தவ்ஹீத் ஜமாஅத் video's: 29. இரட்டை அர்த்தத்தில் நபியை அழைத்த நயவஞ்சகர்கள்

29. இரட்டை அர்த்தத்தில் நபியை அழைத்த நயவஞ்சகர்கள்

 29. இரட்டை அர்த்தத்தில் நபியை அழைத்த நயவஞ்சகர்கள்

மார்க்க விஷயத்தில் இரட்டை அர்த்தம் தரும் வகையில் பேசக்கூடாது என்ற அறிவுரை இவ்வசனங்களில் (2:104, 4:46) அடங்கியுள்ளது.

'ராஇனா' என்ற அரபுச்சொல் இரண்டு அர்த்தங்களுடைய சொல்லாகும். "எங்களைக் கவனித்து வழிநடத்துங்கள்'' என்பது ஒரு பொருள். "எங்களின் ஆடு மேய்க்கும் இடையரே'' என்பது மற்றொரு பொருள்.

யூதர்களில் நயவஞ்சகர்கள் தம் மனதுக்குள் ஆடு மேய்க்கும் இடையரே என்று நினைத்துக் கொண்டு "ராஇனா'' என நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கூறி அற்ப திருப்திப்பட்டுக் கொண்டார்கள். முஸ்லிம்களோ முதல் அர்த்தத்தில் இதனைப் பயன்படுத்தி வந்தனர்.

எங்களைக் கவனித்து வழிநடத்துங்கள் என்ற பொருள் உன்ளுர்னா என்ற சொல்லுக்கும் உண்டு. ஆனால் இந்தச் சொல்லுக்கு ராயினா என்ற சொல்லுக்கு இருப்பது போல் இரண்டு அர்த்தங்கள் கிடையாது.

இரண்டு அர்த்தங்கள் கொண்ட ராயினா என்பதை விடுத்து ஒரு அர்த்தம் தரும் உன்ளுர்னா என்பதை மட்டும் முஸ்லிம்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை நோக்கிப் பயன்படுத்த வேண்டும் என்று இங்கே கட்டளையிடப்படுகிறது.

அது போலவே 'அதஃனா' என்ற சொல் "கட்டுப்பட்டோம்' என்ற ஒரு பொருளைக் கொண்ட சொல்லாக இருந்தாலும் 'அதஃனா' என்று கூறுவது போல் பாவனை செய்து 'அஸய்னா' என்று நயவஞ்சகர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை நோக்கிக் கூறி வந்தனர். இதன் பொருள் "மாறுசெய்தோம்'' என்பதாகும்.

இரட்டை அர்த்தத்தில் பேசி இரட்டை முகம் காட்டிய யூதர்களின் போக்கு இங்கே சுட்டிக்காட்டப்படுவதுடன் இது போன்ற பேச்சுக்களில் இருந்து முஸ்லிம்கள் விலகிக் கொள்ள வேண்டும் என்றும் கூறப்படுகிறது.

சொல்வதைத் தெளிவாகவும், குழப்பமில்லாமலும் சொல்ல வேண்டும் என்ற அறிவுரையும் இதில் அடங்கியுள்ளது.


30. சில வசனங்கள் மாற்றப்பட்டது ஏன்?

2:106, 13:39, 16:101 ஆகிய வசனங்களில் இறைவன் தனது வசனங்களை மாற்றுவான் என்று சொல்லப்படுகிறது.

இறைவன் அருளிய வசனத்தை அவனே ஏன் மாற்ற வேண்டும்? அவனுக்குத் தான் அனைத்தும் தெரியுமே? மாற்றுவதற்கு அவசியம் ஏற்படாத வகையில் முதலிலேயே சரியாகக் கூறியிருக்கலாமே? என்று இவ்வசனங்களை வாசிக்கும் சிலர் நினைக்கலாம்.

இது இறைவனின் அறியாமையைக் குறிக்காது. அவனது அளவற்ற அறிவையே குறிக்கும் என்பதை அவர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.

வரலாறுகளிலும், வாக்குக் கொடுப்பதிலும் முன்னர் சொன்னதை மாற்றிக் கொள்ளக் கூடாது.

சட்டங்களைப் போடும்போது இருக்கின்ற சூழ்நிலைகளுக்கு ஏற்பத்தான் சட்டம் போட வேண்டும். சூழ்நிலை மாறிய பின் சட்டத்தை மாற்றாவிட்டால் அது தான் அறியாமையாகும்.

