தவ்ஹீத் ஜமாஅத் video's: நான்கு இமாம்களுக்கும், மத்ஹபுகளுக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை

நான்கு இமாம்களுக்கும், மத்ஹபுகளுக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை

 நான்கு இமாம்களுக்கும், மத்ஹபுகளுக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை

இஸ்லாத்தின் பார்வையில் மதுஹபுகள் தொடர் 2

நான்கு இமாம்களின் பெயரால் மத்ஹபுகள் குறிப்பிடப்பட்டாலும் அந்த மத்ஹபுகளுக்கும், இமாம்களுக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை. இமாம்கள் பெயரைப் பயன்படுத்தி பிற்காலத்தில் வந்தவர்கள் தமது இஷ்டத்துக்கு எழுதிவைத்தவை தான் மத்ஹபுகளாகும்.

ஹனஃபி மத்ஹபின் நிறுவன இமாம் என அறியப்படும் அபூ ஹனீஃபா அவர்கள் ஹிஜ்ரி 80 ல் பிறந்து 150ல் மரணித்தார்கள்.

ஷாஃபி மத்ஹபின் நிறுவன இமாம் என அறியப்படும் ஷாஃபி அவர்கள் ஹிஜ்ரி 150 ல் பிறந்து 204ல் மரணித்தார்கள்.

மாலிக் மத்ஹபின் நிறுவன இமாம் என அறியப்படும் மாலிக் அவர்கள் ஹிஜ்ரி 93ல் பிறந்து 179ல் மரணித்தார்கள்.

ஹம்பலி மத்ஹபின் நிறுவன இமாமாக அறியப்படும் அஹ்மது பின் ஹம்பல் அவர்கள் ஹிஜ்ரி 164ல் பிறந்து ஹிஜ்ரி 241ல் மரணித்தார்கள்.

நமது நாட்டில் ஹம்பலி, மாலிக் மத்ஹபுகள் இல்லை. அதிகமாக ஹனஃபி மத்ஹபும், குறைவாக ஷாஃபி மத்ஹபும் உள்ளன.

எனவே இவ்விரு மத்ஹபுகளை மட்டும் இங்கே ஆய்வுக்கு எடுத்துக் கொண்டிருக்கிறோம்.

ஹனஃபி மத்ஹப் என்பது அபூ ஹனீஃபா அவர்களின் பெயரால் பரப்பப்பட்டாலும் ஹனஃபி மத்ஹபுக்கும், அபூ ஹனீஃபா அவர்களுக்கும் சம்மந்தம் உள்ளதா என்று பார்ப்போம்.

அபூஹனீஃபாவின் மத்ஹப் என்று சொல்வதாக இருந்தால் அந்த மத்ஹபு சட்டங்கள் அனைத்தும் அபூஹனீபா அவர்களால் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். அபூஹனீஃபா எழுதிய நூல்களை அந்த மத்ஹபின் சட்ட நூல்களாக வைத்திருக்க வேண்டும். அவரது நூல்களில் உள்ள சட்டத்தை எடுத்துக் காட்டி ஃபத்வா எனும் மார்க்கத் தீர்ப்பு வழங்க வேண்டும்.

ஆனால் ஹனஃபி மத்ஹபின் சட்ட நூல்களாக அபுஹனீஃபாவின் நூல்களை ஹனஃபி மத்ஹபினர் வைத்திருக்கவில்லை. அபூஹனீஃபா எழுதிய நூல்கள் எங்கே என்று நாம் மத்ஹப்வாதிகளைக் கேட்டால் அவர் எழுதிய நூல்களை எதிரிகள் அழித்து விட்டார்கள். அவரது நூல்கள் எதுவும் தற்போது உலகில் இல்லை என்கிறார்கள். தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமாவின் தலைவராக இருந்த கலீல் ரஹ்மான் ரியாஜி அவர்கள் ரஹ்மத் என்ற தனது மாத இதழில் இந்தப் பதிலை அளித்து இருந்தார்.

