தவ்ஹீத் ஜமாஅத் video's: 22. தூர் மலை உயர்த்தப்பட்டதா?

22. தூர் மலை உயர்த்தப்பட்டதா?

 22. தூர் மலை உயர்த்தப்பட்டதா?  

இவ்வசனங்களில் (2:63, 2:93, 4:154) தூர் மலையை அல்லாஹ் உயர்த்தி இஸ்ரவேலரிடம் உடன்படிக்கை எடுத்ததாகக் கூறப்படுகிறது. இதை நேரடிப் பொருளில் புரிந்து கொள்ளாமல் பல்வேறு விளக்கங்களைச் சிலர் கூறுகின்றனர். ஆனால் தூர் மலையை உயர்த்தியதாக அல்லாஹ் கூறுவதை அதன் நேரடிப் பொருளில் தான் புரிந்து கொள்ள வேண்டும்.

"தூர் மலையைப் பிடுங்கினோம்'' என்றும், "மேலே மேகம் போல் அது நின்றது'' என்றும், "தங்கள் மீது அது விழுந்து விடுமோ என்று அவர்கள் அஞ்சினார்கள்'' என்றும் திருக்குர்ஆன் 7:171 வசனத்தில் கூறப்படுவதால் இதற்கு வேறு விதமான விளக்கம் கொடுப்பது தவறாகும். மலையை உயர்த்துவது அல்லாஹ்வுக்கு மிகவும் எளிதானதே!

23. குரங்குகளாக மாற்றப்பட்டது ஏன்?

சனிக்கிழமை மீன் பிடிக்கக் கூடாது என்ற கட்டளையை மீறியவர்கள் குரங்குகளாக மாற்றப்பட்டனர் என்று இவ்வசனங்கள் (2:65, 5:60, 7:166) கூறுகின்றன.

மீன் பிடித்தது குரங்குகளாக மாற்றும் அளவுக்குப் பெரும் குற்றமா? என்று சந்தேகம் எழக்கூடும். இதற்கான விளக்கத்தை 146 வது குறிப்பில் காணலாம்.

இன்றைய குரங்குகளுக்கும், அவர்களுக்கும் ஏதேனும் சம்பந்தம் இருக்குமோ? என்று சிலர் நினைக்கலாம்.

யாரை அல்லாஹ் உருமாற்றி விட்டானோ அவர்களுக்குச் சந்ததிகளை ஏற்படுத்த மாட்டான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.

நூல் : முஸ்லிம் 5176, 5177

எனவே குரங்குகளாக மாற்றப்பட்ட அவர்கள் இனப்பெருக்கம் செய்யாமல் மரணித்து விட்டார்கள் என்பதால் இன்று நாம் காணும் குரங்குகளுக்கும், அவர்களுக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை.


24. கொலையாளியைக் கண்டறிய மாட்டை அறுத்தல்

2:67 முதல் 2:73 வரை உள்ள வசனங்களில் ஒரு மாட்டை அறுக்குமாறு இஸ்ரவேலர்களுக்கு அல்லாஹ் கட்டளையிட்ட விபரம் கூறப்படுகிறது.

மூஸா நபியவர்களின் காலத்தில் ஒருவர் கொல்லப்படுகிறார். கொலை செய்தவர் யார் என்பது தெரியவில்லை. கொலையாளியைக் கண்டுபிடித்துத் தருமாறு மூஸா நபியிடம் அவரது சமுதாயத்தினர் கேட்டனர். ஒரு மாட்டை அறுத்து, கொல்லப்பட்டவனின் மீது அடித்தால் இறந்தவன் உயிர் பெற்று தன்னைக் கொன்றவனை அடையாளம் காட்டுவான் என்று இறைவன் சொன்னான்.

ஏதாவது ஒரு மாட்டை அவர்கள் அறுத்திருந்தாலே போதுமானதாக இருந்திருக்கும். தேவையில்லாத கேள்விகளைக் கேட்டு அவர்கள் தமக்குத் தாமே சிரமத்தை ஏற்படுத்திக் கொண்டனர். இந்நிகழ்ச்சியின் காரணமாகத் தான் இந்த அத்தியாயத்திற்கு 'அந்த மாடு' என்று பெயர் வந்தது.

