புகாரியில் பதிவான பலவீனமான ஹதீஸ்கள்
அறிஞர் அல்பானியின் ஆய்வுப் பார்வை
ஆரம்பத்தில் ஏகத்துவக் கருத்து (எம். ஷம்சுல்லுஹா) என்னைப் போன்றவர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டபோது பற்றிக் கொண்ட பயமும், தொற்றிக் கொண்ட கேள்வியும், “இதற்கு முன்பு இதே போன்று ஏகத்துவக் கொள்கையை ஏற்றுக் கொண்ட அறிஞர்கள் நமக்குத் தென்படவில்லையே! அப்படி ஏற்றுக் கொண்ட யாரும் இருக்கின்றார்களா? அப்படி இருந்தால் நாமும் ஏற்றுக் கொள்வோம்’ என்பது தான்.
அதற்கு ஏற்பவும் இசையவும் மறைந்த அறிஞர் அன்வாருல் குர்ஆன் ஆசிரியர் இ.எம். அப்துர்ரஹ்மான் அவர்கள் எங்களுக்குக் கிடைத்தார்கள். அவர்களிடம் நாங்கள் ஐயங்களைக் கேட்டோம். தெரிந்தோம்; தெளிந்தோம். தீர சிந்தித்த பிறகு கேள்விகள், எதிர்க் கேள்விகள் என்று மாறி மாறி எழுந்து விவாதித்த பின்பு இறுதியில், என்ன எதிர்விளைவு ஏற்பட்டாலும் ஏகத்துவத்தை ஏற்போம் என்று உறுதிகொண்டு ஏற்றோம். பிறருக்கும் எடுத்துச் சொன்னோம். இந்தப் பயணத்தின் கடைசி ஸ்டேஷன் மரணம் என்ற எல்லை வரை தொடர எல்லாம் வல்ல அல்லாஹ்வைப் பிரார்த்திக்கின்றோம்.
இன்று இறையருளால் சத்தியம் என்று வந்துவிட்டால் அதை ஏற்க முன்னுதாரணம், முன்மாதிரி ஏதேனும், எங்கேனும் இருக்கின்றதா? என்றெல்லாம் பார்க்க வேண்டிய அவசியமே இல்லை என்ற அளவுக்கு ஒரு மனப்பக்குவத்தை அல்லாஹ் தந்திருக்கின்றான். அதற்காக அல்லாஹ்வுக்கு நாம் நன்றி செலுத்த வேண்டும்.
இந்த அடிப்படையில் ஹதீஸ்களை அறிவிப்பாளர் தரம் பார்த்து பலம், பலவீனம் என்று பிரித்துத் தான் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தவ்ஹீத் ஜமாஅத் ஆரம்பத்திலேயே வந்துவிட்டது.
அந்தக் காலகட்டத்தில் புகாரி, முஸ்லிமில் பலவீனமான ஹதீஸ்கள் எதுவும் அறவே இடம்பெறாது என்று உலகெங்கிலும் உள்ள மார்க்க அறிஞர்கள் நம்பியது போன்று நாமும் நம்பியிருந்தோம்.
ஆனால் எதையும் குருட்டுத்தனமாக ஏற்றுக் கொள்ளக்கூடாது என்ற குர்ஆனின் போதனைக்கு ஏற்ப, ஆய்வு செய்து, அலசிப் பார்த்து ஏற்க வேண்டும் என்ற தெளிந்த சிந்தனை ஓட்டத்துடன் சத்தியப் பாதையில் லட்சியப் பயணம் செய்யத் துவங்கினோம். இந்த நிலையில் புகாரி, முஸ்லிமையும் பலவீனமான ஹதீஸ்களின் தாக்கம் பதம் பார்க்காமல் விடவில்லை என்பதை அறிந்து கொண்டோம்.
பலவீனமான ஹதீஸ்களாக இருந்தால் மட்டும் பரவாயில்லை, குர்ஆனுடன் நேரடியாக மோதுகின்ற ஹதீஸ்கள் கூட, அல்குர்ஆனுக்கு அடுத்த நூல் என்ற பெயரைப் பெற்ற புகாரியிலேயே இடம் பெற்றிருப்பது தெரிய வந்த போது, ஓர் இறைநம்பிக்கையாளனுக்கு ஏற்படுகின்ற தயக்கமும் சங்கடமும் ஏற்பட்டது. அதனால் அதற்குண்டான விடையும் விளக்கமும் கேட்டு இந்த ஹதீஸ்களை உலகத்தின் முன்வைத்தோம். விடையும் விளக்கமும் வரவில்லை. மாறாக, இவர்கள் அறிவுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள் என்ற பட்டம் கிடைத்தது. முஃதஸிலாக்கள் என்ற முத்திரை குத்தப்பட்டது.
புகாரி, முஸ்லிமில் பலவீனமான ஹதீஸா? இதற்கு முன்பு இதுபோன்று யாரும் சொன்னதில்லையே! இவர்கள் தான் இதைப் புதிதாகச் சொல்கிறார்கள்; அதனால் இதை ஏற்க முடியாது என்ற குருட்டுப் பார்வை மட்டும் தான் அவர்களுடைய பதிலில் தெரிந்தது.
நாம் அஞ்சுவது அல்லாஹ்வை மட்டுமே! பின்பற்றுவது கலப்படமில்லாத தூய இறைச் செய்தியை மட்டுமே என்ற எஃகுச் சிந்தனையோடு, புகாரியிலும் குர்ஆனுக்கு முரண்படும் பாதகமான ஹதீஸ்கள் இடம்பெற்றுள்ளன எனற விபரத்தை மக்கள் மன்றத்தில் வைத்துவிட்டோம்.
