தொடர் 02 நூல்: நபித் தோழர்களும் நமது நிலையும்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முன்னறிவிப்பு
நபித்
தோழர்களும் மனிதர்களே! அவர்களிடமும் தடுமாற்றங்களும், தவறான முடிவுகளும்
ஏற்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில்
முன்னறிவிப்புச் செய்து சென்றுள்ளனர்.
நியாயத் தீர்ப்பு நாளில்
மக்களெல்லாம் பதை பதைப்புடன் நிற்கும் போது நடக்கும் ஒரு நிகழ்ச்சியை
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்.
என்
தோழர்களில் சிலர் இடது புறமாகப் பிடிக்கப்படுவார்கள். (அதாவது நரகத்திற்கு
இழுத்துச் செல்லப்படுவார்கள்) அப்போது நான் ``அவர்கள் என் தோழர்கள்!
அவர்கள் என் தோழர்கள்! என்று கூறுவேன். அதற்கு இறைவன் ``நீ அவர்களைப்
பிரிந்தது முதல் வந்த வழியே அவர்கள் திரும்பிச் சென்று கொண்டே இருந்தனர்
என்று கூறுவான். அப்போது நான் ``அவர்களுடன் நான் இருந்த வரை அவர்களைக்
கண்காணித்துக் கொண்டிருந்தேன். எப்போது என்னை நீ கைப்பற்றிக் கொண்டாயோ
(அப்போது முதல்) நீயே அவர்களைக் கண்காணிப்பவனாவாய் என்று என் சகோதரர் ஈஸா
கூறியது போல் நானும் கூறிவிடுவேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) நூல் : புகாரி 3349, 3447
இந்த நிலையில் நபித்தோழர்களின் கூற்றுகள் மார்க்க ஆதாரம் என்று சொல்ல முடியுமா?
நபித்தோழர்களில் சிலர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித் தராத பித்அத்களை உருவாக்குவார்கள் என்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்கு முன்னறிவிப்புச் செய்துள்ளனர்.
நான் கவ்ஸர் எனும் தடாகத்தில் உங்களை எதிர்பார்த்துக் காத்திருப்பேன். யார் என்னைக் கடந்து செல்கிறாரோ அவர் அதனை அருந்துவார். யார் அதனை அருந்துகிறாரோ அவருக்கு ஒரு போதும் தாகம் ஏற்படாது. என்னிடம் சில கூட்டத்தினர் வருவார்கள். அவர்களை நானும் அறிவேன். அவர்களும் என்னை அறிவார்கள். பின்னர் எனக்கும் அவர்களுக்குமிடையே திரையிடப்படும். ``அவர்கள் என்னைச் சேர்ந்தவர்கள் என்று கூறுவேன். உமக்குப் பின்னால் அவர்கள் எதையெல்லாம் புதிதாக உருவாக்கி விட்டனர் என்பது உமக்குத் தெரியாது என்று கூறப்படும். ``எனக்குப் பின் மார்க்கத்தை மாற்றியவர்களுக்குக் கேடு தான்; கேடு தான் என்று நான் கூறுவேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக ஸஹ்ல் பின் ஸஅது (ரலி) அறிவிக்கிறார்.
இது பற்றி அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கும் போது ``நியாயத் தீர்ப்பு நாளில் என் தோழர்களில் ஒரு கூட்டத்தினர் என்னிடம் வருவார்கள். அவர்கள் (கவ்ஸர்) தடாகத்தை விட்டும் தடுக்கப்படுவார்கள். அப்போது நான் ``என் இறைவா! இவர்கள் என் தோழர்கள்; என் இறைவா! இவர்கள் என் தோழர்கள் எனக் கூறுவேன். ``உமக்குப் பின்னால் அவர்கள் எதையெல்லாம் புதிதாக உருவாக்கி விட்டனர் என்ற அறிவு உமக்கு இல்லை. அவர்கள் வந்த வழியே பின்புறமாகத் திரும்பிச் சென்று விட்டனர் என்று இறைவன் கூறுவான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல் : புகாரி 6585, 6586
இதே கருத்து புகாரி 4740, 6526, 6576, 6582, 7049 ஆகிய எண்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னதையும், செய்ததையும் மட்டுமே நபித்தோழர்கள் செய்வார்கள். நபிவழியில் இல்லாத எந்த ஒன்றையும் நபித்தோழர்கள் செய்ய மாட்டார்கள் என்றெல்லாம் காரணம் கூறித் தான் நபித்தோழர்களின் நடவடிக்கைகள் மார்க்க ஆதாரங்கள் என்று வாதிட்டு வருகின்றனர்.
அவை அனைத்துமே ஆதாரமற்ற பொய்க்கூற்று என்பது இந்த நபிமொழிகள் மூலம் தெள்ளத் தெளிவாக நிரூபணம் ஆகின்றது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லாததையும், செய்யாததையும் சில நபித்தோழர்கள் புதிதாக உருவாக்கி, அதன் காரணமாக அவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றால் இந்தக் கடும் எச்சரிக்கையில் இருந்து நாம் பெற வேண்டிய பாடம் என்ன?
நபித்தோழர்களின் சொற்களாக இருந்தாலும், செயல்களாக இருந்தாலும் அதற்கு குர்ஆனிலிருந்தும் நபிவழியில் இருந்தும் ஆதாரம் காட்டப்பட்டிருந்தால் மட்டுமே அதைப் பின்பற்ற வேண்டும். நபிவழியை ஆதாரமாகக் காட்டாமல் அவர்கள் செய்தவை எதுவாக இருந்தாலும் அவை பித்அத்தாக இருக்க வாய்ப்பு உள்ளது என்பதால் அதை மார்க்க ஆதாரமாகக் கருதக் கூடாது என்பது தான் இதிலிருந்து நாம் பெற வேண்டிய பாடம்.
நபித்தோழர்கள் நம்மை விடப் பல மடங்கு சிறந்தவர்கள் என்றாலும் அவர்கள் மனிதர்கள் என்ற அடிப்படையை நாம் மறந்து விடக் கூடாது.
ஒருவரை ஒருவர் வெட்டிக் கொலை செய்து காபிர்களாகி விடாதீர்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது இறுதிப் பேருரையில் எச்சரிக்கை செய்தார்கள்.
நூல் : புகாரி 121, 1739, 1741, 4403, 4405, 4406, 5550, 6166, 6868, 6869, 7077, 7078, 7080, 7447
ஆனால் இந்த எச்சரிக்கைக்குப் பிறகு நபித்தோழர்கள் தமக்கிடையே வாள் ஏந்தி போரிட்டு ஒருவரை ஒருவர் வெட்டிக் கொலை செய்யும் நிலைக்கு ஆளாயினர்.
ஆயிஷா (ரலி) தலைமையில் அணிவகுத்தவர்களும் நபித்தோழர்களே. சொர்க்கவாசிகள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் நற்செய்தி கூறப்பட்டவர்களும் அவர்களில் இருந்தனர்.
அலி (ரலி) அவர்களின் தலைமையில் அணிவகுத்தவர்களும் நபித்தோழர்களே. சொர்க்கவாசிகள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் நற்செய்தி கூறப்பட்டவர்கள் இந்த அணியிலும் இருந்தனர்.
தலைமை தாங்கிய இருவரும் சொர்க்கவாசிகள் என்று நற்செய்தி கூறப்பட்டவர்கள் தாம்.
அப்படி இருந்தும் ஒருவருக்கு எதிராக மற்றவர்கள் ஆயுதம் ஏந்தி போர் செய்தார்கள். (அவர்கள் அனைவரையும் அல்லாஹ் மன்னிப்பானாக)
அவர்களை விமர்சனம் செய்வதற்காக இதனை நாம் எடுத்துக் காட்டவில்லை.
மனிதர்கள் என்ற முறையில் இத்தகைய பாரதூரமான காரியத்தையே அவர்கள் செய்திருக்கும் போது அவர்களின் நடவடிக்கை எப்படி மார்க்க ஆதாரமாக ஆக முடியும் என்பதற்காகவே இதனை எடுத்துக் காட்டுகிறோம்.
இது போலவே முஆவியா (ரலி) தலைமையிலும், அலி (ரலி) தலைமையிலும் நபித்தோழர்கள் அணி திரண்டு போர் செய்தனர். ஒருவரை ஒருவர் கொலை செய்யும் நிலை ஏற்பட்டது.
கொலை செய்தவர்களிலும் நபித்தோழர்கள் இருந்தனர். கொல்லப்பட்டவர்களிலும் நபித்தோழர்கள் இருந்தனர்.
அதன் பின்னர் நடந்த கர்பலா யுத்தத்திலும் இரண்டு அணியிலும் சில நபித்தோழர்கள் இருந்தனர்.
ஒரு முஸ்லிமுக்கு எதிராக இன்னொரு முஸ்லிம் ஆயுதம் தாங்கி கொலை செய்வது மிகப் பெரிய பாவச் செயல் என்ற நிலையிலும் நபித்தோழர்களிடம் இது நிகழ்ந்துள்ளது.
வஹீயைத் தவிர வேறு எதுவும் பாதுகாப்பானது இல்லை என்பதை அறிந்திட இது போதுமான சான்றாக அமைந்துள்ளது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழும் காலத்திலேயே நபித்தோழர்களிடம் நடந்த தவறுகளை நாம் இங்கே சுட்டிக்காட்ட விரும்பவில்லை. அவற்றைப் பட்டியலிட்டால் இந்த நூல் அதற்கு இடம் தராது.
