மத்ஹபுவாதிகளின் எதிர்வாதங்கள்
நபித்தோழர்கள் வழியாகத்தான் குர்ஆனே நமக்குக் கிடைத்தது. அதை மட்டும் ஏற்றுக் கொள்ளும் நீங்கள் அவர்களின் கருத்துக்களைப் புறக்கணிப்பது சரியா என்பதும் இவர்களின் தவறான வாதங்களில் ஒன்றாகும்.
இதை மத்ஹபுவாதிகள் கேட்க அருகதை இல்லை. ஏனெனில்
மத்ஹப்வாதிகள் நபித்தோழர்களைப் பின்பற்றுவதில்லை. அபூபக்கர் மத்ஹப், உமர் மத்ஹப் என்று மத்ஹபை உருவாக்கி இருந்தால் தான் இக்கேள்வியைக் கேட்க முடியும். ஆனால் மிகச் சிறந்த நபித்தோழர்களைப் புறக்கணித்து விட்டு அவர்களுக்குப் பின்னர் வந்தவர்கள் பெயரால் மத்ஹபை உண்டாக்கியவர்கள் இக்கேள்வியைக் கேட்க முடியாது.
ஆயினும் நபித்தோழர்களைப் பின்பற்றுவதாகக் கூறிக் கொள்ளும் சிலர் இக்கேள்வியை எழுப்பலாம். அப்படி எழுப்பினால் அதற்கான பதில் இதுதான்.
திருக்குர்ஆன் இறைவனின் வேதம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள். அவர்கள் மீது வைத்திருந்த நம்பிக்கையின் காரணமாகவும், திருக்குர்ஆனின் அற்புதநடை, தெள்ளத் தெளிவான கொள்கை காரணமாகவும் இது இறைவேதம் தான் என்று நபித்தோழர்கள் நம்பினார்கள். அதை அடுத்த தலைமுறையினருக்குக் கொண்டு சென்றார்கள்.
நபித்தோழர்கள் அடுத்த தலைமுறையினருக்கு திருக்குர்ஆனைக் கொண்டு வந்து சேர்த்த காரணத்தால் அவர்களைப் பின்பற்ற வேண்டும் என்பது எப்படிச் சரியாக இருக்கும்?
நீதிமன்றத்தில் இருந்து பிறப்பிக்கப்பட்ட கட்டளையை அப்படியே கூட்டாமல் குறைக்காமல் ஒரு தபால் ஊழியர் உங்களிடம் கொண்டு வந்து தந்தால் அல்லது நீதிமன்ற ஊழியர் கொண்டு வந்தால் அதை இப்படித்தான் நீங்கள் புரிந்து கொள்வீர்களா?
நீதிமன்ற உத்தரவை இவர்தான் என்னிடம் கொண்டு வந்து தந்தார். இவர் நீதிமன்ற உத்தரவை நாணயமாக என்னிடம் கொண்டு வந்து தராமல் இருந்தால் அந்த உத்தரவு எனக்குக் கிடைக்காமல் போய் இருக்கும். எனவே இனிமேல் இந்த தபால்துறை ஊழியர் சொல்வதையெல்லாம் நான் பின்பற்றுவேன்; எனக்கு ஏதாவது வழக்கில் தீர்ப்பு தேவைப்பட்டால் இந்த ஊழியரிடமே தீர்ப்பு கோருவேன் என்று நீங்கள் சொல்வீர்களா? அல்லது உலகில் யாராவது இப்படி கூறுவார்கள் என்று கருதுகிறீர்களா?
உலகில் எந்த மனிதனும் ஏற்றுக் கொள்ளாத இந்த வாதத்துக்கும், இந்த வாதத்துக்கும் கடுகளவு வேறுபாடு கூட இல்லை.
நபித்தோழர்கள் தான் நம்மிடம் குர்ஆனைக் கொண்டு வந்து சேர்த்தார்கள் என்ற வாதமாவது உண்மையா என்றால் அதுவுமில்லை.
நமக்கு நபித்தோழர்கள் குர்ஆனைக் கொண்டு வந்து தரவில்லை. நமக்கு முந்திய தலைமுறையினர் தான் கொண்டு வந்து சேர்த்தனர். எனவே அவர்களைப் பின்பற்றலாம் என்று சொல்வோமா?
நமக்கு முந்தின தலைமுறையும் நபியிடம் நேரடியாகக் கேட்டு நமக்குச் சொல்லவில்லை. அவர்கள் தமக்கு முந்திய தலைமுறையினர் சொன்னதைத் தான் நம்மிடம் கொண்டு வந்து சேர்த்தனர். இப்படியே போய்க்கொண்டு இருந்தால் நபிகள் நாயகம் காலம் முதல் இன்று வரை உள்ள ஒவ்வொரு முஸ்லிமையும் பின்பற்ற வேண்டும் என்று ஆகாதா?