ஒரே உறுதிப்பாட்டில் பயணத்தைத் தொடர்கின்றோம். இம்மாத ஏகத்துவத்தின் பக்கங்கள் இந்த சிந்தனையோட்டத்தைப் பிரதிபலிப்பதாகவே அமைந்திருப்பதை வாசகர்கள் உணரலாம்.
இந்த ஏகத்துவம் இதழ் இறுதிக் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் சமயத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மண்டலத் தலைவர் முஹம்மது ஷேக் அவர்கள், நாஸிருத்தீன் அல்பானி என்ற தற்கால அறிஞரின் கேள்வி பதில் அடங்கிய ஓர் உரையை நமக்கு அனுப்பி வைத்தார். அந்த உரையில் அறிஞர் அல்பானி அவர்கள் புகாரியிலும் பலவீனமான ஹதீஸ்கள் பதிவாகியுள்ளன என்ற கருத்தைக் கூறுகின்றார். அந்த உரை இந்த நேரத்தில் மிகப் பொருத்தமான ஒன்றாக இருக்கும் என்பதால் அந்த அரபி உரையின் தமிழாக்கத்தை இவ்விதழில் தந்துள்ளோம்.
எந்த அறிஞரின் கருத்துக்களிலும் ஏற்கத்தக்கவையும், நிராகரிக்கத் தக்கவையும் உண்டு என்ற நிலைப்பாட்டில் தவ்ஹீத் ஜமாஅத் உறுதியாக உள்ளது என்பது அனைவரும் அறிந்த விஷயம்.
இதை இங்கு குறிப்பிடக் காரணம், இவர்களுக்கு சாதகமான உரை என்பதால் இதை வெளியிட்டிருக்கிறார்கள் என்று மாற்றுக் கருத்துடையவர்கள் செய்யும் விமர்சனத்திற்குப் பதிலளிப்பதற்காகத் தான். ஏற்கனவே அல்பானி அவர்களின் ஆய்வுகள், ஆக்கங்கள் ஏகத்துவத்தில் வெளியாகியுள்ளன. அதுபோன்று இந்த உரையாக்கமும் வெளியாகியுள்ளது. அல்பானி அவர்கள் இந்த உரையில் தவ்ஹீத் ஜமாஅத் கொள்கையாகக் கொண்டிருக்கின்ற ஓர் அடிப்படை விஷயத்தை முன்வைக்கின்றார். அதை தமிழ் பேசும் தவ்ஹீதுவாதிகளின் சிந்தனைக்குத் தரவேண்டும் என்பதற்காகவே இந்த ஆக்கம் தரப்படுகின்றது.
இப்போது அந்தக் கேள்வி பதில் உரைக்குள் செல்வோம்.
கேள்வி: புகாரியில் பலவீனமான ஹதீஸ்கள் உள்ளன என்று நீங்கள் (அல்பானி) குறிப்பிடுகின்றீர்கள். இதற்கு முன்பு எந்த அறிஞராவது இதைக் கூறியிருக்கின்றார்களா? இது தொடர்பாக நீங்கள் தனி நூல் எதுவும் வெளியிட்டிருக்கிறீர்களா?
அல்பானியின் பதில்: புகாரியில் பலவீனமான ஹதீஸ் உள்ளது என்று எனக்கு முன்னால் உள்ள அறிஞர்கள் கூறியிருக்கின்றார்கள். அந்த உண்மையை ஒப்புக் கொண்டாக வேண்டும். அதை மறுக்கக் கூடாது.
இதற்குப் பல உதாரணங்கள் உள்ளன.
முதலவதாக, ஒரு முஸ்லிம் – அவர் ஆசிரியராகவோ அல்லது மாணவராகவோ இருக்கலாம். பண்டிதராகவோ அல்லது பாமரராகவோ இருக்கலாம். முஸ்லிம்களில் எந்த ரகமாகவும் இருக்கலாம். அவர்கள் அத்தனை பேரும் ஒன்றாக ஒருமித்து ஒத்துக் கொண்ட உண்மை, தவறான கருத்திலிருந்து பாதுகாக்கப்பட்ட செய்தி (குர்ஆன்) வழங்கப்பட்டவர்கள் முஹம்மத் (ஸல்) அவர்கள் மட்டுமே என்பது தான்.
இந்த அடிப்படையில் ஒரு முஸ்லிமின் உள்ளத்தில் தோன்றுகின்ற அல்லது அவரது காதில் விழுகின்ற எந்தச் செய்தியாக இருக்கட்டும். நூலாக இருக்கட்டும். அதை அவர் புரட்டிப் பார்ப்பதற்கு முன்பு, அதில் புகுவதற்கு முன்னால் அந்த நூல் தவறுக்கு அப்பாற்பட்டதல்ல என்ற உறுதிப்பாட்டை அவரது உள்ளத்தில் ஆழமாகப் பதித்தாக வேண்டும். ஏன்? பாதுகாக்கப்பட்ட, தவறுக்கு அப்பாற்பட்ட செய்தி (குர்ஆன்) அருளப்பட்ட பாக்கியம் முஹம்மத் (ஸல்) அவர்களைத் தவிர மனித சமுதாயத்தில் வேறு யாருக்கும் இல்லை என்பது முஸ்லிமின் கொள்கையாகும்.
இந்தப் பின்னணியில் தான் இமாம் ஷாஃபீ அவர்கள், திருக்குர்ஆனைத் தவிர வேறு எந்த நூலுக்கும் அல்லாஹ் முழுமையளிக்கவில்லை என்று கூறியிருக்கின்றார்கள்.