பொதுவாக நபித்தோழர்களும் மனிதர்கள் தாம். அவர்களது சிந்தனையில், தீர்ப்புகளில் நிச்சயம் தவறு ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதை இந்த ஆதாரங்கள் விளக்குகின்றன.
குறிப்பாகவும் நபித்தோழர்கள் வாழ்வில் அதற்கு ஏராளமான ஆதாரங்கள் கிடைக்கின்றன.
வஹீக்கு முரணான நபித் தோழர்களின் நடவடிக்கைகள்
நபித்தோழர்களின் நடவடிக்கைகளை நாம் ஆய்வு செய்தால் அவர்களின் பல நடவடிக்கைகள் குர்ஆனுக்கும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலுக்கும் முரணாக அமைந்திருப்பதைக் காணலாம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்தவைகளும், தடுத்தவைகளும் நபித் தோழர்களுக்குத் தெரியாத காரணத்தால் அவர்களின் நடவடிக்கைகள் அமைந்துள்ளதையும் நாம் காண முடிகிறது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நடவடிக்கைகளைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல் தவறாகப் புரிந்து கொண்டதன் விளைவாகவும் அவர்கள் தவறான முடிவுக்கு வந்திருக்கின்றனர். இதற்கும் ஏராளமான ஆதாரங்களைக் காண முடியும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழிகாட்டாத பல விஷயங்களைச் சுயமாகவும் அவர்கள் செய்துள்ளனர் என்பதற்கும் சான்றுகள் கிடைக்கின்றன.
இவற்றிலிருந்து சிலவற்றை நாம் பட்டியலிடுவது நபித்தோழர்களைக் குறைத்து மதிப்பிடுவதற்காக அல்ல. அவர்களின் நடவடிக்கைகள் மார்க்க ஆதாரங்களாக முடியாது என்பதை இன்னும் தெளிவாக விளக்குவதற்காகவே.
ருகூவின் போது தொடைகளுக்கிடையே இரு கைகளை வைத்தல்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆரம்ப காலத்தில் ருகூவு செய்யும் போது இரு கைகளாலும் முட்டுக் கால்களைப் பிடிப்பதற்குப் பதிலாக இரு கைகளையும் இணைத்து தொடைகளுக்கு மத்தியில் வைத்துக் கொள்ளும் வழக்கம் இருந்தது. பின்னர் இது மாற்றப்பட்டு இரு கைகளால் முட்டுக் கால்களைப் பிடிக்கும்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழிகாட்டினார்கள்.
ஆனால் ஆரம்ப கால நபித் தோழரும் மிகச் சிறந்த தோழர்களில் ஒருவருமான அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்த பின்பும் மாற்றப்பட்ட இந்த முறையிலேயே தொழுது வந்தார்கள் என்பதை நாம் காண்கிறோம்.
என் தந்தையின் அருகில் நான் தொழுதேன். அப்போது என் இரு கைகளையும் சேர்த்து அதை என் தொடைகளுக்கிடையே வைத்தேன். என் தந்தை அதைத் தடுத்தார். ``நாங்கள் இப்படிச் செய்து வந்தோம். பின்னர் தடுக்கப்பட்டோம். எங்கள் கைகளை முட்டுக்கால் மீது வைக்குமாறு கட்டளையிடப்பட்டோம் என்றும் என் தந்தை கூறினார்.
அறிவிப்பவர் : முஅப் பின் ஸஅத், நூல் : புகாரி 790
அல்கமா, அல்அஸ்வத் ஆகிய நாங்கள் இருவரும் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்களைப் பின்பற்றித் தொழுதோம். ருகூவு செய்யும் போது எங்கள் இரு கைகளை முட்டுக் கால்கள் மீது வைத்தோம். அப்போது இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் எங்கள் கைகளைத் தட்டி விட்டார்கள். பின்னர் தமது கைகளைச் சேர்த்து அதைத் தொடைகளுக்கிடையே வைத்தார்கள். தொழுது முடிந்ததும், ``நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இப்படித் தான் செய்தனர் என்று குறிப்பிட்டார்கள்.
அறிவிப்போர் : அல்கமா, அல்அவத் நூல் : முஸ்லிம் 831
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆரம்பத்தில் இதை அனுமதித்து பின்னர் தடுத்து விட்டார்கள் என்பதை முதல் ஹதீஸ் கூறுகிறது. அந்தத் தடை இப்னு மஸ்வூத் என்ற மிகப் பெரிய நபித்தோழருக்குத் தெரியாமலே இருந்துள்ளது என்பதை இரண்டாவது ஹதீஸ் கூறுகிறது.
மற்ற சட்டங்களை விட தொழுகை தொடர்பான சட்டங்களை அனைத்து நபித்தோழர்களும் அறிந்திருக்க முடியும். ஏனெனில் தினமும் ஐந்து நேரம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நடைமுறைப்படுத்திக் காட்டியதால் ஏதோ ஒரு தொழுகையில் கலந்து கொண்டவர் கூட இந்தச் சட்டத்தை அறிந்திட இயலும். ஆனால் அனைவரும் எதை அறிந்திருக்க முடியுமோ அந்த முக்கியமான ஒரு சட்டம் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்களுக்குத் தெரியவில்லை.
மாற்றப்பட்ட விஷயம் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்களுக்குத் தெரியாததால் அவரது தொழுகைக்குப் பங்கம் ஏற்படாமல் போகலாம். அவர்களின் நடவடிக்கைகள் மார்க்க ஆதாரங்கள் என்று சொல்வது சரி தானா? என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
வாடகைத் திருமணம்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஆரம்ப காலத்தில் வெளியூர்களுக்குச் செல்லும் ஆண்கள் அங்குள்ள பெண்களைக் குறிப்பிட்ட காலம் வரை வாடகை பேசி திருமணம் செய்து வந்தனர். அதாவது ஒரு மாதம் வரை உன்னை மனைவியாக வைத்துக் கொள்கிறேன் என்பது போல் காலக்கெடு நிர்ணயித்து திருமணம் செய்வார்கள். காலக்கொடு முடிந்ததும் அப்பெண்ணை விட்டுவிட்டு ஊருக்கு வந்து விடுவார்கள். அரபுகளிடம் காணப்பட்ட இந்த வழக்கத்தை ஆரம்பத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்யாமல் இருந்தனர். அதனால் நபித் தோழர்களில் சிலர் இந்த வழக்தத்தைக் கடைப்பிடித்தனர்.
கைபர் போரின் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதைத் தடை செய்தனர்.
ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் யாருடைய அறிவுக்கு அல்லாஹ்விடம் துஆ செய்தார்களோ (புகாரி 75, 3756, 7270) அந்த இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்கு இந்தச் சட்டம் தெரியவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்திற்குப் பின்னர் இவ்வாறு வாடகைத் திருமணம் செய்யலாம் என்று இப்னு அப்பாஸ் (ரலி) மார்க்கத் தீர்ப்பு அளித்து வந்தார்கள்.
வாடகைத் திருமணத்தையும், வீட்டுக் கழுதைகளைச் சாப்பிடுவதையும் கைபர் போரின் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.
அறிவிப்பவர் : அலி (ரலி), நூல் : புகாரி 4216, 5115, 5523, 6691
வாடகைத் திருமணம் பற்றி இப்னு அப்பா (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்ட போது அதற்கு அனுமதி உண்டு என்றார்கள். யுத்த காலத்திலும், பெண்கள் பற்றாக் குறையின் போதும் தான் இந்த அனுமதியா? என்று அவரது ஊழியர் கேட்ட போது இப்னு அப்பாஸ் (ரலி) ஆம் என்றார்கள்.
அறிவிப்பவர் : இப்னு ஜம்ரா, நூல் : புகாரி 5116
முத்ஆ எனப்படும் வாடகைத் திருமணம் தடுக்கப்பட்டதை முதல் ஹதீஸ் கூறுகிறது. இந்த சமுதாயத்தின் மாமேதையான இப்னு அப்பாஸ் (ரலி) அதற்கு மாற்றமாகத் தீர்ப்பு அளித்ததை இரண்டாவது ஹதீஸ் கூறுகிறது.
இந்த நிலையில் நபித்தோழர்களின் நடவடிக்கைகள் மார்க்க ஆதாரமாகுமா? என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
தமத்துவு ஹஜ் பற்றி அறியாமை
உம்ராவுக்கு இஹ்ராம் கட்டி, உம்ராவை முடித்து விட்டு இஹ்ராம் இல்லாத நிலையில் மக்காவில் தங்கிக் கொண்டு ஹஜ்ஜுடைய காலம் வந்ததும் மற்றொரு இஹ்ராம் கட்டி ஹஜ் செய்வது தமத்துவு ஹஜ் எனப்படுகிறது. இவ்வாறு ஹஜ் செய்வதை திருக்குர்ஆன் (2:196) அனுமதிக்கிறது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் அனுமதித்துள்ளார்கள்.
ஆனால் இந்தச் சட்டம் மிகப் பெரும் தோழர்களான உமர் (ரலி), உஸ்மான் (ரலி) ஆகியோருக்குத் தெரியாமல் இருந்துள்ளது. அல்லது தவறாக விளங்கிக் கொண்டு இதை எதிர்த்துள்ளார்கள்.
