கும் புனிதத் தலத்தை நாம் ஏற்படுத்தியிருப்பதை அவர்கள் கவனிக்கவில்லையா? வீணானதை நம்பி, அல்லாஹ்வின் அருளுக்கு நன்றி மறக்கிறார்களா?
(அல்குர்ஆன் 29:67)


எனவே கஃபா ஆலயத்தினை தான் காப்பாற்றுவதாக அல்லாஹ் உத்திரவாதம் தருகிறான். அதில் யாரும் கையை வைக்க முடியாது. யாராவது அந்த ஆலயத்தைக் கைப்பற்றிய வரலாறு உண்டா? வரலாறு உண்டு என்றாலும் கூட, முஸ்லிமுக்கு எதிராக முஸ்லிம் கைப்பற்றிய வரலாறுதான் உண்டு. ஒரு முஸ்லிம் கஃபாவை ஆட்சி செய்து கொண்டிருப்பான், இன்னொரு முஸ்லிம் படையைத் திரட்டிப்போய் அவனை காலிசெய்துவிட்டு படை திரட்டிய முஸ்லிம் கைப்பற்றி ஆட்சி நடத்துவான். அந்த வரலாறுதான் உண்டே தவிர, அமெரிக்க, ரஷ்ய வல்லூருகள் போன்றவர்கள் கைப்பற்றிய வரலாறுகள் உண்டா? கிடையாது.

அந்த ஆலயத்தை சிதைத்த வரலாறும், அதன் மீது கை வைத்த வரலாறும் கிடையாது. அதை அழிக்கும் அளவுக்கு வெறி கொண்டு அலைந்த காலமெல்லாம் இருந்தது. இன்றைக்கெல்லாம் அது கிடையாது. அனைத்து சக்திகளும் சேர்ந்து கொண்டு அழிக்க நினைத்த காலத்தில் உலக வரலாற்றில் முஸ்லிம்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக மைனாரிட்டிகளாக இருந்தோம். அப்படிப்பட்ட காலகட்டத்திலும் கூட அதை அழிக்க முடியவில்லை. அப்போதெல்லாம் இறைவன் அதைக் காப்பாற்றினான். அதற்குக் காரணம் அது அதற்கே உள்ள தனிச் சிறப்பு.

மற்றவைகளுக்கெல்லாம் நாமாகத்தான் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.
இந்த அத்தியாயத்தை வைத்துக் கொண்டு, பாபர் மஸ்ஜிதை இந்துத்துவா சக்திகள் இடித்து விட்டார்களே, அபாபீல் பறவைகளைக் காணோமே என்றெல்லாம் கூட முஸ்லிம்களே கேட்டார்கள்.
பிற மதத்தவர்களும் கேட்டார்கள். உன் கடமையை நீ செய்யவில்லை. நீதானே காப்பாற்றியிருக்க வேண்டும். நமது வீட்டைத் தடுக்க வருகிற போது உயிரைக் கொடுத்து காப்பாற்றுவதைப் போல் நாம்தான் காப்பாற்றியிருக்க வேண்டும். அப்படி நாம்தான் காப்பாற்ற வேண்டும் எனவும் இறைவன் கூறுகிறான்.

وَلَوْلَا دَفْعُ الله النَّاسَ بَعْضَهُمْ بِبَعْضٍ لَهُدِّمَتْ صَوَامِعُ وَبِيَعٌ وَصَلَوَاتٌ وَمَسَاجِدُ يُذْكَرُ فِيهَا اسْمُ اللَّهِ كَثِيرًا
மனிதர்களில் ஒருவர் மூலம் மற்றவரை அல்லாஹ் தடுத்திருக்காவிட்டால் மடங்களும், ஆலயங்களும், வழிபாட்டுத்தலங்களும், அல்லாஹ்வின் பெயர் அதிகமாகத் துதிக்கப்படும் பள்ளிவாசல்களும் இடிக்கப்பட்டிருக்கும்.
(அல்குர்ஆன் 22:40)

