12. ஆதம் நபி வசித்த சொர்க்கம் எது?
2:35, 7:19, 7:22, 7:27, 20:121 ஆகிய வசனங்களில் "ஆதம் நபி, சொர்க்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்'' என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு இரு வேறு கருத்துக்கள் கொள்ளப்பட்டுள்ளன.
'சொர்க்கம்' என்று தமிழ்ப்படுத்திய இடத்தில் 'ஜன்னத்' என்ற சொல் இடம் பெற்றுள்ளது.
மறுமையில் நல்லோர்க்கு இறைவன் வழங்கவுள்ள சொர்க்கச் சோலையும் 'ஜன்னத்' எனக் கூறப்படுகிறது.
இவ்வுலகில் அமைந்துள்ள தோட்டங்களும் 'ஜன்னத்' எனக் கூறப்படுகிறது.
திருக்குர்ஆனில் இரண்டு கருத்துக்களிலும் இந்தச் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஆதம் (அலை) சொர்க்கத்தில் தங்க வைக்கப்பட்டு இறைக் கட்டளையை மீறியதால் வெளியேற்றப்பட்டார் என்று பலர் கூறுகின்றனர்.
ஆதம் (அலை) பூமியில் படைக்கப்பட்டதாகத் திருக்குர்ஆன் (2:30) கூறுவதாலும், சொர்க்கத்தில் ஷைத்தான் நுழைந்து வழிகெடுக்க முடியாது என்பதாலும், பூமியில் ஆதமுக்காக அமைக்கப்பட்ட சோலையில் தான் தங்க வைக்கப்பட்டார்; அங்கிருந்து தான் வெளியேற்றப்பட்டார் என்றும் சிலர் கூறுகின்றனர்.
இரண்டில் எதை ஏற்றாலும் இஸ்லாத்தின் அடிப்படைக்கோ, இந்நிகழ்ச்சியிலிருந்து பெற வேண்டிய பாடத்துக்கோ எந்தப் பாதிப்பும் ஏற்படாது.
13. தடுக்கப்பட்ட மரம் எது?
"இந்த மரத்தை நெருங்காதீர்கள்'' என்று திருக்குர்ஆன் 2:35, 7:19, 7:20, 7:22, 20:120 ஆகிய வசனங்கள் கூறுகின்றன. இது குறித்து பலரும் பல கருத்துக்களைக் கூறியுள்ளனர்.
ஆனால் திருக்குர்ஆனிலும், நபிமொழிகளிலும் இது எந்த மரம் எனக் கூறப்படவில்லை. மரம் எதுவென்பதில் முக்கியத்துவம் ஏதுமில்லை. எல்லா வசதிகளையும் செய்து கொடுத்த பின்பும் ஒரே ஒரு மரத்தை நெருங்காமல் ஆதம் (அலை) தம்மைக் கட்டுப்படுத்த இயலவில்லை என்பதும், அவர் வெளியேற்றப்பட்டதற்கு அது காரணமாக அமைந்தது என்பதும் தான் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம்.
தடுக்கப்பட்ட மரம் இதுதான் என்று ஆதாரமில்லாமல் கூறுவது இட்டுக் கட்டும் குற்றத்தில் சேர்ந்து விடும்.
14. ஆதம் மன்னிப்புக் கேட்டது எப்படி?
இறைவன் புறத்திலிருந்து சில வார்த்தைகளை ஆதம் (அலை) கற்றுக் கொண்டார் என்று 2:37 வசனத்தில் கூறப்படுகிறது. அந்த வார்த்தைகள் யாவை என்பது இவ்வசனத்தில் கூறப்படாவிட்டாலும் 7:23 வசனத்தில் கூறப்பட்டுள்ளது.
எங்கள் இறைவா! எங்களுக்கே நாங்கள் அநீதியிழைத்து விட்டோம். நீ எங்களை மன்னித்து அருள் புரியாவிட்டால் நாங்கள் நட்டமடைந்தோராவோம் என்பது தான் அந்த வார்த்தைகள் என்று 7:23 வசனம் தெளிவுபடுத்துகிறது.
இதைக் கூறி இருவரும் மன்னிப்புக் கேட்டனர்; அல்லாஹ் அவர்களை மன்னித்தான் என்பதையும், தமது தவறை உணர்ந்து வருந்திக் கேட்கும்போது இறைவன் மன்னிப்பான் என்பதையும் 7:23 வசனத்திலிருந்து அறியலாம்.