இது விவாதித்து ஏற்க வேண்டிய அவசியமில்லாத ஓர் அடிப்படையான உண்மையாகும். ஹதீஸ் கலையின் அடிப்படை விதிகள், அறிவிப்பாளர்களின் குறை நிறைகளை அலசுகின்ற ஆற்றலை அல்லாஹ் தனது அருட்கொடையாக எனக்கு அளித்துள்ளான். அதற்கு அவனுக்கு நான் நன்றி செலுத்துகின்றேன்.
பலமான ஹதீஸ்களை, பலவீனமான ஹதீஸ்களிலிருந்து தரம் பிரிக்கின்ற ஹதீஸ் கலைக் கல்வி மூலம் ஒரு பெருமளவுக்கு இந்தத் துறையில் ஈடுபாடு கொண்டேன்.
அதே கலை அறிவின் மூலம் புகாரி ஹதீஸ்களை ஆழ்ந்து, அதிகக் கவனம் எடுத்து ஆய்வு செய்ததில் புகாரியில் சில ஹதீஸ்கள் (ஸஹீஹ் என்ற) சரியான தரத்தில் அமைவது ஒருபுறமிருக்கட்டும். ஹஸன் என்ற தரத்தில் கூட அமையவில்லை.
புகாரியின் நிலை இப்படி எனும் போது முஸ்லிமின் நிலையைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை.
இது, புகாரியில் பலவீனமான ஹதீஸ்கள் இடம் பெற்றிருப்பது தொடர்பாக நான் செய்த ஆய்வுகள் பற்றிய பதில் ஆகும்.
புகாரியில் பலவீனமான ஹதீஸ்கள் இடம்பெற்றிருப்பது தொடர்பாக முந்தைய அறிஞர்கள் ஏதேனும் குறிப்பிட்டிருக்கிறார்களா? என்பது உங்கள் கேள்வியின் இரண்டாவது பகுதியாகும்.
இது தொடர்பாக நான் இங்கு குறிப்பிட விரும்புவது, அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். அதிகமான அறிஞர்கள் எனக்கு முன்னரே இதே கருத்தைப் பதிவு செய்திருக்கிறார்கள். அவர்கள் என்னை விட ஆயிரம் ஆண்டுகள் முந்தியவர்கள். ஆய்விலும் என்னை விட மிக மிக முந்தியவர்கள்.
இமாம் தாரகுத்னீ, புகாரியில் பத்து ஹதீஸ்கள் அளவிற்குக் குறை கண்டிருக்கிறார்கள். அவற்றை விமர்சித்துள்ளார்கள்.
என்னைப் பொறுத்த வரையில் புகாரியில் நான் விமர்சனம் செய்யும் ஹதீஸ்களின் எண்ணிக்கை பத்தை அடையவில்லை. இதற்கு ஓர் அடிப்படைக் காரணம் உண்டு.
நான் வாழ்கின்ற இந்தக் காலத்தில் சுனன் திர்மிதி, சுனன் அபூதாவூத், சுனன் இப்னுமாஜா, சுனன் நஸாயீ ஆகியவற்றில் இடம் பெற்றிருக்கின்ற ஹதீஸ்களின் தரங்களை ஆய்வு செய்து, அவற்றை அடையாளம் காட்டுகின்ற அவசியத்திற்கும் கட்டாயத்திற்கும் தள்ளப்பட்டேன். சுனன் இல்லாமல் முஸ்னத் அஹ்மத், முஃஜம் தப்ரானீ போன்ற நூற்களில் இடம்பெறும் ஹதீஸ்களையும் ஆய்வு செய்து அவற்றை அடையாளம் காட்டுகின்ற அவசியமும் கட்டாயமும் இருக்கின்றது. ஆனால் அவற்றின் பக்கம் நெருங்குவதற்குப் போதுமான அவகாசம் இல்லை.
புகாரி, முஸ்லிமைப் பொறுத்த வரையில் லட்சக்கணக்கான ஹதீஸ்களில் சரியானவற்றை பெருமளவிற்கு வடிகட்டி, தேர்வு செய்யும் பணியைச் செய்துள்ளார்கள். உண்மையில் இது மகத்தான பணியாகும். அந்த அளவுக்கு வார்த்து, வடிகட்ட வேண்டிய ஹதீஸ்களில் நான் ஆய்வு செய்ய இறங்குவது எனக்கு விவேகமான செயலாகவும், காலத்தின் கட்டாயமாகவும் தெரியவில்லை. அதனால் என்னுடைய முழுக் கவனத்தை நான்கு சுனன்களான திர்மதி, அபூதாவூத், இப்னு மாஜா, நஸயீ ஆகிய நூற்களில் இடம்பெற்ற ஹதீஸ்களில் திருப்பி விட்டேன்.
புகாரியில் பலவீனமான ஹதீஸ்
இந்நிலையில் என்னுடைய ஆய்வின் போது புகாரி, முஸ்லிமிலோ அல்லது இவ்விரண்டில் ஏதேனும் ஒன்றிலோ சில பலவீனமான ஹதீஸ்கள் இருப்பது எனக்குத் தெரியவந்தது. இவ்வாறு நான் சொல்லும் போது யாருக்கேனும் எனது ஆய்வின் முடிவில் ஐயம் ஏற்பட்டால் அவர் புகாரியின் விரிவுரையான ஃபத்ஹுல்பாரியைப் புரட்டுவாராக! அதில் ஹாஃபிழ் இப்னு ஹஜர் அவர்கள் புகாரியில் இடம் பெறுகின்ற பல ஹதீஸ்கள் பற்றி அவர் செய்த விமர்சனங்களை அவர் காண்பார்.