தமத்துவு ஹஜ் பற்றிய வசனம் அல்லாஹ்வின் வேதத்தில் இறங்கியது. நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் தமத்துவு முறையில் ஹஜ் செய்தோம். இதை ஹராமாக்கி அல்லது தடை செய்து எந்த வசனமும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை அருளப்படவில்லை. மனிதர்கள் தம் விருப்பம் போல் எதையோ (இதற்கு மாற்றமாக) கூறுகிறார்கள்.
அறிவிப்பவர் : இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) நூல் : புகாரி, 1572, 4518
தமத்துவு முறையில் ஹஜ் செய்வதையும், ஹஜ் உம்ரா இரண்டையும் சேர்த்துச் செய்வதையும் உஸ்மான் (ரலி) அவர்கள் தடை செய்தார்கள். இதைக் கண்ட அலி (ரலி) அவர்கள் ஹஜ்ஜுக்கும், உம்ராவுக்கும் சேர்த்து இஹ்ராம் கட்டினார்கள். ``எவரது சொல்லுக்காகவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிமுறையை நான் விட்டுவிடுபவனாக இல்லை என்றும் கூறினார்கள்.
அறிவிப்பவர் : மர்வான் பின் அல்ஹகம், நூல் : புகாரி, 1563
மற்றொரு அறிவிப்பில்,
``நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்ததைத் தடுப்பது தவிர உமது நோக்கம் வேறு இல்லை என்று உஸ்மான் (ரலி)யிடம் நேருக்கு நேராகச் சொல்லிவிட்டு இரண்டையும் சேர்த்துச் செய்தார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
பார்க்க புகாரி : 1569
தமத்துவு முறையில் ஹஜ் செய்வது பற்றி அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம் ஒரு சிரியாவாசி கேட்டார். அது அனுமதிக்கப்பட்டது தான் என்று அவர்கள் விடையளித்தார்கள். உங்கள் தந்தை (உமர்) அவர்கள் அதைத் தடுத்திருக்கிறாரே அது பற்றிக் கூறுங்கள் என்று அவர் கேட்டார். அதற்கு அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள்``என் தந்தை ஒரு காரியத்தைத் தடுக்கிறார்கள். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதைச் செய்துள்ளனர் என்றால் என் தந்தையின் கட்டளையைப் பின்பற்ற வேண்டுமா?நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கட்டளையைப் பின்பற்ற வேண்டுமா? என்பதற்கு நீ பதில் சொல் என்றார்கள். அதற்கு அந்த மனிதர் ``அல்லாஹ்வின் தூதருடைய கட்டளையே பின்பற்றப்பட வேண்டும் எனக் கூறினார். அப்போது அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் ``நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமத்துவு முறையில் ஹஜ் செய்துள்ளார்கள் என்று பதில் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஸாலிம் பின் அப்துல்லாஹ், நூல் : திர்மிதி 753
தமத்துவு முறையில் ஹஜ் செய்வதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுமதித்தது பரவலாகத் தெரிந்த நிலையில் உமர் (ரலி), உஸ்மான் (ரலி) ஆகிய நபித் தோழர்களுக்குத் தெரியாமல் இருந்துள்ளது. அது சுட்டிக்காட்டப்பட்ட பிறகும் உஸ்மான் (ரலி) அவர்கள் ஏற்க மறுத்துள்ளார்கள்.
அனைவருக்கும் தெரிந்த நபிவழியை மிகச் சிறந்த நபித்தோழர்கள் தடை செய்திருப்பதைக் கண்ட பின்பும் நபித்தோழர்களின் நடவடிக்கைகள் மார்க்க ஆதாரமாகும் என்று கூறுவது எப்படிச் சரியான கருத்தாக இருக்க முடியும்?
கடமையான குளிப்பு
தாம்பத்தியத்தில் ஈடுபட்டு, ஆணுக்கு விந்து வெளிப்பட்டால் குளிப்பது கடமை. விந்து வெளிப்படாவிட்டால் குளிப்பது கடமையில்லை என்று ஆரம்பத்தில் சட்டம் இருந்தது. பின்னர் தாம்பத்தியத்தில் ஈடுபட்டு விந்து வெளிப்பட்டாலும் வெளிப்படாவிட்டாலும் குளிப்பது கடமை என்று மாற்றப்பட்டது.
ஆனால் மிகச் சிறந்த பல நபித்தோழர்கள் விந்து வெளிப்படாத வகையில் உடலுறவு கொண்டால் குளிப்பது கடமையில்லை என்று தீர்ப்பளித்துள்ளனர்.
ஒருவர் தாம்பத்தியத்தில் ஈடுபட்டு விந்து வெளிப்படாவிட்டால் என்ன செய்ய வேண்டும்?என்று நான் உஸ்மான் (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள் ``மர்மஸ்தானத்தைக் கழுவி விட்டு தொழுகைக்குச் செய்வது போல் உளுச் செய்ய வேண்டும் என்று விடையளித்தார்கள். இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றுள்ளேன் எனவும் உஸ்மான் (ரலி) கூறினார்கள். இது பற்றி அலி (ரலி), ஸுபைர் (ரலி), தல்ஹா (ரலி),உபை பின் கஅபு (ரலி) ஆகியோரிடமும் நான் கேட்டேன். அவர்களும் அவ்வாறே கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஸைத் பின் காலித் (ரலி) நூல் : புகாரி 179, 292
இன்றைக்கு ஒட்டு மொத்த முஸ்லிம்களும் அறிந்து வைத்திருக்கின்ற சட்டம் மிகச் சிறந்த நபித்தோழர்களுக்குத் தெரியாமல் இருந்துள்ளதை மேற்கண்ட ஹதீஸிலிருந்து நாம் அறிந்து கொள்கிறோம்.
இப்படியெல்லாம் தவறுகள் நிகழ வாய்ப்புள்ளவர்களின் நடவடிக்கைகள் மார்க்க ஆதாரங்களாகும் என்று கூறுவது பொருத்தமானது தானா? என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும்.
இஹ்ராம் நிலையில் திருமணம் செய்தல்
இஹ்ராம் கட்டியவர் திருமணம் செய்யக் கூடாது; திருமணப் பேச்சும் பேசக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.
அறிவிப்பவர் : உஸ்மான் (ரலி) நூல் : முஸ்லிம் 2522, 2524, 2525, 2526
இந்தத் தடையை இப்னு அப்பாஸ் (ரலி) அறியாமல் இருந்ததுடன் தமது சின்னம்மா மைமூனா (ரலி) அவர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இஹ்ராம் கட்டிய நிலையில் தான் திருமணம் செய்தார்கள் எனவும் கூறி வந்தார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இஹ்ராம் கட்டிய நிலையில் தான் மைமூனா (ரலி) அவர்களைத் திருமணம் செய்தார்கள் என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
நூல் : புகாரி 1837, 4259, 5114
ஆனால் பிரச்சனையில் சம்பந்தப்பட்ட மைமூனா (ரலி) அவர்கள் இதை மறுத்திருக்கிறார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இஹ்ராம் கட்டாத நிலையில் தான் என்னைத் திருமணம் செய்தார்கள்.
அறிவிப்பவர் : மைமூனா (ரலி) நூல் : முஸ்லிம் 2529
ஒரு பிரச்சனையில் சம்பந்தப்பட்டவரின் கூற்றும் சம்பந்தப்படாதவரின் கூற்றும் முரண்பட்டால் சம்பந்தப்பட்டவரின் கூற்றையே எடுத்துக் கொள்ள வேண்டும்.
இஹ்ராம் கட்டிய நிலையில் திருமணம் செய்யக் கூடாது என்ற விபரமும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்குத் தெரியாமல் இருந்துள்ளது. தனது சிறிய தாயார் மைமூனா (ரலி) அவர்களுக்கு எப்போது திருமணம் நடந்தது என்பதும் அவர்களுக்குத் தெரியாமல் இருந்துள்ளது.
தவறுகள் நிகழ வாய்ப்புள்ளவர்களின் நடவடிக்கைகள் மார்க்க ஆதாரங்களாகும் என்று கூறுவது பொருத்தமானது தானா?
குளிப்பு கடைமையான நிலையில் நோன்பைத் துவக்குவது
ஒருவருக்கு குளிப்பு கடைமையாகி விட்டால் அந்த நிலையிலேயே சஹர் செய்து நோன்பு நோற்கலாம்.சுபுஹ் நேரம் வந்ததும் தொழுகைக்காகக் குளித்துக் கொள்ள லாம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்துள்ளார்கள்.