தவறு செய்த ஆதம் (அலை) முஹம்மது நபியின் பொருட்டால் மன்னிப்புக் கேட்டதாக ஒரு கட்டுக் கதையைச் சிலர் கூறி வருகின்றனர். அந்தக் கட்டுக்கதை இது தான்:
ஆதம் (அலை) அவர்கள் படைக்கப்பட்டவுடன் சொர்க்கத்தைப் பார்த்தார்களாம். அதன் நுழைவாயிலில் "லாயிலாஹ இல்லல்லாஹூ'' என்பதுடன் "முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்'' என்றும் எழுதப்பட்டிருந்ததாம். "இறைவா உன் பெயருடன் முஹம்மது என்ற பெயரைச் சேர்த்து எழுதியுள்ளாயே அவர் யார்?'' என்று ஆதம் (அலை) கேட்டார்களாம். அதற்கு இறைவன் "அவர் உமது வழித்தோன்றலாக வரவிருப்பவர். அவர் இல்லாவிட்டால் உன்னையே படைத்திருக்க மாட்டேன்'' என்று கூறினானாம். இதன் பின்னர் ஆதம் (அலை) இறைவனின் கட்டளையை மீறியதால் வெளியேற்றப்பட்டபோது சொர்க்கத்தில் முஹம்மது நபியைப் பற்றி எழுதப்பட்டிருந்தது அவர்களுக்கு நினைவுக்கு வந்ததாம். "இறைவா! அந்த முஹம்மதின் பொருட்டால் என்னை மன்னிப்பாயாக'' என்று அவர்கள் பிரார்த்தனை செய்ததால் உடனே அவர்களை அல்லாஹ் மன்னித்தானாம்.
இச்செய்தி திர்மிதீ, ஹாகிம் மற்றும் சில நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்செய்தி அப்துர்ரஹ்மான் பின் ஸைத் பின் அஸ்லம் என்பவர் வழியாகவே அறிவிக்கப்படுகிறது. இவர் இட்டுக்கட்டிக் கூறுவதில் பிரசித்தி பெற்றவர். எனவே இச்செய்தி இட்டுக்கட்டப்பட்டது என அறிஞர்கள் கூறியுள்ளனர்.
ஆதம் (அலை) அவர்கள் எந்தச் சொற்களைப் பயன்படுத்திப் பாவ மன்னிப்புக் கேட்டர்கள் என்று திருக்குர்ஆன் (7:23) தெளிவாகக் கூறுகிறது. அதற்கு முரணாகவும் இச்செய்தி அமைந்துள்ளது. இட்டுக்கட்டப்பட்ட செய்தி என்பதற்கு இது மற்றொரு காரணம்.
எனவே இந்தக் கதையை நம்புவது திருக்குர்ஆனுக்கு எதிரானதாகும்.
மேலும் ஒருவர் பொருட்டால் அல்லாஹ்விடம் பிரார்த்திப்பது பொருளற்றது என்பதை அறிந்து கொள்ள 141வது குறிப்பையும் பார்க்கவும்.
15. அனைவரும் வெளியேறுங்கள் என்று கூறியது ஏன்?
ஆதம் (அலை), அவரது மனைவி ஆகிய இருவர் மட்டுமே இருந்தபோது அவ்விருவரையும் அல்லாஹ் வெளியேற்றினான். அவ்வாறிருக்க "அனைவரும் வெளியேறுங்கள்!'' என்று இவ்வசனத்தில் (2:38) ஏன் குறிப்பிட வேண்டும்? என்று சிலர் நினைக்கலாம்.
உலகம் அழியும் வரை தோன்றும் அனைவரையும் அவ்விருவரும் தமக்குள் சுமந்திருந்தார்கள். எனவே அவர்களிலிருந்து தோன்ற இருப்பவர்களையும் கருத்தில் கொண்டு இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
ஆதமுடைய மக்களின் முதுகுகளிலிருந்து அவர்களின் சந்ததிகளை இறைவன் வெளியாக்கி, "நான் உங்கள் இறைவன் அல்லவா?'' என்று கேட்டு உறுதிமொழி எடுத்த செய்தி திருக்குர்ஆன் 7:172 வசனத்தில் இடம்பெற்றுள்ளது.