மனிதர்களில் ஒருவர் மூலமாக இன்னொருவரைத் தடுத்திருக்காவிட்டால் சர்ச்சுகளும், மத ஆலயங்களும், கோவில்களும், பள்ளிவாயில்களும் இருந்திருக்காது என்று இறைவன் சொல்வதிலிருந்து மனிதன்தான் தங்களது மத ஆலயங்களைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று சொல்கிறான். அல்லாஹ் நமது பள்ளிவாசல்களுக்கு எந்த உத்திரவாதத்தையும் தரவில்லை. அல்லாஹ் உத்திரவாதம் தந்திருந்தால் நிச்சயம் காப்பாற்றுவான். பள்ளிவாசல்களை முஸ்லிம்கள் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். கோவில்களை அதற்குச் சொந்தம் கொண்டாடுபவர்கள் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.

சர்ச்சுக்களை அதற்குச் சொந்தம் கொண்டாடுபவர்கள் காப்பாற்ற வேண்டும். பள்ளிவாசலை எவனும் தொடமுடியாது என்கிற சவாலையெல்லாம் விடமுடியாது. எவனும் தொடலாம், அழிக்க வரலாம், நாம்தான் நமது இடத்தை நமக்குச் சொந்தமானதைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். பள்ளிவாசலை அழிக்க வந்தவர்களுக்கு தண்டனை மறுமையில் கிடைக்கும். ஆனால் இந்த உலகில் அவனுக்கு ஏதாவது நடக்கும் என்று உத்தரவாதம் கொடுக்கமுடியாது. இந்தச் செய்தியையும் இந்த அத்தியாயம் நமக்கு படிப்பினையாக தருகிறது.

அரபியர்களின் யானை ஆண்டு கணக்கு

இதில் இன்னொரு செய்தியையும் தெரிந்து கொள்ள வேண்டும். அரபியர்கள் வருடத்தைக் குறிப்பிடும்போது இந்த யானைப் படை அழிக்கப்பட்ட சம்பவத்தை வைத்துத்தான் பேசுவார்கள். தற்போது உலக வழக்கிலுள்ள கி.பி 2000, கி.பி 2003 என்றெல்லாம் பேசிக் கொள்ளும் ஆண்டு முறை, ஏசு வந்து போன வரலாற்றை வைத்துப் பேசுகிறோம். கி.பி என்றால் கிறித்து பிறந்த பின் என்று பொருள். கி.மு என்றால் கிறித்து பிறப்பதற்கு முன் என்று பொருள்.
நபியவர்கள் மரணிக்கும் வரைக்கும் ஆண்டுகளின் எண்ணிக்கையைக் குறிக்க யானை ஆண்டு 1, யானை ஆண்டு 2 (عام الفيل - ஆமுல் ஃபீல்) என்ற வார்த்தையைப் பயன்படுத்தி வந்தார்கள்.

யானை ஆண்டு என்ற பெயரில்தான் எழுதியும் வந்தார்கள். வரலாற்றில் நபியவர்கள் எப்போது பிறந்தார்கள் என்பதைக் குறிக்க யானை ஆண்டு 1ல் பிறந்தார்கள் என்று எழுதுவார்கள். நபியவர்கள் எப்போது நபியானார்கள் என்பதைக் குறிக்க யானை ஆண்டு 40 என்பார்கள். எப்போது நபியவர்கள் ஹிஜ்ரத் செய்தார்கள் என்பதைக் குறிக்க யானை ஆண்டு 53 என்பார்கள். எப்போது நபியவர்கள் மரணித்தார்கள் என்பதைக் குறிக்க யானை ஆண்டு 63 என்பார்கள். நபியவர்கள் மரணிக்கும் வரைக்கும் இந்த யானை ஆண்டுதான் இஸ்லாமிய வரலாறாகவே இருந்தது.

நபியவர்கள் மரணித்த பிறகு அபூபக்கர் ஆட்சியிலும் அப்படித்தான் இருந்தது. அதன் பிறகு உமர் ரலியின் ஆட்சி காலத்தில் யானை ஆண்டை எடுத்துவிட்டு, ஹிஜ்ரத் செய்த நிகழ்ச்சியை ஆண்டின் பெயராக அறிவித்தார்கள். அன்றிலிருந்து உலக முஸ்லிம்கள் அனைவரும் ஹிஜ்ரியை இஸ்லாமிய ஆண்டாகப் பயன்படுத்திக் கொண்டு வருகிறோம்.