ஹாஃபிழ் அஹ்மத் இப்னு ஹஜர் அவர்கள் ஹதீஸ் துறையில் அமீருல் முஃமினீன் என்று அனைவராலும் போற்றப்படக்கூடியவர் ஆவார்.
இந்தத் துறையில் பங்கெடுத்த அனைவரும் ஹாஃபிழ் இப்னு ஹஜர் போன்ற ஒரு பிள்ளையை எந்தவொரு தாயும் பெற முடியாது என்ற எனது கருத்தை அப்படியே வழிமொழிந்து விடுவார். அந்த அளவுக்கு ஹதீஸ் துறையில் அவரது ஞானம் கொடி கட்டிப் பறக்கின்றது.
அப்படிப்பட்ட அந்த அறிஞர் புகாரிக்கான தனது விரிவுரையில், அதில் பதிவான ஹதீஸ்களில் அதிகமான தவறுகளை விமர்சனம் செய்திருக்கின்றார்.
முஸ்லிமில் இடம்பெற்றுள்ள, சுனன் மற்றும் முஸ்னதில் இடம்பெற்றுள்ள ஹதீஸ்களைக் கூட அவர் இந்த அளவுக்கு விமர்சனம் செய்யவில்லை என்ற அளவுக்கு புகாரியின் ஹதீஸ்களை விமர்சனம் செய்திருக்கிறார்கள்.
புகாரி ஹதீஸ்கள் மீதான என்னுடைய விமர்சனப் பார்வையில், சில சந்தர்ப்பங்களில் ஒரு ஹதீஸ் முழுவதுமே பலவீனமாகி விடுகின்றது. சில சந்தர்ப்பங்களில் ஹதீஸின் ஒரு பகுதி மட்டும் பலவீனமாகி, அதன் மற்ற பகுதி சரியாக அமைந்துவிடுகின்றது. இதில் முதல் வகையை இப்போது பார்ப்போம்.
முதல் வகை
நபி (ஸல்) அவர்கள் இஹ்ராம் கட்டிய நிலையில் இருக்கும் போது மைமூனா (ரலி) அவர்களைத் திருமணம் செய்தார்கள்.
நூல்: புகாரி 1838, முஸ்லிம் 2755
இந்த ஹதீஸைப் பொறுத்தவரை முஸ்லிமுடன் சேராமல் புகாரி மட்டும் தனியாக அறிவிக்கின்ற ஹதீஸ் கிடையாது. மாறாக புகாரி, முஸ்லிம் இருவரும் கூட்டாகப் பதிவு செய்த ஹதீஸ் ஆகும்.
இப்போது இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரைப் பார்ப்போம்.
இந்தத் தொடரின் முதல் அறிவிப்பாளர் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் மீது எந்தக் குறையும் கிடையாது. அவர் அல்லாத அறிவிப்பாளர்கள் எவர் மீதும் குறை சொல்ல முடியாது. புகாரியில் வேறு சில ஹதீஸ்கள் உள்ளன. நபித்தோழர் அல்லாத வேறு அறிவிப்பாளர்கள் யாராவது ஒருவரிடம் கோளாறு இருக்கும். அதுபோன்ற தொடராக இந்த ஹதீஸின் தொடர் அமையவில்லை. அது மிகச் சரியான தொடராக அமைந்துள்ளது.
உதாரணத்திற்கு ஃபுலைஹ் பின் சுலைமான் என்ற புகாரியின் ஓர் அறிவிப்பாளரை எடுத்துக் கொள்வோம். அவரைப் பற்றி ஹாபிழ் இப்னு ஹஜனர் அவர்கள், உண்மையாளர், மனனம் கெட்டவர் என்று குறிப்பிடுகின்றார். ஹதீஸ் துறையில் இந்த நிலையில் உள்ளவர் மிகக் குறைந்த தரத்தில் உள்ளவராகவே கருதப்படுவார். இந்தத் தரத்தில் உள்ளவரின் ஹதீஸை ஏற்க வேண்டும் என்றால் இதே ஹதீஸ் வேறொரு நல்ல அறிவிப்பாளர் தொடரில் வந்திருக்க வேண்டும். அதுபோன்ற சந்தர்ப்பங்களில் இதை ஒரு துணைச் சான்றாக எடுத்துக் கொள்வார். இவர் மட்டுமே தனியாக அறிவித்திருந்தால் அந்தத் தொடரை வகை வைக்க மாட்டார்கள். அந்த ஹதீஸை ஏற்கவும் மாட்டார்கள். மொத்தத்தில் சரியான அறிவிப்பாளர் தொடரில் இந்த ஹதீஸ் வராத வரை இந்த ஹதீஸ் பலவீனமானது என்பதே முடிவாகும்.
இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கின்ற, மைமூனா (ரலி) திருமணம் தொடர்பான இந்த ஹதீஸின் தொடர் பக்காவான, பலமான தொடராகும். இதில் ஃபுஹைல் பின் சுலைமான் போன்றோர் இடம் பெறாததால் இதை விமர்சனம் செய்வதற்கு வாய்ப்பு அறவே கிடையாது. அதன் காரணமாக முந்தைய ஹதீஸ் கலை அறிஞர்கள் இதை விமர்சிக்காமல் விட்டு விட்டனர்.
அவர்கள் ஒருவேளை குறை காண வேண்டுமென்றால் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களைத் தவிர வேறு யாரையும் குறை காண முடியாது. காரணம் அவர் கண்ணியத்திற்குரிய நபித்தோழர். அதனால் இப்னு அப்பாஸ் சிறிய வயதுடையவராக இருந்ததால் இந்தத் திருமண விஷயத்தைத் தவறாக விளங்கி அறிவித்து விட்டார் என்று அந்த ஹதீஸ் கலை அறிஞர்கள் கூறுகின்றனர். இது ஒரு காரணம்.