அபூஹனீஃபாவின் ஒரு நூல் கூட உலகில் இல்லை என்றால் ஹனஃபி மத்ஹப் என்பது யார் வகுத்த சட்டம்? இக்கேள்விக்கு நேர்மையான பதில் மத்ஹப்வாதிகளிடம் இல்லை.

அபூஹனீஃபா அவர்கள் ஹிஜ்ரி 150ல் மரணித்து விட்டார்கள் என்பதை முன்னர் நாம் குறிப்பிட்டுள்ளோம். ஹிஜ்ரி 150க்கு உட்பட்ட காலத்திலோ, அல்லது ஹிஜ்ரி இருநூறு வரை உள்ள காலத்திலோ எழுதப்பட்ட நூல்களை ஹனஃபி மத்ஹபினர் சட்ட நூல்களாக வைத்திருந்தால் அபூஹனீஃபாவுக்கு காலத்தில் நெருக்கமான நூல்கள் என்பதால் அதை ஏற்கலாம். ஆனால் ஹனஃபி மத்ஹபின் சட்ட நூல்களின் காலம் என்ன என்று பாருங்கள்!

ஹனஃபி மத்ஹபின் முக்கியமான சட்ட நூலாகிய துர்ருல் முக்தார் என்ற நூலின் ஆசிரியர் முஹம்மத் அலி பின் முஹம்மத் என்பார் ஹிஜ்ரி 1088ல் மரணித்தார். அபீஹனீஃபாவின் காலத்துக்கு ஒன்பது நூற்றாண்டுகளுக்குப் பின் எழுதப்பட்ட இந்த நூலுக்கும், அபூஹனீஃபாவுக்கும் என்ன சம்மந்தம் இருக்க முடியும்?

கன்ஸுத் தகாயிக் எனும் ஹனஃபி மத்ஹப் சட்டநூலை எழுதிய அபுல் பரகாத் அப்துல்லாஹ் பின் அஹ்மத் அன்னஸஃபீ என்பார் ஹிஜ்ரி 710ல் மரணித்தார். அபூஹனீஃபா மரணித்து ஐநூறு ஆண்டுகளுக்குப் பின்னால் எழுதப்பட்ட இந்த நூலுக்கும், அபூஹனீஃபாவுக்கும் என்ன சம்மந்தம்?

ஹனஃபி மத்ஹபின் சட்ட நூலாகிய ஹிதாயா எனும் நூலாசிரியர் அலீ பின் அபீபக்ர் என்பாரின் மரணம் ஹிஜ்ரி 593 ஆகும். அதன் விரிவுரையான இனாயா என்ற நூலாசிரியர் முஹம்மத் பின் முஹம்மத் என்பாரின் மரணம் ஹிஜ்ரி 786 ஆகும். மராகில் ஃபலாஹ் எனும் நூலாசிரியர் ஹஸன் பின் அம்மார் என்பாரின் மரணம் ஹிஜ்ரி 1069 ஆகும். பதாயிவுஸ் ஸனாயிவு எனும் நூலாசிரியர் அபூபக்ர் பின் மஸ்வூத் என்பாரின் மரணம் ஹிஜ்ரி 587 ஆகும். பஹ்ருர் ராயிக் எனும் நூலாசிரியர் ஜைனுத்தீன் பின் இப்ராஹீம் என்பாரின் மரணம் ஹிஜ்ரி 970 ஆகும்.

அல்லுபாப் ஆசிரியர் அப்துல்கனி பின் தாலிப் 686ல் மரணம். முல்தகல் அப்ஹுர் ஆசிரியர் இப்ராஹீம் பின் முஹம்மத் 956ல் மரணம். லிசானுல் ஹுக்காம் ஆசிரியர் அஹ்மத் பின் முஹம்மத் 882ல் மரணம். துஹ்ஃபதுல் முலூக் ஆசிரியர் ஜைனுத்தீன் அபூ அப்துல்லாஹ் 666ல் மரணம். பிதாயதுல் முப்ததீ ஆசிரியர் அலீ பின் அபீபக்ர் 593ல் மரணம்.