இன்னும் சொல்லப்போனால் நபியவர்களின் அங்கீகாரம் பெற்றது என்றால் யானை ஆண்டைத்தான் சொல்ல வேண்டும். நபியவர்கள் எங்காவது தனது ஹிஜ்ரத்திலிருந்து ஆண்டுகளை கணக்கிட்டுக் கொள்ளுங்கள் என்று எந்த இடத்திலும் கூறவில்லை. தனது பிறப்பிலிருந்தும் ஆரம்பியுங்கள் என்றும் சொல்லவில்லை. தனது நுபுவ்வத் (நபித்துவ ஆரம்பம்) ஆரம்பித்திலிருந்து ஆரம்பியுங்கள் என்றும் சொல்லவில்லை. தனது மரணித்திலிருந்தும் ஆண்டுகளை எண்ணுங்கள் என்றும் சொல்லவில்லை.

உமர் (ரலி) தான் யானை ஆண்டு என்பது நமக்கும் அவர்களுக்கும் எல்லோருக்கும் பொதுவானது. நமக்கு என தனியாக ஒரு ஆண்டு எண்ணிக்கை வேண்டும் என்று ஹிஜ்ரத்தை அடிப்படையாகக் கொண்டார்கள்.
நபியவர்களின் 53 வது ஆண்டுதான் இஸ்லாமிய ஆண்டான ஹிஜ்ரத்தின் முதலாம் ஆண்டு. அப்படியெனில் ஹிஜ்ரி 5 என்றால் இஸ்லாமிய வரலாறு 5 என்று நம்பிவிடக் கூடாது. ஹிஜ்ரி 5 என்றால் நபியவர்கள் பிறந்ததிலிருந்து 58 வது வருடம் என்று பொருள். எனவே ஹிஜ்ரியை விட யானை ஆண்டைத்தான் நபியவர்கள் ஆதரித்து உள்ளார்கள். அவர்கள் அதை மாற்ற விரும்பவில்லை. நபியவர்களே பயன்படுத்தும் அளவுக்கு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி குர்ஆனிலேயே அல்லாஹ் நினைவுபடுத்தும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு ஆண்டுதான் யானை சம்பவம் என்பதையும் இதில் தெரிந்து கொள்கிறோம்.

நபியவர்கள் கூறியதாக பதிவு செய்யபட்ட ஹதீஸ் நூற்களில் தேடினால், இந்தச் சம்பவத்தைப் பற்றி இரண்டு இடங்களில் குறிப்பிடுகிறார்கள். ஒரு பிராயணத்தில் போகும் போது கஸ்வா என்ற அவர்களின் குதிரை சண்டித்தனம் செய்கிறது. எப்படி விரட்டினாலும் அடம்பிடித்துக் கொண்டு போகாமல் இருக்கிறது. அப்போதுதான் நபியவர்கள் யானைப் படையைத் தடுத்தவன்தான் இதையும் தடுத்து நிறுத்தி விட்டான் என்கிறார்கள்.
அதாவது யானைப் படையை அல்லாஹ் அழித்ததை ஞாபகப்படுத்திக் காட்டுகிறார்கள். இலேசாகச் சுட்டிக் காட்டுகிறார்கள்.