மற்றொரு காரணம், சம்பந்தப்பட்ட மைமூனா (ரலி) அவர்கள், நாங்கள் இருவருமே இஹ்ராம் அல்லாத சாதாரண நிலையில் தான் திருமணம் முடித்தோம் என்று கூறிவிட்டார்கள். இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிப்புக்கு மாற்றமாக மைமூனா (ரலி) அறிவிக்கின்றார்கள். மேற்கண்ட இந்தக் காரணத்தால் இந்த ஹதீஸ் பலவீனமானதாக ஆகிவிட்டது.
நபி (ஸல்) அவர்கள் இஹ்ராம் கட்டிய நிலையில் இருக்கும் போது மைமூனா (ரலி) அவர்களைத் திருமணம் செய்தார்கள் என்ற இந்த ஹதீஸில் நான்கு அரபி வார்த்தைகள் உள்ளன. இப்படிப் பலவீனமாகும் ஹதீஸ், இதுபோன்று சிறிய அளவிலும் இருக்கலாம். சமயத்தில் இதைவிடப் பெரிதாகவும் அமையும். அதற்கு புகாரியில் எடுத்துக்காட்டுகள் உண்டு.
இரண்டாவது வகை
ஒரு ஹதீஸின் மூலம் சரியாக அமைந்திருக்கும். அந்த ஹதீஸ் தொடரின் இடையில் இடம்பெறுகின்ற யாராவது ஒரு அறிவிப்பாளரின் செய்தி ஹதீஸில் செருகப்பட்டிருக்கும். இதற்கு புகாரி 136, முஸ்லிம் 415 ஹதீஸ் எடுத்துக்காட்டாகும்.
நுஅய்ம் அல்முஜ்மிர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
பள்ளிவாசலின் மேல் புறத்தில் அபூ ஹுரைரா (ரலி) அவர்களுடன் நானும் ஏறிச் சென்றேன். அபூஹுரைரா (ரலி) அவர்கள் உளூ செய்தார்கள். (உளூ செய்து முடித்ததும்) “மறுமை நாளில் என் சமுதாயத்தார் உளூவின் உறுப்புகளிலுள்ள அடையாளங்களால் “(பிரதான) உறுப்புக்கள் பிரகாசிப்போரே! என்று அழைக்கப்படுவார்கள். எனவே, உங்களில் எவருக்குத் (தமது உளூவில் பிரதான உறுப்புக்களை நீட்டிக் கழுவி) தமது பிரகாசத்தையும் நீட்டிக்கொள்ள முடியுமோ அதனைச் செய்து கொள்ளட்டும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதைக் கேட்டிருக்கிறேன் என்றார்கள்.
இந்த ஹதீஸில், “உங்களில் எவருக்குத் தமது பிரகாசத்தையும் நீட்டிக்கொள்ள முடியுமோ அதனைச் செய்து கொள்ளட்டும்’ என்ற வாசகம் நபி (ஸல்) அவர்களின் வார்த்தை இல்லை. அபூஹுரைராவின் வார்த்தைகள்.
ஹாபிழ் இப்னு ஹஜர் அல்அஸ்கலானீ, இப்னும் கய்யூம், ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா, ஹாபிழ் அல் முன்திரி போன்றோர் இதை அடையாளம் காட்டியுள்ளனர்.
இப்படி ஹதீஸின் ஒரு பகுதி பலவீனமாக அமைந்திருப்பதையும் நாம் பார்க்கலாம்.
முடிவுரை
இது தான் அறிஞர் அல்பானியின் ஆய்வுப் பதிலாகும். சூனியம் போன்ற புகாரி ஹதீஸை பலவீனம் என்ற தரத்திற்கு அல்பானி அவர்கள் கொண்டு வரவில்லை என்பது நமக்குத் தெரியும். இருப்பினும் புகாரியிலும் பலவீனமான ஹதீஸ் உண்டு என்று ஓர் ஆய்வுப் பார்வையை இந்த உரையில் அல்பானி அவர்கள் பதிவு செய்திருக்கிறார்கள். அதற்கு ஓர் அழகான அடிப்படையையும் பதிவு செய்கின்றார்கள்.
அல்லாஹ்வின் செய்தியில் மட்டுமே தவறு ஏற்படாது; மற்றவை தவறிலிருந்து தப்பாது என்பது தான் அந்த அடிப்படை! குறைந்தபட்சம் இந்த அடிப்படையைக் கூட ஸலஃபுகள் என்ற பெயரில் உள்ளவர்கள் மறுப்பது இறை நெறிக்கும் இயற்கை நெறிக்கும் எதிரானது என்பதைச் சுட்டிக் காட்டவே இந்த உரையின் எழுத்தாக்கத்தை வாசகர்களின் பார்வைக்குத் தந்திருக்கின்றோம்.
--எம். ஷம்சுல்லுஹா
நன்றி : ஏகத்துவம் டிசம்பர் 2014
மறுப்பா? மதியீனமா?
தவ்ஹீத் ஜமாஅத் என்ன சொன்னாலும் அதற்கு மறுப்பாக எதையாவது சொல்ல வேண்டும் என்ற நோய் அண்மைக்காலமாக அதிகரித்து வருவதைப் பார்க்கலாம்.
