தவ்ஹீத் ஜமாஅத் video's: 36. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நான்கு பணிகள்

36. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நான்கு பணிகள்

 36. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நான்கு பணிகள்

இவ்வசனங்களில் (2:129, 2:151, 3:164, 4:113, 62:2) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தூதுப்பணியைப் பற்றி அல்லாஹ் குறிப்பிடும்போது அவர்களுக்கு நான்கு பணிகள் அளிக்கப்பட்டதாகக் கூறுகின்றான்.

*  திருக்குர்ஆனை ஓதிக் காட்டுவது

*  மக்களைத் தூய்மைப்படுத்துவது

*  மக்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக் கொடுப்பது

*  மக்கள் அறியாதவற்றை அவர்களுக்குக் கற்றுக் கொடுப்பது

ஆகியவை அந்த நான்கு பணிகள்.

இந்த நான்கு சொற்றொடர்களும் கவனமாகக் கருத்தில் கொள்ள வேண்டியவை.

திருக்குர்ஆன் மட்டும் போதும்; நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விளக்கம் தேவையில்லை என்ற வாதத்தைத் தற்போது சிலர் முன் வைக்கின்றனர்.

வேதத்தை இறைவனிடம் பெற்று மக்களிடம் கொடுப்பதுடன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பணி முடிந்து விட்டது என்றால் இந்த நான்கு சொற்றொடர்களை இறைவன் கூறியிருக்க மாட்டான். "வசனங்களை அவர்களுக்கு ஓதிக் காட்டுவார்'' என்பதோடு நிறுத்திக் கொள்வான்.

வசனங்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஓதியவுடன் அரபு மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட அம்மக்கள் அதை விளங்கிக் கொள்வார்கள்.

ஆனால் "வசனங்களை ஓதிக் காட்டுவார்; வேதத்தைக் கற்றுக் கொடுப்பார்'' என்று வேதம் தொடர்பான இரண்டு பணிகள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன என்று அல்லாஹ் கூறுகிறான்.

ஓதிக் காட்டுதல் என்றால் வசனங்களை வாசித்துக் காட்டுதல் என்று புரிந்து கொள்கிறோம்.

வேதத்தைக் கற்றுக் கொடுத்தல் என்பதன் பொருள் என்ன?

வாசிக்கக் கற்றுக் கொடுத்தல் என்று இதற்குப் பொருள் கொள்ள முடியாது. ஏனெனில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு வாசிக்கத் தெரியாது என்று அல்லாஹ் கூறுகிறான்.

இதற்கு முன் எந்த வேதத்திலிருந்தும் நீர் வாசிப்பவராக இருந்ததில்லை. உமது வலது கையால் அதை எழுதவும் மாட்டீர்!   திருக்குர்ஆன் 29:48

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு வாசிக்கத் தெரியும் என்று ஒரு வாதத்துக்கு ஒப்புக் கொண்டாலும் வாசிக்கக் கற்றுக் கொடுத்தல் என்பது ஒரு மொழியைக் கற்றுக் கொடுத்ததாக ஆகுமே தவிர திருக்குர்ஆனைக் கற்றுக் கொடுத்ததாக ஆகாது.

ஒரு மொழியைக் கற்றுக் கொடுப்பதற்குத் தூதர்கள் அவசியம் இல்லை. அந்த மொழியை அறிந்த யார் வேண்டுமானலும் அதைச் செய்ய முடியும். எனவே "தேவைப்படும் போது சொல்லாலும், செயலாலும் விளக்கம் தருவார்'' என்பது தான் திருக்குர்ஆனைக் கற்றுக் கொடுப்பார் என்பதன் பொருள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திருக்குர்ஆனுக்கு விளக்கம் கொடுப்பதற்காக அனுப்பப்பட்டார்கள் என்றால் அவ்விளக்கத்தை முஸ்லிம்கள் ஏற்றுச் செயல்பட வேண்டும் என்பது தான் பொருள்.

எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஓதிக் காட்டிய திருக்குர்ஆன் எவ்வாறு வழிகாட்டும் நெறியாக அமைந்துள்ளதோ அவ்வாறே அவர்களின் விளக்கமாக அமைந்த ஹதீஸ்களும் வழிகாட்டும் நெறியாக அமைந்துள்ளன என்பதை இவ்வசனங்களிலிருந்து அறியலாம்.

திருக்குர்ஆனை முறையாகவும், முழுமையாகவும் விளங்கிட நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விளக்கம் அவசியத்திலும் அவசியம் என்பதைத் தெள்ளத் தெளிவாக அறிவிக்கும் வகையில் இவ்வசனங்களில் பயன்படுத்தப்பட்டுள்ள சொற்கள் அமைந்துள்ளன.

