தவ்ஹீத் ஜமாஅத் video's: முஹாஜிர்களையும், அன்ஸார்களையும் பின்பற்றுதல்

முஹாஜிர்களையும், அன்ஸார்களையும் பின்பற்றுதல்

 முஹாஜிர்களையும், அன்ஸார்களையும் பின்பற்றுதல்
தொடர் 03    நூல்: நபித் தோழர்களும் நமது நிலையும்

ஹிஜ்ரத் செய்தோரிலும், அன்ஸார்களிலும் முந்திச் சென்ற முதலாமவர்களையும்,  நல்ல விஷயத்தில் அவர்களைப் பின்தொடர்ந்தவர்களையும் அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களும் அல்லாஹ்வைப் பொருந்திக் கொண்டனர். அவர்களுக்கு சொர்க்கச் சோலைகளை அவன் தயாரித்து வைத்திருக்கிறான். அவற்றின் கீழ்ப் பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் அவர்கள் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். இதுவே மகத்தான வெற்றி.

திருக்குர்ஆன் 9:100


மார்க்கத்துக்காக மக்காவைத் துறந்து மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்தவர்களையும்,  ஹிஜ்ரத் செய்து மதீனா வந்தவர்களுக்கு உதவியவர்களையும் இவ்வசனம் புகழ்ந்து பேசுவதுடன் அவர்களைப் பின்பற்றியவர்களையும் புகழ்ந்து பேசுகிறது. அவர்களைப் பொருந்திக் கொண்டதாகவும் அவர்களுக்காக சொர்க்கம் தயார் நிலையில் உள்ளதாகவும் இவ்வசனம் கூறுகிறது.


நபித் தோழர்களைப் பின்பற்றுமாறு அல்லாஹ்வே கட்டளையிட்டதால் தான் நபித் தோழர்களைப் பின்பற்ற வேண்டும் என்று நாங்கள் கூறுகிறோம் என அவர்கள் வாதிடுகின்றனர்.

இவ்வசனத்தை உரிய கவனத்துடன் அணுகாத காரணத்தால் தங்களின் தவறான கொள்கைக்கு இதை ஆதாரமாகக் காட்டுகின்றனர்.

பின்பற்றுதல் என்ற சொல், பயன்படுத்தப்படும் இடத்துக்கு ஏற்ப பொருள் தரும் சொல்லாகும்.

குறிப்பிட்ட மனிதனின் பெயரைப் பயன்படுத்தி அவனைப் பின்பற்றி நடங்கள் எனக் கூறப்பட்டால் எல்லா வகையிலும் அவனைப் பின்பற்றுங்கள் எனப் பொருள் வரும்.

ஒரு மனிதனின் பதவி, தகுதியைக் குறிப்பிட்டு அவரைப் பின்பற்றுங்கள் என்று கூறப்பட்டால் அந்தத் தகுதியுடன் தொடர்புடைய விஷயங்களில் அவரைப் பின்பற்றுங்கள் என்று பொருள் வரும். காவல்துறை அதிகாரியைப் பின்பற்றுங்கள் என்றோ காவல்துறை அதிகாரியான மூஸாவைப் பின்பற்றுங்கள் என்றோ கூறப்பட்டால் காவல்துறை அதிகாரி என்ற முறையில் அவருக்கு என்ன அதிகாரம் உள்ளதோ அந்த விஷயத்தில் பின்பற்றுங்கள் என்று பொருள் கொள்ள வேண்டும். வியாபாரம், திருமணம், வணக்கம் போன்றவற்றில் அவரைப் பின்பற்ற வேண்டும் என்ற பொருள் வராது.

கொடை வள்ளலை அல்லது கொடைவள்ளலான இப்ராஹீமைப் பின்பற்றுங்கள் எனக் கூறப்பட்டால் வாரி வழங்கும் தன்மையில் மட்டும் அவரைப் பின்பற்ற வேண்டும் என்ற பொருள் வரும். அவர் என்ன சொன்னாலும் கேளுங்கள்! அவர் என்ன செய்தாலும் அதையே செய்யுங்கள் என்று பொருள் கொள்ள முடியாது.

