தவ்ஹீத் ஜமாஅத் video's: 19. ஸாமிரி அற்புதம் செய்தது எப்படி?

19. ஸாமிரி அற்புதம் செய்தது எப்படி?

 19. ஸாமிரி அற்புதம் செய்தது எப்படி?   

மூஸா நபியின் காலத்தில் வாழ்ந்த ஸாமிரி என்பவனிடம் நிகழ்ந்த அற்புதம் பற்றி இவ்வசனங்கள் (2:51, 2:54, 2:92, 2:93, 4:153, 7:148, 7:149, 7:152, 20:85-98) பேசுகின்றன.

இறைவனிடமிருந்து வேதத்தைப் பெறுவதற்காக 'தூர்' மலைக்கு மூஸா நபி அழைக்கப்பட்டார். தூர் மலை நோக்கி மூஸா நபி புறப்பட்டவுடன் அவரது சமுதாயத்தைச் சேர்ந்த ஸாமிரி என்பவன் அவர்களது நகைகளைப் பெற்று உருக்கி காளைச் சிற்பத்தை உருவாக்கினான்.

மூஸா நபியின் காலடி மண்ணை எடுத்து அதில் போட்டவுடன் அந்தச் சிற்பத்திலிருந்து ஒரு சப்தம் வந்தது. "இதுதான் கடவுள்; மூஸா வழிமாறிச் சென்று விட்டார்'' எனக் கூறி அம்மக்களை ஸாமிரி நம்ப வைத்து அதற்கு வழிபாடு நடத்தச் செய்து விட்டான் என 20:96 வசனம் கூறுகிறது.

அந்தச் சிற்பத்திலிருந்து ஒரு சப்தம் வந்ததே கடவுள் என்று நம்புவதற்கு அவர்களுக்குப் போதிய சான்றாகத் தெரிந்தது. அது பேசாது என்பதோ, இவர்களின் பேச்சுக்கு எந்த மறுமொழியும் கூறாது என்பதோ அவர்களின் சிந்தனையில் நுழையவில்லை. மூஸா நபி அவர்கள் அந்தச் சிற்பத்தைத் தீயில் போட்டு எரித்துச் சாம்பலாக்கி அந்தச் சாம்பலைக் கடலில் தூவி, இது கடவுள் அல்ல என நிரூபித்துக் காட்டினார்கள் என்பதை 20:89, 20:97 ஆகிய வசனங்களில் காணலாம்.

ஸாமிரி என்பவன் இதுபோல் செய்ய ஆற்றல் பெற்று இருந்தான் என்று இதைப் புரிந்து கொள்ளக் கூடாது.

ஒருவர் ஒரு காரியத்தைச் செய்ய வல்லவர் என்று எப்போது நாம் கூறுவோம்?

அவர் செய்ய நினைக்கும் போதெல்லாம் அதைச் செய்து காட்ட வேண்டும். அல்லது பல தடவைகள் அவர் செய்து காட்ட வேண்டும். ஒரு தீக்குச்சியை இரண்டாக உடைக்கும் சக்தி எல்லா மனிதர்களுக்கும் உள்ளது என்று நாம் நம்புகிறோம். ஒரு மனிதன் எப்போது தீக்குச்சியை உடைக்க நினைக்கிறானோ அப்போதெல்லாம் தீக்குச்சியை இரண்டாக உடைத்துக் காட்ட முடியும். ஆயிரத்தில் ஒன்று அல்லது இலட்சத்தில் ஒன்று அல்லாஹ்வின் நாட்டப்படி தவறிடலாம்.

ஒருவன் பெரிய கடப்பாரையை வளைக்கிறான். அது இரண்டாக உடைந்து விட்டது என்று வைத்துக் கொள்வோம். இவன் பெரிய கடப்பாரையை உடைக்கும் அளவுக்கு வலிமை பெற்றவன் என்று உடனே முடிவு செய்ய மாட்டோம். மேலும் சில கடப்பாரைகளைக் கொடுத்து உடைத்துக் காட்டு என்று சொல்வோம். கொடுக்கும் கடப்பாரைகளை எல்லாம் அவன் உடைத்துக் காட்டினால் அல்லது அதிகமான கடப்பாரைகளை உடைத்துக் காட்டினால் அப்போது அவனுக்கு அந்தச் சக்தி உள்ளதாக நாம் கருதுவோம்.