வேதத்தைக் கற்றுக் கொடுப்பார் என்பதுடன் ஞானத்தையும் கற்றுக் கொடுப்பார் என்று அல்லாஹ் கூறியுள்ளான்.

அத்துடன் நிறுத்திக் கொள்ளாமல் மக்கள் அறியாதவற்றை அவர் கற்றுக் கொடுப்பார் என்றும், மக்களைத் தூய்மைப்படுத்துவார் என்றும் கூறுகிறான்.

திருக்குர்ஆன் மட்டும் போதும்; நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விளக்கம் தேவை இல்லை என்றால் அதற்கு மாற்றமான பொருள் தரும் வகையில் இவ்வளவு சொற்களை இறைவன் பயன்படுத்தி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விளக்கம் அவசியம் என்று கூறுவானா?

எனவே திருக்குர்ஆன் மட்டும் போதும் எனக் கூறுவோர் உண்மையில் திருக்குர்ஆனைத் தான் மறுக்கிறார்கள் என்பது இதிலிருந்து உறுதியாகின்றது.

திருக்குர்ஆனின் கட்டளைகளைப் பின்பற்றுவதுடன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலையும் பின்பற்ற வேண்டும் என்பதைப் பற்றி மேலும் அறிய 18, 39, 50, 55, 56, 57, 60, 67, 72, 105, 125, 127, 128, 132, 154, 164, 184, 244, 255, 256, 258, 286, 318, 350, 352, 358, 430 ஆகிய குறிப்புகளையும் காண்க!

37. நபிமார்களிடையே பாகுபாடு காட்டக் கூடாது

இவ்வசனங்கள் (2:136, 2:253, 2:285, 3:84, 17:55) இறைத்தூதர்களிடையே பாகுபாடு காட்டக் கூடாது என்று கூறுகின்றன.

இந்தத் தூதர் தான் பணியைச் சிறப்பாகச் செய்தார். அந்தத் தூதர் சிறப்பாகச் செய்யவில்லை என்று கூறினால் அது பாகுபாடு காட்டும் குற்றமாக அமையும். அல்லாஹ் தகுதியானவர்களையே தேர்வு செய்வான் என்ற அடிப்படையையே இது தகர்த்து விடும். எனவே ஒவ்வொரு நபியும் தமக்கு வழங்கப்பட்ட பணியைச் சிறப்பாகச் செய்தார்கள் என்று நாம் நம்ப வேண்டும்.

மூஸா நபியின் இடத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இருந்திருந்தால் இதை விடச் சிறப்பாகச் செய்திருப்பார்கள் என்று கூறினால் அது பாகுபாடு காட்டியதுடன் இறைவனின் தேர்வைக் குறை கூறிய குற்றமாகவும் அமையும்.

இது போன்ற பாகுபாடுகள் காட்டுவது மாபெரும் குற்றமாகும் என்பதே இதன் கருத்து.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அளிக்கப்பட்ட பொறுப்பை வேறு நபியிடம் அல்லாஹ் ஒப்படைத்திருந்தால் அதை அவரும் சிறப்பாகச் செய்திருப்பார் என்பது தான் முஸ்லிம்களின் நம்பிக்கையாக இருக்க வேண்டும்.

ஒவ்வொரு நபியும் தமக்கு வழங்கப்பட்ட பணியில் எள் முனையளவும் குறை வைக்கவில்லை; விலை போகவில்லை; மனிதர்களுக்கு அஞ்சவில்லை; மறுமையை விட இவ்வுலகைப் பெரிதாக நினைக்கவில்லை. இப்படி எல்லாத் தூதர்களுமே சிறந்து விளங்கினார்கள் என்று நம்ப வேண்டும் என்பது தான் இதன் கருத்து.

ஒரு இறைத்தூதருக்கு வழங்காத சிறப்பை மற்றொரு தூதருக்கு அல்லாஹ் வழங்கியிருந்தால் அதைச் சுட்டிக்காட்டுவது பாகுபாடு காட்டியதாக ஆகாது.

எல்லா இறைத்தூதர்களையும் சமமான தகுதிகளுடன் அல்லாஹ் அனுப்பவில்லை. ஒருவருக்கு வழங்காத தகுதிகளை மற்றவருக்கு அல்லாஹ் வழங்கியுள்ளான். அல்லாஹ் வழங்கிய அந்தச் சிறப்புக்களை நாமும் எடுத்துக் கூறுவது பாகுபாடு காட்டுவதாக ஆகாது.