அல்ஜவ்ஹரதுன் நய்யிரா ஆசிரியர் அபூபக்ர் பின் அலீ 800ல் மரணம். தப்யீனுல் ஹகாயிக் ஆசிரியர் உஸ்மான் பின் அலீ 743ல் மரணம். அன்னுகத் ஆசிரியர் அஹ்மத் பின் முஹம்மத் 586ல் மரணம். மஜ்மவுல் அன்ஹர் ஆசிரியர் அப்துர்ரஹ்மான் பின் முஹம்மத் 1078ல் மரணம். அல்முஹீத் ஆசிரியர் மஹ்மூத் பின் அஹ்மத் 616ல் மரணம். துரருல் ஹுக்காம் ஆசிரியர் முஹம்மத் பின் ஃபராமூஸ் 885ல் மரணம். ஹாஷியா தஹ்தாவி ஆசிரியர் அஹ்மத் பின் முஹம்மத் 1231ல் மரணம். நூருல் ஈலாஹ் ஆசிரியர் ஹஸன் பின் அம்மார் 1069ல் மரணம். அன்னஹ்ருல் ஃபாயிக் ஆசிரியர் உமர் பின் இப்ரஹீம் 1055ல் மரணம். உயூனுல் மஸாயில் ஆசிரியர்  நஸ்ர் பின் முஹம்மத் 373ல் மரணம். குதூரி ஆசிரியர் அஹ்மத் பின் முஹம்மத் 428ல் மரணம்.

ஹனஃபி மத்ஹபின் சட்ட நூல்களை எழுதியவர்களுக்கும், அபூஹனீஃபா அவர்களுக்கும் நீண்டகால இடைவெளி உள்ளதைக் கவனியுங்கள்!

ஒரு மனிதர் மரணித்து ஐனூறு அல்லது ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் அவர் பெயரால் எழுதப்படும் நூலை அறிவுடைய மக்கள் அவருடன் சம்மந்தப்படுத்த மாட்டார்கள். அவர் பெயரால் இட்டுக்கட்டப்பட்டதாகவே கருதுவார்கள்.

ஹனஃபி மத்ஹபைச் சேர்ந்த ஷைபானி என்பார் எழுதிய மப்சூத் எனும் நூல் 189ல் எழுதப்பட்டதாகும். இவர் அபூஹனீஃபா வழியாக கிடைத்த சட்டங்களை எழுதியுள்ளார். இவர் அபூஹனீஃபாவின் மாணவர் என்பதால் இதை அபூஹனீஃபாவுடன் சம்மந்தப்படுத்துவதை நாம் ஓரளவுக்கு நம்பலாம்.

அபூஹனீஃபா சொன்னதாக இவர் எழுதிய சட்டங்கள் அனைத்தும் நாற்பது பக்கத்தில் அடங்கிவிடும். உதாரணமாக முதல் பாடமாகிய உளூ என்ற பாடத்தில் அபூ ஹனீஃபா சொன்னதாக ஒரே ஒரு சட்டத்தைத் தான் இவர் எழுதியுள்ளார்.

أَبُو سُلَيْمَان عَن مُحَمَّد عَن أبي حنيفَة قَالَ إِذا أَرَادَ الرجل الصَّلَاة فَليَتَوَضَّأ وَالْوُضُوء أَن يبْدَأ فَيغسل يَدَيْهِ ثَلَاثًا ثمَّ يمضمض فَاه ثَلَاثًا ثمَّ يستنشق ثَلَاثًا ثمَّ يغسل وَجهه ثَلَاثًا ثمَّ يغسل ذِرَاعَيْهِ ثَلَاثًا ثَلَاثًا ثمَّ يمسح بِرَأْسِهِ وَأُذُنَيْهِ مرّة وَاحِدَة ثمَّ يغسل رجلَيْهِ ثَلَاثًا ثَلَاثًا قلت أَرَأَيْت إِن تَوَضَّأ مثنى مثنى قَالَ يجْزِيه قلت فان تَوَضَّأ وَاحِدَة سابغة قَالَ يجْزِيه الأصل المعروف بالمبسوط للشيباني