தவ்ஹீத் ஜமாஅத் சொன்ன விடயம் சரியாக உள்ளதா? அவர்கள என்ன சொல்லியிருக்கிறார்கள்? அவர்கள் அணுகிய விதம் என்ன? அந்த கோணம் சரியா? தவறா? என்று ஆய்வு செய்யாமல், மறுப்பு என்ற போர்வையில் கண்டபடி அர்த்தமற்று உளறித்திரிவதையே இன்று சிலர் முழுநேர வேலையாக வைத்திருக்கிறார்கள்.
அந்த வகையில் மேலே உள்ள கட்டுரைக்கும் இலங்கையைச் சேர்ந்த சகோதரர் முஜாஹித் என்ற ஒருவர் மறுப்பு என்ற பெயரில் ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளார்.
அந்த கட்டுரையை படித்துப் பார்த்தால் இப்படியும் உளற ஒருவருக்கு இயலுமா என்று எண்ணுமளவுக்கு கிறுக்கி வைத்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.
(மேலே உள்ள) ஏகத்துவம் இதழ் கட்டுரையின் சாராம்சம்
புகாரி, முஸ்லிம் போன்ற கிரந்தங்களில் பலவீனமான செய்திகள் அறவே இடம் பெறவில்லை என்று அறிஞர்களில் ஒரு பெருங்கூட்டமே இன்றளவிலும் கருதிக்கொண்டு உள்ளார்கள்.
ஆனால் புகாரியிலும் பலவீனமான செய்திகள் உண்டு என்று முன்னைய காலத்திலிருந்தே பல அறிஞர்கள் கூறி வந்துள்ளனர்.
அவர்கள் புகாரியிலுள்ள ஹதீஸ்களை கடுமையாக விமர்சினம் செய்துள்ளனர்.
குர்ஆன் மட்டுமே குறைகளுக்கு அப்பாற்பட்டது. எந்த ஹதீஸ் நூலும் குறைகளுக்கு அப்பாற்பட்டது இல்லை! இதுதான் அவர்களது விமர்சினத்தின் அடிப்படை என்ற இமாம் அல்பானி அவர்களது பதிலை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டிருந்தார்கள்.
இதற்கு மறுப்பளிப்பதாக இருந்தால் என்ன செய்ய வேண்டும்?
எந்த விடயங்கள் இதற்கு மறுப்பாக அமையும் ?
மறுப்பு அளிப்பதாக இருந்தால் குறித்த அந்த கட்டுரையில் தவறு இருக்க வேண்டும். அந்த தவறை சரியாக சுட்டிக்காட்டும் கட்டுரைதான் மறுப்புக் கட்டுரை என்று கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
மேற்படி கட்டுரைக்கு மறுப்பு வரைவதாக இருந்தால் அந்த கட்டுரையிலுள்ள தவறுகள் சுட்டிக்காட்டப்பட்டு அந்த மறுப்பு வரையப்பட்டிருக்க வேண்டும்.
இந்த கட்டுரையில் தவறு இருப்பதாக இருந்தால் எவ்வாறான தவறுகள் இருக்கும்?
அறிஞர் அல்பானி (ரஹ்) அவர்கள் இந்த கருத்தை கூறினார்கள் என்று உள்ளது. இது தவறாக இருக்க வேண்டும்.
மேற்படி அறிஞர் குர்ஆனைத் தவிர வேறு எந்த நூலிலும் குறை இல்லை என்று கூறியதாக நாம் எடுத்துக்காட்டிய தகவல் தவறாக இருக்க வேண்டும்.
அல்லது அந்த கருத்து தவறாக இருக்க வேண்டும்.
பிற அறிஞர்களும் இதற்கு முன் புகாரியை விமர்சினம் செய்தார்கள் என்ற கருத்து தவறாக இருக்க வேண்டும்.
இந்த தவறுகள் ஒன்றோ அல்லது பலதோ இருந்து அதற்கு பதிலாக ஒரு கட்டுரை வரையப்பட்டிருந்தால் அதை மறுப்புக் கட்டுரை என்று கவனத்தில் எடுத்துக் கொள்ளலாம்.
ஆனால் இந்த கட்டுரைக்கு பதில் எழுத வந்த மேற்படியார் என்ன செய்திருக்கிறார்?
தவ்ஹீத் ஜமாஅத் சுட்டிக்காட்டியது போல புகாரியில் பலவீனமான செய்திகள் இருப்பதாக பல அறிஞர்கள் விமர்சினம் செய்துள்ளார்கள் என்பதை ஒப்புக் கொள்கிறார்.
அந்த வரிசையில் அறிஞர் அல்பானி அவர்களும் புகாரியில் தவறு உண்டு எனக் கண்டு அவர் விமர்சினம் செய்திருக்கிறார் என்பதை ஏற்றுக் கொள்கிறார்.
இவ்வாறெல்லாம் தவ்ஹீத் ஜமாஅத்தின் கருத்தை அங்கீகரித்துவிட்டு தவ்ஹீத் ஜமாஅத் சொல்லாத ஒரு கருத்தை சொல்லியிருப்பதாக குதர்க்கம் புரிகிறார். அவரது குறை மதியை வெளிப்படுத்துகிறார்.
// ததஜவின் இந்த வருட டிசம்பர் மாத ஏகத்துவம் இதழில் புகாரி முஸ்லிமின் ஹதீஸை குர்ஆனுக்கு அல்லது நிதர்சனத்திற்கு அல்லது சிந்தனைக்கு முரண்பட்டால் நிராகரிக்க வேண்டும் என்ற தமதுகொள்கையில்தான் அல்பானியவர்களும் இருக்கிறார்கள் என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் வகையில் ஒரு செய்தியைப் பதிந்திருந்தார்கள். //
என்று தனது மதியீனத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.