ஆனால் அதிகமான ஹதீஸ்களை அறிந்திருந்த அபூ ஹுரைரா (ரலி) அவர்களுக்கு இந்தச் சட்டம் தெரியாமல் இருந்து பின்னர் திருத்திக் கொண்டார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குளிப்பு கடமையான நிலையில் பஜ்ரு நேரத்தை அடைவார்கள். பின்னர் குளித்து விட்டு நோன்பைத் தொடர்வார்கள் என்று ஆயிஷா (ரலி),உம்மு ஸலமா (ரலி) ஆகிய இருவரும் தன்னிடம் கூறியதாக அப்துர்ரஹ்மான் பின் ஹாரிஸ் மதீனாவின் ஆளுநரான மர்வானிடம் தெரிவித்தார். இதைக் கேட்ட மர்வான்``அல்லாஹ்வின் மீது ஆணையாக இதைப் பற்றி அபூ ஹுரைராவிடம் நீ கூறி எச்சரிக்கை செய்ய வேண்டும் எனக் கூறினார். ஆனால் அப்துர் ரஹ்மான் அபூ ஹுரைராவிடம் இது பற்றி பேச விரும்பவில்லை. பின்னர் துல்ஹுலைபா எனும் இடத்தில் சந்திக்கும் வாய்ப்பு வந்தது. அங்கே அபூ ஹுரைராவுக்குச் சொந்தமான நிலம் ஒன்று இருந்தது. அப்போது அப்துர் ரஹ்மான் ``நான் உங்களிடம் ஒரு செய்தியைக் கூறவுள்ளேன். மர்வான் உம்மிடம் கூறுமாறு சத்தியம் செய்திராவிட்டால் அதை உம்மிடம் நான் கூற மாட்டேன் என்று அபூ ஹுரைரா (ரலி) அவர்களிடம் கூறினார். பின்னர் ஆயிஷா (ரலி), உம்மு ஸலமா (ரலி) ஆகியோர் கூறியதை அபூ ஹுரைராவிடம் தெரிவித்தார். இதைக் கேட்ட அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் ``எனக்கு பழ்ல் பின் அப்பாஸ் தான் இதைக் கூறினார். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவியரே இது பற்றி நன்கறிந்தவர்கள் என்று விடையளித்தார்கள்.
நூல் : புகாரி 1926
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பெரிய தந்தை மகனான பழ்ல் பின் அப்பாஸ் அவர்களுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நடைமுறை தெரியாமல் இருந்துள்ளது. அவர்கள் கூறியதை அபூ ஹுரைரா (ரலி) நம்பியும் இருக்கிறார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சில நடவடிக்கைகள் பற்றிய விளக்கம் நபித்தோழர்கள் சிலரிடம் இல்லாமல் இருந்துள்ளது என்பதை இதன் மூலம் நாம் அறிகிறோம்.
லுஹாத் தொழுகை
முற்பகலில் லுஹா என்ற தொழுகை உள்ளது என்பதை அனைவரும் அறிந்து வைத்திருக்கிறோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் லுஹாத் தொழுகையை நிறைவேற்றியதற்கும் ஆர்வமூட்டியதற்கும் அதிகமான ஆதாரங்கள் உள்ளன. ஆனால் சில நபித்தோழர்களுக்கு இதைப் பற்றிய தகவல் கிடைக்கவில்லை.
எனது தோழர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எனக்கு மூன்று விஷயங்களை வலியுறுத்திக் கூறினார்கள். நான் மரணிக்கும் வரை அவற்றை விட மாட்டேன். அவைகளாவன : ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பது; லுஹா தொழுவது; வித்ரு தொழுத பின்னர் உறங்குவது என்று அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்.
நூல் : புகாரி 1178, 1981
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றி கொள்ளப்பட்ட தினத்தில் எனது வீட்டுக்கு வந்து குளித்து விட்டு எட்டு ரக்அத்கள் தொழுதனர். அந்த நேரம் லுஹா நேரமாக இருந்தது என்று அபூ தாலிபின் மகள் உம்மு ஹானி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல் : புகாரி 357, 3171, 6158
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாமும் தொழுது மற்றவருக்கும் வலியுறுத்திய ஒரு தொழுகையை சில நபித் தோழர்கள் அடியோடு மறுத்துள்ளனர்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு போதும் லுஹா தொழுகை தொழுததில்லை என்று ஆயிஷா (ரலி) கூறுகிறார்கள்.
நூல் : புகாரி 1128, 1177
நீங்கள் லுஹா தொழுவதுண்டா? என்று இப்னு உமர் (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள் இல்லை என்றனர். உமர் தொழுதிருக்கிறாரா? என்று கேட்டேன். அதற்கும் இல்லை என்றார்கள். அபூபக்ர் தொழுதிருக்கிறாரா? என்று கேட்டேன். அதற்கும் இல்லை என்றார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுதிருக்கிறார்களா? என்று கேட்டேன். அதற்கவர் அவர்கள் தொழுததாக நான் நினைக்கவில்லை என்றார்கள். இதை முவர்ரிக் என்பார் அறிவிக்கிறார்.
நூல் : புகாரி 1175
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வணக்கம் தொடர்பான செய்தி அவர்களின் மனைவிக்கும் தெரியாமல் இருந்துள்ளது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அப்படியே பின்பற்றுவதில் தனித்து விளங்கிய இப்னு உமர் (ரலி) அவர்களுக்கும் தெரியாமல் இருந்துள்ளது.
நபித்தோழர்களுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அனைத்து நடவடிக்கைகளும் தெரியாமல் இருந்துள்ளதால் நபித்தோழர்கள் எந்த நடவடிக்கைக்கு நபிவழியை ஆதாரமாகக் காட்டுகிறார்களோ அதை மட்டுமே நாம் பின்பற்ற வேண்டும். நபிவழியை ஆதாரமாகக் காட்டாமல் அவர்கள் செய்தவற்றையோ, சொன்னவற்றையோ பின்பற்றும் அவசியம் நமக்கு இல்லை என்பதை இதன் மூலம் நாம் அறிகிறோம்.
பிறரது இல்லத்தில் நுழைய அனுமதி கேட்டல்
அபூ மூஸா (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களின் இல்லத்தில் நுழைய அனுமதி கேட்டார்கள். உமர் (ரலி) அவர்கள் ஏதோ வேலையில் இருந்ததால் அவர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. உடனே அபூ மூஸா (ரலி) திரும்பி விட்டார்கள். உமர் (ரலி) அவர்கள் தமது வேலையை முடித்த பின் ``அபூ மூஸாவின் குரல் கேட்டதே! அவரை உடனே உள்ளே வரச் சொல்லுங்கள் எனக் கூறினார்கள். அவர் திரும்பிச் சென்று விட்டார் எனக் கூறப்பட்டது. உடனே அவரை அழைத்து வரச் செய்து உமர் (ரலி) விசாரித்தார்கள். அதற்கு அபூ மூஸா (ரலி) அவர்கள் ``இப்படித் தான் எங்களுக்குக் கட்டளையிடப்பட்டிருந்தது எனக் கூறினார்கள். அதைக் கேட்ட உமர் (ரலி) அவர்கள் ``இதற்கான ஆதாரத்தை நீர் சமர்ப்பிக்க வேண்டும் எனக் கூறினார்கள். அபூ மூஸா (ரலி) அவர்கள் அன்ஸாரிகள் கூட்டத்தில் வந்து இதைக் கூறினார்கள்.
வயதில் சிறியவரான அபூ ஸயீத் அல்குத்ரீயைத் தவிர யாரும் உமக்காக இந்த விஷயத்தில் சாட்சி கூற மாட்டார்கள் எனக் கூறினார்கள். அபூ ஸயீத் அல்குத்ரீ அவர்களை அழைத்து வந்து அபூ மூஸா (ரலி) சாட்சி கூற வைத்தார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள் ``கடை வீதிகளில் மூழ்கிக் கிடந்ததால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சம்பந்தப்பட்ட இந்தச் செய்தி எனக்குத் தெரியாமல் போய் விட்டதே எனக் கூறினார்கள்.
நூல் : புகாரி 2062, 6245, 7353
உமர் (ரலி) அவர்கள் மிகச் சிறந்த நபித்தோழர் என்றாலும் அவர்களால் அனைத்து விஷயங்களையும் அறிந்து கொள்ள இயலவில்லை. வியாபாரம் தொடர்பான பணிகளில் அவர்கள் ஈடுபட்டதன் காரணமாக அவர்கள் பல விஷயங்களை அறிந்து கொள்ள முடியாமல் இருந்துள்ளனர் என்பதற்கு அவர்களே வாக்குமூலம் தந்து விட்டனர்.
இந்த நிலையில் நபித்தோழர்களின் நடவடிக்கைகள் அனைத்தும் நபிவழியில் தான் அமைந்திருக்க வேண்டும் என்று வாதிடுவது சரியாகுமா?
தயம்முமை மறுத்த உமர் (ரலி)
மிகச் சிறந்த நபித்தோழரான உமர் (ரலி) அவர்கள் குளிப்புக்காக தயம்மும் செய்வதை அறியாமல் இருந்துள்ளார்கள்.
ஒரு மனிதர் உமர் (ரலி) அவர்களிடம் வந்தார். ``எனக்குக் குளிப்பு கடமையாகி விட்டது. எனக்குத் தண்ணீர் கிடைக்கவில்லை என்று அவர் கேட்டார். அதற்கு உமர் (ரலி) அவர்கள்``(தண்ணீர் கிடைக்காவிட்டால்) நீ தொழக் கூடாது என்று விடையளித்தார்கள். அப்போது அம்மார் (ரலி) அவர்கள் ``முஃமின்களின் தலைவரே! நானும், நீங்களும் ஒரு சிறு படையில் சென்றோம். நம் இருவருக்கும் குளிப்பு கடமையானது. நமக்குத் தண்ணீர் கிடைக்கவில்லை. அப்போது நீங்கள் தொழவில்லை. நானோ மண்ணில் புரண்டு விட்டு தொழுதேன். இது பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கூறிய போது, ``உமது இரு கைகளால் தரையில் அடித்து வாயால் ஊதிவிட்டு கைகளால் முகத்திலும் முன் கைகளிலும் தடவிக் கொள்வது உமக்குப் போதுமே! என்று கூறினார்கள். இது உங்களுக்கு நினைவில்லையா? என்று உமர் (ரலி) அவர்களுக்கு நினைவுபடுத்தினார்கள். அப்போது உமர் ரலி) அவர்கள் ``அம்மாரே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள் என்று கூறினார்கள். ``உங்களுக்கு விருப்பமில்லா விட்டால் இது பற்றி நான் அறிவிக்க மாட்டேன் என்று கூறினார்கள்.
