தவ்ஹீத் ஜமாஅத் video's: ஸலாத்துன் தவ்பா தொழுகை

ஸலாத்துன் தவ்பா தொழுகை

தவ்பா

 இஸ்லாத்தில் ஸலாத்துன் தவ்பா தொழுகை முறை பற்றி அறிந்து
கொள்ளுவோம்
💞

• மனிதன் பலகீனமானவன் ஆவான்! அதனால் அவன் அறிந்தும் அறியாமலும் பல நேரங்களில் பாவத்தில் விழுந்து விடுகிறான்!

• பொதுவாக மனிதர்கள் பாவம் செய்ய கூடியவர்களே ஆனால் இவர்களில் சிறந்தவர்கள் அல்லாஹ்விடம் தான் செய்த பாவத்திற்கு தவ்பா செய்ய கூடியவர் தான்!

• நாம் ஏதேனும் ஒரு பாவம் செய்து விட்டால் கால தாமதம் செய்யாமல் முதலில் மனம் வருந்தி அல்லாஹ்விடம் உடனடியாக தவ்பா செய்யவேண்டும்!

• தவ்பா செய்யும் பொழுதே மீண்டும் அந்த பாவத்தின் பக்கம் செல்ல கூடாது என்று உறுதியான எண்ணத்துடன் அல்லாஹ்விடம் தவ்பா செய்யவேண்டும்!

• இவ்வாறு நாம் செய்த பாவத்திற்கு அல்லாஹ்விடம் தவ்பா செய்வதற்கு நபி (ஸல்) அவர்கள் ஒரு தொழுகை முறையும் கற்று கொடுத்து உள்ளார்கள் அது தான் ஸலாத்துன் தவ்பா ஆகும்!

💟 தொழுகை முறை :

• ஸலாத்துன் தவ்பா தொழுகை நாம் வழமையாக தொழுவது போன்று இரண்டு ரக்அத் தொழ வேண்டும் இதற்கு என்று வேறு எந்த தனி தொழுகை முறையும் கிடையாது!

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

எந்த ஒரு மனிதனாவது ஏதாவது ஒரு பாவம் செய்து  பிறகு அந்த மனிதன் எழுந்து உளூ செய்து தொழுது பிறகு அல்லாஹ்விடத்தில் பாவமன்னிப்பு கேட்டால் அல்லாஹ் அவரை மன்னிக்காமல் இருப்பதில்லை என்று கூறிவிட்டு கீழ்வரும் வசனங்களை ஓதினார்கள் :

மானக் கேடான ஏதேனும் ஒரு செயலை அவர்கள் செய்து விட்டாலும், அல்லது ஏதேனும் பாவத்தினால் தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டாலும் உடனே அவர்கள் (மனப்பூர்வமாக) அல்லாஹ்வை நினைத்து தங்கள் பாவங்களுக்காக மன்னிப்புத் தேடுவார்கள்!

அல்லாஹ்வைத் தவிர வேறு யார் பாவங்களை மன்னிக்க முடியும்? மேலும், அவர்கள் அறிந்து கொண்டே தங்கள் பாவ காரியங்களில் நிலைத்து விட மாட்டார்கள்!

(அல்குர்ஆன் : 3 : 135)

(நூல் : திர்மிதி : 408 | அபூதாவூத் : 1521 | இப்னு மாஜா : 1395 | அஹ்மத் : 26998)

💟 ஸலாத்துன் தவ்பா சுன்னத் & நபில் தொழுகையா :

• ஸலாத்துன் தவ்பா சுன்னத் தொழுகை ஆகும்! நபி (ஸல்) அவர்கள் இதை பற்றி நமக்கு கூறி உள்ளார்கள் இதற்கு பல ஸஹீஹான ஹதீஸ்கள் உள்ளன!

💟 என்ன சூராக்கள் ஓத வேண்டும் :

• ஸலாத்துன் தவ்பா தொழுகைக்கு என்று குறிப்பிட்ட சூராக்கள் எதுவும் ஓத வேண்டியது கிடையாது நமக்கு மனனம் உள்ள சூராக்களை ஓதி தொழுது கொள்ளலாம்!

💟 எத்தனை ரக்அத் :

• நல்ல முறையில் ஒளு செய்து விட்டு இரண்டு ரக்அத் தொழுதால் போதும்!

• தனியாக தான் தொழ வேண்டும்! ஜமாத் ஆக இந்த தொழுகையை தொழ கூடாது!

💟 எப்போழுது தொழ வேண்டும் :

ஸலாத்துன் தவ்பா எப்போது வேண்டும் என்றாலும் தொழுகலாம் இதற்கு என்று குறிப்பிட்ட நேரம் எதுவும் கிடையாது தொழ தடுக்கப்பட்ட நேரங்களில் கூட இந்த தொழுகையை நாம் தொழுகலாம்!

(மஜ்மூ அல்-ஃபதாவா : இமாம் இப்னு தைமியா (ரஹ்) : 23 / 215)

💟 ஸலாத்துன் தவ்பா தொழுகை விளக்கம் :

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

ஓர் அடியான் பாவம் செய்த பின்னர் அதை (உணர்ந்து) அழகான முறையில் (உளூ) அங்கத்தூய்மை செய்து, சுத்தமாகி இரண்டு ரக்அத்துகள் தொழுது, தான் செய்த அந்தப் பாவத்திற்காகப் பாவமன்னிப்புக் கோரினால்  அல்லாஹ் அவனுடைய பாவங்களை மன்னித்து விடுகிறான்!

