தவ்ஹீத் ஜமாஅத் video's: கலிஃபாக்கள் நேர்வழி பெற்றவர்கள் என்பதால் அவர்களை பின்பற்றலாமா

கலிஃபாக்கள் நேர்வழி பெற்றவர்கள் என்பதால் அவர்களை பின்பற்றலாமா

 கலிஃபாக்கள் நேர்வழி பெற்றவர்கள் என்பதால் அவர்களை பின்பற்றலாமா

 சஹாபாக்களின் கூற்றும் மார்க்கம் தான் என்று கூற அவர்களை பின்பற்றக் கூடிய கூட்டமானது, தங்கள் கொள்கையை நியாயப்படுத்துவதற்காக சில ஆதாரங்களை முன்வைக்கின்றனர்.

அவற்றை நாம் ஒவ்வொன்றாக காண்போம்.

எனது சுன்னத்தை பின்பற்றுங்கள், எனது கலிஃபாக்களின் சுன்னத்தை பின்பற்றுங்கள் என்பதாக நபி (சல்) அவர்கள் கூறுவதாக
திர்மிதி 2600,
அபூ தாவூத் 3991,
இப்னு மாஜா 42, 43,
முஸ்னத் அஹ்மத் 16519, 16521, 16522,
தாரிமி 95 மற்றும் பல நூல்களில் ஹதீஸ்கள் பதியப்பட்டதை எடுத்துக் காட்டி, சஹாபாக்களை பின்பற்றலாம்,சஹாபாக்களின் வழியும் மார்க்கம் தான் என்று வாதம் வைக்கின்றனர்.

சஹாபாக்களின் கூற்றை மார்க்கமாக கருதுவதற்கு இந்த ஹதீஸ் இடம் தருகிறதா என்பதை பார்ப்பதற்கு முன்னால், இவர்கள் காட்டும் ஆதாரத்திற்கும் இவர்கள் கூறும் கொள்கைக்கும் எந்த தொடர்பாவது இருக்கிறதா என்பதை நாம் முதலில் கவனிக்க வேண்டும்.

கலிஃபாக்களின் வழியும் மார்க்கம் என்று இந்த ஹதீஸ் சொல்வதாக ஒரு வாதத்திற்கு வைத்துக் கொண்டாலும், கலிஃபாக்களை மட்டும் தான் பின்பற்ற வேண்டும் என்று இவர்களது கொள்கையை இவர்கள் மாற்றி அறிவித்து விட்டு அதன் பிறகு தான் இந்த ஹதீஸை சான்றாக எடுத்து வைக்க வேண்டும்.

ஒட்டு மொத்த சஹாபாக்களின் சொல்லும் மார்க்கம் என்று ஒரு பக்கம் கூறி விட்டு, அதற்கு ஆதாரம் என்று சொல்லி நான்கு கலிஃபாக்களை பின்பற்றுங்கள் என்கிற ஹதீஸை காட்டுவது இவர்களது கொள்கைக்கே எதிரானது என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

சரி, இந்த ஹதீஸ் கலிஃபாக்களை மார்க்க அடிப்படையில் பின்பற்றுமாறு தான் நமக்கு சொல்கிறதா?

ஹதீஸின் ஒரு பகுதியை மட்டும் தனியாக எடுத்து வைத்து வியாக்கானம் கொடுப்பதால் நேர்ந்த விளைவு இது.

இந்த ஹதீஸை முழுமையாக வாசிக்கும் போது, கண்ணை மூடிக் கொண்டு கலிஃபாக்களை மார்க்க அடிப்படையில் பின்பற்றுவதை இது சொல்லவில்லை என்பதை எளிதில் புரியலாம்.

இந்த ஹதீஸில், நபி (சல்) அவர்கள் வசியத் செய்தது போன்று இந்த சமூகத்திற்கு சில எச்சரிக்கைகளை இடுகிறார்கள்.

அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள், செவியுறுங்கள், கட்டுப்படுங்கள், அவர் அபிசீனிய நாட்டு அடிமையாக இருந்தாலும் சரியே, என்று முதலில் கூறுகிறார்கள்.