நூல் : முஸ்லிம் 553
கடமையான குளிப்புக்காகவும் தயம்மும் செய்யலாம் என்று திருக்குர்ஆனில் தெளிவாகக் கூறப்பட்டிருந்தும் அந்தச் சட்டம் உமர் (ரலி) அவர்களுக்குத் தெரியவில்லை. அம்மார் அவர்கள் சுட்டிக் காட்டியதையும் உமர் (ரலி) அவர்கள் நம்பவில்லை என்பது மேற்கண்ட செய்தியில் இருந்து தெரிகிறது.
மிகச் சிறந்த நபித்தோழருக்கே இது பற்றிய சட்டம் தெரியவில்லை எனும் போது நபித்தோழரின் நடவடிக்கை எப்படி மார்க்க ஆதாரமாக ஆக முடியும்?
தயம்மும் சலுகையை மறுத்த இப்னு மஸ்வூத்
நான் அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) , அபூ மூஸா (ரலி) ஆகயோருடன் அமர்ந்திருந்தேன். அப்போது அபூ மூஸா (ரலி) அவர்கள் ``ஒருவருக்கு குளிப்பு கடமையாகி தண்ணீர் கிடைக்காவிட்டால் என்ன செய்ய வேண்டும்? என்று அப்துல்லாஹ் பின் மவூதிடம் கேட்டார்கள். அதற்கு அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்கள் தண்ணீர் கிடைக்கும் வரை தொழக் கூடாது என்று விடையளித்தார் கள். தயம்மும் செய்வது போதும் என்று அம்மாருக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய செய்திக்கு உமது பதில் என்ன? என்று அபூ மூஸா (ரலி) திருப்பிக் கேட்டார்கள். அதற்கு இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் அவர் சொன்னதைத் தான் உமர் (ரலி) ஏற்றுக் கொள்ளவில்லையே என்று விடையளித்தார்கள். அப்போது அபூ மூஸா (ரலி) அவர்கள் ``அம்மார் கூறுவதை விட்டு விடுவோம். இந்த 5:6 வசனத்தை என்ன செய்யப் போகிறீர்? என்று திருப்பிக் கேட்டார்கள். அதற்கு என்ன பதில் சொல்வது என்று அறியாமல் ``நாம் இதை அனுமதித்தால் ஒருவர் குளிர் அடிக்கும் போது கூட தயம்மும் செய்து தொழ ஆரம்பித்து விடுவார் என்று இப்னு மஸ்வூத் (ரலி) பதிலளித்தார்கள்.
நூல் : புகாரி 346, 347
உளுச் செய்வதற்கு தண்ணீர் கிடைக்கா விட்டால் தயம்மும் செய்து தொழலாம். அது போல் குளிப்பு கடமையாகி குளிப்பதற்குத் தண்ணீர் கிடைக்காவிட்டால் குளிப்பதற்குப் பகரமாகவும் தயம்மும் செய்யலாம். இது இன்றைக்கு அனைத்து முஸ்லிம் அறிஞர்களும் தெரிந்து வைத்திருக்கின்ற சட்டமாகும்.
ஆனால் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் இதனை மறுக்கிறார்கள். அபூ மூஸா (ரலி), இப்னு மவூதுக்கு எதிராக ஒரு நபி மொழியையும், ஒரு திருக்குர்ஆன் வசனத்தையும் எடுத்துக் காட்டுகிறார்கள்.
தக்க ஆதாரங்கள் கிடைக்காத நேரத்தில் தவறான தீர்ப்பு அளிப்பது மனிதர்களின் பலவீனம் என்று எடுத்துக் கொள்ளலாம். இத்தகைய தவறுகள் நிகழாத மனிதர்களை நாம் காண முடியாது.
ஆனால் மேற்கண்ட செய்தியில் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்களிடம் தக்க ஆதாரங்களை அபூ மூஸா (ரலி) எடுத்துக் காட்டிய பிறகு இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் தமது கருத்தை உடனே மாற்றிக் கொண்டிருக்க வேண்டும். அல்லது தமது கருத்துக்கு ஆதரவான ஆதாரத்தை எடுத்துக் காட்டியிருக்க வேண்டும்.
ஆனால் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் தக்க ஆதாரத்தை அறிந்த பின்பும் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. நாம் அனுமதி அளித்தால் சாதாரண குளிருக்குப் பயந்து தயம்மும் செய்ய ஆரம்பித்து விடுவார்கள் என்று கூறுகிறார்கள். அதாவது அல்லாஹ் அனுமதித்த ஒன்றை தவறான காரணம் கற்பித்து இப்னு மஸ்வூத் (ரலி) மறுக்கிறார்கள்.
சொந்த யூகத்தின் அடிப்படையில் தீர்ப்பளிக்கும் மனப்பான்மை தலை சிறந்த நபித் தோழரிடம் காணப்பட்டால் இது எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும்? இது போல இன்னும் எத்தனை தீர்ப்புகள் அவரால் அளிக்கப்பட்டிருக்கும் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தாதா? நபித்தோழர்களின் நடவடிக்கைகளும் மார்க்க ஆதாரங்கள் என்று கூறுவது எந்த வகையில் ஏற்புடையதாகும்?
பிளேக் ஏற்பட்ட ஊருக்குள் நுழைவது
உமர் ரலி) அவர்கள் சிரியாவை நோக்கிப் பயணமானார் கள். சரக் என்ற இடத்தை அடைந்த போது அபூ உபைதாவும், அவரது சகாக்களும் வந்து சிரியாவில் பிளேக் ஏற்பட்டதாகக் கூறினார்கள். இதற்கு என்ன செய்வது? என்று முஹாஜிர்கள் மற்றும் அன்ஸாரிகளிடம் உமர் (ரலி) ஆலோசனை கேட்ட போது யாருக்கும் இது பற்றிய விளக்கம் தெரியவில்லை. எனவே சிரியாவுக்குச் செல்ல உமர் (ரலி) ஆயத்தமானார்கள். வெளியூர் சென்றிருந்த அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ப் (ரலி) அவர்கள் திரும்பி வந்தார்கள். உமர் (ரலி) அவர்களைச் சந்தித்து இது பற்றிய நபிமொழி தமக்குத் தெரியும் என்றார்கள். ஒரு ஊரில் பிளேக் நோய் வந்துள்ளதைப் பற்றிக் கேள்விப்பட்டால் அவ்வூரை நோக்கிச் செல்லாதீர்கள். நீங்கள் இருக்கும் ஊரில் பிளேக் ஏற்பட்டால் ஊரை விட்டு வெளி யேறாதீர்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூற நான் செவியேற்றுள்ளேன் என்று அப்துர் ரஹ்மான் பின் அவ்ப் (ரலி) கூறினார்கள். உமர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்து விட்டு திரும்பி விட்டார்கள்.
நூல் : புகாரி 5729
சில விஷயங்கள் ஒரே ஒரு நபித்தோழருக்கு மட்டும் தெரிந்து, மற்றவர்களுக்குத் தெரியாமல் இருந்துள்ளது என்பதை இதிலிருந்து அறியலாம்.
அப்துர் ரஹ்மான் பின் அவ்ப் (ரலி) அவர்கள் இந்த நபி மொழியை எடுக்காட்டியிருக்கா விட்டால் உமர் (ரலி) உட்பட நபித்தோழர்கள் சிரியாவுக்குச் சென்றிருப்பார்கள் என்பதில் ஐயம் இல்லை.
இஹ்ராமுக்கு முன் நறுமணம் பூசுதல்
ஹஜ், உம்ரா செய்வதற்காக இஹ்ராம் அணிந்த பின் நறுமணம் பூசக் கூடாது என்பதை அனைவரும் அறிவோம். இஹ்ராம் அணிவதற்கு முன்னர் நறுமணம் பூசி, அந்த நறுமணம் நீங்குவதற்கு முன் இஹ்ராம் அணியலாமா?
இது பற்றி இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறும் போது இவ்வாறு செய்யக் கூடாது என்று தீர்ப்பளித்து வந்தார்கள். இவ்வாறு முடிவு செய்வதற்கு அவர்களிடம் எந்த ஆதாரமும் இருக்கவில்லை. இஹ்ராம் அணிந்த பின்னர் நறுமணம் பூசக் கூடாது என்பதால் முன்னர் பூசிய நறுமணமும் நீடிக்கக் கூடாது என்று அவர்கள் கருதியதே இதற்குக் காரணம்.