வேறு கடப்பாரைகளை அவ்வாறு உடைத்துக் காட்ட அவனுக்கு இயலாவிட்டால், அல்லது அதைச் செய்ய அவன் மறுத்தால் அவன் ஒருமுறை கடப்பாரையை உடைத்தது அவனது சக்தியால் அல்ல. அந்தக் கடப்பாரை உள்ளுக்குள் முறிந்து உடையும் நிலையில் இருந்திருக்கும். அல்லது அல்லாஹ் அந்தக் கடப்பாரை உடைய வேண்டும் எனக் கட்டளை போட்டதால் உடைந்து இருக்கும். இவனுக்கு கடப்பாரையை உடைக்கும் ஆற்றல் இல்லை என்ற முடிவுக்கு வருவோம்.

இப்படிச் செய்தால் இப்படி நடக்கும் என்ற கலை மூலம் ஸாமிரி திட்டமிட்டு இதைச் செய்தானா? தான் நினைத்த போதெல்லாம் காளைச் சிற்பத்தைச் செய்து அதைச் சப்தமிடச் செய்யும் ஆற்றல் பெற்று இருந்தானா? அல்லது தற்செயலாக ஒரு தடவை நடந்ததோடு சரியா?

இது பற்றி அல்லாஹ் தெளிவுபடுத்துவதைப் பாருங்கள்.

"ஸாமிரியே! உனது விஷயமென்ன?'' என்று (மூஸா) கேட்டார். "அவர்கள் காணாததைக் கண்டேன். இத்தூதரின் காலடியில் ஒரு பிடி அள்ளினேன். அதை எறிந்தேன். என் மனம் இவ்வாறு என்னைத் தூண்டியது'' என்றான். "நீ சென்று விடு! உனது வாழ்க்கையில் 'தீண்டாதே' என நீ கூறும் நிலையே இருக்கும். மாற்றப்பட முடியாத வாக்களிக்கப்பட்ட நேரமும் உனக்கு உள்ளது. நீ வணங்கிய உனது கடவுளைப் பார்! அதை நெருப்பில் எரித்து பின்னர் அதைக் கடலில் தூவுவோம்'' என்று (மூஸா) கூறினார்.   திருக்குர்ஆன் 20:95, 96, 97

என்ன நடந்தது என்று மூஸா நபி விசாரித்த போது இது போன்ற ஆற்றல் எனக்கு உள்ளது என்று ஸாமிரி கூறவில்லை. மாறாக சிற்பத்தைச் செய்து தூதரின் காலடி மண்ணை அதில் போட வேண்டும் என என் மனதுக்குத் தோன்றியது; அவ்வளவு தான் என்று அவன் விடையளித்தான்.

இது போல் செய்யும் ஆற்றல் அவனுக்கு இருக்கவில்லை. இப்படிச் செய் என்று அவன் உள்ளத்தில் அல்லாஹ் ஒரு எண்ணத்தைப் போட்டுள்ளான். அதை அவன் செய்துள்ளான் என்பது இதில் இருந்து தெரிகிறது.

ஸாமிரிக்கு மந்திர சக்தி இல்லை என்பதை நிரூபிக்கும் விதமாக மூஸா நபியவர்கள் அவன் செய்த காளைச் சிற்பத்தைத் தீயிலிட்டு பொசுக்கி கடலில் வீசிக் காட்டினார்கள். ஸாமிரி வெறுமனே அதைப் பார்த்துக் கொண்டு தான் இருக்க முடிந்தது.

உறுதியான நம்பிக்கை உடைய மூஸா நபியை ஸாமிரியால் எதிர்த்து நிற்க முடியவில்லை. தான் உண்டாக்கிய சிற்பத்தை அவனால் காப்பாற்ற முடியவில்லை. அந்தச் சிற்பமும் அவனைக் காப்பாற்றவில்லை.

இது போல் தற்செயலாக பலரது வாழ்விலும் அற்புதங்கள் நிகழும். ஆனால் அதற்கு அவர்கள் சொந்தக்காரர்களாக மாட்டார்கள்.