நெருக்கடியான நேரத்தில் அரசாங்கம் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கின்றது. நெருக்கடி நீங்கியதும் ஊரடங்கை விலக்கிக் கொள்கின்றது. ஏற்கனவே ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் அதையே தொடர்வதும் அறிவுடமையாகாது. அல்லது நெருக்கடியான நேரம் வரும்போது ஊரடங்கு உத்தரவு போடாமல் இருப்பதும் விவேகமாகாது.

ஒரு தாய், இரண்டு வயதுப் பாலகனுக்குச் சில உணவுகளை மறுப்பாள்; சாப்பிடக் கூடாது எனத் தடுப்பாள். அதே குழந்தை 10 வயதை அடையும் போது, முன்பு தடுத்த உணவை உண்ணுமாறு கூறுவாள். இவ்வாறு கூறும் நிலை ஏற்படும் என்பது அவளுக்கு ஏற்கனவே தெரியும். இங்கு குழந்தையின் நிலைதான் மாறியதே தவிர தாயின் அறிவில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிரச்சாரத்தைத் துவக்கிய போது மக்காவில் முஸ்லிம்கள் உயிர் வாழ்வதே பெரும் பிரச்சினையாக இருந்தது. இவ்வாறு இருக்கும் போது "திருடினால் கையை வெட்டுங்கள்'' என்று சட்டம் போட முடியாது. அப்படி போட்டால் அதற்கு அர்த்தம் இருக்காது.

ஆட்சியும், அதிகாரமும் முஸ்லிம்களின் கைக்கு வந்த பிறகு தான் இந்தச் சட்டத்தைப் போட முடியும்.

எனவே மாறும் சூழ்நிலைகளுக்கேற்ப சட்டங்களை வழங்குவது தான் அறிவுடமை.

ஒரு நிகழ்ச்சி 2002ல் நடந்தது எனக் கூறி விட்டு, 1967ல் தான் அந்த நிகழ்ச்சி நடந்தது என்று இன்னொரு நாள் கூறக் கூடாது.

ஏனெனில் இது வரலாறு. நடந்ததை மாற்ற முடியாது.

இத்தகைய மாறுதல் ஏதும் திருக்குர்ஆனில் இல்லை.

சில சட்டங்களில் மட்டுமே இத்தகைய நிலை உள்ளது.

திருக்குர்ஆன் வசனங்களைத் தேவைக்கேற்ப அல்லாஹ் மாற்றுவான் என்ற கருத்தில் மேற்கண்ட வசனங்கள் அமைந்துள்ளன.

6:34, 6:115, 10:64, 18:27, 48:15 ஆகிய வசனங்கள் திருக்குர்ஆன் வசனங்களில் இறைவன் எந்த மாற்றத்தையும் செய்ய மாட்டான் என்று கூறுகிறது. எனவே திருக்குர்ஆன் முரண்பட்டுப் பேசுவதால் அது இறைவேதம் அல்ல என்று சிலர் கூறுகின்றனர்.

6:34, 6:115, 10:64, 18:27, 48:15 ஆகிய வசனங்கள் வேத வசனங்களை மாற்றுவது பற்றிப் பேசவில்லை. அல்லாஹ் எடுக்கும் முடிவுகள் பற்றியும், அவனது கட்டளைகள் பற்றியுமே கூறப்படுகிறது.

ஒரு சமுதாயத்தை அல்லாஹ் அழிக்க நாடி அதற்கான கட்டளையைப் பிறப்பித்து விட்டால் மறுகட்டளை போட்டு அதை யாரும் மாற்றிவிட முடியாது என்ற தனது அதிகாரத்தைப் பற்றியே மேற்கண்ட வசனங்களில் அல்லாஹ் கூறுகிறான்.

அல்லாஹ்வின் கட்டளையை மாற்றுபவன் இல்லை என்றால் யாராலும் மாற்ற முடியாது என்ற கருத்தும் அதில் உள்ளது. அப்படி மாற்றுவதாக இருந்தாலும் நான் தான் மாற்றுவேன் என்ற கருத்தும் இதனுள் அடங்கியுள்ளது.

திருக்குர்ஆன் வசனங்கள் மாற்றப்படுவது பற்றி இவ்வசனங்கள் பேசவில்லை. எனவே எந்த முரண்பாடும் இல்லை.

இது தொடர்பாக மேலும் அறிந்திட 155, 157வது குறிப்புகளைப் பார்க்கவும்.


31. மூஸாவிடம் கேட்கப்பட்ட குதர்க்கமான கேள்விகள்

மூஸா நபியிடம் அவரது சமுதாயத்தினர் கேட்டது போல் நீங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்காதீர்கள் என்று இவ்வசனத்தில் (2:108) கூறப்பட்டுள்ளது.