அந்தக் கட்டுரையில் எங்கு, எப்படி இத்தகைய கருத்து திணிப்பை தவ்ஹீத் ஜமாஅத் செய்திருக்கிறது என்பதை மறுப்பெழுதியவர் நமக்கு காட்ட கடமைப்பட்டிருக்கிறார்.
தவ்ஹீத் ஜமாஅத் சொல்லாத கருத்தை, சொன்னதாக இவராக கற்பனை செய்து கொண்டு அதற்கு மறுப்பளிப்பதாக நிழலுடன் மல்லுக்கட்டியிருக்கிறார்.
இது போன்ற மறை கழன்ற மதியீனத்துக்குப் பெயர்தான் மறுப்பா?
குர்ஆனுக்கு முரண்பட்டால் அந்த செய்தியை மறுக்க வேண்டும் என்ற தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலையில்தான் அறிஞர் அல்பானி (ரஹ்) அவர்களும் இருந்ததாக அந்த கட்டுரையில் எழுதப்பட்டிருப்பதாக இல்லாத ஒரு கருத்தை இவராக இட்டுக்கட்டி எழுதி வைத்திருக்கிறார்.
இது ஏகத்துவத்தில் எழுதப்பட்ட கட்டுரையின் முடிவுரை.
இந்த முடிவுரையைப்பார்த்தாலே முஜாஹித் என்பவரின் மூடத்தனம் பளிச் என்று புரியும்.
புகாரியில் பலவீனமான ஹதீஸ்கள் உண்டு என்ற அடிப்படையை இமாம் அல்பானி அவர்களும் கூறியிருக்கிறார் என்பதை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதே இதன் நோக்கமே ஒழிய தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலையில்தான் அல்பானி அவர்கள் இருந்தார்கள் எனறு கூறுவது அக் கட்டுரையின் நோக்கமுமல்ல! அப்படி அந்த கட்டுரையில் கூறப்படவுமில்லை!
தனது தாய் மொழியான தமிழில், அதுவும் எளிமையான தமிழில் இவ்வாறு தெளிவாக எழுதப்பட்ட ஒன்றையே ஏறுக்கு மாறாக புரிந்துகொண்டு உளறும் மேற்படியார் அரபியைக் கற்று ஆய்வு செய்து மார்க்கத்தை சொன்னால் அது என்ன கதிக்கு உள்ளாகும்?
இவர்கள் எல்லாம் அறிஞர்களாம். மார்க்க விளக்கம் அளிக்கிறார்களாம்!.
இந்த இடத்தில் இன்னுமொன்றை அறிந்துகொள்ள வேண்டும்.
இவ்வாறு மறுப்பு (?) எழுதிய மவ்லவி முஜாஹித் என்பார் வழக்கத்துக்கு மாற்றமாக அனைத்தையுமே சற்று வித்தியாசமாக விதம் விதமாக அணுகக்கூடியவர்.
அனைத்து துறையிலும் தனது கை வரிசையைக் காட்டும் அசகாய சூரர்.
மார்க்கத்தைக் கூட ஒரு “மார்க்கமாக” போதிப்பதில் தனி முத்திரை பதித்தவர்.
அவை என்ன என்ன என்பதை இவரது பழைய ஆய்வுகளை (?) அலசும் போது அறிந்து கொள்ள முடியும்.
இவ்வாறு வித்தியாசமாக விளங்கும் தன்மை கொண்டதால் என்னவோ தெரியவில்லை இங்கும் வித்தியாசமாக, விவகாரமாக விளங்கியிருக்கிறார் போலும். அவருக்கே வெளிச்சம்!
இது அவரது மறுப்பில் அவர் விட்ட மிகப்பெரிய கோளாறாகும்.
அடுத்ததாக இன்னும் சில விடயங்களை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
புகாரி நூலில் தவறு இருக்கிறது என்பது இரண்டு விதங்களில் அறிஞர்களால் குறிப்பிடப்பட்டிருக்கிறதாம்.
புகாரி, முஸ்லிம் போன்ற அறிஞர்கள் அவர்களது நூலிற்கு இட்ட நிபந்தனைப் பிரகாரம் அவர்கள் பதிந்த செய்திகள் உள்ளதா? என்றும் பலவீனமான அறிவிப்பாளர் தொடர் உள்ளதா என்ற கோணத்தில்தாம் மறுக்கப்பட்டுள்ளதாம்.
இந்த ஆய்வாளரை (?) பார்த்து சில விடயங்களை கேட்க விரும்புகிறேன்.
அல்பானி அவர்கள் முதலாவது உதாரணமாக ஒரு செய்தியைக் குறிப்பிட்டு அதை பலவீனமான செய்தி என்று குறிப்பிடுகிறார்.
அது மேற்படியார் குறிப்பிட்ட எந்த வகைக்குள் அடங்குகிறது?
அந்த செய்தியில் இப்னு அப்பாஸ் என்ற நபித்தோழர் தவறு விட்டதாக வருகிறது.
இது புகாரியின் நிபந்தனைக்கு உட்படாத செய்தி என்ற வகைக்குள் எடுத்துக்கொள்ளப்படுமா?
அல்லது அறிவிப்பாளர் வரிசை பலவீனம் என்ற வகைக்குள் அடங்குமா?
இரண்டாவது உதாரணமாக அல்பானி அவர்கள் குறிப்பிடும் செய்தியில் நபிகளாரின் கூற்றுடன் நபித்தோழரின் கூற்று கலந்துவிட்டதாக வருகிறது.
இது புகாரியின் நிபந்தனைக்கு உட்படவில்லை என்ற வகைக்குள் அடங்குமா?