கோமாவில் கிடக்கும் ஒருவன் எழவே மாட்டான் என்று எல்லா மருத்துவர்களும் உறுதிப்படுத்தி விடுவார்கள். ஆனால் திடீரென்று அவன் எழுந்து உட்கார்ந்து நம்மிடம் நலம் விசாரித்தால் அதை அவன் செய்த அற்புதம் என்று அவனும் சொல்ல மாட்டான். நாமும் சொல்ல மாட்டோம். அவனுக்கு அருள் புரிவதற்காக அவனுக்கு அல்லாஹ் செய்த அற்புதம் என்று இதைச் சொல்வோம்.

ஒருவன் தானே நினைத்து. தானே திட்டமிட்டு செய்தால் தான் அதை அவன் செய்தான் என்போம்.

ஒருவன் 50 மாடிக் கட்டடத்தில் இருந்து கீழே விழுந்து சாகாமல் பிழைத்தால் எப்படி அதைப் புரிந்து கொள்வோம்? அவன் எப்போது வேண்டுமானாலும் ஐம்பது மாடிக் கட்டடத்தில் இருந்து விழுவான். அவனுக்கு ஒன்றும் ஆகாது என்று அவனும் சொல்ல மாட்டான். எவனும் சொல்ல மாட்டான். அவனே எதிர்பாராமல் அல்லாஹ் அவனுக்கு அதிசயமாக முறையில் உதவியுள்ளான் என்று இதைப் புரிந்து கொள்வோம்.

இதைப் புரிந்து கொண்டால் ஸாமிரி எந்த அற்புதத்தையும் செய்யவில்லை. அவனுக்கு அந்த ஆற்றல் சிறிதும் இல்லை என்று அறிந்து கொள்ளலாம்.

அற்புதங்கள் குறித்து மேலும் அறிய 269 வது குறிப்பையும் பார்க்கவும்.


17. பரிந்துரை பயன் தருமா?.

மறுமையில் ஒருவருக்காக மற்றவர் பரிந்துரை செய்ய இயலுமா? என்பதில் மூன்று வகையான கருத்துக்கள் கூறப்படுகின்றன.

1.  அறவே பரிந்துரை கிடையாது.

2.  நல்லடியார்களும், நபிமார்களும் விரும்பியவர்களுக்குப் பரிந்துரை செய்வார்கள்.

3.  நிபந்தனையுடன் பரிந்துரை உண்டு.

இம்மூன்று கருத்துக்களில் முதல் இரண்டு கருத்துக்களும் தவறாகும்.

திருக்குர்ஆன் 2:48, 2:123, 2:254, 6:51, 6:70, 6:94, 26:100, 32:4, 36:23, 39:43,44, 74:48 ஆகிய வசனங்களை மட்டும் காண்பவர்கள் மறுமையில் பரிந்துரை என்பதே இல்லை எனவும், பரிந்துரை பயன் தராது எனவும் கூறுகின்றனர்.

பரிந்துரை இல்லை என்ற கருத்தில் சில வசனங்களும், பரிந்துரை இருக்கிறது என்ற கருத்தில் சில வசனங்களும் உள்ளன. இருந்தாலும் முரண்பட்ட இந்த இரண்டையும் இணைக்கும் வகையில் பரிந்துரைக்குச் சில நிபந்தனைகள் உள்ளன என்று கூறும் வசனங்களும் உள்ளன. இவ்வசனங்கள் இந்த முரண்பாட்டை நீக்குகின்றன.

அவன் அனுமதியின்றி யார் பரிந்துரைக்க முடியும்?  திருக்குர்ஆன் 2:255

அவன் அனுமதி பெறாமல் எந்தப் பரிந்துரைப்பவனும் இல்லை. திருக்குர்ஆன் 10:3

இறைவனிடம் அனுமதி பெறாமல் பரிந்துரை செய்ய முடியாது என்பதை இவ்வசனங்களில் இருந்து அறியலாம். பரிந்துரை அறவே இல்லை என்று இருந்தால் இப்படிக் கூற முடியாது.

அல்லாஹ் யாருக்கு அனுமதி அளிக்கிறானோ அவர்கள் பரிந்துரை செய்வார்கள் என்றும், அந்தப் பரிந்துரை பயன் தரும் என்றும் திருக்குர்ஆன் 21:28, 19:87, 20:109, 34:23, 43:86, 53:26 ஆகிய வசனங்கள் கூறுகின்றன.

மறுமையில் பரிந்துரை அறவே இல்லை எனக் கூறுவது தவறு என்பதற்கு இவ்வசனங்களும் போதிய சான்றுகளாகும்.