2734 حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ أَخْبَرَنَا مَعْمَرٌ قَالَ أَخْبَرَنِي الزُّهْرِيُّ قَالَ أَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ عَنْ الْمِسْوَرِ بْنِ مَخْرَمَةَ وَمَرْوَانَ يُصَدِّقُ كُلُّ وَاحِدٍ مِنْهُمَا حَدِيثَ صَاحِبِهِ قَالَا خَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ زَمَنَ الْحُدَيْبِيَةِ حَتَّى إِذَا كَانُوا بِبَعْضِ الطَّرِيقِ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ  فَقَالَ النَّاسُ حَلْ حَلْ فَأَلَحَّتْ فَقَالُوا خَلَأَتْ الْقَصْوَاءُ خَلَأَتْ الْقَصْوَاءُ فَقَالَ النَّبِيُّ صَلَّى الله عَلَيْهِ وَسَلَّمَ مَا خَلَأَتْ الْقَصْوَاءُ وَمَا ذَاكَ لَهَا بِخُلُقٍ وَلَكِنْ حَبَسَهَا حَابِسُ الْفِيلِ ثُمَّ قَالَ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَا يَسْأَلُونِي خُطَّةً يُعَظِّمُونَ فِيهَا حُرُمَاتِ اللَّهِ إِلَّا أَعْطَيْتُهُمْ إِيَّاهَا ثُمَّ زَجَرَهَا فَوَثَبَتْ  رواه البخاري
ஹுதைபிய்யா உடன்படிக்கை நடைபெற்ற காலகட்டத்தில் (மக்காவை நோக்கி) நபி (ஸல்) அவர்கள் புறப்பட்டார்கள். பாதையில் சென்று கொண்டிருந்தபோது நபி (ஸல்) அவர்கள், ...... இறுதியில், மக்காவினுள் இறங்கும் வழியாக அமைந்துள்ள சிறிய மலை ஒன்றை அடைந்ததும் ("மிரார்' என்னும் இடத்தில்) அவர்களுடைய வாகனம் (ஒட்டகம்) மண்டியிட்டு அமர்ந்து கொண்டது. மக்கள்  (அதை எழுப்பி நடக்க வைப்பதற்காக) "ஹல்ஹல்' என்று அதட்டினார்கள். அது எழும்ப மறுத்து முரண்டு பிடித்தது. உடனே, மக்கள், " "கஸ்வா' பிடிவாதம் பிடிக்கிறது, "கஸ்வா' பிடிவாதம் பிடிக்கிறது'' என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், "கஸ்வா பிடிவாதம் பிடிக்கவுமில்லை; பிடிவாதம் பிடிப்பது அதன் குணமுமில்லை. ஆனால், (யமன் நாட்டு மன்னன் அப்ரஹா தலைமையில் யானைப் படை கஅபாவை இடிக்க வந்தபோது) யானையைத் தடுத்த(இறை)வனே இதையும் தடுத்து வைத்திருக்கின்றான்'' என்று கூறினார்கள். பிறகு, "என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! (போரைக் கைவிட்டு) அல்லாஹ்வின் புனித(த் தல)ங்களை கண்ணியப்படுத்தும் ஒரு திட்டத்தை அவர்கள் என்னிடம் கேட்டால் அதை நிச்சயம் அவர்களுக்கு நான் (வகுத்துக்) கொடுப்பேன்'' என்று கூறினார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள் தம் ஒட்டகத்தைத் தட்டி எழுப்பினார்கள். உடனே அது குதித்தெழுந்தது. பிறகு, நபியவர்கள் மக்களை விட்டுத் திரும்பி ஹுதைபிய்யாவின் எல்லையில்  சிறிதளவே தண்ணீர் இருந்த ஒரு பள்ளத்தின் அருகே முகாமிட்டார்கள்.
அறிவிப்பவர்: மிஸ்வர் பின் மக்ரமா (ரலி),
புகாரி 2731,2732


யானைப் படையைத் தடுத்து நிறுத்தியவன்தான் இந்த ஒட்டகத்தையும் தடுத்து நிறுத்தி வைத்துள்ளான். அல்லாஹ் ஏதேனும் ஒரு நோக்கத்திற்காக இப்படியெல்லாம் செய்கிறான் என்று நபியவர்கள் கூறினார்கள். இந்தச் செய்தியில்தான் யானைப் படையைப் பற்றி சின்ன துணுக்கை நமக்கு நபியவர்கள் சொன்னதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதேபோன்று நபியவர்கள் செய்த முதலும் கடைசியுமான விடைபெறும் ஹஜ்ஜில் பேசிய உரையிலும் யானைப்படையைச் சுட்டிக் காட்டினார்கள்.

