தவ்ஹீத் ஜமாஅத் video's: நேர்வழி பெற்ற கலீபாக்களைப் பின்பற்றுதல்

நேர்வழி பெற்ற கலீபாக்களைப் பின்பற்றுதல்

 நேர்வழி பெற்ற கலீபாக்களைப் பின்பற்றுதல்

எனக்குப் பின் நேர்வழி பெற்ற கலீபாக்களைப் பின்பற்றுங்கள்! என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்களே! என்று அடுத்த ஆதாரத்தை எடுத்துக் காட்டுகின்றனர்.

இவர்கள் கூறுகின்ற கருத்து அந்த நபிமொழியில் உள்ளதா? என்பதை விளக்குவதற்கு முன் இவர்களின் முரண்பாட்டை நாம் சுட்டிக் காட்ட வேண்டும்.

இவர்களது வாதப்படி நேர்வழி பெற்ற கலீபாக்கள் என்பது அபூபக்ர் (ரலி), உமர் (ரலி),உஸ்மான் (ரலி), அலி (ரலி) ஆகியோர் தான். இந்த நபிமொழி இவர்களின் வாதப்படி இந்த நால்வரையும் பின்பற்றுமாறு தான் கூறுகிறது.


ஆனால் இந்த ஹதீஸை ஆதாரமாகக் காட்டுபவர்கள் இந்த நால்வரைத் தவிர மற்ற நபித் தோழர்களைப் பின்பற்றக் கூடாது என்று கூறுவதில்லை. எல்லா நபித் தோழர்களையும் பின்பற்றலாம் என்று கூறிக் கொண்டு அதற்கு ஆதாரமாக இதைக் காட்டுவது அவர்களுக்கே எதிரானதாகும்.

நான்கு கலீபாக்களும் மார்க்கத்தில் எந்த ஒன்றை உருவாக்கினாலும் அதைப் பின்பற்றுங்கள் என்ற கருத்து இதில் உள்ளதா? இந்த ஹதீஸ் ஆதாரப்பூர்வமானது தானா?என்பதைப் பார்ப்போம்.

இந்த நபிமொழி பல்வேறு நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவற்றுள் ஒன்றிரண்டு அறிவிப்புகள் பலவீனமானவை என்றாலும் பெரும்பாலான அறிவிப்புகள் நம்பகமானவர்கள் வழியாகவே அறிவிக்கப்பட்டுள்ளன.

திர்மிதி 2600, அபூ தாவூத் 3991, இப்னு மாஜா 42, 43, முனத் அஹ்மத் 16519, 16521, 16522,தாரிமி 95 மற்றும் பல நூல்களில் இது பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால் இந்த ஹதீஸை ஆதாரமாகக் காட்டுபவர்கள் முழு ஹதீஸையும், அதில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பயன்படுத்திய ஒவ்வொரு வார்த்தையையும் எடுத்துக் காட்டுவதில்லை. பெரும் பகுதியை இருட்டடிப்புச் செய்து விட்டு ``எனது வழிமுறையையும் நேர்வழி பெற்ற கலீபாக்களின் வழிமுறையையும் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள் என்பதை மட்டும் எடுத்துக் காட்டுகின்றனர்.

முழு ஹதீஸையும் இவர்கள் ஆய்வு செய்தால் இவர்களுக்கே இதன் சரியான பொருள் விளங்கிவிடும். அல்லது சிந்திக்கும் திறன் உள்ள மக்கள் இதன் உண்மையான பொருளைக் கண்டு கொள்வார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பொருத்த வரை தமது சொல் எங்கெல்லாம் தவறாகப் பொருள் கொள்ளப்பட்டு விடுமோ அங்கெல்லாம் சரியான பொருளைக் கண்டு கொள்ளும் வகையிலான வார்த்தைகளையும் சேர்த்துக் கூறி விடுவார்கள்.

இஞ்சீலுக்குரியோர் அதில் அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் தீர்ப்பளிக்கட்டும். அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் தீர்ப்பளிக்காதோரே குற்றவாளிகள்.

திருக்குர்ஆன் : 5:47

இவர்கள் மேற்கண்ட நபிமொழியை விளங்கியது போல் இந்த வசனத்தையும் விளங்கினால் என்னவாகும்? கிறித்தவர்கள் இன்றளவும் பைபிளின் அடிப்படையில் வாழலாம் என்று குர்ஆன் அனுமதிப்பதாகப் பொருள் வரும். ஆனால் இவ்வாறு அவர்கள் பொருள் கொள்ள மாட்டார்கள். குர்ஆனில் இன்ஜீல் பற்றி குறிப்பிட்ட அனைத்தையும் தொகுத்து அவற்றுக்கு முரணில்லாத வகையில் அதை விளங்க வேண்டும் என்று நிலை மாறுவார்கள்.

இன்ஜீல் கூறுவதன் அடிப்படையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அவர்கள் ஏற்க வேண்டும் என்பது தான் இதன் பொருள் என்று விளக்கம் தருகின்றனர்.

இதே விதமான ஆய்வு மனப்பான்மையை இந்த நபிமொழியிலும் பயன்படுத்தியிருக்க வேண்டுமல்லவா?