பரிந்துரை உண்டு என்றாலும் நல்ல மதிப்பெண் பெற்று எடுத்த எடுப்பிலேயே சொர்க்கம் செல்லத்தான் ஒவ்வொருவரும் விரும்ப வேண்டும். அதைத் தான் இறைவனிடம் கேட்க வேண்டும்.

"என் பரிந்துரையை அல்லாஹ்விடம் வேண்டுங்கள்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத் தரவில்லை. பாவிகளுக்கு என் பரிந்துரை உண்டு என்றே கூறினார்கள். சில காரியங்கள் மூலம் என் பரிந்துரை கிடைக்கலாம் எனவும் கூறினார்கள்.

மறுமையில் பரிந்துரை செய்ய அல்லாஹ் யாருக்கு அனுமதியளிப்பான் என்பது யாருக்கும் தெரியாது.

எனவே "மகானே! எனக்கு மறுமையில் பரிந்துரை செய்யுங்கள்'' என்று இங்கே வாழும்போது கேட்கக்கூடாது. அது அல்லாஹ்வின் அதிகாரத்தில் தலையிடுவதாக அமையும்.

மக்காவில் வாழ்ந்தவர்கள் இவ்வாறு பரிந்துரை வேண்டிய காரணத்தினால் தான் இணைவைப்பவர்களாக ஆனார்கள் என்பதை 10:18 வசனத்தில் இருந்து அறியலாம்.

யார் பரிந்துரை செய்வார் என்பது மட்டுமின்றி யாருக்காகப் பரிந்துரை செய்யலாம் என்பதையும் அல்லாஹ் தான் தீர்மானிப்பான் என்பதால் பரிந்துரையை யாரிடமும் வேண்டக் கூடாது.

அல்லாஹ்வே நம்மை மன்னிக்க முடிவெடுக்கும்போது ஒருவரை அழைத்து "இவருக்குப் பரிந்துரை செய்'' என்பான். பெயரளவில் தான் இது பரிந்துரையே தவிர தீர்மானம் அல்லாஹ்விடத்தில் மட்டுமே உள்ளது.

(பார்க்க புகாரீ: 99, 335, 448, 3340, 4476, 4712, 6304, 6305, 6565, 6566, 6570, 7410, 7440, 7474, 7509, 7510)

தர்கா வழிபாட்டை நியாயப்படுத்துவோரின் இதர வாதங்கள் எப்படி தவறானவை என்பதை அறிந்து கொள்ள 41, 49, 79, 83, 100, 104, 121, 122, 140, 141, 193, 213, 215, 245, 269, 298, 327, 397, 427, 471 ஆகிய குறிப்புகளையும் காண்க!


18. நீண்ட காலம் வேதமில்லாமல் மூஸா நபி

எழுத்து வடிவிலான வேதத்தை முப்பது நாட்களில் வழங்குவதற்காக தூர் எனும் மலைக்கு வருமாறு மூஸா நபிக்கு இறைவன் கட்டளையிட்டான். பின்னர் மேலும் பத்து நாட்களை அதிகமாக்கி நாற்பது நாட்களாக நிறைவு செய்தான். நாற்பதாம் நாளில் பலகைகளில் எழுதப்பட்ட வேதத்தை அவர்களுக்கு இறைவன் வழங்கினான் என்று திருக்குர்ஆன் 2:51, 7:142 வசனங்கள் கூறுகின்றன.

7:144,145 வசனங்களில் இதன் பின்னர் (அதாவது ஃபிர் அவ்ன் அழிக்கப்பட்டு தூர் மலைக்கு மூஸா நபி அழைக்கப்பட்ட போது தான்) வேதம் வழங்கப்பட்டதாக தெளிவாகக் கூறப்படுகின்றது. ஃபிர்அவ்னிடம் சென்று சத்தியத்தை எடுத்துரைத்த போது மூஸா நபிக்கு வேதம் வழங்கப்பட்டிருக்கவில்லை என்பதை 7:144, 145 வசனங்களில் இருந்து அறிந்து கொள்ளலாம்.