2434 حَدَّثَنِي أَبُو هُرَيْرَةَ رَضِيَ الله عَنْهُ قَالَ لَمَّا فَتَحَ الله عَلَى رَسُولِهِ صَلَّى الله عَلَيْهِ وَسَلَّمَ مَكَّةَ قَامَ فِي النَّاسِ فَحَمِدَ اللَّهَ وَأَثْنَى عَلَيْهِ ثُمَّ قَالَ إِنَّ الله حَبَسَ عَنْ مَكَّةَ الْفِيلَ وَسَلَّطَ عَلَيْهَا رَسُولَهُ وَالْمُؤْمِنِينَ فَإِنَّهَا لَا تَحِلُّ لِأَحَدٍ كَانَ قَبْلِي وَإِنَّهَا أُحِلَّتْ لِي سَاعَةً مِنْ نَهَارٍ وَإِنَّهَا لَا تَحِلُّ لِأَحَدٍ بَعْدِي فَلَا يُنَفَّرُ صَيْدُهَا وَلَا يُخْتَلَى شَوْكُهَا وَلَا تَحِلُّ سَاقِطَتُهَا إِلَّا لِمُنْشِدٍ وَمَنْ قُتِلَ لَهُ قَتِيلٌ فَهُوَ بِخَيْرِ النَّظَرَيْنِ إِمَّا أَنْ يُفْدَى وَإِمَّا أَنْ يُقِيدَ فَقَالَ الْعَبَّاسُ إِلَّا الْإِذْخِرَ فَإِنَّا نَجْعَلُهُ لِقُبُورِنَا وَبُيُوتِنَا فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَّا الْإِذْخِرَ فَقَامَ أَبُو شَاهٍ رَجُلٌ مِنْ أَهْلِ الْيَمَنِ فَقَالَ اكْتُبُوا لِي يَا رَسُولَ اللَّهِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اكْتُبُوا لِأَبِي شَاهٍ قُلْتُ لِلْأَوْزَاعِيِّ مَا قَوْلُهُ اكْتُبُوا لِي يَا رَسُولَ اللَّهِ قَالَ هَذِهِ الْخُطْبَةَ الَّتِي سَمِعَهَا مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - البخاري

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹு தஆலா தன் தூதருக்கு மக்கா நகர வெற்றியை அளித்தபோது அவர்கள் மக்கள் மத்தியில் நின்று அல்லாஹ்வைப் புகழ்ந்து விட்டு, "அல்லாஹு தஆலா மக்காவை (துவம்சம் செய்வதை) விட்டு யானை(ப் படை)யைத் தடுத்தான். அதன்மீது (தற்போது) தன் தூதருக்கும் (எனக்கும்) மூமின்களுக்கும் அதிகாரம் வழங்கியுள்ளான். இந்த மக்கா நகரில் எனக்கு முன்பும் எவருக்கும் போரிடுவதற்கு அனுமதியளிக்கப்பட்டதில்லை. எனக்கும் கூட (இதில் போரிடுவதற்கு) பகலின் ஒரு சிறிது நேரத்தில் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. எனக்குப் பின்பும் அது எவருக்கும் அனுமதிக்கப்படவில்லை.
இதன் வேட்டைப் பிராணிகள் விரட்டப்படக் கூடாது. இதன் முட்கள் பிடுங்கப்படக் கூடாது. இதில் கீழே விழுந்து கிடக்கும் பொருளை (எடுத்து வைத்துக் கொள்வது) அதை அறிவிப்புச் செய்பவருக்கே தவிர வேறெவருக்கும் அனுமதிக்கப்படாது. எவருக்குக் கொல்லப்பட்ட தன் உறவினர் தொடர்பான உரிமை இருக்கின்றதோ, அவர் இரண்டு விஷயங்களில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். ஒன்று, அவர் நஷ்ட ஈட்டுத் தொகை பெற்றுக் கொள்ளலாம்; அல்லது அதற்காகப் பழிவாங்கிக் கொள்ளலாம்'' என்று கூறினார்கள்.
அப்பாஸ் (ரலி) அவர்கள், "இத்கிர் புல்லைத் தவிரவா? ஏனெனில், அதை நாங்கள் எங்கள் கப்ருகளுக்கும் வீடுகளுக்கும் பயன்படுத்துகிறோம்'' என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், "இத்கிர் புல்லைத் தவிர'' என்று கூறினார்கள். அப்போது யமன்வாசிகளில் ஒருவரான அபூஷாஹ் (ரலி) என்பவர் எழுந்து, "அல்லாஹ்வின் தூதரே! (இதை) எனக்கு எழுதிக் கொடுங்கள்'' என்று கேட்டார்.  அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அபூஷாஹுக்கு எழுதிக் கொடுங்கள்'' என்று உத்தரவிட்டார்கள்.
புகாரி 2434