25. முஹம்மது நபியைப் பற்றிய முன்னறிவிப்பு


இவ்வசனங்களில் (7:157, 48:29, 61:6) தவ்ராத், இஞ்ஜீல் வேதங்களில் முஹம்மது நபியைப் பற்றிய முன்னறிவிப்பு இருந்ததாகக் கூறப்படுகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து விரட்டப்பட்டு மதீனாவுக்கு வருவார்கள் என்பதைத் தங்கள் நபிமார்கள் வழியாக அறிந்து வைத்திருந்த யூதர்கள் தமது அன்றைய தாயகமான எகிப்து மற்றும் பாலஸ்தீன் பகுதிகளிலிருந்து மதீனாவுக்கு வந்து குடியேறினார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வரும்போது அவர்களை முதலில் ஏற்பவர்களாக நாம் ஆக வேண்டும் என்பதே இந்தக் குடியேற்றத்துக்குக் காரணம். ஆனால் குடியேறிய அம்மக்களின் வழித் தோன்றல்கள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது அவர்களை இறைத்தூதர் என்று அறிந்து கொண்டே ஏற்க மறுத்தனர். தமது பதவியும், செல்வாக்கும் போய் விடும் என்று அஞ்சினர். அதுதான் இவ்வசனங்களில் சுட்டிக் காட்டப்படுகிறது.

தவ்ராத்தில் இருந்த முன்னறிவிப்பு பற்றி அறிந்து கொள்ள 457 வது குறிப்பையும் பார்க்கவும்.

தவ்ராத் வேதம் இப்போதும் உள்ளதா என்பதை அறிய 491 வது குறிப்பைப் பார்க்கவும்.


26. பொருத்தமில்லாத வசன எண்கள்

அச்சிடப்பட்ட திருக்குர்ஆன் பிரதிகளில் ஒவ்வொரு வசனத்தின் இறுதியில் அந்த வசனத்தின் எண்ணைக் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னிலையில் எழுதப்பட்ட பிரதிகளிலும், அவர்களுக்குப் பின்னர் உஸ்மான் (ரலி) அவர்களது ஆட்சியில் எழுதப்பட்ட பிரதிகளிலும் இவ்வாறு எண்கள் போடப்படவில்லை. பிற்காலத்தில் வந்தவர்கள் தான் எண்களைக் குறிப்பிட்டனர்.

பல இடங்களில் ஏற்கத்தக்க வகையில் எண்கள் போடப்பட்டு இருந்தாலும், சில இடங்களில் பொருத்தமில்லாமலும் எண்கள் இட்டுள்ளனர்.

கருத்து முழுமை பெறாத இடங்களில் பொருத்தமில்லாமலும் வசனங்களுக்கு எண்களிட்டுள்ளனர்.

சில இடங்களில் எழுவாயை ஒரு வசனமாகவும், பயனிலையை இன்னொரு வசனமாகவும் குறிப்பிட்டிருக்கிறார்கள். இரண்டையும் சேர்த்து ஒரு வசனமாகக் கூறும் போது தான் அதனுடைய பொருள் முழுமை பெறும்.

சில இடங்களில், கருத்து ஒரு வசனமாகவும், அந்தக் கருத்திலிருந்து விதிவிலக்கு இன்னொரு வசனமாகவும் அமைக்கப்பட்டுள்ளது. அந்த இரண்டையும் சேர்த்து ஒரு எண்ணாக அவர்கள் அமைத்திருந்தால் அது புரிந்து கொள்வதற்கு எளிதாக இருந்திருக்கும்.

பொருத்தமில்லாமல் எண்களிடப்பட்ட வசனங்களை இணைத்து நம்முடைய தமிழாக்கத்தில் மொழி பெயர்த்துள்ளோம். அதை அடையாளம் காட்டவே 26 என்ற எண்ணைக் குறிப்பிட்டுள்ளோம்.

வசனத்திற்கு எண்கள் இட்டதில் போதுமான கவனம் செலுத்தவில்லை என்பதை திருக்குர்ஆன் தொகுக்கப்பட்ட வரலாறு என்ற தலைப்பில் வசனங்களின் எண்கள் என்ற உட்தலைப்பில் விரிவாக விளக்கியுள்ளோம்.

27. அனைத்து கிறித்தவர்களும் வேதம் கொடுக்கப்பட்டவர்களா?