9:100 வசனத்தை எடுத்துக் கொள்வோம். இவ்வசனத்தில் எந்த மனிதரையும் பின்பற்றுமாறு கூறப்படவில்லை. மாறாக ஹிஜ்ரத் செய்வதில் முந்திக் கொண்டவர்களையும் அவர்களுக்கு உதவி செய்வதில் முந்திக் கொண்டவர்களையும் பின்பற்றுமாறு தான் இவ்வசனம் கூறுகிறது.

அதாவது ஹிஜ்ரத் செய்வதில் யார் முந்திக் கொண்டார்களோ அவர்களைப் பின்பற்றி சிலர் தாமதமாக ஹிஜ்ரத் செய்தனர் என்பதே இதன் பொருள். உதவி செய்வதில் முந்திக் கொண்டவர்களைப் பின்பற்றினார்கள் என்றால் உதவுவதில் அவர்கள் வழியில் சென்றார்கள் என்பது தான் பொருள்.

ஆரம்ப காலத்தில் ஹிஜ்ரத் செய்வதில் யார் முந்திக் கொண்டார்களோ அவர்கள் மட்டுமின்றி அவர்களைப் பின்பற்றி ஹிஜ்ரத் செய்தவர்களும் இறை திருப்திக்கு உரியவர்கள். இதே போல் ஆரம்ப கால அன்ஸார்கள் எவ்வாறு இறை திருப்திக்கு உரியவர்களோ அது போல் பிற்காலத்தில் உதவிய அன்ஸார்களும் இறை திருப்திக்கு உரியவர்களே என்பதைத் தான் 9:100 வசனம் கூறுகிறது.

முஹாஜிர்கள், அன்ஸார்கள் என அல்லாஹ் கூறுவது சஹாபாக்களைத் தான் என்றாலும் அவர்களைப் பின்பற்றுமாறு இதில் நமக்கு எந்தக் கட்டளையும் இல்லை. அவர்களை யார் பின்பற்றுகிறார்களோ என்று வருங்கால வினைச் சொல்லாக இறைவன் கூறாமல் பின்பற்றினார்களோ என்று இறந்த கால வினைச் சொல்லாகக் கூறுகிறான். பின்பற்றுகிறார்களோ என்று கூறினால் இப்போதும் அவர்களைப் பின்பற்றலாம் என்ற பொருள் வரும். பின்பற்றினார்களோ என்று கூறினால் இவ்வசனம் அருளப்படுவதற்கு முன்னர் பின்பற்றி நடந்தவர்களைத்தான் அது குறிக்கும் என்பதும் கவனிக்கத்தக்கது.

எனவே முஹாஜிர்கள், அன்ஸார்கள் என்பது எவ்வாறு நபித்தோழர்களைக் குறிக்குமோ அது போல் முஹாஜிர்களைப் பின்பற்றியவர்கள் என்பதும் அன்ஸார்களைப் பின்பற்றியவர்கள் என்பதும் நபித்தோழர்களைத் தான் குறிக்கும் என்பதையும் கவனிக்கத் தவறி விட்டனர்.

ஹிஜ்ரத் செய்வதிலும், ஹிஜ்ரத் செய்தவர்களுக்கு உதவுவதிலும் முந்திச் சென்றவர்களைப் பின்பற்றியவர்களைப் புகழ்ந்து பேசும் போது மற்றொரு நிபந்தனையையும் இறைவன் இணைத்துக் கூறுகிறான்.

அழகிய நல்ல முறையில் அவர்களைப் பின் தொடர்ந்தவர்கள் என்பது தான் அந்த நிபந்தனை.

முன்னதாக ஹிஜ்ரத் செய்தவர்களிடம் ஹிஜ்ரத்தின் போது தவறான காரியங்கள் நிகழ்ந்திருக்கலாம். அதைப் பின்பற்றக் கூடாது என்பதற்காகத் தான் அழகிய முறையில் பின் தொடர்ந்தவர்கள் என்று அல்லாஹ் கூறுகிறான்.