மூஸா நபிக்கு வேதம் வழங்கப்படுவதற்கு முன்பே அவர்கள் இறைத்தூதராக ஆக்கப்பட்டிருந்தார்கள். தமது சமுதாயத்திற்குப் பிரச்சாரம் செய்து வந்தார்கள். ஃபிர்அவ்னை எதிர்த்துப் போராடினார்கள். இதன் பிறகே அவர்களுக்கு வேதம் அருளப்பட்டது என்றால் வேதம் இல்லாமல் வேறு வகை இறைச் செய்தி மூலம் தான் அவர்கள் பிரச்சாரம் செய்தனர் என்பது இதிலிருந்து தெரிகிறது.


நபிமார்களுக்கு வேதம் அருளப்படுவதுடன் வேதம் அல்லாத வேறு செய்திகளும் வேறு வழியில் வழங்கப்பட்டன என்பதற்கும், வேதம் மட்டுமே இறைச் செய்தி என்று சிலர் கருதுவது தவறு என்பதற்கும் இது சான்றாகும்.


திருக்குர்ஆனின் கட்டளைகளைப் பின்பற்றுவதுடன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலையும் பின்பற்ற வேண்டும் என்பதைப் பற்றி மேலும் அறிய 36, 39, 50, 55, 56, 57, 60, 67, 72, 105, 125, 127, 128, 132, 154, 164, 184, 244, 255, 256, 258, 286, 318, 350, 352, 358, 430 ஆகிய குறிப்புகளையும் காண்க!


20. தற்கொலை செய்யக் கட்டளையா?

உங்களையே கொன்று விடுங்கள் என்று மூஸா நபியவர்கள் தமது சமுதாயத்துக்குக் கூறியதாக 2:54 வசனம் கூறுகிறது. பெரும்பாலான விரிவுரையாளர்கள் இதற்கு நேரடிப் பொருளையே கொடுக்கின்றனர்.

காளைச் சிற்பத்தைக் கடவுளாக ஆக்கிய குற்றத்துக்கு தண்டனையாக மூஸா நபியின் சமுதாயம் தற்கொலை செய்ய வேண்டும் என்று மூஸா நபி கட்டளையிட்டதாக அந்த விரிவுரையாளர்கள் கூறுகின்றனர்.

தமது சமுதாயத்தினர் ஏகத்துவக் கொள்கைக்கு எதிராக நடந்து கொண்டதைக் கண்டபோது மூஸா நபியவர்கள் கடுமையாகக் கோபம் கொண்டார்கள். தமது கையில் உள்ள வேதத்தையே அவர்கள் கீழே போடும் அளவுக்கும், தமது சகோதரரும் சக நபியுமான ஹாரூனைப் பிடித்து இழுத்து அடிக்கும் அளவுக்கும் அந்தக் கோபம் இருந்ததாக 7:150 வசனம் கூறுகிறது.

இவ்வாறு கடுமையாகக் கோபம் கொண்ட நிலையில் "செத்துத் தொலையுங்கள்'' என்று கூறுவது மனிதரின் இயல்பாக உள்ளது. "மரணித்து விடுங்கள்'' என்ற பொருளை நினைத்துக் கொண்டு யாரும் இவ்வாறு கூறுவதில்லை. கோபத்தை வெளிப்படுத்தவே இவ்வாறு கூறுகிறார்கள்.

மூஸா நபியின் இந்தக் கூற்றையும் இவ்வாறே நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் தற்கொலை செய்து கொள்ளுமாறு இறைத்தூதர்கள் கட்டளையிட்டிருக்க முடியாது.

"உங்கள் மரணத்திற்குப் பின் உங்களை உயிர்ப்பித்தோம்'' என்று இதன் தொடர்ச்சியாகக் கூறப்பட்டுள்ளது. இது அவர்கள் தற்கொலை செய்தார்கள் என்ற கருத்தை உறுதி செய்கிறது என்று இந்த விரிவுரையாளர்கள் வாதிடுகின்றனர்.

ஆனால் இது தவறாகும்.

"உங்களையே கொன்று விடுங்கள்'' எனக் கூறும் 2:54 வசனத்தை மட்டும் கவனிக்காமல் அதைத் தொடர்ந்து வரும் இரு வசனங்களையும் கவனித்தால், அவர்கள் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்பதை அறிய முடியும்.

2:55 வசனத்தில் இறைவனைக் காட்டுமாறு அவர்கள் கேட்டதால் அவர்களைப் பேரிடி தாக்கியது என்று கூறப்பட்டுள்ளது.