இது பற்றி ஆயிஷா (ரலி) அவர்களிடம் தெரிவிக்கப்பட்ட போது ``இப்னு உமருக்கு அல்லாஹ் அருள் புரிவானாக! நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு நறுமணம் பூசி விடுவேன். பின்னர் தமது மனைவியரிடம் செல்வார்கள். பின்னர் அவர்கள் மீது நறுமணம் வீசும் நிலையில் காலையில் இஹ்ராம் அணிவார்கள் என்று விடையளித்தார்கள்.
பார்க்க : புகாரி 267, 270, 1754
நேரடி ஆதாரங்கள் இல்லாத போது நபித் தோழர்கள் சுயமாகக் கருத்து கூறியுள்ளனர் என்பது இதிலிருந்து தெளிவாகும் போது நபித் தோழர்களின் நடவடிக்கைகள் மார்க்க ஆதாரங்களாகும் என்று எப்படிக் கூற முடியும்?
ஒரே நேரத்தில் கூறப்படும் மூன்று தலாக்
மனைவியைப் பிடிக்காத கணவர்கள் தாமாகவே மனைவியை விவாகரத்து செய்யும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. இது போல் பெண்களுக்கும் விவாகரத்து உரிமை வழங்கப்பட்டுள்ளது.
ஆண்களைப் பொருத்த வரை இவ்வாறு மூன்று வாய்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளன.
முதல் தடவை விவாக ரத்து செய்து, மனைவிக்கு மூன்று மாதவிடாய் முடிவதற்குள் மனமாற்றம் ஏற்பட்டால் மனைவியுடன் சேர்ந்து கொள்ளலாம். மூன்று மாதவிடாய் கடந்து விட்டால் மனைவி சம்மதித்தால் மீண்டும் அவர்கள் தமக்கிடையே திருமணம் செய்து கொள்ளலாம்.
இரண்டாவது தடவை விவாகரத்து செய்தாலும் மேற்கண்ட அடிப்படையில் சேர்ந்து கொள்ளலாம்.
மூன்றாவது தடவை விவாகரத்து செய்தால் அதன் பின்னர் மனைவியுடன் சேரவோ,திருமணம் செய்யவோ அனுமதி இல்லை. விவாகரத்து செய்யப்பட்ட மனைவி மற்றொருவனை மணந்து அவனும் விவாகரத்து செய்திருந்தால் முதல் கணவன் அவளைத் திருமணம் செய்ய அனுமதி உண்டு.
ஒரு கணவன் முதல் தடவை விவாகரத்து செய்யும் போது முத்தலாக் என்றோ, தலாக் தலாக் தலாக் என்றோ கூறினால் அது மூன்று தடவை தலாக் கூறியதாக ஆகாது. மூன்று தலாக் என்று கூறினாலும், மூவாயிரம் தலாக் என்று கூறினாலும் தனக்கு இஸ்லாம் வழங்கிய ஒரு வாய்ப்பைத் தான் அவன் பயன்படுத்தியுள்ளான். இப்படித் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் நடைமுறை இருந்தது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் இது தான் நடைமுறை என்று தெரிந்திருந்தும் உமர் (ரலி) அவர்கள் அதை மீறி நபிவழிக்கு மாற்றமான சட்டத்தைக் கொண்டு வந்தார்கள் என்பதை ஹதீஸ் நூலில் நாம் காண்கிறோம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்திலும், அபூ பக்ர் (ரலி) அவர்களின் காலத்திலும்,உமர் (ரலி) அவர்கள் ஆட்சியில் இரண்டு ஆண்டுகளும் மூன்று தலாக் எனறு கூறுவது ஒரு தலாக்காகவே கருதப்பட்டு வந்தது. நிதானமாக முடிவு செய்யும் விஷயத்தில் மக்கள் அவசரப்படுகிறார்கள். எனவே மூன்று தலாக் என்று கூறுவதை மூன்று தலாக் என்றே சட்டமியற்றினால் என்ன? என்று கூறி அதை உமர் (ரலி) அவர்கள் சட்டமாகவும் ஆக்கினார்கள்.
நூல் : முஸ்லிம் 2689
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல் இது தான் என்று தெரியாமல் சுயமுடிவு எடுப்பதை விட நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழி காட்டுதல் இது தான் என்று தெரிந்து கொண்டே அதை ரத்துச் செய்வது பாரதூரமானது என்பதில் சந்தேகம் இல்லை. உமர் (ரலி) போன்றவர்களிடமே சில நேரம் இது போன்ற முடிவுகள் வெளிப்பட்டது என்றால் இதை ஏற்று நபிவழியைப் புறக்கணிக்க முடியுமா?
நபிவழியை அறிந்து கொண்டே அதற்கு மாற்றமாகத் தீர்ப்பு அளித்திருக்கும் போது நபித் தோழர்களின் நடவடிக்கை எப்படி மார்க்க ஆதாரமாக ஆகும்?
தொழுகையிலும் மாற்றங்கள்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்த பின் நபித்தோழர்களிடம் பல மாற்றங்கள் ஏற்பட்டன. தினமும் ஐந்து தடவை தொழுது பழக்கப்பட்டிருந்த நபித்தோழர்கள் அதிலும் கூட நிறைய விஷயங்களை மாற்றி விட்டனர் என்ற விமர்சனம் நபித்தோழர்கள் காலத்திலேயே எழுந்தது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் நடைமுறையில் இருந்த ஒன்றையும் என்னால் காண முடியவில்லை என்று அன (ரலி) கூறினார்கள். ``ஏன் தொழுகை இருக்கிறதே என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கவர்கள் ``தொழுகையிலும் பாழ்படுத்த வேண்டிய அளவுக்குப் பாழ்படுத்திவிட்டீர்களே என்று திருப்பிக் கேட்டார்கள்.
நூல் : புகாரி 529, 530
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் இருந்த நடைமுறை அனைத்தும் அனைவரிடமும் அப்படியே நீடிக்கவில்லை எனும் போது நபித்தோழர்களின் நடவடிக்கைகள் மார்க்க ஆதாரம் எனக் கூறுவது தவறல்லவா?
இரண்டு அத்தியாயங்களை மறுத்த இப்னு மஸ்வூத்
திருக்குர்ஆனில் 114 அத்தியாயங்கள் உள்ளதை உலக முஸ்லிம்கள் அனைவரும் அறிந்து வைத்துள்ளோம்.
ஆனால் மிகச் சிறந்த நபித்தோழரான இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் 113, 114 ஆகிய இரண்டு அத்தியாயங்களை மறுத்து வந்தார்கள். தமது ஏட்டில் இவ்விரு அத்தியாயங்களையும் அவர்கள் பதிவு செய்யவில்லை. அவ்விரு அத்தியாயங்களும் இரண்டு பிரார்த்தனைகள் தான். குர்ஆனின் அத்தியாயங்கள் அல்ல என்று கடைசி வரை சாதித்து வந்தார்கள்.
நூல் : முஸ்னத் அஹ்மத் 20244, 20246
நபித் தோழர்களின் நடவடிக்கைகள் மார்க்க ஆதாரங்கள் ஆகும் என்றால் திருக்குர்ஆனின் அத்தியாயங்கள் 112 தான் என்று நாமும் கூறலாமா? திருக்குர்ஆனின் விஷயத்திலேயே நபித்தோழருக்கு பிழை ஏற்பட்டது என்றால் நபித்தோழரின் நடவடிக்கைகள் மார்க்க ஆதாரமாகும் என்று கூறுவது எப்படி நியாயமாகும்?
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மரணம்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணிப்பார்கள் என்று திருக்குர்ஆனிலேயே தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் தனது மரணம் பற்றி முன் அறிவிப்பு செய்திருந்தார்கள்.
ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்த போது உமர் (ரலி) உள்ளிட்ட பல நபித் தோழர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணிக்கவில்லை என்றும், மரணிக்க மாட்டார்கள்; உயித்தெழுவார்கள் என்றும் இஸ்லாத் தின் அடிப்படைக்கு எதிரான கருத்தைக் கொண்டிருந் தார்கள்.
அபூ பக்ர் (ரலி) அவர்கள் தக்க ஆதாரங்களை எடுத்துக் காட்டி அவர்களின் தவறான நம்பிக்கையைப் புரிய வைக்கும் வரை நபித்தோழர்களால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மரணத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
நூல் : புகாரி 1242, 3670
பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் சம்பவங்கள் நிகழும் போது நாம் எப்படி நிலை குலைந்து போவோமோ அது போல் நபித்தோழர்களும் நிலை குலையக் கூடியவர்களாக இருந்துள்ளனர் என்பதை இதிலிருந்து நாம் அறிகிறோம்.
எனவே தான் தவறுகளுக்கு அறவே இடமில்லாத வஹீயை மட்டும் பின்பற்ற வேண்டும் என்று திருக்குர்ஆனும், நபிமொழிகளும் தெள்ளத் தெளிவாக அறிவிக்கின்றன.
பெண்கள் பள்ளிவாசலுக்கு வருவதைத் தடுத்தல்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் பெண்களும் ஐந்து நேரத் தொழுகைக்காக பள்ளிவாசலுக்கு வந்து சென்றனர்.