(நூல் : ஸஹீஹ் ஜாமிஃ : 5738)

❤️ சரியான முறையில் ஒளு செய்தல் : 

• நபி (ஸல்) அவர்கள் இந்த தொழுகைக்கு முதலில் ஒளுவை முறையாக செய்ய சொல்லி உள்ளார்கள் நாம் முதலில் முறையாக ஒளு செய்யவேண்டும்!

ஒளுவின் சிறப்புகள் ;

• ஒவ்வொரு தொழுகைக்கும் கட்டாயம் ஒளு அவசியம் ஆகும் ஒளு இல்லை என்றால் தொழுகை செல்லுப்படி ஆகாது!

(அல்குர்ஆன் : 5 : 6) 

• நாம் ஒழுவை சரியான முறையில் செய்தால் அதற்கு நன்மைகளும் அதிகம் கிடைக்கும்! அவை ;

1) ஒளு செய்யும் முன் பிஸ்மில்லாஹ் கூறி கொள்ள வேண்டும்! ஒளு செய்ய ஆரம்பம் துஆ பற்றி ஸஹீஹான ஹதீஸ்கள் எதுவும் இல்லை பொதுவாக நாம் பிஸ்மில்லாஹ் கூறி கொள்ளலாம்!

2) நாம் ஒளு செய்யும் பொழுது முகத்தை கழுவினால் கண்களால் பார்த்துச் செய்த பாவங்கள் அனைத்தும் நாம் முகத்தை கழுவிய கடைசி நீருடன் நம்மை விட்டு வெளியேறி விடுகிறது!

• நாம் கைகளை கழுவும் போது கைகளால் செய்த பாவங்கள் அனைத்தும் கைகளைக் கழுவிய தண்ணீரின் கடைசி துளியுடன் வெளியேறுகின்றது!

• நாம் கால்களை கழுவும் போது கால்களால் நடந்து செய்த பாவங்கள் அனைத்தும் கால்களைக் கழுவிய தண்ணீரின் கடைசி துளியுடன் வெளியேறுகின்றது!

• முழுமையாக நாம் ஒளு செய்த பின்பு நம்முடைய பாவங்களிலிருந்து தூய்மை அடைந்தவராக அந்த இடத்திலிருந்து நாம் செல்வோம்!

(நூல் : முஸ்லிம் : 412)

3) ஒரு மனிதன் அழகிய முறையில் உளூ செய்து தொழவும் செய்வானாயின் அவன் தொழுது முடிக்கும் வரை அவனுக்கும் தொழுகைக்கும் இடையிலுள்ள சிறு பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன!

(நூல் : புகாரி : 160)

4) நாம் முறையாக ஒளு செய்வதால் நம்முடைய ஒளு செய்த உறுப்புகள் மறுமை நாளில் பிரகாசமாக ஒளிரும்!

(நூல் : புகாரி : 136 | முஸ்லீம் : 420)

5) ஒளு செய்த பின்பு துஆ ஓதினால் சொர்க்கத்தின் 8 வாசல்களும் திறக்கும் இதில் நாம் நாடிய வாசல் வழியாக செல்லலாம்!

அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக்க லஹு,வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வ ரசூலுஹு

பொருள் : அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை; அவன் தனித்தவன்; அவனுக்கு இணையானவர் வேறெவருமில்லை என்று நான் உறுதிமொழிகிறேன். மேலும். முஹம்மத் (ஸல்) அவர்கள்,அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதரும் ஆவார்கள் என்றும் நான் உறுதிமொழிகிறேன்!

(நூல் : முஸ்லிம் : 397)

❤️ இரண்டு ரக்அத் தொழுவது :

• நாம் நல்ல முறையில் ஒளு செய்த பின்பு இரண்டு ரக்அத் தொழ வேண்டும்! இவ்வாறு செய்வதால் உள்ளம் அல்லாஹ்விடம் தவ்பா செய்யவேண்டும் என்ற பணிவுடன் இருக்கும்!

• இதே உள்ளத்துடன் நாம் அல்லாஹ்விடம் தவ்பா செய்தால் இன்ஷாஅல்லாஹ் கண்டிப்பாக அல்லாஹ் அதை ஏற்று கொள்ளுவான்!

❤️ தொழுகையில் துஆ செய்வது :

• நாம் ஸலாத்துன் தவ்பா தொழும் போது ஒவ்வொரு ஸஜ்தாவிழும் அல்லாஹ்விடம் மனம் வருந்தி தவ்பா செய்யவேண்டும்! மீண்டும் அந்த பாவத்தின் பக்கம் செல்ல கூடாது என்று அல்லாஹ்விடம் உதவி கேட்க வேண்டும்!நமக்கு தெரிந்த மொழியிலேயே அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கேட்கலாம்!

• அதே போன்று தொழுகையில் அத்தஹியாத் அமர்வில் அத்தஹியாத் மற்றும் ஸலவாத் ஓதி பின்பு நாம் அத்தஹியாத் இருப்பில் அமர்ந்த நிலையிலேயே துஆ செய்யலாம்!

• இதன் பின்பு நாம் நம்மால் இயன்ற அளவுக்கு நல்ல அமல்கள் செய்யவேண்டும்! அல்குர்ஆன் ஓதுதல் திக்ர் செய்தல் ஸதகா செய்தல் பிறருக்கு நல்ல செயல்களுக்கு உதவி செய்தல் இது போன்று நம்மால் இயன்ற நல்ல அமல்களை தொடர்ந்து செய்து வரவேண்டும்!

@அல்லாஹ் போதுமானவன் 💞
https://bit.ly/3w0EPX7

Search This Blog