வேதம் கொடுக்கப்பட்ட சமுதாயத்தின் பெண்களை முஸ்லிம்கள் மணந்து கொள்ளலாம் என்றும், அவர்களின் உணவுகள் முஸ்லிம்களுக்கு அனுமதிக்கப்பட்டவை என்றும் இவ்வசனங்களில் கூறப்பட்டுள்ளது.

"வேதம் கொடுக்கப்பட்டோர்'' என்ற சொல் யாரைக் குறிக்கும் என்பதில் பல்வேறு கருத்துக்கள் உள்ளன. இந்தச் சொல் வேதங்களை நம்பும் அனைவரையும் குறிக்கும் என்றாலும் திருக்குர்ஆனில் வேதக்காரர்கள் எனக் கூறும் வசனங்கள் யூதர்கள் மற்றும் கிறித்தவர்கள் பற்றியதாகவே உள்ளன.

யூதர்களையும், கிறித்தவர்களையும் வேதக்காரர்கள் என்று குறிப்பிடுவதை அனைத்து யூதர்களையும், அனைத்து கிறித்தவர்களையும் குறிப்பதாகப் புரிந்து கொள்ளக் கூடாது. அனைத்து யூதர்களும், கிறித்தவர்களும் வேதக்காரர்கள் ஆக மாட்டார்கள்.

ஏனெனில் ஈஸா நபியவர்களும், யூதர்களுக்கு அனுப்பப்பட்ட மூஸா நபி உள்ளிட்ட எல்லா நபிமார்களும் இஸ்ரவேல் சமுதாயத்துக்கு மட்டுமே அனுப்பப்பட்டார்கள்.

தவ்ராத், இஞ்ஜீல் ஆகிய வேதங்கள் இஸ்ரவேலர்களுக்காகவே வழங்கப்பட்டன.

இஸ்ரவேலர்களுக்குத்தான் நான் அனுப்பப்பட்டேன் என்று ஈஸா நபி கூறியதாக 3:49, 5:72, 43:59, 61:6 ஆகிய வசனங்கள் கூறுகின்றன.

இஸ்ரவேலர் அல்லாதவர்கள் கிறித்தவர்களாக மாறியிருந்தாலும் அவர்கள் வேதம் கொடுக்கப்பட்டவர்களாக முடியாது. ஏனெனில் இஞ்ஜீல் அவர்களுக்காகக் கொடுக்கப்படவில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உலக மக்கள் அனைவருக்கும் தூதராக அனுப்பப்பட்டார்கள். இன்னும் சிலர் அவ்வாறு அனுப்பப்பட்டு இருக்கலாம். அதிகமான நபிமார்கள் குறிப்பிட்ட மக்களுக்கும், குறிப்பிட்ட சமுதாயத்துக்கும் மட்டுமே அனுப்பப்பட்டார்கள்.

மூஸா நபியவர்கள் ஃபிர்அவ்னுக்கும் தூதராக அனுப்பப்பட்டார்களே? அவன் இஸ்ரவேல் சமுதாயத்தைச் சேர்ந்தவனல்லவே என்ற சந்தேகம் ஏற்படலாம்.

மூஸா நபியவர்கள் ஆரம்பத்தில் இஸ்ரவேலர்களுக்கு மட்டுமின்றி ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாருக்கும் தூதராக அனுப்பப்பட்டார்கள் என்பது உண்மையே!

ஆனால் ஃபிர்அவ்னும், அவனது கூட்டத்தினரும் அழிக்கப்படும் வரை மூஸா நபியவர்களுக்கு தவ்ராத் வேதம் அருளப்படவில்லை. ஃபிர்அவ்ன் அழிக்கப்பட்ட பின்பே தவ்ராத் வேதத்தை அல்லாஹ் அருளினான். அவ்வாறு அருளும்போது, தவ்ராத் இஸ்ரவேலர்களுக்கு உரியது என்று கூறியே அருளினான். இதைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

மூஸா நபியையும், ஹாரூன் நபியையும் அல்லாஹ் ஃபிர்அவ்னிடம் அனுப்பும் போது எந்த வேதத்தையும் அவர்களுக்குக் கொடுத்து அனுப்பவில்லை. சில அற்புதங்களைக் கொடுத்து பிரச்சாரத்தை மேற்கொள்ளுமாறு அனுப்பி வைத்தான்.