புகாரி : 362, 86, 184, 362, 372, 578, 707, 807, 809, 814, 837, 850, 865, 867, 868, 873 ஆகிய எண்களில் இது பற்றிய ஹதீஸ்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இன்றைக்கு பெண்களின் நடவடிக்கைளை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கண்டால் இரவேல் சமுதாயப் பெண்கள் தடுக்கப்பட்டது போல் (பள்ளிவாசலுக்கு வருவதை விட்டு) தடுக்கப்பட்டிருப்பார்கள் என்று ஆயிஷா (ரலி) கூறினார்கள். நூல் : புகாரி 869
இந்த மார்க்கம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் சுயமாக உருவாக்கப்பட்டதல்ல. மாறாக ஏக இறைவனிடமிருந்து வந்த மார்க்கமாகும். நாளை என்ன நடக்கும் எதிர்காலத்தில் என்னென்ன மாறுதல்கள் ஏற்படும் என்பதையெல்லாம் நன்கறிந்த இறைவனால் இம்மார்க்கம் நமக்குத் தரப்பட்டுள்ளது.
ஆயிஷா (ரலி) கூறுவது போன்ற மாற்றங்கள் ஏற்படும் என்பதும் இறைவனுக்கு நன்கு தெரியும்.
பெண்களிடம் ஏற்படும் தவறான நடவடிக்கை காரணமாக பெண்களைப் பள்ளியில் அனுமதிக்கக் கூடாது என்று இறைவன் நினைத்திருந்தால் அதை அவன் தெளிவாகச் சொல்லியிருப்பான். அதை அறியாமல் இறைவன் சட்டமியற்றி விட்டான் என்பது போன்ற கருத்து ஆயிஷா (ரலி) அவர்களின் கூற்றில் அடங்கியுள்ளது.
மேலும் மார்க்கம் முழுமையாகி விட்டது என்று திருக்குர்ஆன் கூறுகிறது. மார்க்கம் முழுமையாகி விட்டது என்றால் அதன் பின்னர் எந்த மாற்றமும் வராது என்பது தான் பொருள். இதற்கு எதிராகவும் ஆயிஷா (ரலி) அவர்களின் கூற்று அமைந்துள்ளது.
ஆயிஷா (ரலி) அவர்கள் இந்தக் கருத்தை மனதில் கொண்டு இவ்வார்த்தைகளைக் கூறினார்கள் என்று புரிந்து கொள்ளக் கூடாது. பெண்களின் நடவடிக்கைகளைக் கண்டு மனம் வெதும்பி இந்தச் சொல்லைப் பயன்படுத்தி விட்டார்கள் என்று தான் நாம் நல்லெண்ணம் வைக்க வேண்டும். அதே நேரத்தில் உலகில் எந்த மாறுதல் ஏற்பட்டாலும் மார்க்கச் சட்டத்தில் எந்த மாற்றமும் ஏற்படாது என்பதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும்.
பெருநாள் தொழுகைக்கு முன் குத்பா
ஜும்ஆ தொழுகைக்குரிய குத்பாவை தொழுகைக்கு முன் நிகழ்த்த வேண்டும். பெருநாள் தொழுகைக்குரிய குத்பாவை தொழுகைக்குப் பின் நிகழ்த்த வேண்டும் என்பதை நாம் அறிவோம்.
ஆனால் ஏராளமான நபித் தோழர்கள் வாழும் காலத்தில் ஆட்சியாளர்களின் சுயநலப் போக்கால் இந்த நடைமுறை மாற்றி அமைக்கப்பட்டது. ஒரே ஒரு நபித் தோழர் மட்டும் அதை எதிர்த்துப் பேராடினாலும் அவரது கருத்து எடுபடவில்லை. தான் விரும்பியவாறு ஆட்சியாளர் மார்க்கத்தை வளைத்துக் கொண்டார் என்பதை ஹதீஸ்களில் நாம் காண்கிறோம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோன்புப் பொருநாளி லும், ஹஜ் பெருநாளிலும் முஸல்லா எனும் திடலுக்குச் செல்வார்கள். முதலில் தொழுகையை முடித்து விட்டு திரும்பி மக்களை நோக்கி நிற்பார்கள். மக்கள் வரிசைகளில் அமர்ந்திருப்பார்கள். மக்களுக்கு உரை நிகழ்த்தி அறிவுரை கூறுவார்கள். மர்வான் ஆட்சியாளராக வரும் வரை இந்த நிலை தான் நீடித்தது. அவர் மதீனாவின் அமீராக இருந்தார். அவருடன் நான் புறப்பட்டு முஸல்லா எனும் திடலை அடைந்த போது அங்கே ஒரு மேடை தயார் செய்யப்பட்டிருந்தது. தொழுகை நடத்துவதற்கு முன் மர்வான் மேடையில் ஏற முயன்றார். நான் அவரது ஆடையைப் பிடித்து இழுத்தேன். அவர் என்னை இழுத்தார். முடிவில் மேலே ஏறி தொழுகைக்கு முன் உரை நிகழ்த்தினார். அப்போது ``அல்லாஹ்வின் மேல் ஆணையாக (மார்க்கத்தை) மாற்றி விட்டீர் என்று நான் கூறினேன். அதற்கு மர்வான் ``நீ அறிந்து வைத்திருக்கும் நடைமுறை முடிந்து போன விஷயம் என்று கூறினார். நான் அறிந்து வைத்துள்ள நடைமுறை நான் அறியாத (இந்த) நடைமுறையை விடச் சிறந்தது எனக் கூறினேன். தொழுகைக்குப் பின் மக்கள் அமர்வதில்லை என்பதால் உரையை தொழுகைக்கு முன் அமைத்துக் கொண்டேன் என்று மர்வான் கூறினார்.
அறிவிப்பவர் : அபூ ஸயீத் (ரலி)
நூல் : புகாரி 956
சிறந்த காலம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் புகழ்ந்து கூறிய நபித் தோழர்களும் தாபியீன்களும் வாழும் காலத்தில் ஒட்டு மொத்த சமுதாயமும் குழுமியுள்ள பெருநாள் தொழுகையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நடைமுறை அப்பட்டமாக மீறப்படுகிறது. ஒரே ஒருவர் மட்டுமே அதை எதிர்க்கிறார் என்பதைக் காண்கிறோம்.
ஆட்சியாளர்களின் அடக்குமுறைக்கு பயந்து கூட மார்க்கத்திற்கு முரணான சில செயல்களை அன்றைய மக்கள் சகித்துக் கொண்டிருக்கக் கூடும். எனவே நபித்தோழர்களின் காலத்தில் உள்ள அனைத்தும் மார்க்க ஆதாரங்கள் எனக் கூற முடியாது என்பதை இதிலிருந்து நாம் அறிந்து கொள்கிறோம்.
மனிதர்கள் என்ற முறையில் நபித்தோழர்கள் சிலர் செய்த பாவங்களை நாம் இங்கே சுட்டிக் காட்டவில்லை.
நபித்தோழர்களின் ஆய்விலும், சிந்தனையிலும், தீர்ப்புகளிலும் அவர்களிடம் காணப்பட்ட மற்றவர்களுக்குத் தொடர்புடைய தவறுகளையே இங்கே நாம் சுட்டிக் காட்டியுள்ளோம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நடவடிக்கைகளையே வஹீ எனவும், வஹீ அல்லாதது எனவும் இரண்டாக நாம் வகைப்படுத்தி ஒன்றை மட்டும் மார்க்க ஆதாரமாக ஏற்றுக் கொள்கிறோம். இன்னொன்றை மார்க்க ஆதரமாக ஏற்றுக் கொள்வதில்லை எனும் போது நபித்தோழரின் நடவடிக்கையையோ, மற்ற அறிஞர்கள் நடவடிக்கைகளையோ எப்படி மார்க்க ஆதாரமாகக் கருத முடியும்?
விரலை வெட்டியதற்கான நட்டஈடு
இஸ்லாமியக் குற்றவியல் சட்டத்தின்படி ஒரு மனிதர் இன்னொரு மனிதரின் ஒரு உறுப்பை வெட்டினால் அவரது அதே உறுப்பை வெட்டுவதே அதற்கான தண்டனை.
ஆனால் பாதிக்கப்பட்டவர் விரும்பினால் தனது எதிரிக்குத் தண்டனை வழங்க வேண்டாம்;நட்டஈடு பெற்றுத் தாருங்கள் என்று கோரிக்கை வைக்கலாம். உரிய நட்ட ஈடை வழங்கி விட்டு இத்தண்டனையிலிருந்து எதிரி தப்பித்துக் கொள்ளலாம்.
ஒவ்வொரு உறுப்புக்கும் உரிய நட்ட ஈடு என்ன? என்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் வரையறுத்துச் சொல்லப்பட்டு விட்டது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் ஒரு மனிதரின் ஒரு விரலை மற்றவர் வெட்டினால் அதற்கு பத்து ஒட்டகம் நட்ட ஈடு என்று வரையறை செய்யப்பட்டிருந்தது. ஆனால் உமர் (ரலி) ஆட்சியின் போது விரல்களுக்கிடையே வேறுபாடு ஏற்படுத்தி கட்டை விரலுக்கு இத்தனை ஒட்டகம். ஆட்காட்டி விரலுக்கு இத்தனை ஒட்டகம் என்று நிர்ணயிக்கிறார்கள். இதைக் கேள்விப்பட்ட இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விரல்களுக்கிடையே வேறுபாடு காட்டாத போது நீங்கள் எப்படி வேறுபாடு காட்டலாம்? என்று ஆட்சேபனை செய்தனர். உமர் (ரலி) அவர்கள் தமது தவறை ஒப்புக் கொண்டு திருத்திக் கொண்டார்கள்.