இதையே இன்னும் தீவிரமாகச் சிந்தித்தால் நபித்தோழர்கள் தான் இதைக் கொண்டு வந்த சேர்த்தனர் என்றால் அவர்கள் நபித்தோழர்கள் என்று எப்படி அறிந்து கொண்டோம்? அவர்களுக்கு அடுத்த தலைமுறை தான் அவர்களை நபித்தோழர்கள் என்று நமக்கு அடையாளம் காட்டினார்கள்.
இப்படியெல்லாம் கூர்மையாகச் சிந்தித்தால் இந்த வாதம் பொருளற்றது என்பதை அறிந்து கொள்ளலாம்.
கருத்து வேறு தகவல் வேறு
நாங்கள், எங்கள் முன்னோர்களைப் பின்பற்றுகிறோம் அவர்களால் அடையாளம் காட்டப்பட்ட குர்ஆன், ஹதீஸையும் ஒப்புக் கொள்கிறோம். நீங்கள் முன்னோர்களைப் பின்பற்றக் கூடாது என்று சொல்கிறீர்கள்! அவர்களால் அடையாளம் காட்டப்பட்ட குர்ஆன் ஹதீஸ்களை மட்டும் ஏன் ஏற்றுக் கொள்கிறீர்களே! இது முரண் இல்லையா?”
நம்மைப் பார்த்து அதிகமாகக் கேட்கப்படும் கேள்விகளில் இதுவும் ஒன்று.
ஒரு மனிதனின் கருத்தையும், அவன் தெரிவிக்கும் தகவலையும் ஒரே மாதிரியாக அணுகுவது அறிவுடமை அல்ல.
உலகம் தட்டையானது என்று இப்ராஹீம் என்பவர் கூறினார்.
உலகம் தட்டையானது என்று இஸ்மாயீல் சொன்னதாக இப்ராஹீம் கூறினார்.
இந்த இரு வாக்கியங்களையும் எடுத்துக் கொள்ளுங்கள்.
முதல் வாசகத்தைக் கூறியதற்காக இப்ராஹீமை நாம் கண்டிப்போம். இரண்டாவது வாசகத்தைக் கூறியதற்காக நாம் இப்ராஹீமைக் கண்டிக்க மாட்டோம்.
உலகம் உருண்டை என்பது நிரூபிக்கப்பட்ட உண்மையாக இருக்கும் போது இப்ராஹீம் கூறும் கருத்து அந்த உண்மைக்கு மாற்றமாக அமைந்துள்ளதால் அவரது முதல் வாசகத்தை நாம் மறுப்போம்.
இப்ராஹீம் நம்பகமானவர், ஒழுக்கமானவர், உண்மை பேசுபவர் என்று நாம் அறிந்தாலும் அதன் காரணமாக பூமி தட்டை என்ற அவரது கருத்து சரியாகிவிடாது.
இரண்டாவது வாசகத்தில் இப்ராஹீமின் கருத்து எதுவும் இல்லை. இஸ்மாயீல் கூறிய தகவலைத் தான் அவர் எடுத்துச் சொல்கிறார். உலகம் தட்டை என்ற கருத்தை இப்ராஹீம் கூறவில்லை. எனவே உலகம் உருண்டை என்பதை அவர் மறுத்ததாக ஆகாது. அவர் இஸ்மாயீலின் கருத்தை எடுத்துச் சொல்கிறார் என்று எடுத்துக் கொள்வோம்.
இஸ்மாயீல் இப்படி கூறியதாகச் சொல்லும் இப்ராஹீம் உண்மையாளராக இல்லாவிட்டால் அவர் பொய் தகவலைக் கூறினார் என்று கருதுவோம். அவர் நம்பகமானவராக இருந்தால் அவர் உண்மைத் தகவலைக் கூறினார் என்று எடுத்துக் கொள்வோம்.
முதல் வாசகத்தில் சொல்பவரின் நாணயம் நேர்மை கவனத்தில் கொள்ளப்படுவதில்லை. கருத்து மட்டுமே கவனத்தில் கொள்ளப்படுகிறது.
இரண்டாம் வாசகத்தில் இப்ராஹீமின் நாணயம் நேர்மை கவனத்தில் கொள்ளப்படுகிறது. இப்ராஹீமின் கருத்து எதுவும் இதில் இல்லாததால் கருத்தைக் கவனிப்பதில்லை.