இவைதாம் இந்த அத்தியாயத்தைப் பற்றி நபியவர்கள் சொன்ன செய்திகளாகும்.
இப்போது ஃபீல் அத்தியாயத்தையும் குரைஷி அத்தியாயத்தையும் இணைத்துப் பொருள் கொண்டால் முழுமையாக செய்தி புரிந்து கொள்ளும்.

أَلَمْ تَرَى - நீ சிந்திக்கவில்லையா? என்று நபியைப் பார்த்து அல்லாஹ் சொன்னாலும் நம்மையும் சேர்த்துத்தான் சொல்கிறான். நாமும்தான் அதில் சிந்திக்க வேண்டும்.

كَيْفَ فَعَلَ رَبُّكَ - உமது இரட்சகன் எப்படிச் செய்தான் என்பதைப் பார்க்கவில்லையா?
بِأَصْحَابِ الْفِيلِ - யானைப் படையினரை என்ன செய்தான் என்பதை சிந்தித்துப் பார் என்று கூறுகிறான்.

وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ - அபாபீல் பறவைகளை அவர்களுக்கு எதிராக அவன் அனுப்பிவைத்தான்.அதனையும் சிந்திக்கவில்லையா?

تَرْمِيهِمْ بِحِجَارَةٍ مِنْ سِجِّيلٍ - சூடேற்றப்பட்ட கற்களை அ(ப்பற)வைகள் அவர்களின் மீது எறிந்தன.அதனையும் சிந்திக்கவில்லையா?

فَجَعَلَهُمْ كَعَصْفٍ مَأْكُولٍ - மென்று உமிழப்பட்ட வைக்கோலைப் போன்று அவர்களை அவன் ஆக்கினான்.அதனையும் சிந்திக்கவில்லையா?

இவைகளையெல்லாம் ஏன் செய்தேன் என்றால்.. لِإِيلَافِ قُرَيْشٍ (லீஈலாஃபி குரைஷி) என்று அடுத்த அத்தியாயத்தில் பதில் சொல்கிறான்.

لِإِيلَافِ قُرَيْشٍ - குரைஷிகளை மகிழ்விப்பதற்காக, அவர்களுக்குப் பேருபகாரம் செய்வதற்காக, அவர்களுக்கு கருணை காட்டுவதற்காக
சண்டை நடந்தால் யாருக்கு நஷ்டம்? மக்காவில் உள்ளவர்களுக்குத்தான் நஷ்டம். அவர்களிடம்தான் இறைவன் உங்களைக் காப்பதற்காகத்தான் இப்படியெல்லாம் செய்தேன் என்று கூறுகிறான்.

யானைப் படையைத் தோற்கடித்து நாசமாக்கியதை அல்லாஹ் நினைவுபடுத்திவிட்டு, இவ்வளவு செய்தும் எனக்கு நன்றி மறந்து கல்லையும் மண்ணையும் வணங்குகிறீர்களே என்று கேட்கிறான்.
இப்படி மேற்சொன்ன ஃபீல் அத்தியாயத்துடன் சேர்ந்த செய்தியைச் சொல்வதினால்தான் பல அறிஞர்கள் இரண்டு அத்தியாயங்களும் ஒன்று என்கிறார்கள்.

அத்தியாய எண்ணிக்கைக்காக இரண்டு சூராக்கள் என்று சொல்லிக் கொண்டாலும், கருத்துக்காகவும் செறிந்த பொருளுக்காவும் ஒரே அத்தியாயமாக ஆக்குகிறார்கள்.