மேலும் வஹீயை மட்டுமே பின்பற்ற வேண்டும் எனக் கூறும் ஏராளமான ஆதாரங்களுக்கு முரணில்லாத வகையில் இவ்வசனத்தை விளங்கும் சரியான முறை இதுவேயாகும்.

முஹாஜிர்கள், அன்ஸார்கள் மார்க்கம் என்று எதைச் சொன்னாலும், செய்தாலும் அதை அப்படியே நாமும் பின்பற்ற வேண்டும் என்று பொருள் கொண்டால் வஹீயை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்ற கருத்துடைய வசனங்கள் நிராகரிக்கப்படும் நிலை ஏற்படும். அல்லது நபித்தோழர்களுக்கும் வஹீ வந்தது என்ற நிலை ஏற்படும். இரண்டுமே தவறாகும்.

எனவே நபித்தோழர்களின் சொற்கள் செயல்கள் மார்க்க ஆதாரங்களாகும் என்ற கருத்தை இவ்வசனம் தரவில்லை என்பதைச் சந்தேகமற அறிந்து கொள்ளலாம்.

மாற்றுக் கருத்துடையவர்கள் இவ்வசனத்துக்கு அளிக்கும் விளக்கம் தவறு என்பதை இது போல் அமைந்த மற்றொரு வசனத்தின் மூலமும் நாம் அறிய முடியும்.

யார் நம்பிக்கை கொண்டு அவர்களின் சந்ததிகளும் நம்பிக்கை கொள்வதில் அவர்களைப் பின்பற்றினார்களோ அவர்களுடன் அவர்களின் சந்ததிகளைச் சேர்ப்போம். அவர்களின் செயல்களில் எதையும் குறைக்க மாட்டோம். ஒவ்வொரு மனிதனும், தான் செய்ததற்குப் பிணையாக்கப்பட்டவன்.  அல்குர்ஆன் 52:21

நம்பிக்கை கொண்ட பெற்றோரை அவர்களின் பிள்ளைகள் பின்பற்றுவது பற்றி இங்கே கூறப்படுகிறது.

9:100 வசனத்தை மாற்றுக் கருத்துடையவர்கள் விளங்கியது போல் இவ்வசனத்தையும் விளங்குவதாக இருந்தால் ஒவ்வொருவரும் தனது முஃமினான பெற்றோரைப் பின்பற்றலாம் என்ற கருத்து வரும். அதாவது ஸஹாபாக்களை மட்டும் பின்பற்றுவது அவசியம் இல்லை. தனது தாய் தந்தை எதை மார்க்கம் என்று கடைப்பிடித்தார்களோ அதையே நாமும் செய்ய வேண்டும் என்ற கருத்து வரும்.

ஆனால் இவ்வசனத்தை விளங்கும் போது மட்டும் அவர்களின் சிந்தனை சரியாக வேலை செய்கிறது.

சரியான முறையில் நம்பிக்கை கொண்ட பெற்றோரை அது போல் சரியான நம்பிக்கை கொண்டு பிள்ளைகளும் பின்பற்றினால் அவர்களின் கூலியைக் குறைக்காது அளிப்போம் என்பது தான் இதன் பொருள்.

பெற்றோரின் எல்லா நடவடிக்கைகளையும் அப்படியே பின்பற்ற வேண்டும் என்பது இதன் பொருள் அல்ல என இவர்களே ஒப்புக் கொள்கிறார்கள்.

ஒரே மாதிரியாக அமைந்த இரண்டு வசனங்களுக்கு வெவ்வேறு விதமாக விளக்கம் அளிப்பதிலிருந்து அவர்களின் வாதம் தவறு என்பதை அறியலாம்.

நூல்: நபித் தோழர்களும் நமது நிலையும்

ஆசிரியர் : பீ.ஜைனுல் ஆபிதீன்

https://bit.ly/4tdS93L

Search This Blog