அல்லது அறிவிப்பாளர் வரிசை பலவீனம் என்ற வகைக்குள் அடங்குமா?
இப்படி இந்த இரு செய்தியும் இரண்டு வகைக்குள்ளும் அடங்காமல் அறிவிப்பாளர் வரிசையில் குறை காணாது கருத்தைக் கவனித்து நிராகரிக்கப்பட்டிருக்கிறது என்று தெள்ளத் தெளிவாக்ப புரிகிறது.
இந்த நிலையில் அந்த இரு கோணங்களிலும்தான் அது குறை காணப்படுகிறது என்று பச்சையாக இந்த ஆய்வாளர் (?) புளுகி வைத்துள்ளது இவர் எந்தளவிற்கு கூரிய (?) சிந்தனையுள்ளவர் என்பதை படம் போட்டுக் காட்டுகிறது.
புத்தகங்களில் என்ன எழுதப்பட்டிருக்கிறதோ அதை அப்படியே மனனமிட்டு தேவையான இடத்தில் வெட்டி ஒட்டி ஒப்புவிப்பபதற்குப் பெயர் ஆய்வு அல்ல.
அதிகமதிகம் புத்தகங்கள் படித்தால் மட்டும் போதாது.
அதை தனது மூளைக்குள் உள்வாங்கி தன்னிடமுள்ள ஆறாவது அறிவை பயன்படுத்தி பகுத்து ஆராய்ந்து சரியான ஒரு முடிவை எடுக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
மறுப்பாளர் எப்படி சிந்திப்பது என்ற அடிப்படை அறிவை சற்று வலுப்படுத்த முயற்சி செய்வது தனது ஆய்வாளர் என்ற வண்டியை இன்னும் சிறிது காலம் ஓட்டுவதற்கு உபயோகமாக இருக்கும்.
பொழுது போகவில்லை என்பதற்காக கையில் இணையதளம் இருக்கிறதே என்று தன் இஷ்டத்துக்கு எதையாவது எழுதிக் கொண்டிருப்பது போல் சகோதரர் நடந்து வருகிறார்.
பழைய நிலை ஆதாரமாகுமா?
தவ்ஹீத் ஜமாஅத் 2003 இல் என்ன நிலையில் இருந்தது என்பதை ஸ்கிறீன் ஷொட் எடுத்துக் காட்டி இருக்கிறார்.
2003 இல் தவ்ஹீத் ஜமாஅத் குர்ஆனுக்கு முரண்பட்டால் அந்த செய்தி இட்டுக்கட்டப்பட்ட செய்தி என்ற நிலைக்கு வந்துவிட்டது. கண்திருஷ்டி சம்மந்தப்பட்ட ஹதீஸ் அப்போது அந்த வகைக்குள் அடங்கும் என்பதை தவ்ஹீத் ஜமாஅத் ஆய்வு செய்யவில்லை.
ஒரு காலத்தில் சரி என்று நினைத்தது மறு ஆய்வில் தவறாக படும்போது அதை தவறு என்று சுட்டிக்காட்டுவதில் எந்தத் தவறும் கிடையாது.
இன்னும் பல வருடங்கள் பின்னுக்கு சென்றால் சூனியம் குறித்த செய்தியும் ஸஹீஹ் என்று தவ்ஹீத் ஜமாஅத் எழுதியது கிடைக்கும். ஏன் அதை இந்த ஆய்வாளர் (?) விட்டுவிட்டார்?
தவ்ஹீத் ஜமாஅத்தின் பழைய ஆய்வு நிலையை படம் போட்டு பம்மாத்து காட்டியது போல தவ்ஹீத் ஜமாஅத் இவரது பழைய (?) ஆய்வுகளை, ஆபாச அர்ச்சனைகளை படம் போட்டு காட்டினால் இவர் என்ன கதிக்கு உள்ளாவார் என்பதை சற்று சிந்தித்துப்பார்க்க வேண்டும்.
அது என்னுடைய பழைய (?) நிலை! தற்போது திருந்திவிட்டேன் (?) என்று அவரது ஆபாச அர்ச்சனைகளுக்கு பதில் சொல்வாரேயானால் (அது சரியாகுமா என்பது தனி விடயம்) அதே பதிலை தவ்ஹீத் ஜமாஅத் சொல்லும் போது மட்டும் இவர்களுக்கு மனம் ஏற்க மறுக்கிறது என்றால் இவர்கள் தீவிர மனநோயாளிகள் என்பதைத் தவிர வேறு எது உண்மையாக இருக்க முடியும்?
இப்படி சம்மந்தமேயில்லாமல் உளறும் கட்டுரைகளை, கட்டிய உரைகளை எல்லாம் சற்று கூட சிந்தித்துப்பார்க்காமல் அப்படியே ஒரு கூட்டம் (அதில் மார்க்க அறிஞர்களும் அடங்கும்) பரப்பித் திரிகிறது என்றால் இவர்கள் தவ்ஹீத் ஜமாஅத் என்ற அமைப்பை எந்தளவுக்கு குருட்டுத்தனமாக எதிர்க்கிறார்கள் என்பது தெள்ளத் தெளிவாக புரிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது.
அந்தளவுக்கு இவர்களிடம் தக்லீது சிந்தளை தலைவிரித்தாடுகிறது. அல்லாஹ் காப்பாற்ற வேண்டும்.
எனவு, இது போன்று உளராமல், அல்லாஹ்வுக்கு பயந்து நடுநிலையுடன் அறிவுப்பூர்வமாக சிந்தித்து சத்தியத்தை அறிய எல்லாம் வல்ல அல்லாஹ் வழிகாட்டுவானாக!
share this.. https://bit.ly/4byYMUC