மூஸா நபியிடம் அவரது சமுதாயத்தினர் கேட்டது என்ன என்பதைத் திருக்குர்ஆனில் தேடிப் பார்க்கும் போது, இறைவன் கண்டிக்கின்ற பாரதூரமான நான்கு விஷயங்களை அவர்கள் மூஸா நபியிடம் கேட்டுள்ளனர் என்பதை அறிய முடிகின்றது.

அந்த நான்கு விஷயங்களையுமே இது குறிக்கும் என்று புரிந்து கொள்வது தான் இதன் முழுமையான விளக்கமாக அமையும்.

1. மூஸா நபியவர்களையும், அவர்களது சமுதாயத்தையும் கடலில் மூழ்காமல் இறைவன் காப்பாற்றிக் கரை சேர்த்தான். இதன் பின்னர் சிலைகளை வழிபடும் ஒரு கூட்டத்தினரை மூஸா நபியின் சமுதாயத்தினர் கண்டார்கள். அப்போது "மூஸாவே! அவர்களுக்கு இருக்கும் கடவுள்கள் போல் எங்களுக்கும் கடவுளை எற்படுத்தித் தருவீராக!'' என்று கேட்டனர். இதை 7:138 வசனம் கூறுகிறது.

மூஸா நபியிடம் அவரது சமுதாயத்தினர் கேட்ட விஷயங்களில் இதுவும் ஒன்றாகும். இது குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் விளக்கியுள்ளனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு மரத்தைக் கடந்து சென்றனர். அம்மரம் இணைகற்பிக்கும் மக்களுக்கு உரியது. 'தாத்து அன்வாத்' என்று அழைக்கப்படும் அம்மரத்தில் இணைகற்பிப்பவர்கள் தமது ஆயுதங்களைத் தொங்க விடுவார்கள். இதைக் கண்ட சில நபித்தோழர்கள், "அல்லாஹ்வின் தூதரே! இவர்களுக்கு 'தாத்து அன்வாத்' எனும் புனித மரம் இருப்பது போல் எங்களுக்கும் புனித மரம் ஒன்றை ஏற்படுத்துங்கள்'' என்று கேட்டனர். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "அல்லாஹ் தூயவன். அவர்களுக்குப் பல கடவுள்கள் இருப்பது போல் எங்களுக்கும் கடவுளை ஏற்படுத்துவீராக என்று மூஸா நபியின் சமுதாயத்தினர் கேட்டது போல் இந்தக் கேள்வியும் அமைந்துள்ளது. எனது உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மேல் ஆணையாக, உங்களுக்கு முன்சென்றோரின் வழிமுறையை நீங்கள் அப்படியே பின்பற்றுவீர்கள்'' என்று கூறினார்கள்.

நூல் : திர்மிதீ 2106

இஸ்லாத்தில் நல்லவை அனைத்துமே இருக்கும் போது, இஸ்லாம் அல்லாத மதங்களின் சடங்குகள் இஸ்லாத்திலும் இருக்க வேண்டும் என்று ஆசைப்படக் கூடாது என்ற கருத்தை இவ்வசனம் தாங்கி நிற்கின்றது.

கந்தூரி விழாக்கள், பஞ்சா, சந்தனக்கூடு, மீலாது விழா, புத்தாண்டு கொண்டாடுதல், தாலி, பால்கிதாபு, இறந்தோருக்கு 3, 7, 40 ஆம் நாட்களில் சடங்குகள் செய்தல், மதகுருமார்களின் காலில் விழுதல் போன்றவற்றைச் செய்பவர்கள், மூஸா நபியிடம் பிற சமுதாயத்தினரின் கடவுள்களைப் போல் தமக்கும் கடவுளைக் கேட்ட இஸ்ரவேலர்களுக்கு ஒப்பானவர்கள் என்பதை இவ்வசனத்தைச் சிந்தித்தால் விளங்கலாம்.

2. மூஸா நபியின் சமுதாயத்தினர் இறைவனின் ஆற்றலையும், வல்லமையையும் கண்கூடாகக் கண்ட பின்னர் "அல்லாஹ்வை எங்கள் கண்முன்னே காட்டுவீராக!'' என்று மூஸா நபியிடம் கேட்டார்கள். உடனே பெரும் சப்தம் ஏற்பட்டு அவர்கள் மூர்ச்சையானார்கள் என்று 4:153 வசனம் கூறுகிறது.

மனிதர்கள் இவ்வுலகில் இறைவனைக் காண முடியாது என்று இறைவன் அறிவித்திருக்கும் போது, அதை மாற்றியமைக்குமாறு இறைவனிடம் கேட்பது இறைவனுக்குக் கடும் கோபத்தை ஏற்படுத்துவதாகும்.