உளூச் செய்யும் போது இரு கைகளையும் மூன்று தடவை கழுவ வேண்டும். பின்னர் வாயை மூன்று முறை கொப்புளிக்க வேண்டும். பின்னர் மூன்று முறை மூக்கைச் சிந்த வேண்டும். பின்னர் மூன்று முறை முகத்தைக் கழுவ வேண்டும். பின்னர் கைகளை மூன்று தடவை கழுவ வேண்டும். பின்னர் தலைக்கும், காதுகளுக்கும் சேர்த்து ஒருதடவை மஸஹ் செய்ய வேண்டும். பின்னர் கால்களை மூன்று தடவைகள் கழுவ வேண்டும் என்று அபூஹனீஃபா சொன்னார்கள். இரண்டு தடவை கழுவினால் போதுமா என்று கேட்டேன். அதற்கவர்கள் அதுவும் போதுமானது தான் என்றார்கள். ஒரு தடவை நிறைவாக செய்தால் போதுமா என்று நான் கேட்டேன். அதற்கவர்கள் அதுவும் போதுமானதே என்றார்கள்.

உளூ பற்றி இந்த ஒரு சட்டத்தை மட்டும் தான் அபூஹனீஃபா சொன்னதாக இவர் எழுதியுள்ளார். அடுத்து தொழுகையில் நுழைதல் என்ற பாடத்துக்குப் போய்விடுகிறார்.

ஆனால் மேலே நாம் எடுத்துக் காட்டிய ஹனஃபி மத்ஹபின் சட்ட நூல்களில் உளூ பற்றிய சட்டங்களை வால்யூம் கணக்கில் எழுதி வைத்துள்ளனர். இவை யாவும் அபூஹனீஃபா சொல்லாமல் இவர்களாக இட்டுக்கட்டி எழுதியவை என்று இதன் மூலம் அறியலாம்.

ஹனஃபி மத்ஹபின் சட்டங்கள் என்று இந்த நூல்களில் எழுதப்பட்டவைகளில் ஓரிரு சதவிகிதம் அளவுக்குத் தான் அபூஹனீஃபா சொன்னதாக மேற்கோள் காட்டி எழுதியுள்ளனர். மற்ற சட்டங்களை அபூஹனீஃபா கூறியதாக அந்த நூல்களில் கூறப்படவில்லை. அந்த அறிஞர் கூறினார்; இந்த அறிஞர் கூறினார் என்றுதான் குறிப்பிட்டுள்ளனர்.

அபூஹனீஃபாவுக்கும், ஹனஃபி மத்ஹப் நூல்களுக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை என்பதை இது மேலும் உறுதிப்படுத்துகிறது.

 இது போல் ஷாஃபி இமாம் பெயருடன் சேர்த்து ஷாஃபி மத்ஹப் என்று சொல்வதாக இருந்தால் ஷாஃபி இமாம் எழுதிய நூல்களை சட்டநூலாக வைத்திருந்தால் தான் அதை ஷாஃபி இமாம் பெயருடன் சேர்ப்பதில் நியாயம் இருக்கும்.

ஆனால் ஷாஃபி இமாம் அவர்கள் சில நூல்களை எழுதி இருந்தும் அவற்றைத் தூக்கி பரணில் போட்டு விட்டு பிற்காலத்தில் இட்டுக்கட்டி எழுதிய நூல்களை அந்த இமாமின் சட்டம் எனக் கூறி மக்களை ஷாஃபி மத்ஹபினரும் ஏமாற்றி வருகிறார்கள்.