ஆதம் சுமந்திருந்த அனைவரையும் கருத்தில் கொண்டு அனைவரும் வெளியேறுங்கள் என்று சொல்லப்பட்டது என்பதை இதிலிருந்து விளங்கலாம்.
இன்று உலகில் வாழுகின்றவர்களும், இதற்கு முன் வாழ்ந்து மறைந்தவர்களும், இனி பிறக்கப் போகின்ற எல்லா மனிதர்களும் முதல் மனிதருக்குள் அடக்கமாகியிருந்தனர். முதல் மனிதனிடமிருந்தே ஒவ்வொரு மனிதனையும் வேறுபடுத்திக் காட்டும் மரபணுக்களை வழிவழியாக மனிதன் பெற்றுக் கொள்கிறான் என்ற அறிவியல் உண்மையை நீங்கள் அனைவரும் வெளியேறுங்கள் என்ற சொல் மூலம் இவ்வசனம் உணர்த்தி நிற்கிறது.
திருக்குர்ஆன் இறைவேதமே என்பதற்கான சான்றுகளில் ஒன்றாக இவ்வசனங்கள் அமைந்துள்ளன.
16. சிறப்பித்துக் கூறப்படும் இஸ்ரவேலர்கள்
2:47, 2:122 45:16 ஆகிய வசனங்களில் "இஸ்ரவேலர்களை அகிலத்தாரை விடச் சிறப்பித்திருந்தேன்'' என்று இறைவன் கூறுகிறான்.
பிறப்பின் அடிப்படையில் எவரும் எந்தச் சிறப்பும் பெற முடியாது என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகளில் ஒன்றாகும். இதை 2:111, 3:75, 49:13 ஆகிய வசனங்களில் காணலாம். இந்த அடிப்படைக் கொள்கைக்கு ஏற்பவே இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
எனவே பிறப்பால் இஸ்ரவேலர்கள் உயர்ந்தவர்கள் என்ற கருத்தில் இச்சொல் பயன்படுத்தப்படவில்லை. இஸ்ரவேலர்களுக்கு வழங்கிய ஆட்சி, அதிகாரம், பொருள் வசதி போன்ற சிறப்புக்களையே இது குறிக்கிறது.
யாகூப், யூஸுஃப், மூஸா, ஹாரூன், தாவூத், ஸுலைமான், ஸக்கரிய்யா, யஹ்யா, ஈஸா உள்ளிட்ட அதிகமான இறைத்தூதர்கள் இஸ்ரவேலர்களில் தான் அனுப்பப்பட்டனர். இந்தச் சிறப்பு மற்றவர்களுக்குக் கிடைக்கவில்லை.
திருக்குர்ஆனின் 5:20 வசனம் இதைத் தெளிவாகவே கூறுகிறது. மேற்கண்ட வசனங்களும் இஸ்ரவேலர்களுக்கு வழங்கப்படிருந்த அதிகாரத்தைத் தான் குறிப்பிடுகிறது.
இந்தச் சிறப்பு கூட என்றென்றும் நிலைத்திருக்கும் சிறப்பாக இருக்கவில்லை. 2:47, 2:122, 45:16 ஆகிய வசனங்களில் 'சிறப்பித்திருந்தேன்' என்ற இறந்தகால வினைச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் அவர்களுக்குச் சில வசதிகள் வழங்கப்பட்டதை இது குறிக்குமே தவிர காலாகாலத்துக்கும் அவர்கள் சிறப்புற்று விளங்குவார்கள் என்ற கருத்தைத் தராது.
ஆன்மிக நிலையைப் பொறுத்த வரை நன்மையை ஏவி தீமைகளைத் தடுக்கும் பொறுப்பு சுமத்தப்பட்டு சிறந்த சமுதாயமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சமுதாயம் திகழ்வதாக 2:143, 3:110 ஆகிய வசனங்கள் கூறுகின்றன. இந்தச் சிறப்பு இஸ்ரவேலர்களுக்கு இல்லை.
அதிகாரம் கொடுக்கப்பட்டு சிறப்பிக்கப்பட்ட இஸ்ரவேலர்கள் பின்னர் இறைவனின் கடுமையான கோபத்துக்கும், சாபத்துக்கும் ஆளானதாகவும் திருக்குர்ஆன் 2:88, 2:159, 4:46-47, 5:13, 5:60, 5:64, 5:78 ஆகிய வசனங்கள் கூறுகின்றன.
--P.JAINUL ABIDEEN