நூல் : முஸன்னப் இப்னு அபீஷைபா 5/368
அனைத்து விரல்களும் சமம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியது புகாரி 689வது ஹதீஸாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
உமர் (ரலி) அவர்களுக்கு இந்தச் சட்டம் தெரியாமல் இருந்திருக்கிறது. அல்லது தெரிந்தே விரல்கள் அனைத்தும் சமம் அல்ல என்று அவர்கள் எண்ணியிருக் கிறார்கள். ஆனால் இப்னு அப்பாஸ் (ரலி) சுட்டிக்காட்டிய பின் திருத்திக் கொள்கிறார்கள்.
நாட்டுக் கழுதை உண்ணத் தடை
இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் கழுதையின் இறைச்சியை உண்பது தடுக்கப்படாமல் இருந்தது. ஆனால் கைபர் போரின் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ``காட்டுக் கழுதை மாமிசத்தை உண்ணலாம். நாட்டுக் கழுதையின் மாமிசத்தை உண்ண வேண்டாம் என்று தடை விதித்தனர்.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்கு நாட்டுக் கழுதை தடை செய்யப்பட்ட விபரம் தெரியவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்த பிறகும் அவர்கள் நாட்டுக் கழுதை மாமிசத்தை ஹலால் என்று என்று தீர்ப்பளித்தார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நாட்டுக் கழுதையை ஹராமாக்கியதாகக் கூறுகிறார்களே?என்று ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கு அவர்கள்``நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்த செய்தியை பஸராவில் வைத்து ஹகம் பின் அம்ர் (ரலி) எங்களிடம் கூறினார்கள். ஆனால் கல்விக் கடல் இப்னு அப்பாஸ் (ரலி) இதை ஏற்க மறுத்து (6:145) வசனத்தை ஓதிக் காட்டினார்கள் என்று ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) விடையளித்தார்கள். அறிவிப்பவர் : அம்ர்,
நூல் : புகாரி 5529
ஹகம் என்ற நபித் தோழர் மட்டுமின்றி அனஸ் (ரலி) அவர்களும் தடை பற்றிய செய்தியை அறிவித்துள்ளனர்.
புகாரி:5528, 2991, 4199
ஆனாலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்த அறிவிப்பைக் கேட்ட பிறகும் குர்ஆன் வசனத்தை எடுத்துக்காட்டி இப்னு அப்பாஸ் (ரலி) மறுத்ததும், ஜாபிர் (ரலி) அதை வழி மொழிந்ததும் ஏற்புடையதல்ல.
மேற்கண்ட 6:145 வசனத்தில் சில விஷயங்கள் தடுக்கப்பட்டிருந்தாலும் குர்ஆன் அல்லாத இன்னொரு வஹீ மூலம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நாட்டுக் கழுதையைத் தடை செய்தார்கள் என்பதை இவ்விரு தோழர்களும் விளங்காமல் இருந்துள்ளனர்.
ஜும்ஆவுக்கு இரண்டு பாங்குகள்
வெள்ளிக் கிழமையன்று ஜும்ஆவுக்காக இரண்டு பாங்கு சொல்லும் வழக்கம் சில பகுதிகளில் இருந்து வருகிறது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் இந்த வழக்கம் இருந்ததில்லை.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்திலும், அபூ பக்ர் (ரலி) அவர்களின் காலத்திலும்,உமர் (ரலி) அவர்களின் காலத்திலும் இமாம் மிம்பரில் ஏறிய பிறகே பாங்கு சொல்லப்பட்டு வந்தது. உஸ்மான் (ரலி) ஆட்சி காலத்தில் மக்கள் கூட்டம் பெருகியதால் ஸவ்ரா எனும் இடத்தில் மற்றொரு அறிவிப்பு அதிகமானது என்று ஸாயிப் பின் யஸித் (ரலி) அறிவிக்கிறார்கள்.
நூல் : புகாரி 912
வணக்கத்தில் ஒரு நடைமுறையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித் தந்துள்ளனர். அவர்களுக்கு அடுத்து வந்த இரண்டு கலீபாக்களும் அதைச் செயல்படுத்தியுள்ளனர். ஆனால் மக்கள் உரை கேட்க வருவதில்லை என்பதற்காக உஸ்மான் (ரலி) அவர்கள் சுயமாக இன்னொரு அறிவிப்பை அதிகமாக்கினார்கள்.
ஏதோ ஒரு காரணத்தால் நபிவழியைக் கூட சில நபித்தோழர்கள் மாற்றியுள்ளார்கள். அல்லது இல்லாததை அதிப்படுத்தியுள்ளார்கள் என்பது இதன் மூலம் தெரிகிறது.
எனவே நபித்தோழர்களின் எல்லா நடவடிக்கையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டிய வழியில் தான் இருக்கும் என்று எந்த உத்தரவாதமும் இல்லை என்பதை இதிலிருந்தும் அறிந்து கொள்ளலாம்.
மாற்றாரின் வாதங்கள்
திருக்குர்ஆனும், நபிவழியும் மட்டுமின்றி நபித்தோழர்களையும் நாம் பின்பற்ற வேண்டும் என்று வாதிடுவோர் தமது வாதத்தை நிலைநாட்ட சில சான்றுகளை முன் வைக்கிறார்கள்.
நபித்தோழர்களின் நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு திருக்குர்ஆனும், நபிமொழிகளும் கட்டளையிடுவதால் தான் நாங்கள் நபித்தோழர்களைப் பின்பற்ற வேண்டும் என வாதிடுகிறோம் என்று அவர்கள் கூறுகின்றனர்.
முஹாஜிர்களையும், அன்ஸார்களையும் பின்பற்றுதல்
என் தோழர்கள் வின்மீன்களைப் போன்றவர்கள்
நேர்வழி பெற்ற கலீபாக்களைப் பின்பற்றுதல்
அபூபக்ரையும், உமரையும் பின்பற்றுங்கள்
ஃபாத்திஹா அத்தியாயம் கூறுவது என்ன?
சஹாபாக்களை விட மற்றவர்கள் நன்கு விளங்க முடியுமா?
மிகச் சிறந்த சமுதாயம்
உங்களில் சிறந்தவர்கள் என் காலத்தவர்கள். பின்னர் அவர்களை அடுத்து வரக் கூடியவர்கள். அதன் பின்னர் அவர்களை அடுத்து வரக் கூடியவர்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். மேலும் தொடர்ந்து உங்களுக்குப் பின் நாணயமாக நடக்காத மோசடி செய்பவர்களும், சாட்சியம் அளிக்க அழைக்கப்படாமலே சாட்சி கூறுபவர்களும்,நேர்ச்சை செய்து அதை நிறைவேற்றாதவர்களும் தோன்றுவார்கள். அவர்களிடம் பகட்டு வெளிப்படும் எனவும் கூறினார்கள்.
நூல் : புகாரி 2651, 3650, 6428, 6695
தமது காலத்தவரையும், அதற்கு அடுத்த காலத்தவரையும் மிகச் சிறந்த சமுதாயம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளதால் நபித்தோழர்களை நாம் பின்பற்றலாம் என்று அவர்கள் வாதிடுகின்றனர்.
இந்த நபிமொழி ஆதாரப்பூர்வமானது என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் இதில் நபித்தோழர்களைப் பின்பற்றச் சொல்லும் வகையில் ஒரு வாசகமும் இல்லை. இதன் பொருள் என்ன? என்பதை இதன் இறுதியிலேயே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கியுள்ளார்கள்.
அதாவது அந்தச் சமுதாயத்தில் நாணயம், நேர்மை, வாக்கை நிறைவேற்றுதல், வலியச் சென்று எதிலும் தலையிடாமல் இருப்பது போன்ற நற்பண்புகள் அதிக அளவில் இருக்கும். பிந்தைய சமுதாயத்தில் அது குறைந்து விடும் என்பது தான் அந்த விளக்கம்.
நபித் தோழர்களின் சிந்தனையிலும், தீர்ப்புகளிலும், முடிவுகளிலும், ஆய்வுகளிலும் எந்தத் தவறும் ஏற்படாது என்பதால் அவர்கள் சிறந்தவர்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருந்தால் அவர்களைப் பின்பற்றலாம் என்ற கருத்து அதனுள் அடங்கி இருப்பதாக எடுத்துக் கொள்ளலாம்.
அவர்களின் நாணயம், நேர்மை காரணமாக சிறந்தவர்கள் என்று தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். நாணயமாகவும், நேர்மையாகவும் உள்ளவர்களாக இருப்பதால் அவர்களின் சிந்தனையில் தவறே ஏற்படாது என்று அறிவுடையோர் கூற மாட்டார்கள்.
மேலும் வஹீயை மட்டும் தான் பின்பற்ற வேண்டும் என்று நாம் எடுத்துக் காட்டிய ஏராளமான ஆதாரங்களுக்கு முரணாக இந்த ஹதீஸை நாம் விளங்கினால் நபித்தோழர்களுக்கும் இறைவனிடமிருந்து வஹீ வந்துள்ளது என்ற விபரீதமான முடிவுகள் ஏற்பட்டு விடும்.
நூல்: நபித் தோழர்களும் நமது நிலையும்
ஆசிரியர் : பீ.ஜைனுல் ஆபிதீன்
share this.. https://bit.ly/3wrvjwI