எதைத் தனது முடிவாக இறைவன் அறிவித்திருக்கிறானோ அதை மாற்றுமாறு கோரக் கூடாது என்பதையும் இவ்வசனம் உள்ளடக்கியுள்ளது.

3. இறைவன் எந்தச் சட்டத்தைப் போடுவதாக இருந்தாலும் தேவையான அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கி சட்டம் இயற்றுவான் என்று நம்ப வேண்டும். அதில் குடைந்து, குடைந்து கேள்வி கேட்டால் அது நமக்குத்தான் சிரமத்தை ஏற்படுத்தும்.

இது போன்ற கேள்விகளையும் மூஸா நபியின் சமுதாயத்தினர், மூஸா நபியிடம் கேட்டுள்ளனர்.

மூஸா நபியின் காலத்தில் ஒருவர் கொல்லப்பட்டார். கொலையாளியைக் கண்டுபிடிக்க ஒரு மாட்டை அறுத்து அதன் ஒரு பகுதியால் இறந்தவர் மீது அடியுங்கள்; இறந்தவர் உயிர் பெற்று தன்னைக் கொன்றவரை அடையாளம் காட்டுவார் என்று இறைவன் கட்டளையிட்டான்.

ஒரு மாட்டை அறுங்கள் என்று அல்லாஹ் கூறியவுடன் எதாவது ஒரு மாட்டை அவர்கள் அறுத்திருக்கலாம். எத்தகைய மாட்டை அவர்கள் அறுத்திருந்தாலும் இறைக் கட்டளையைச் செயல்படுத்தியவர்களாக ஆகியிருப்பார்கள். ஆனால், மாட்டின் வயது என்ன? நிறம் என்ன? தன்மை என்ன என்று தேவையற்ற பல கேள்விகளைக் கேட்டு தமக்குத் தாமே சிரமத்தை ஏற்படுத்திக் கொண்டனர். இதை 2:67-71 வசனங்களில் காணலாம்.

இது போல் அதிகப் பிரசங்கித் தனமாக நடக்கக் கூடாது என்ற கருத்தும் இதில் அடங்கியுள்ளது.

4. வஹீ அருளப்படும் காலகட்டத்தில் இறைத்தூதரிடம் கூடுதல் விளக்கம் கேட்கக் கூடாது என்ற கருத்தையும் இவ்வசனம் உள்ளடக்கி நிற்கின்றது.

திருக்குர்ஆன் 5:101, 102 வசனங்களில் இது தெளிவாகவும் குறிப்பிடப்படுகின்றது.

"எதை நான் தெளிவுபடுத்தாமல் விட்டுவிட்டேனோ அந்த விஷயத்தில் என்னை விட்டு விடுங்கள். உங்களுக்கு முன் சென்றவர்கள் தமது நபிமார்களிடம் அதிகம் கேள்வி கேட்டதாலும், நபிமார்களுடன் கருத்து வேறுபாடு கொண்டதாலுமே அழிந்து போயினர்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல் : புகாரீ 7288

"தடை செய்யப்படாத ஒன்றைப் பற்றி ஒருவன் கேள்வி கேட்டு அக்கேள்வியின் காரணமாக அது தடை செய்யப்பட்டது என்றால் அந்த மனிதன் தான் முஸ்லிம்களிலேயே மிகப் பெரிய குற்றவாளி'' என்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.நூல் : புகாரீ 7289

மூஸா நபியிடம் இஸ்ரவேலர்கள் கேட்டது போல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்கக் கூடாது என்பது மேற்கண்ட நான்கு விஷயங்களையும் உள்ளடக்கும்.

நபிமார்களிடம் இவ்வாறு கேள்வி கேட்கக் கூடாது என்ற கருத்தைத் தான் இவ்வசனம் கூறுகின்றது.

ஆனால் தங்களிடம் யாரும் கேள்வி கேட்கக் கூடாது; தாங்கள் கூறுவதைக் கண்மூடி மக்கள் நம்ப வேண்டும் என்பதற்கு இவ்வசனத்தைப் போலி அறிஞர்கள் சான்றாக ஆக்க முயல்கின்றனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (ஸல்) காலத்திற்குப் பின் எந்த அறிஞரிடம் கேள்வி கேட்டாலும் அதன் காரணமாக ஹலாலான எதுவும் ஹராமாக ஆகாது. ஹராமான எதுவும் ஹலால் ஆக மாறாது. எனவே மார்க்க அறிஞர்கள், தம்மிடம் கேள்வி கேட்கக் கூடாது என்பதற்கு இவ்வசனத்தைக் கேடயமாகப் பயன்படுத்தக்கூடாது.