இதை ஒரு ஹதீஸின் துணை கொண்டு தெளிவாக விளங்கலாம்.
904 - وَحَدَّثَنَاهُ إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ الْحَنْظَلِىُّ أَخْبَرَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ عَنِ الْعَلاَءِ عَنْ أَبِيهِ عَنْ أَبِى هُرَيْرَةَ عَنِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- قَالَ « مَنْ صَلَّى صَلاَةً لَمْ يَقْرَأْ فِيهَا بِأُمِّ الْقُرْآنِ فَهْىَ خِدَاجٌ - ثَلاَثًا - غَيْرُ تَمَامٍ ». فَقِيلَ لأَبِى هُرَيْرَةَ إِنَّا نَكُونُ وَرَاءَ الإِمَامِ. فَقَالَ اقْرَأْ بِهَا فِى نَفْسِكَ فَإِنِّى سَمِعْتُ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- يَقُولُ « قَالَ اللَّهُ تَعَالَى قَسَمْتُ الصَّلاَةَ بَيْنِى وَبَيْنَ عَبْدِى نِصْفَيْنِ وَلِعَبْدِى مَا سَأَلَ فَإِذَا قَالَ الْعَبْدُ ( الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ ). قَالَ اللَّهُ تَعَالَى حَمِدَنِى عَبْدِى وَإِذَا قَالَ (الرَّحْمَنِ الرَّحِيمِ ). قَالَ اللَّهُ تَعَالَى أَثْنَى عَلَىَّ عَبْدِى. وَإِذَا قَالَ (مَالِكِ يَوْمِ الدِّينِ). قَالَ مَجَّدَنِى عَبْدِى - وَقَالَ مَرَّةً فَوَّضَ إِلَىَّ عَبْدِى - فَإِذَا قَالَ (إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ ). قَالَ هَذَا بَيْنِى وَبَيْنَ عَبْدِى وَلِعَبْدِى مَا سَأَلَ. فَإِذَا قَالَ (اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلاَ الضَّالِّينَ ). قَالَ هَذَا لِعَبْدِى وَلِعَبْدِى مَا سَأَلَ ». قَالَ سُفْيَانُ حَدَّثَنِى بِهِ الْعَلاَءُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَعْقُوبَ دَخَلْتُ عَلَيْهِ وَهُوَ مَرِيضٌ فِى بَيْتِهِ فَسَأَلْتُهُ أَنَا عَنْهُ. صحيح مسلم
655 அப்துர் ரஹ்மான் பின் யஅகூப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அல்ஃபாத்திஹா அத்தியாயத்தை ஓதாமல் தொழுதவரின் தொழுகை குறையுள்ள தொழுகையாகும்; நிறைவுபெறாததாகும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று அறிவித்தார்கள். நாங்கள் இமாமைப் பின்பற்றி தொழுதாலுமா என்று அபூஹுரைரா (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அபூஹுரைரா (ரலி) அவர்கள் (பின்வருமாறு) பதிலளித்தார்கள்:
அதை உங்களுடைய மனதில் ஓதிக்கொள்ளுங்கள். ஏனெனில், அல்லாஹ் கூறியதாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தொழுகை(யில் ஓதப்படும் அல்ஃபாத்திஹாவை எனக்கும் என் அடியானுக்குமிடையே இரு பகுதிகளாகப் பிரித்துள்ளேன். என் அடியான் கேட்டது அவனுக்குக் கிடைக்கும். அடியான் அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன் என்று சொன்னால் என் அடியான் என்னைப் புகழ்ந்து விட்டான் என்று அல்லாஹ் கூறுவான்.
அடியான் அர்ரஹ்மானிர் ரஹீம் என்று சொன்னால் என் அடியான் என்னைத் துதித்துவிட்டான் என்று அல்லாஹ் கூறுவான். அடியான் மாலிக்கி யவ்மித்தீன் (தீர்ப்பு நாளின் அதிபதி) என்று சொன்னால், என் அடியான் என்னைக் கண்ணியப்படுத்தி விட்டான் என்று அல்லாஹ் கூறுவான்.