ஃபீல் அத்தியாயத்தின் அர்த்தம் லீஈலாஃபி குரைஸ் அத்தியாயத்துடன் இணைகிறது என்பதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்.
கோடை காலத்திலும் குளிர் காலத்திலும் குரைஷிகள் வர்த்தகப் பிரயாணம் மேற்கொள்வார்கள். இப்படிப் பிரயாணத்தில் வியாபாரத்திற்காக ஒட்டகங்களில் சரக்குகளை ஏற்றிக் கொண்டு செல்வார்கள். கொண்டு போகும் நேரத்தில்தான் மக்காவாசிகளுக்கு அருள் செய்யவேண்டும். எப்படி அருள் செய்திருக்கிறான் என்பதைத்தான் இறைவன் சொல்கிறான்.
யானைப் படையினர் கஃபாவைத் தகர்த்தும் மக்காவாசிகளை அழித்துமிருந்தால் அருள் செய்யப்பட்டிருக்க முடியாது. யானைப் படையினரைத் தோற்கடித்ததின் காரணமாகத்தான் குரைஷிகள் அருள் செய்யப்பட்டிருக்கிறார்கள்.

இன்னும் இதில் ஒரு பிண்ணனியும் இருக்கிறது. அந்தக் காலங்களில் வர்த்தகக் கூட்டங்களைக் கொள்ளையடிப்பது வழக்கமான ஒன்று.  இப்படி வர்த்தகக் கூட்டம் பிரயாணம் செய்தால் கொள்ளைக் கூட்டம் சூரையாடிச் சென்றுவிடுவார்கள். இந்தக் கொள்ளைக் கூட்டம் மக்காவாசிகள், குரைஷிகள் என்று தெரிந்தால் கை வைக்க மாட்டார்கள். ஏனெனில் மக்காவைத் தகர்க்க வந்த யானைப் படையினரை அல்லாஹ் பறவையை அனுப்பி காப்பாற்றிவிட்டான் என்ற காரணத்தினால் அவர்கள் மீது யாரும் கை வைக்க மாட்டார்கள் கொள்ளைக் கூட்டத்தினர். இப்படி பயமற்று வியாபாரத்திற்குப் போகிறவர்கள் மக்காவாசிகள்தான்.

இந்த யானைப் படை அழிப்பு சம்பவத்திற்குப் பிறகு மக்காவிலுள்ளவர்களுக்கு அல்லாஹ் இப்படியொரு பேருபகாரத்தை, உதவியைச் செய்துவிட்டான். இப்படியொரு கண்ணியத்தை அந்த சமுகத்திற்கு இறைவன் வழங்கியிருந்தான்.

அதனால்தான் இறைவன் கோடை கால மற்றும் குளிர் கால பிரயாணத்தின் போது குரைஷிகளுக்கு அருள் புரிவதற்காக என்று கூறுகிறான். பிரயாணத்தில் உங்களுக்குச் சிரமம் தரக்கூடாது என்பதற்காகவும்தான் யானைப் படையை இறைவன் அழித்தான். யானைப் படையை அழித்த சம்பவத்தினால்தான் பயமில்லாமல் மக்காவாசிகள் பிரயாணம் செய்கிறார்கள். இப்படியெல்லாம் உபகாரம் செய்தேனே? சிந்தித்துப் பார்க்கமாட்டாயா? என்று அர்த்தம்.

فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ - எனவே அவர்கள் (மக்கா வாசிகள்) இந்த ஆலயத்தின் இரட்சகனை வணங்கட்டும்.

இந்த வசனம் கஃபாவுடன் சம்பந்தப்பட்டுத்தான் வருகிறது. மேலே ஃபீல் அத்தியாயத்தில் கஃபாவைக் காப்பாற்றிய வரலாற்றைச் சொல்லிவிட்டுத்தான் லீஈலாஃபி குரைஷ் அத்தியாயத்தில் இப்படிச் சொல்கிறான்.

எல்லா பள்ளி வாசல்களுக்கும் அல்லாஹ்தான் இறைவன். இருந்தாலும் மக்காவிலுள்ள கஃபாவிற்குத் தனிச் சிறப்பை இறைவன் வைத்திருப்பதினால் "இந்த ஆலயத்தின் இறைவனை வணங்கட்டும்' என்கிறான். எந்த ஆலயத்தை பிறர் தகர்க்கமுடியாமல் தனது நேரடிக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறானோ அந்த ஆலயத்தின் இரட்சகனை வணங்கட்டும் என்கிறான்.