2:56 வசனத்தில், "மரணத்திற்குப் பின் உங்களை உயிர்ப்பித்தோம்'' எனக் கூறப்பட்டுள்ளது.

இம்மூன்று வசனங்களையும் கவனித்துப் பார்க்கும்போது, இறைவனை நேரில் காட்டுமாறு அவர்கள் கேட்டதால், இறைவன் அவர்களைப் பெரும் சப்தத்தால் தாக்கினான். அப்போது தான் அவர்கள் மரணித்தனர்; இதன் பிறகு தான் "அவர்களை உயிர்ப்பித்தோம்'' என்று கூறப்படுகிறது.

எனவே அவர்கள் தற்கொலை செய்து கொண்டு சாகவில்லை; இறைவனை நேரில் காட்டுமாறு கேட்டதால் தான் சாகடிக்கப்பட்டார்கள் என்பது இதிலிருந்து தெரிகிறது.

21. இவ்வுலகில் இறைவனைக் காண முடியுமா?


இவ்வசனங்கள் (2:55, 4:153, 6:103, 7:143, 25:21) அல்லாஹ்வின் தூதர்கள் உள்ளிட்ட எந்த மனிதரும் அல்லாஹ்வைப் பார்த்ததில்லை; பார்க்கவும் முடியாது என்பதைத் திட்டவட்டமாகக் கூறுகின்றன. மறுமையில் தான் இறைவனைக் காணும் பாக்கியம் நல்லோருக்கு மட்டும் கிட்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூட இறைவனிடம் உரையாடியுள்ளார்களே தவிர அவனைப் பார்த்ததில்லை.

"நீங்கள் உங்கள் இறைவனைப் பார்த்ததுண்டா?'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்ட போது, "அவனோ ஒளிமயமானவன்; நான் எப்படி அவனைப் பார்க்க முடியும்?'' எனக் கூறினார்கள்.   நூல் : முஸ்லிம் 291

(அவன் ஒளிமயமானவன் என்று தான் மூலத்தில் உள்ளது. சில மொழிபெயர்ப்பாளர்கள் அவனைச் சுற்றியிருப்பது ஒளிமயமானது என்று மொழிபெயர்த்துள்ளனர். இது அவர்களின் கற்பனையாகும்.)

இறைவனை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பார்த்ததில்லை என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்.    நூல் : புகாரீ 3234, 4855, 7380

மூஸா நபியாலும் இறைவனை நேரில் பார்க்க முடியவில்லை என்று 7:143 வசனம் கூறுகிறது.

மூஸா (அலை) அவர்களின் சமுதாயத்தவர் இறைவனை நேருக்கு நேர் காட்டுமாறு மூஸா நபியிடம் கேட்ட போது அவர்களை அல்லாஹ் இடியோசையினால் தாக்கினான் என்று திருக்குர்ஆனின் 2:55, 4:153 ஆகிய வசனங்கள் கூறுகின்றன.

அவனைப் பார்வைகள் அடையாது; அவனோ பார்வைகளை அடைகிறான் என்று 6:103 வசனம் கூறுகிறது.

இவ்வுலகில் யாரும் இறைவனைக் காண முடியாது என்பதை இவ்வசனங்கள் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம்.

அறிவுப்பூர்வமாக நாம் சிந்தித்துப் பார்த்தால் இறைவனை எந்த மனிதனாலும் காண முடியாது என்ற கோட்பாடு தான் மனித குலத்துக்கு நன்மை செய்வதாகும்.

இவ்வுலகில் இறைவனைக் காண முடியும் என்ற நம்பிக்கையினால் மனித குலத்துக்கு நன்மைகள் ஏற்படாது. கேடுகள் தான் ஏற்படும்;

தாம் இறைவனைப் பார்த்ததாக எத்தனையோ ஆன்மிகவாதிகள் மக்களை ஏமாற்றி வருகின்றனர். இறைவனை எவரும் காண முடியாது என்று மக்கள் நம்பினால் ஆன்மிகத்தின் பெயரால் நடக்கும் பெருமளவிலான மோசடிகளை ஒழித்திட முடியும்.

மறுமையில் அல்லாஹ்வைக் காண முடியும் என்பதை அறிய 482, 488 ஆகிய குறிப்புகளைப் பார்க்கவும்.

--P.JAINUL ABIDEEN

share this... https://bit.ly/4bzNIqk

Search This Blog