அதிக விளக்கத்திற்கு 150 வது குறிப்பைக் காண்க!

32. பள்ளிவாசல்களை விட்டுத் தடுக்கக் கூடாது

இவ்வசனங்கள் (2:114, 96:8-18) பள்ளிவாசல்களுக்கு உரிமையாளன் அல்லாஹ் மட்டுமே; அதில் அல்லாஹ்வை மட்டும் வழிபடும் எவரையும் தடுக்கக் கூடாது என்று கூறுகின்றன.

உலகில் உள்ள பல்வேறு மதங்களில் தீண்டாமையின் கேந்திரங்களாக வழிபாட்டுத் தலங்களே அமைந்துள்ளன.

குளம், கிணறு, சாலைகள் மற்றும் அரசு நிறுவனங்களைப் பயன்படுத்துதல் ஆகியவற்றில் தீண்டாமை ஓரளவு ஒழிக்கப்பட்டாலும் வழிபாட்டுத் தலங்களில் மட்டும் நூறு சதவிகிதம் தீண்டாமை கடைப்பிடிக்கப்படுகின்றது. குறிப்பிட்ட பிரிவினர் மட்டுமே வழிபாட்டுத் தலங்களின் மூலஸ்தானம் வரை சென்று வழிபட முடியும் என்ற நிலையை எவராலும் மாற்ற முடியவில்லை என்பதைக் காண்கிறோம்.

ஆனால் இந்த நிலை முஸ்லிம்களின் வழிபாட்டுத் தலமான பள்ளிவாசல்களில் மட்டும் இல்லை. ஏனெனில், பள்ளிவாசல்களின் உரிமையாளன் அல்லாஹ் என்பது இஸ்லாத்தின் நம்பிக்கை.

அல்லாஹ்வுக்குச் சொந்தமான இல்லத்தில் அவனைத் துதிப்பதற்கு யார் வந்தாலும் தடுக்கக் கூடாது. அவ்வாறு தடுப்பது பெரும் பாவம் என்று இவ்வசனம் (2:114) பிரகடனம் செய்கிறது. இது போன்ற அறிவுரைகளின் காரணமாகவே, இஸ்லாத்தில் தீண்டாமையைக் காண முடியவில்லை.

எந்தக் காரணத்துக்காகவும், முஸ்லிம்களில் எவரையும் பள்ளிவாசலுக்கு வரக் கூடாது என்று தடுப்பது மிகப்பெரும் பாவமாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் ஆலயமான கஅபாவில் தொழுதபோது அவர்களை எதிரிகள் தொழவிடாமல் தடுத்தனர்.

இதைப் பற்றி 96:9-18 வசனங்களில் அல்லாஹ் கடுமையான எச்சரிக்கை விடுக்கிறான்.

"அவர்கள் தமது சபையைக் கூட்டட்டும். நான் என் சபையைக் கூட்டுகிறேன்'' என்று மேற்கண்ட வசனத்தில் அல்லாஹ் கூறுவது, அல்லாஹ்வை அஞ்சும் மக்களுக்குக் கடுமையான எச்சரிக்கையாகும்.

இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கஅபா ஆலயத்தில் தொழுதபோது இணைகற்பித்த அன்றைய மக்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கழுத்தில் ஒட்டகக் குடலைப் போட்டுக் கேலி செய்தனர். இறைவா இவர்களை நீ பார்த்துக் கொள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் முறையிட்டனர். அவர்கள் அனைவரையும் வேரற்ற மரங்களாக இறைவன் வீழ்த்தினான். (பார்க்க : புகாரீ 240, 520, 2934, 3185, 3854, 3960)

எனவே அல்லாஹ்வின் பள்ளிவாசலில் அல்லாஹ்வைத் தொழ வரும் மக்களைத் தடுப்பது மிகவும் கடுமையான குற்றம் என்பதை முஸ்லிம்கள் உணர வேண்டும். இது அல்லாஹ்வுக்கு எதிராகச் செய்யப்படும் போர்ப்பிரகடனம் என்பதைப் புரிந்து இது போன்ற செயல்களில் இருந்து விலகிக் கொள்ள வேண்டும்.

பிறப்பால் அனைவரும் சமமே! நடத்தையால் மட்டுமே ஒருவனை விட மற்றவன் உயர முடியும் என்பதையும், இஸ்லாம் கூறும் சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தையும் அறிய 11, 49, 59, 141, 168, 182, 227, 290, 368, 508 ஆகிய குறிப்புகளைக் காண்க!


P.JAINUL ABIDEEN

Search This Blog