الَّذِي أَطْعَمَهُمْ مِنْ جُوعٍ -அவனே பசிக்கும்போது அவர்களுக்கு உணவளிக்கிறான்.

கற்பனை செய்து பார்த்தால் மக்காவில் ஒருவருக்கும் சோறு கிடைக்கவே செய்யாது. மரணித்து இருக்க வேண்டும். ஏனெனில் அங்கு இயற்கை வளம் எதுவும் கிடையாது. அன்றைக்கு மக்காவில் ஒன்றும் கிடையாது. ஒரு ஊர் என்றிருந்தால் தோட்டந்துறவு, வயல் வரப்பு, வாய்க்கால் தண்ணீர் என்று இருந்தால்தான் அதனை ஊர் என்போம். இவை எதுவும் இல்லாததுதான் மக்கா என்ற ஊர். ஆனால் மக்காவில் எல்லாப் பொருட்களும் உலகத்தின் பல பாகங்களில் இருந்து அளவிலா வகையில் வந்து கொண்டேயிருக்கிறது. ஏனெனில் அதை ஒரு சுற்றுலாத் தளம் போன்று இறைவன் ஆக்கியிருக்கிறான். அதனால்தான் மக்காவிற்கு சாப்பாடு கிடைக்கிறது.

وَآمَنَهُمْ مِنْ خَوْفٍ - மேலும் அச்சத்திலிருந்து (பயத்திலிருந்து) அவர்களை அவன் பாதுகாத்திருக்கிறான்.
அரபுப் பிரதேசத்தில் பயமில்லாமல் படுத்துறங்குகிற ஊர் மக்காதான். எங்கு அணுகுண்டு போட்டாலும் சரி; மக்காவில் போடமுடியாது. ஏனெனில் இறைவன் கட்டுப்பாட்டில் அந்த ஊர் உள்ளது. இப்படியெல்லாம் அருள் செய்த அல்லாஹ்வாகிய என்னை அவர்கள் வணங்கட்டும் என்று கூறுகிறான். முதலில் நபியவர்கள் எந்தக் குரைஷிகளுக்காக அனுப்பப்பட்டார்களோ அவர்களிடம்தான் அல்லாஹ் சொல்கிறான். அப்போதுதான் அவர்களுக்கு சொன்ன செய்தி. பிறகு நபியவர்கள் முழு மனித குலத்திற்கும் தூதராக ஆக்கப்பட்டுவிட்டார்கள்.

இப்படி இரண்டு சூராக்களையும் சேர்த்தால்தான் சரியான அர்த்தம் வருகிறது. பிண்ணனியுடன் புரிய வேண்டிய செய்திகளும் மிகக் கச்சிதமாகப் பொருந்திப் போவதையும் காண்கிறோம்.

இதுபோக பொதுவான இன்னொரு படிப்பினையும் இருக்கத்தான் செய்கிறது. அல்லாஹ் ஏதாவது ஒரு உதவியை நமக்குச் செய்தால் தொழுதோ, திக்ரின் மூலமாகவோ, நோன்பு வைத்தோ, தர்மம் செய்தோ, பிரார்த்தனை மூலமாகவோ மார்க்கம் அனுமதித்த எதாவது ஒரு முறையில் அல்லாஹ்வுக்காக நாம் நன்றி செலுத்த வேண்டும்.

இறைவன் நமக்குச் செய்கிற உபகாரங்களுக்கும் உதவிகளுக்கும் வணக்கத்தின் மூலமாக அவனுக்கு நன்றி செலுத்திட வேண்டும் என்கிற பாடத்தையும் அல்லாஹ் நமக்கு இந்த அத்தியாயத்தில் கற்றுத் தருகிறான். அல்லாஹ் கற்றுத் தருகிற பாடத்தை விளங்கி நடக்கிற நன்மக்களாக அல்லாஹ் ஆக்கியருள் புரிவானாக!...

from www.onlinepj.com

share this.. https://bit.ly/3UGIGmm

Search This Blog