மார்க்கம் அல்லாஹ்வால் முழுமைப்படுத்தப்பட்டிருக்கும் போது வஹீயை மட்டும் பின்பற்ற வேண்டும் என்று தெளிவான கட்டளை இருக்கும் போது அதற்கு முரணில்லாத வகையில் மேற்கண்ட ஹதீஸை விளங்கியிருக்க வேண்டாமா?

நாட்டின் ஜனாதிபதிகள் தான் கலீபாக்கள் எனப்படுகின்றனர். ஒருவர் முஸ்லிம்களால் அதிபராகத் தேர்வு செய்யப்பட்டால் அவருக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும். இல்லாவிட்டால் நாடு சிதைந்து போய் விடும். ஜனாதிபதி என்ற முறையில் மார்க்க சம்மந்தமில்லாத நிர்வாக விஷயங்களில் அவர்கள் சில வழிமுறைகளை மேற்கொண்டால் அதற்குக் கட்டுப்பட வேண்டும் என்ற கருத்தில் தான் இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இப்படிப் பொருள் கொண்டால் தான் மார்க்கம் முழுமையாகி விட்டது என்ற வசனத்திற்கும்,வஹீயை மட்டும் பின்பற்றுங்கள் என்ற கருத்தில் அமைந்த வசனங்களுக்கும் பொருள் இருக்கும்.

மேலும் நேர்வழி பெற்ற கலீபாக்களைப் பின்பற்றுங்கள் என்ற ஹதீஸில்  ``மார்க்கத்தில் புதிதாக உருவாக்கப்பட்டவை குறித்து உங்களை நான் எச்சரிக்கிறேன். அவை அனைத்தும் வழிகேடுகள் என்ற வாக்கியத்தையும் சேர்த்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பயன்படுத்தியுள்ளார்கள்.

மார்க்க விஷயம் இல்லாத மற்ற விஷயங்களில் தான் நேர்வழி பெற்ற கலீபாக்களுக்குக் கட்டுப்பட வேண்டும் என்பதை மேற்கண்ட வாக்கியம் தெளிவுபடுத்தி விடுகிறது.

நேர்வழி பெற்ற கலீபாக்களைப் பின்பற்றுங்கள் என்பதைத் தொடர்ந்து ``அபீஸீனிய அடிமை என்றாலும் கட்டுப்பட்டு நடங்கள் எனவும் சேர்த்துக் கூறுகிறார்கள்.

இப்னு மாஜா 43, அஹ்மத் 16519

ஆட்சித் தலைவர் அபீஸீனிய அடிமை என்றாலும் அவருக்குக் கட்டுப்படுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதில் இருந்து நிர்வாக விஷயங்களில் கட்டுப்பட்டு நடப்பது பற்றியே கூறியுள்ளனர் என்பதை நாம் அறியலாம்.

நேர்வழி பெற்ற கலீபாக்கள் என்பது நான்கு கலீபாக்களைக் குறிக்கும் என்ற தவறான கருத்தும் இதன் மூலம் தகர்க்கப்படுகிறது. நான்கு கலீபாக்களில் ஒருவர் கூட அபீஸீனிய அடிமையாக இருக்கவில்லை. அபீஸீனிய அடிமையாக இருந்தாலும் கட்டுப்படுங்கள் எனக் கூறினால் கியாமத் நாள் வரை ஆட்சி செய்யும் கலீபாக்கள் அனைவருக்கும் மார்க்க சம்மந்தமில்லாத விஷயங்களில் கட்டுப்பட்டு நடங்கள் என்பது தான் இதன் பொருள்.

மேலும் அதே ஹதீஸில் ``இறை நம்பிக்கையாளன் மூக்கணாங்கயிறு போட்ட ஒட்டகம் போன்றவன். இழுத்த இழுப்புக்கு கட்டுப்படுபவன் எனவும் சேர்த்துக் கூறுகிறார்கள்.

இப்னுமாஜா 43

இந்தச் சொற்றொடர் மார்க்க விஷயத்தைக் குறிக்காது. மார்க்க விஷயத்தில் கண்ணை மூடிக் கொண்டு கட்டுப்படுதல் என்பது கிடையாது.

மார்க்க சம்மந்தமில்லாத விஷயத்தில் மட்டும் நிர்வாகத் தலைமைக்கு கட்டுப்பட வேண்டும் என்பதற்குத் தான் அந்த உதாரணத்தையும் சேர்த்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.

அதே ஹதீஸில் ``நான் உங்களைப் பளீரென்ற பாதையில் விட்டுச் செல்கிறேன். அதில் இரவும் பகலைப் போன்றது. நாசமாகப் போகுபவனைத் தவிர வேறு யாரும் வழி கெட மாட்டார்கள் என்பதையும் சேர்த்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.

மார்க்கத்தில் வேறு யாரையும் பின்பற்றி நடக்கும் நிலையில் நான் உங்களை விட்டுச் செல்லவில்லை என்று கூறிவிட்டு நேர்வழி பெற்ற ஆட்சியாளர்களைப் பின்பற்றுங் கள் எனக் கூறினால் அது நிர்வாக விஷயத்தைத் தான் குறிக்குமே தவிர மார்க்க விஷயத்தை அறவே குறிக்காது.


https://bit.ly/4qZpiib

Search This Blog