ஷாஃபி மத்ஹபின் சட்ட நூலாகிய இஆனா எனும் நூலை எழுதிய உஸ்மான் பின் முஹம்மத் என்பார் ஹிஜ்ரி 1310ல் மரணித்தார். ஹாஷியா புஜைரமி எனும் நூலை எழுதிய சுலைமான் பின் முஹம்மத் என்பார் ஹிஜ்ரி 1221ல் மரணித்தார். மஹல்லி எனும் நூலை எழுதிய அஹ்மத் என்பார் ஹிஜ்ரி 1069ல் மரணித்தார். முக்னி எனும் நூலை எழுதிய முஹம்மத் பின் அஹ்மத் என்பார் ஹிஜ்ரி 977ல் மரணித்தார். மின்ஹாஜ் எனும் நூலை எழுதிய இப்னுஹஜர் ஹைத்தமி என்பார் ஹிஜ்ரி 974ல் மரணித்தார். துஹ்ஃபா எனும் நூலை எழுதிய இப்னு ஹஜர் ஹைத்தமி என்பார் ஹிஜ்ரி 974ல் மரணித்தார். பத்ஹுல் முயீன் எனும் நூலை எழுதிய ஜைனுத்தீன் மலபாரி என்பார் ஹிஜ்ரி 987ல் மரணித்தார். ரவ்லா எனும் நூலை எழுதிய நவவி அவர்கள் ஹிஜ்ரி 676ல் மரணித்தார். மஜ்மூவு எனும் நூலை எழுதிய நவவி அவர்கள் ஹிஜ்ரி 676ல் மரணித்தார். வசீத் எனும் நூலை எழுதிய முஹம்மத் பின் முஹம்மத் கஸ்ஸாலி என்பார் ஹிஜ்ரி 505ல் மரணித்தார். நிஹாயா எனும் நூலை எழுதிய முஹம்மத் பின் அபில் அப்பாஸ் என்பார் ஹிஜ்ரி 478ல் மரணித்தார். முஹத்தப் எனும் நூலை எழுதிய இப்ராஹீம் பின் அலி என்பார் ஹிஜ்ரி 476ல் மரணித்தார்.

ஷாஃபி இமாம் மரணித்து முன்னூறு முதல் ஆயிரம் ஆண்டுகள் கழித்து வந்தவர்கள் எழுதிய நூல்களைத் தான் ஷாஃபி மத்ஹபின் சட்ட நூல்களாக வைத்துள்ளனர். இவை எப்படி ஷாஃபி இமாம் சம்மந்தப்பட்டதாக ஆகும்?

மேலும் மேற்கண்ட ஷாஃபி மத்ஹபின் சட்ட நூல்களில் எழுதப்பட்ட ஒவ்வொரு சட்டத்தையும் ஷாஃபி இமாம் கூறினார் என்று இந்நூல்களில் குறிப்பிடப்படவில்லை. இரண்டு, மூன்று சதவிகிதச் சட்டங்கள் தான் ஷாஃபி இமாம் சொன்னதாக எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. மற்றவை அவர் சொன்னார்; இவர் சொன்னார் என்றுதான் மேற்கண்ட நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஷாஃபி இமாமுக்கும், ஷாஃபி மத்ஹப் சட்ட நூல்களுக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை என்பதை இது மேலும் உறுதிப்படுத்துகிறது.


நூல் : இஸ்லாத்தின் பார்வையில் மதுஹபுகள்
பி ஜெய்னுல் ஆப்தீன்

https://bit.ly/4aR9Qfu


தொடரும் ..

இஸ்லாத்தின் பார்வையில் மத்ஹபுகள்

மத்ஹபுகளை நான்கு இமாம்கள் உருவாக்கவில்லை

மத்ஹபுவாதிகளின் எதிர்வாதங்கள் அனைவரும் ஆய்வு செய்ய முடியுமா? எல்லோருக்கும் அரபுமொழி தெரியாது! இமாம்களை விட நாம் நன்றாக அறிய முடியுமா?

நபித்தோழர்கள் மூலம் தானே குர்ஆன் கிடைத்தது?


இமாம்களின் பெயரால் கற்பனைக் கதைகள்

மதுஹப் பெயரால் கற்பனை கதைகள் 01

மதுஹப் பெயரால் கற்பனை கதைகள் 02

மதுஹப் பெயரால் கற்பனை கதைகள் 03






short link https://rb.gy/4dwty2



Search This Blog