ஈஸா நபி தந்தையின்றி பிறந்தார்கள் என்பதை 3:45, 3:47, 3:59, 4:171, 19:19-21, 21:91, 66:12 ஆகிய வசனங்கள் கூறுகின்றன.

ஈஸா நபி இன்று வரை உயிருடன் இருக்கிறார்கள் என்பதை 4:157-159, 5:75, 43:61 ஆகிய வசனங்கள் கூறுகின்றன.

இந்தச் சிறப்புகள் யாருக்கும் இல்லை எனக் கூறுவது பாகுபாடு காட்டுவதாகாது. ஏனெனில் இந்தச் சிறப்பை அல்லாஹ் தான் அவருக்கு வழங்கினான்.

சில தூதர்களை சிலரை விட நாம் சிறப்பித்துள்ளோம் என்று 2:253, 17:55 ஆகிய வசனங்கள் கூறுகின்றன.

அது போல் இப்ராஹீம் நபியின் குடும்பத்தாருக்கு வழங்கியது போன்ற பாக்கியங்களை வேறு எவருக்கும் அல்லாஹ் வழங்கவில்லை எனக் கூறுவதும் பாகுபாடு காட்டுவதாகாது. ஏனெனில் அல்லாஹ்வே இப்படி சிறப்பித்துக் கூறியுள்ளதை 2:124, 2:125, 4:125, 11:73, 16:120 ஆகிய வசனங்கள் கூறுகின்றன.

ஸுலைமான் நபிக்கு வழங்கப்பட்ட ஆட்சி அதிகாரம், உலகில் எந்த நபிக்கும் வழங்கப்படவில்லை என 21:81, 21:82, 27:16-18, 27:40, 34:12, 38:35 ஆகிய வசனங்கள் கூறுகின்றன. நாமும் இவ்வாறு கூறுவது பாகுபாடு காட்டுவதாகாது.

அது போல் இறுதி நபியாகவும், அகில உலக நபியாகவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அல்லாஹ் அனுப்பினான். இது யாருக்கும் வழங்காத சிறப்பாகும். இதை 4:79, 6:19, 7:158, 9:33, 21:107 33:40, 34:28, 48:28, 61:9 ஆகிய வசனங்கள் கூறுகின்றன

மறுமையில் மகாமு மஹ்மூத் எனும் புகழத்தக்க மதிப்பை அல்லாஹ் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு வழங்குவான் என 17:79 வசனம் கூறுகிறது.

ஹவ்லுல் கவ்ஸர் எனும் நீர்த் தடாகம் அவர்கள் பொறுப்பில் விடப்படும் என 108:1 வசனம் கூறுகிறது.

மறுமையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முதலில் பரிந்துரை செய்வார்கள் என்று ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் உள்ளன. (பார்க்க: புகாரீ: 99, 335, 438, 3340, 4476, 4712, 6304, 6305, 6565, 6566, 6570, 7410, 7440, 7474, 7509, 7510)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் வழங்கிய சிறப்பை எடுத்துக் கூறி புகழ்வது இறைத்தூதர்களிடையே பாகுபாடு காட்டியதாக ஆகாது.

38. அல்லாஹ் தீட்டும் வர்ணம்

ஒருவர் ஒரு மதத்தைத் தழுவும் போது வர்ணம் கலந்த நீரில் அவரைக் குளிப்பாட்டி, அல்லது தெளித்து இப்போது நமது மதத்தில் சேர்ந்து விட்டார் எனக் கூறும் வழக்கம் அன்று இருந்தது. இஸ்லாத்தில் சேர்வதற்கு இத்தகைய வர்ணம் கலந்த நீரோ, வண்ணப் பொடிகளோ தேவையில்லை.

மனிதரின் உடலில் தான் இவர்கள் வர்ணம் தீட்டுகிறார்கள். ஆனால் அல்லாஹ் இஸ்லாத்தை ஏற்கும் மனிதரின் உள்ளத்தில் வர்ணம் தீட்டுகிறான் என்று இலக்கிய நயத்துடன் இங்கே சொல்லப்பட்டுள்ளது.

உடல்களில் தீட்டும் வர்ணம் மறைந்து விடும். அல்லாஹ்வோ உள்ளங்களில் இஸ்லாம் எனும் வர்ணம் தீட்டுகிறான். அது நிலையானது என்று பதில் கூறும் வகையில் இவ்வசனம் (2:138) அருளப்பட்டது.

--P.JAINUL ABIDEEN 



Search This Blog