மூஸா நபியும், ஹாரூன் நபியும் ஃபிர்அவ்னிடமும் அவனது சமுதாயத்தினரிடமும் பிரச்சாரம் செய்கின்றார்கள். மூஸா நபிக்கும், மந்திரவாதிகளுக்கும் போட்டி நடத்தப்படுகிறது.

அப்போது தவ்ராத் வேதம் அருளப்பட்டிருக்கவில்லை.

இஸ்ரவேல் சமுதாயத்தை ஃபிர்அவ்ன் கொடுமைப்படுத்துகின்றான். மூஸா நபியும் அவர்களின் சமுதாயமும் அதைத் தாங்கிக் கொள்கின்றனர். ஃபிர்அவ்னுடைய கூட்டத்தினர் பஞ்சம், கன மழை, வெட்டுக்கிளி, பேன், தவளை, இரத்தம் போன்றவற்றால் பல விதமான சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர்.

அப்போதும் தவ்ராத் வேதம் அருளப்பட்டிருக்கவில்லை.

பின்னர் மூஸா நபியும், அவர்களின் சமுதாயமும் ஊரை விட்டே ஓடுகின்றனர். ஃபிர்அவ்ன் விரட்டி வருகின்றான். முடிவில் மூஸா நபியும், அவர்களின் சமூகத்தினரும் காப்பாற்றப்படுகின்றார்கள். ஃபிர்அவ்ன் கடலில் மூழ்கடிக்கப்பட்டான்.

அப்போதும் தவ்ராத் வேதம் அருளப்பட்டிருக்கவில்லை.

இவ்வளவு நிகழ்ச்சிகளும் நடந்த பிறகு தான் மூஸா நபிக்கு அல்லாஹ் வேதத்தை வழங்கினான்.

ஏழாவது அத்தியாயம் 103 முதல் 150 வரையுள்ள வசனங்களைச் சிந்தித்தால் இந்த உண்மையை விளங்கலாம்.

103வது வசனம் முதல் 141வது வரை உள்ள வசனங்களில் மூஸா நபியின் பிரச்சாரம், சோதனை, ஃபிர்அவ்னுடைய அழிவு போன்றவற்றைக் கூறிவிட்டு 142 முதல் 145 வரை உள்ள வசனங்களில் அவருக்கு வேதம் வழங்கப்பட்டதை அல்லாஹ் கூறுகின்றான்.

எவ்வித வேதமும் இல்லாமல் நீண்ட நெடுங்காலம் மூஸா நபியும், ஹாரூன் நபியும் பிரச்சாரம் செய்து வந்தனர்.

மூஸா நபிக்கு வழங்கப்பட்ட தவ்ராத் இஸ்ரவேலர்களுக்காக மட்டுமே வழங்கப்பட்டது என்பதை 3:93, 17:2, 32.23, 40:53, 5:43,44, 61:6 ஆகிய வசனங்களைச் சிந்திக்கும் போது அறியலாம்.

இதே போன்று ஈஸா நபிக்கு அருளப்பட்ட இஞ்ஜீல் வேதமும் இஸ்ரவேலர்களுக்காகவே அருளப்பட்டது என்பதை 3:49, 5:72, 7:105, 7:134, 7:138, 10:90, 17:2, 17:101, 20:47, 20:94, 26:17 32:23, 40:53, 43:59, 61:6 ஆகிய வசனங்களில் காணலாம்.

இஸ்ரவேல் அல்லாத கிறித்தவர்களுக்காக அந்த வேதங்கள் அருளப்படாததால் அவர்கள் அல்லாஹ்வின் பார்வையில் வேதக்காரர்களாக முடியாது.

எனவே "வேதம் கொடுக்கப்பட்டவர்களைத் திருமணம் செய்யலாம்; அவர்கள் அறுத்ததை உண்ணலாம்'' என்ற சட்டம் இஸ்ரவேலர்களுக்கு மட்டுமே பொருந்தும். இஸ்ரவேலர்கள் அல்லாத யூத, கிறித்தவர்கள் வேதம் கொடுக்கப்பட்டோர் என்ற பட்டியலில் இடம் பெற மாட்டார்கள்.

மேலும் விபரங்களுக்கு 137, 138 ஆகிய குறிப்புகளையும் காண்க.


--P.JAINUL ABIDEEN

Search This Blog