இதன் பொருள் என்ன? இங்கு குறிப்பிடப்படும் "கட்டுப்படுதல்" என்பது மார்க்கத்தில் கட்டுப்படுவதை குறிக்காது. மாறாக, ஆட்சியாளருக்கு கட்டுப்படுதலை, இஸ்லாமிய அரசுக்கு கட்டுப்படுதலை தான் இது குறிக்கும்.

நாட்டின் ஜனாதிபதிகள் தான் கலீபாக்கள் எனப்படுகின்றனர். ஒருவர் முஸ்லிம்களால் அதிபராகத் தேர்வு செய்யப்பட்டால் அவருக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும். இல்லாவிட்டால் நாடு சிதைந்து போய் விடும். ஜனாதிபதி என்ற முறையில் மார்க்க சம்மந்தமில்லாத நிர்வாக விஷயங்களில் அவர்கள் சில வழிமுறைகளை மேற்கொண்டால் அதற்குக் கட்டுப்பட வேண்டும் என்ற கருத்தில் தான் இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இப்படிப் பொருள் கொண்டால் தான் மார்க்கம் முழுமையாகி விட்டது என்ற வசனத்திற்கும், வஹீயை மட்டும் பின்பற்றுங்கள் என்ற கருத்தில் அமைந்த வசனங்களுக்கும் பொருள் இருக்கும்.

இதை சொல்லி விட்டு தொடர்ந்து அவர்கள் சொல்லும் போது,

நிறைய கருத்து வேறுபாடுகளைக் காண்பீர்கள், மார்க்கம் என்கிற பெயரில் புதிதாக உருவாக்கப்படும் அனைத்தும் வழிகேடு, உங்களுக்கு ஏதேனும் விஷயத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் எனது சுன்னத்தையும் நேர்வழி பெற்ற கலிஃபாக்களின் சுன்னத்தையும் பின்பற்றுங்கள் என்கிறார்கள்.

மார்க்கத்தில் புதிதாக உருவாக்கப்பட்டவை குறித்து உங்களை நான் எச்சரிக்கிறேன். அவை அனைத்தும் வழிகேடுகள் என்ற வாக்கியத்தையும் சேர்த்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பயன்படுத்தியுள்ளார்கள் எனும் போது,

மார்க்க விஷயம் இல்லாத மற்ற விஷயங்களில் தான் நேர்வழி பெற்ற கலீபாக்களுக்குக் கட்டுப்பட வேண்டும் என்பதை மேற்கண்ட வாக்கியம் தெளிவுபடுத்தி விடுகிறது.

அபுதாவூதில் பதியப்பட்ட இதே ஹதீஸில், கலிஃபாக்களை பின்பற்றுங்கள் என்று கூறி விட்டு, புதிய காரியங்களை விட்டும் உங்களை எச்சரிக்கிறேன் எனவும் சேர்த்து சொல்கிறார்கள்.

இதிலிருந்து தெரிவது, கலிஃபாக்கள் நேர்வழி பெற்றவர்கள், அவர்களை பின்பற்றலாம். எதுவரை? மார்க்கத்தில் புதிதாக ஏதும் உருவாகாதவரை பின்பற்றலாம்.

எப்போது புதிதாக ஒரு விஷயம் மார்க்க அடிப்படையில் உருவாகுமோ, அதை விட்டும் நாம் விலகி விட வேண்டும்.

ஆக, நபி (சல்) அவர்களின் வழிகாட்டுதலின் படி கலிஃபாக்கள் செய்வதை மட்டும் தான் நாம் பின்பற்ற முடியும் என்பதற்கு தான் பல்வேறு எச்சரிக்கைகளையும் இணைத்து இந்த அறிவுரையை நபி (சல்) அவர்கள் சொல்கிறார்கள்.

இன்னும் சொல்லப்போனால், எனது சுன்னத்தையோ அல்லது கலிஃபாக்களின் சுன்னத்தையோ பின்பற்றுங்கள் என்று அவர்கள் சொல்லியிருந்தால் தான் கலிஃபாக்களையும் தனியாக நாம் பின்பற்றலாம், எந்த நிபந்தனையுமின்றி பின்பற்றலாம் என்று கருத முடியும்.