இய்யாக்க நஅபுது வ இய்யாக்க நஸ்தஈன் (உன்னையே நாங்கள் வணங்குகிறோம். உன்னிடமே நாங்கள் உதவி தேடுகிறோம்) என்று அடியான் சொன்னால், இதுதான் எனக்கும், என் அடியானுக்கும் இடையே உள்ள உறவாகும். என் அடியானுக்கு அவன் கேட்டது கிடைக்கும் என்று அல்லாஹ் கூறுவான். இஹ்தினஸ் ஸிராத்தல் முஸ்தகீம். ஸிராத் தல்லதீன அன்அம்த்த அலைஹிம், ஃகைரில் மஃக்ளூபி அலைஹிம் வலள் ளால்லீன் என்று அடியான் சொன்னால், இது என் அடியானுக்கு உரியது. என் அடியானுக்கு அவன் கேட்டது கிடைக்கும் என்று அல்லாஹ் கூறுவான். நூல் : முஸ்லிம் 655
அல்ஹம்து அத்தியாயத்தின் சிறப்புக்கள் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய ஒருசெய்தியை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இதன் அறிவிப்பாளர்கள் அனைவரும் நம்பகமானவர்களாக உள்ளதால் இந்த ஹதீஸை நாம் ஏற்றுக் கொள்கிறோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இப்படி கூறினார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் ஒரு மார்க்கத் தீர்ப்பு அளித்துவிட்டு அந்தத் தீர்ப்புக்கு ஆதாரமாக இந்த ஹதீஸை எடுத்துக் காட்டுகிறார்கள்.
அதாவது இமாமைப் பின்பற்றித் தொழுபவரும் அல்ஹம்து அத்தியாயத்தை ஓத வேண்டும் என்று கூறிவிட்டு அதற்கு ஆதாரமாக இந்த ஹதீஸை அபூஹுரைரா (ரலி) கூறுகிறார்கள்.
ஆனால் அபூஹுரைரா (ரலி) அவர்கள் எடுத்துக் காட்டும் இந்த ஹதீஸில் இமாமைப் பின்பற்றித் தொழுபவர் அல்ஹம்து ஓதவேண்டும் என்ற கருத்து இல்லை. அல்ஹம்து அத்தியாயம் சிறப்பான அத்தியாயம் என்பது தான் இதில் உள்ளது.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் எந்தக் கருத்துக்கு ஆதாரமாக இதை எடுத்துக் காட்டினார்களோ அந்தக் கருத்து இதில் இல்லாததால் அபூஹுரைரா (ரலி) அவர்களின் வாதம் தவறானது என்று முடிவு செய்கிறோம்.
அதாவது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னதாக அபூஹுரைரா (ரலி) கூறும் தகவலை நாம் ஏற்றுக் கொள்கிறோம். தகவல்களைப் பொருத்தவரை சொல்பவர்கள் நாணயமானவர்களா என்று பார்த்து முடிவு செய்கிறோம்.
ஆனால் ஒரு கருத்தையோ, தீர்ப்பையோ ஒருவர் கூறினால் அந்தக் கருத்து சரியா என்பதை அறிய சொல்பவரின் நாணயத்தை நாம் கவனிக்க மாட்டோம். ஒருவர் நாணயமானவராக இருப்பதால் அவரது சிந்தனையில் தவறு ஏற்படாது என்று அறிவுடையோர் கருத மாட்டார்கள்.
பொய்யனும், இட்டுக்கட்டுபவனும், நேர்மையற்றவனுமான ஒருவன் ஐந்தும் ஐந்தும் பத்து என்று கூறினால் அதை நாம் மறுக்க மாட்டோம். அவன் கெட்டவனாக இருந்தாலும் அவன் சொல்லும் கருத்தை எடை போடுவதில் இது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.
நாணயமும், நேர்மையும் உள்ள ஒருவன் ஐந்தும் ஐந்தும் ஏழு என்று சொன்னால் அவர் நாணயமானவர் என்ற காரணத்தைக் கூறி இதை ஏற்கமாட்டோம். இந்தக் கணக்கு சரியா தவறா என்பதை மட்டுமே பார்ப்போம்.
இந்த வித்தியாசத்தை விளங்கிக் கொண்டால் இமாம்கள் அறிவிக்கும் ஹதீஸ்களை நாம் ஏன் ஏற்கிறோம் என்பதற்கும், அவர்களின் சிந்தனையில் உதித்த கருத்துக்களை நாம் பரிசீலனை செய்து சரியானதை மட்டும் ஏற்று தவறானதை ஏன் நிராகரிக்கிறோம் என்பதற்கும் உள்ள வித்தியாசத்தை விளங்கிக் கொள்ளலாம்.
தொடரும்
நூல் : இஸ்லாத்தின் பார்வையில் மதுஹபுகள்
பி ஜெய்னுல் ஆப்தீன்
https://bit.ly/3w2ZzxE
இஸ்லாத்தின் பார்வையில் மத்ஹபுகள்
நான்கு இமாம்களுக்கும், மத்ஹபுகளுக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை
மத்ஹபுகளை நான்கு இமாம்கள் உருவாக்கவில்லை
மத்ஹபுவாதிகளின் எதிர்வாதங்கள்