எனது சுன்னத்தையும் கலிஃபாக்களின் சுன்னத்தையும் பின்பற்றுங்கள் என்று சொல்லும் போது, நபியின் சுன்னத் தான் கலிஃபாக்களின் சுன்னத், கலிஃபாக்களின் சுன்னத்தில் ஏதேனும் மார்க்கத்திற்கு மாற்றமான காரியம் இருக்குமானால் நபியின் சுன்னத்தோடு உரசிப் பார்த்து விட வேண்டும்.

இது போக, நாம் இதுவரை கண்டு வந்த இஸ்லாத்தின் அடிப்படையான வஹீயை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்பதையும், நபி (சல்) அவர்களுக்கு தவிர வேறு எவருக்கும் வஹீ அருளப்படாது என்பதையும் சாராம்சமாக கொண்டு இதை அணுகும் போது, அவைகளுக்கு முரணில்லாத வகையில் தான் இந்த ஹதீஸை நாம் புரிய வேண்டும்.

நேர்வழி பெற்ற கலீபாக்களைப் பின்பற்றுங்கள் என்பதைத் தொடர்ந்து ``அபீஸீனிய அடிமை என்றாலும் கட்டுப்பட்டு நடங்கள் எனவும் சேர்த்துக் கூறுகிறார்கள்.

இப்னு மாஜா 43, அஹ்மத் 16519

ஆட்சித் தலைவர் அபீஸீனிய அடிமை என்றாலும் அவருக்குக் கட்டுப்படுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதில் இருந்து நிர்வாக விஷயங்களில் கட்டுப்பட்டு நடப்பது பற்றியே கூறியுள்ளனர் என்பதை நாம் அறியலாம்.

நேர்வழி பெற்ற கலீபாக்கள் என்பது நான்கு கலீபாக்களைக் குறிக்கும் என்ற தவறான கருத்தும் இதன் மூலம் தகர்க்கப்படுகிறது. நான்கு கலீபாக்களில் ஒருவர் கூட அபீஸீனிய அடிமையாக இருக்கவில்லை. அபீஸீனிய அடிமையாக இருந்தாலும் கட்டுப்படுங்கள் எனக் கூறினால் கியாமத் நாள் வரை ஆட்சி செய்யும் கலீபாக்கள் அனைவருக்கும் மார்க்க சம்மந்தமில்லாத விஷயங்களில் கட்டுப்பட்டு நடங்கள் என்பது தான் இதன் பொருள்.

மார்க்க விஷயத்தில் கண்ணை மூடிக் கொண்டு கட்டுப்படுதல் என்பது கிடையாது.

மார்க்க சம்மந்தமில்லாத விஷயத்தில் மட்டும் நிர்வாகத் தலைமைக்கு கட்டுப்பட வேண்டும் என்பதற்குத் தான் அந்த உதாரணத்தையும் சேர்த்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.

மார்க்கத்தில் வேறு யாரையும் பின்பற்றி நடக்கும் நிலையில் நான் உங்களை விட்டுச் செல்லவில்லை என்று கூறிவிட்டு நேர்வழி பெற்ற ஆட்சியாளர்களைப் பின்பற்றுங் கள் எனக் கூறினால் அது நிர்வாக விஷயத்தைத் தான் குறிக்குமே தவிர மார்க்க விஷயத்தை அறவே குறிக்காது.

 உரை சகோ. பி. ஜே :  எழுத்து வடிவத்தில்    Nashid Ahmed  

short link https://rb.gy/53pke

அபுபக்கர் (ரலி) அவர்களையும் உமர் (ரலி) அவர்களையும் பின்பற்ற வேண்டுமா?

https://makarimtec.blogspot.com/2022/12/salaf.html


பின் தொடர்ந்தவர்களா? பின்பற்றியவர்களா? வழிகெடுக்கும் நவீன ஸலபிக் கொள்கை

https://makarimtec.blogspot.com/2023/01/sahaba.html


நபித்தோழர்கள் வழியாகத்தான் குர்ஆனே நமக்குக் கிடைத்தது. அதை மட்டும் ஏற்றுக் கொள்ளும் நீங்கள் அவர்களின் கருத்துக்களைப் புறக்கணிப்பது சரியா

https://makarimtec.blogspot.com/2023/01/5.html



கலிஃபாக்கள் நேர்வழி பெற்றவர்கள் என்பதால் அவர்களை பின்பற்றலாமா? https://youtu.be/mvEDBQPxpYs





Search This Blog